வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்! வினையான விளையாட்டு!

எனக்கு நான்கு வயது இருக்கும்போது நடந்த சம்பவம் இது.

விடுமுறை நாட்களில் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்திற்கு   சென்று விளையாடுவது சிறுவர்களாகிய  எங்களது வழக்கம்.

அவ்வாறே ஒரு விடுமுறை நாளின் காலைப் பொழுதில் தோட்டத்திற்குச்  சென்று விளையாடிக் கொண்டிருந்தோம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடி முடித்தவுடன் வேறு புதிதாக ஏதாவது விளையாடுவதென முடிவெடுத்து தோட்டத்துத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டிகளுக்கு எங்களில் யாரோ கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டு தொழுவத்தின் சுவர் மீதிருந்த ஒரு புட்டியில் இருந்த திரவத்தை எடுத்து கன்றுக்குட்டிகளுக்கு தேய்த்துவிட்டு பின்னர் தலைவாரி விளையாடினோம். சிறிது நேரம் சென்றபின் அந்த விளையாட்டும் சலித்துவிட அங்கிருந்து அகன்று வேறு விளையாட்டில் திளைத்திருந்தோம்.

வெளியில் சென்றிருந்த தோட்டக்காவலர் தொழுவத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு உடனடியாக எங்களின் உணவகத்திற்கு விரைந்து சென்று தகவல் தர மேலும் சிலர் அங்கு வந்து குவிந்தனர்.

விபரம் அறிந்த எங்களின் பாட்டியும் அங்கு ஓடோடி வந்து எங்களைத் திட்டியவாறே தோட்டத்திலிருந்த கிணற்றடிக்கு எங்களை அழைத்துச் சென்று எங்களைக் கவனமாகச் சோதனையிட்டு குளிப்பாட்டினார்.

அன்று நடந்தது இதுதான். கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்து விடுவதாக எண்ணி எங்களில் ஒருவர் எடுத்த அந்த திரவம் பயிர்களுக்கு தெளிக்க இருந்த பாலிடால் என்னும் கடும் நஞ்சாகும்;. அதை நாங்கள் கன்றுக்குட்டிகளுக்கு தடவப்போக அருகிலிருந்த அவற்றின் தாய்ப்பசுக்கள் வழக்கம்போல தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக கன்றுகளை நாவால் நக்கியுள்ளன.

இதன் விழைவால் அந்தக் கொடிய நஞ்சு அவற்றின் வயிற்றுக்குள் சென்று அவை உயிருக்குப் போராடத் துவங்கியிருக்க, இதை அறியாமல் நாங்கள் வெளியே வேறு விளையாட்டில் இருக்கும் வேலையில்தான் அங்கு வந்த காவலரின் கண்களில் எங்களின் செயல் புரிந்து துடிக்கும் பசுக்களைக் காக்க மற்றவர்கள் அங்கு விரைந்து வந்த நிகழ்வு.

எவ்வளவோ போராடி மாற்று மருந்து கொடுத்து பசுக்களை காக்க முயன்றும் அன்று சில உயிர்கள் எங்களின் விபரீத விளையாட்டில் பலியாகிவிட்டன. நல்லவேளையாக குழந்தைகளான எங்கள் யாருக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர் எங்களை எங்களின் உணவக மேலாளர் ஒரு மிதிவண்டியில் உடம்பில் துணியேதுமற்ற நிலையில் அமரவைத்து அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தது இன்றும் என்னால் மறக்க முடியாதுதான்.

அன்றும் அதற்குப் பின்னர் பல நாட்கள் வரையில் எங்கள் பாட்டி எங்களைப் பார்த்து அடப்பாவிகளா அநியாயமாக இவ்வாறு செய்து விட்டீர்களே பசுவைக் கொன்ற பாவம் உங்களைச் சும்மா விடாதே என எச்சரித்துக்கொண்டே இருப்பார்.

கன்றின் மீது தனது இரதத்தை அறியாமல் ஏற்றிக் கொன்ற தனது மகனை, வாய்மை தவறாது தேர்க்காலில் இடறச்செய்த மனுவாய்மைச் சோழனின் பரம்பரையில் வந்த எனக்கு எனது பாட்டியின் எச்சரிக்கைக்குரிய செய்தி, விபரம் அறிந்தவரை புரியவில்லைதான்.

திருமணமாகி எனக்கு ஒரு மகள் பிறந்தாள். பிறக்கும்போதே மருத்துவர்களால் கைவிடப்பட்ட அவள் இருபத்திரண்டு மாதங்கள் வரை எங்களுடன் வாழ்ந்து ஒரு பிப்ரவரி 28 ஆம் தேதியில் எங்கள் கண்ணெதிரிலேயே எங்களைத் தவிக்கவிட்டு மெல்ல மெல்லத் தனது மூச்சுத்துடிப்பினை நிறுத்தியபோது நாங்கள் அழுது புலம்பித் தவித்ததை இப்பொழுது எண்ணும்போது

பசுவைக் கொன்றதற்கான பாவத்திற்கான தண்டனையை என்னால் உணர முடிகிறது. அறியாத வயதில் செய்த தவறென்றாலும் பாவம் பாவம்தானே. இதைத்தான் ஐயன் வள்ளுவரும் ஆணித்தரமாக தம் குறளில் வலியுறுத்தினாரோ?

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்” என!

அறிந்தும் அறியாமலும் பிற உயிர்களுக்கு இன்னல் விளைவித்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டுமென்ற சித்தர்களின் வாக்கு அறியாமல் செய்த தவறுக்கும் சரியான தண்டனையை வழங்கியதுதான் எனக்கு எழுதப்பட்ட பிரபஞ்ச விதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!