ரமலான் வாழ்த்துக்கள்!

இன்று இசுலாமியர்களுக்கான புனிதப் பண்டிகையான ரமலான் தினம்! உலகெங்கிலுமுள்ள இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

என்னுடைய இளம் வயதிலிருந்தே இசுலாத்துடனான எனது உறவு துவங்கிவிட்டதெனலாம்! எங்கள் உணவகத்தில் மிகச் சிறு வயதில் வேலைக்கு இணைந்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த திரு குலோப்ஜான் அவர்களுடன்தான் எனது இசுலாத் உறவு துவங்கியது!

எங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்குமே அவரை குலோப்ஜான் மாமா எனத்தான் அழைப்பதில் பெருவிருப்பம் கொள்வோம்! 

அவரது திருமணம்கூட எங்கள் தோட்டத்தில் எங்கள் செலவில்தான் நடந்தது அந்தத் திருமணத்தில் இளம் வயதில் கலந்து கொண்டது எனக்குள் இன்றும் பசுமை மாறாத நினைவுகள்தாம்!

நாமக்கல்லில் நான் புகுமுக வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்புத் தோழனாக அறிமுகம் ஆனவர் முகம்மது ஜி முஸ்தாக்! அவரது குடும்பத்தில் ஒருவனாக அங்கு படித்தவரை நான் திகழ்ந்தேன்! அவர்கள் வீட்டில் விருந்துண்டு கழித்த நாட்கள் பல!

இப்பொழுதும் ஈரோட்டில் எனது மகளின் பள்ளித் தலைமை ஆசிரியராக விளங்கிய தமிழாசிரியர் திரு கவுஸ் அவர்களுடனான எங்களின் குடும்ப உறவும், 

எனது உடன் பிறவாத தங்கையாக விளங்கும் திருமதி சபானாவின் குடும்ப உறவும் எங்களுடனான இசுலாத்தின் நட்புக்குச் சான்றாகத் திகழ்கிறது

பேருந்து மற்றும் இரயில் பயணங்களில்கூட முன்பின் அறிமுகமில்லாத இசுலாமியச் சகோதர சகோதரிகள் எங்களுடன் நட்பு பாராட்ட விரும்புவதை பல்வேறு தருணங்களில் எம்மால் உணர இயலுகிறது!

இது பிறவிகள்தோறும் தொடரும் மதங்கள் தாண்டிய உறவுகள்! என்றென்றும் மாறாத உன்னத உறவுகள்! இந்தப் புவி வாழ்வில் இன்றுவரை எங்கள் தொடர்பில் உள்ள இசுலாமியச் சகோதர சகோதரிகள் மட்டுமன்றி
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான இசுலாமியர்களுக்கும் ரமலான் திருநாளில் எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை மீண்டும் அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்!

உலகெங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்சப் பேராற்றலின் சக்தியால் இந்த உலகில் அன்பும், அகிம்சையும் சமாதானமும் என்றென்றும் நிறைந்திருக்க இந்த ரமலான் பெருநாளில் வாழ்த்துவோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!