வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிட இல்லம்

Leave a Comment
பகுத்தறிவு பற்றிய அறிமுகம் எனது ஏழாம் வகுப்பிலிருந்தே துவங்கி விட்டது! 

எங்கள் பள்ளியில் சிறந்த தமிழாசிரியராகவும் சேலம் மாவட்ட பகுத்தறிவுக் கழகத்தில் ஒரு துடிப்பு  மிக்க தொண்டராகவும் தந்தை பெரியார் அவர்களின் தலைமையேற்று வழி நடக்கும் உயர்திரு ஆ.பெரியசாமி தமிழய்யா அவர்களால் என்னுள் இளம் வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு விதை ஊன்றப்பட்டுவிட்டதெனலாம்! 

தமிழய்யா எங்கள் வகுப்பில் நுழைந்து பாடம் எடுத்து முடிக்கும்வரை எங்கள் வகுப்பறை ஆரவாரத்தில் உற்சாகிக்கும்! தமிழர் வரலாறு, இலக்கணம் எனத்துவங்கித் தவறாமல் சமுதாயச் சீர்கேடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், பொய்யான இழிவான இதிகாசங்களையும் சாடி எங்களுக்குள் பகுத்தறிவு வளர்ப்பதற்குப் பாடுபட்டார்! 

இலக்கண விதியில் எப்படி எழுதுகிறேன் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும், தமிழய்யா போன்றவர்களால்தான் ஓரளவு என்னால் தமிழில் எழுத்துப் பிழையின்றி இன்றும் எழுத முடிகிறது!

எங்கள் ஊர் சந்தைத் திடலில் அமைந்திருந்த ஒரு மேடையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் நானும் கலந்து கொண்டேன்! தந்தையை மேடையிலிருந்து சற்று தூரத்தில் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் அன்றைய தினத்தில் புண்ணியம் பெற்றவனானேன்!; 

ஈரோட்டில் நான் வசிக்கத் துவங்கியவுடன், எனது முதல் வேலை ஈரோடு மரப்பாலம் அருகிலுள்ள ஒரு பால் பண்ணையில் துவங்கியது! மூன்று மாதங்கள் அங்கு நான் பணியிலிருந்தேன்! பணி காரணமாக அந்தப் பகுதிகளில் நான் சுற்றித் திரிந்த போது அங்குதான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடமாக்கப்பட்ட இல்லம் இருப்பதென்பதை நான் உணரத் துவங்கினேன்!

ஏதோ ஒருவித உள்ளுணர்வின் காரணமாக நான் அப்பொழுது முதல் பகுத்தறிவு எண்ணங்கள் தாங்கிய சித்தர்களின் எண்ணங்கள் என் ஆழ்மனதில் ஊடுருவி வருவதை உணர்ந்து வந்தேன்! இந்த எண்ணங்களுடனே தந்தை பெரியார் அவர்கள் தனது இல்லத்திற்கு என்னை அழைப்பது போல நான் அடிக்கடி உணர்ந்தேன்!

எனவே எனது வேலைகளுக்கிடையே ஈரோடு நகரத் தெருக்களில் செல்லும்போதெல்லாம் பகுத்தறிவுத் தந்தையின் நினைவிடம் என் கண்ணில் தட்டுப்படாதா என ஆவலுற்றேன்! இறுதியாக ஒரு நாள் நான் அவரது இல்லம் இருந்த தெருவினைக் கண்டு கொண்டேன்!

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நான் பகுத்தறிவுப் பகலவனின் இல்லத்தில் இருந்தேன்! ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரரான தந்தையின் இல்லம் போதிய பார்வையாளர்கள் இன்றி அமைதியுடன் காணப்பட்டது! தந்தையின் இல்லம் முழுவதும் சமுதாயச் சீர் திருத்தக் கொள்கைகள் தாங்கிய அவரது பொன்மொழிகளும், ஏராளமான புகைப்படங்களும் காட்சியளித்தன! 

அது மட்டுமன்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாருக்கு எழுதிய மடல்கள் காணப்பட்டன! இன்னுமொரு சிறப்பாக கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்கள் தனது மகனின் காவல்துறை வேலை காரணமாகத் தந்தை பெரியார் அவர்களிடம் தயங்கியவாறு எழுதியிருந்த கடிதம் ஒன்றினையும் காண நேர்ந்து துயரமடைய வைத்தது!

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு கப்பல் கழகத்தையே ஆரம்பித்து வெள்ளையரின் கடல் வணிகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய அந்த மாபெரும் விடுதலை வீரர் இதன் காரணமாகத் தனது சொத்துக்களை இழந்த ஒரு கால கட்டத்தில் தனது மகனின் எதிர்காலம் கருதி அவருக்கு ஏதேனும் அரசு வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்பதாகத் தந்தை பெரியாருக்கு அந்தச் செக்கிழுத்த செம்மல் எழுதியிருந்த கடித வரிகளைக் கண்ட போது எம் இதயத்தில் இரத்தக்கண்ணீர் வடிவதை உணர முடிந்தது!

தந்தை அவர்களின் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தாங்கிய அரிய புகைப்படங்கள் அனைத்தையும் உள்ளம் நெகிழப் பார்த்து வந்தபோது எனது வாழ்நாள் தலைவர் பெருந்தலைவருடன் தந்தை பெரியார் இடம்பெற்ற புகைப்படங்களையும் கண்டு மகிழ முடிந்தது!

இவ்வாறே தந்தையின் விசாலமான அந்தப் பழைய கம்பீரமான மாடிக் கட்டிடத்தின் பின் புறம் சென்றபோது வியப்பின் எல்லைக்கே நான் சென்றேன்!
ஆம் அங்கு ஒரு எளிமையான இல்லம் காணப்பட்டது! சிறிய தளத்துடன் பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமர்ந்து சமைக்கும் வகையில் மிகச் சிறிய சமையல்கூடம்! தாழ்வாரத்துடன்கூடிய ஒரு மேற்கூரையிடப்பட்ட திறந்த அறை! அந்த அறையின் மத்தியில் பேரறிஞர் அண்ணா அவர்கள்தம் மார்பளவுச் சிலை காணப்பட்டது! அறையை ஒட்டிய அமைந்திருந்த மற்றொரு அறையில் அண்ணா அவர்கள் அமர்ந்து எழுதிய மேசை ஒன்றும் நாற்காலியுடன் காணப்பட்டது!

தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட காஞ்சித் தலைவர் தந்தை பெரியார் ஈரோட்டில் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றியபோது தனது துணைவியாருடன் தங்கியிருந்த அந்த எளிமையான இல்லத்தைக் கண்டபோது என் கண்கள் குளமாயின!

ஆடம்பரமாகக் காட்சியளிக்கும் இன்றைய ஆட்சியாளர்களை வளர்த்து விட்ட அந்த மாபெரும் தலைவர் தங்கியிருந்த அந்தச் சாதாரண ஓட்டு வீட்டைக் கண்ட போது எம்மால் அழுவதா சிரிப்பதா என்பதே புரியவில்லை!

தந்தை பெரியாரின் எழுச்சிக்குப் பிறகுதாம் தமிழர்தம் பெயர்களோடு ஒட்டியிருந்த சாதி எனும் வால் ஒட்ட நறுக்கி எறியப்பட்டது! அவரால் தமிழகத்திற்கு அடையாளம் காணப்பட்ட பேரறிஞரின் எளிமையும் அவர்தம் சொல்லாற்றலும், தமிழகத்தில் திராவிட ஆட்சியாளர்களின் வரவிற்கு வழி கோலியது! 

தந்தை பெரியார் தம்முடைய மேடைப்பேச்சுகளில் அடிக்கடி வெங்காயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்! இதற்கான அர்த்தம் பொது வாழ்க்கைக்கு வருபவர்களின் உண்மையான வாழ்க்கையை உரித்துப் பார்த்தால் வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாது போவது போல அவர்தம் வாழ்க்கை பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் மக்களின் உரிமைகளை அனுபவிக்காத தன்மையாக இருக்க வேண்டுமென்பதுவாம்!

ஆனால் பொது வாழ்க்கையில் இன்றுள்ளவர்களின் நிலையோ வெங்காயமாகத்தான் உள்ளது! அவர்தம் உண்மையான பொது வாழ்க்கை முறையினை உரித்துப்பார்த்தால் மக்களுக்குக் கண்ணீர்தாம் மிஞ்சும்! பொது வாழ்க்கைக்கு வந்து மக்களின் வரிப்பணத்தை அனுபவித்துவிட்டுத் தாங்கள் மக்களுக்காகக் கடுமையாக உழைத்தோம் என்று சொல்லும் பேர்வழிகளைத் தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டதே இல்லை! அவர்களைத் தேனெடுக்கும்போது புறங்கை சுவைத்தவர்களாகத்தாம் அவர் பார்த்தார் அவ்வாறே தம்முடைய அறிக்கைகளில் எழுதியுள்ளார்!

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு மீண்டும் தமிழத்தில் சாதி வெறியும், மத வெறியும் தலைவிரித்தாடத் துவங்கிவிட்டது! இதிலிருந்து மக்களை மீளச் செய்யவும், மீண்டும் தலை தூக்கும் மூடப்பழக்க வழக்கங்களைச் சுட்டெரிக்கத் தந்தை பெரியார் போலப் பல்லாயிரம் பகுத்தறிவுப் பகலவர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும்! 

இதற்கு முதற்கண் நம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் இளைய சமுதாயம் ஒட்டு மொத்தமும் இந்த மாபெரும் தலைவர் வாழ்ந்த அவரது இல்லத்தைப் பார்வையிடச் செய்ய வேண்டும்! அண்ணா என்ற மாபெரும் தலைவர் வாழ்ந்த எளிமையான அந்த இல்லத்தைப் பார்வையிட்டால்தான் இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரங்கள் புரிந்து இளைய சமுதாயம் உண்மையிலேயே மக்களுக்காகப் பாடுபடக்கூடிய எளிமையான மக்கள் தொண்டர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்ய வழி கோலும்!

மக்களிடம் பக்தியறிவு இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது! ஆனால் பகுத்தறிவு இல்லையென்றால் எல்லாமே பாழ்தாம் என்ற பகுத்தறிவுப் பகலவின் வரிகள் அவரது இல்லத்தை ஒரு முறையல்ல பலமுறை தமிழக இளைய சமுதாயம் காண நேர்ந்தால்தான் அவர் விட்டுச் சென்ற பணிகளை உணரந்து சமூகச் சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க முடியும் என்பதே தந்தை பெரியார் அவ்வப்போது என்னை அவர்தம் இல்லத்திற்கு வரவழைத்து மானசீகமாக வைக்கும் கோரிக்கை! 

ஓவ்வொரு நூற்றாண்டிலும் இந்தத் தமிழ் மண்ணில் சாதி மத பேதம் அகற்றச் சித்தர்கள் பிறப்பெடுத்துக் கொண்டுதான் உள்ளனர்! அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பிறந்து தம் சுயம் அறியாமல் வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை பெரியாரும் ஒரு மாபெரும் தவச்சித்தர்தாம்!

Read More...

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சென்னையில் எனது வேலை அனுபவம்!

Leave a Comment
நான் மேலாளராகப் பணி புரிந்த நிறுவனத்தில் எனக்குக் கீழ் வேலை பார்த்தவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்காததால் நிறுவன உரிமையாளரிடம் நான் பலமுறை இது குறித்து முறையிட வேண்டியதாயிற்று!

அவரோ நீ மற்றவர்களைக் குறை சொல்லாதே என்பதோடு மட்டுமன்றி அவர்களின் செயல்களுக்கு நீதான் பொறுப்பு எனவும் அவர்களைக் கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டியது உனது பொறுப்பு எனவும்தான் அடிக்கடி கூறுவார்!

இந்தக் காலத்து இளைய தலைமுறையினர் வேலை என வரும்போது தங்களுக்குரிய கடமையைச் செய்து அதற்கெனத் தனக்குக் கிடைக்கும் ஊதியத்தை உயர்த்திக்கொள்வதில் அவ்வளவாக அக்கரை காட்டுவதில்லை! முடிந்தவரை தனக்குத் தரப்பட்ட வேலையைச் செம்மையாகச் செய்து கொடுத்து நல்ல பேரை எடுக்க வேண்டுமென்ற ஆவலற்றும் இருக்கின்றனர்!

பெரும்பாலான இளைய தலைமுறையினர் தங்களின் பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்பட்டதன் விளைவு இது! அது மட்டுமன்றி இவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பணியாற்றும் இடங்களில் தங்களின் மேலாளர் அல்லது உரிமையாளர்களால் தங்களின் பணியில் கவனக்குறைவு காரணமாக ஏதேனும் திட்டு வாங்க நேர்ந்தால் தங்களின் பிள்ளைகள் செய்த தவறு என்னவென்பதை ஆராய்ந்து அவர்களை நல்வழிப்படுத்தாமல் நிறுவன மேலாளரை அல்லது உரிமையாளர்களை தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து குறை சொல்லி தங்கள் பிள்ளைகளின் தவறினை நியாயப்படுத்தி விடுகின்றனர்! 

பெற்றோர்தம் இது போன்ற தவறுகளால் இன்றைய தினத்தில் இளைய சமுதாயத்தினர் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களை அடிக்கடி மாற்றுகின்ற நிலை ஏற்பட்டு விடுகிறது! அது மட்டுமன்றி குறுகிய காலங்களில் இவர்கள் பல்வேறு நிறுவனங்களில் மாறி மாறி வேலை செய்யத் துவங்கும் போது அந்த நிறுவனம் சார்ந்த தொழிலின் அடிப்படை அறிவு கூட இவர்களுககுக் கிடைக்காமல் போவதால் செல்லுமிடமெல்லாம் தட்டுத் தடுமாறியே தங்களின் வேலைத் திறனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது! இதை விடக் கொடுமை பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் எங்கு வேலை பார்க்கிறார்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை!

இத்தகைய மனப்போக்குடன் இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்திடம் (அப்பொழுது எனக்கு வயது நாற்பத்து மூன்று) மேலாளராக வேலை பார்த்ததால் என்னுடைய அறிவுரைகள் அவர்களிடம் எடுபடுவதில்லை! இதன் காரணமாக எனக்கும் நிறுவன உரிமையாளருக்கும் வணிகம் குறித்து அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்!

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தற்பொழுதுள்ள வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக்கொள்வதென நான் முடிவு செய்தேன்! இதனை எனது மனைவியிடம் தெரிவித்தபோது அவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இதே வேலையில் தொடருமாறு என்னை வற்புறுத்தினார்! அவர் மட்டுமன்றி எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதே கருத்தையே கொண்டிருந்தனர்!

எனினும் என்னுடைய மனம் இந்த வேலையில் தொடர்வதை விரும்பாததால் மீண்டும் மீண்டும் இந்த வேலையை விட்டுவிடுவது என்ற எனது கருத்து வலுப்பெற்றது! இதனை எனது துணைவியார் ஒப்புக்கொள்ள மறுத்து பலமுறை என்னிடம் சண்டையிடத் துவங்கவே ஒரு கட்டத்தில் நான் எனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் தலைமறைவாவதெனச் சென்னைக்கு இரயிலேறிவிட்டேன்! 

இரயிலில் அதே வகுப்பில் பயணம் செய்த ஒரு கிறித்தவ நண்பருடன் உரையாடத்துவங்கும்போது அவர் எனது முக வாட்டம் கண்டு என்னைப்பற்றி விசாரிக்க எனது நிலையைப்பற்றி எடுத்துரைக்க அவர் சென்னையில் தாங்கள் முன்பின் அறிமுகமில்லாத இடங்களில் தங்க வேண்டாம்! உங்களின் உறவினர் யாரேனும் அங்கிருந்தால் அவர்களிடம் சென்று தங்குங்கள்! அது மட்டுமன்றி நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் உங்கள் வீட்டில் அனைவரும் தவித்துப்போவார்கள்! எனவே சென்னை சென்றவுடன் நீங்கள் உங்கள் உறவினர் வசம் சென்றடைந்தபின் நீங்கள் தற்போது எங்கே உள்ளீர்கள் என்ற தகவலையும் அவர்களுக்குத் தெரிவித்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டு தனது தொலைபேசி எண்ணையும் என்னிடம் வழங்கி விடைபெற்றார்!

நானும் வேறு வழியின்றி சென்னையில் அங்கு தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த எனது மனைவியின் சித்தி மகனிடம் சென்றடைந்து நான் சென்னை வந்துவிட்ட தகவலை தெரிவித்துவிடச் சொன்னேன்! மேலும் அவரிடம் நான் இங்கு தங்கி சில நாட்களில் ஒரு வேலை தேடிக்கொள்வேன்! நீயும் உனது நண்பர்களின் துணையுடன் எனக்குத் தகுந்த ஒரு வேலையை ஏற்பாடு செய்து தா என வேண்டிக்கொண்டேன்!

நான் எனது மைத்துனருடன் தங்கியிருந்த சில நாட்களில் நான் கொண்டு சென்றிருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலவழியத் தொடங்கியது! எனக்குச் சென்னையில் பழைய வணிகம் காரணமாக ஏராளமான நிறுவனங்களுடன் தொடர்பிருந்தபோதும் அந்தத் தொழில் சார்ந்த துறையில் எவரிடமும் வேலை தேடிச் செல்வதில்லை என முடிவு செய்ததால் வேறு எங்கும் எனக்கு பழக்கமில்லாத இடங்களில் சென்று வேலை தேட இயலவில்லை!

இதன் காரணமாக எனது மைத்துனர் எனக்கு ஏதேனும் வேலை தேடித் தருவார் என நான் நம்பினேன்! அவரோ நாட்களைக் கடத்தி என்னை ஊருக்குத் திரும்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்! என்னிடமுள்ள பணமும் குறையத் துவங்கியதால் என்னுடைய நிலை பரிதாபமாயிற்று! எனினும் எப்படியாவது சென்னையிலேயே ஒரு வேலையில் சேர்வது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்!

இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகை வேறு அப்பொழுது நெருங்கியிருந்தது! எனது மைத்துனர் இன்னும் இரண்டு நாட்களில் தான் இந்தப் பண்டிகைக்காக வீடு திரும்ப இருப்பதால் நீங்களும் என்னுடன் ஊருக்குத் திரும்பத் தயாராகுங்கள் என்றார்! 

நான் அப்பொழுது தங்கியிருந்ததோ பழவந்தாங்கலில் எனது மைத்துனர் உட்பட வேலை தேடும் ஆறு இளைஞர்கள் தங்கியிருந்த ஒரு இல்லமாகும்!

எனது மைத்துனர் அங்கிருந்து கிளம்பிவிட்டால் நானும் கிளம்பியாக வேண்டிய கட்டாயம்! எனினும் எனக்குள் ஒரு உத்வேகம்! எப்படியாவது சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதென! அன்றைய தினம் காலையில் ஒரு செய்தித்தாளில் சென்னை கோடம்பாக்கத்தில் பிரபலமான ஒரு நிறுவனத்தின் புதிய கிளைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் படித்திருந்தேன்!

இங்கு ஏதேனும் எனக்குத் தகுந்த ஒரு வேலையை முயற்சிப்பது என முடிவு செய்த நான் எனது மைத்துனரிடம் இன்று ஒரு இடத்திற்கு நான் வேலை தேடிச் செல்கிறேன்! அங்கு எனக்கு வேலை ஏதும் கிடைக்காவிட்டால் உன்னுடன் நான் ஊருக்குத் திரும்பிவிடுகிறேன் எனச் சொல்ல அவரும் சம்மதித்தார்!

நான் சென்னைக்குச் சென்றபோது கொண்டு சென்றது வெறும் ஆயிரம் ரூபாய்கள்தாம்! அதிலும் சென்னை சென்ற இரயில் கட்டணம், மாற்றுடை ஏதுமின்றி அங்கு சென்றதால் வழியில் சேலத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்கிய துணிமணிகள், சென்னையில் நான் ஒரு மாதத்திற்கு வாங்கியிருந்த மின்சார இரயிலுக்கான மாதக் கட்டணம், 

இது தவிர எனது மைத்துனரின் உதவியைத் தவிர்த்துவிட்டு நான் எனக்கெனச் செலவிட்ட உணவுச் செலவு இவை உட்பட என்னிடம் அன்றைய தினத்தில் மீதமிருந்தது வெறும் 100 ரூபாய்தான்! இந்த நிலையில் நான் எனது மைத்துனரின் தயவில்தான் ஊர் திரும்ப இயலும்!

இந்த நிலையில்தான் நான் மின்சார இரயிலில் பயணித்து கோடம்பாக்கத்திலுள்ள அந்த நிறுவனத்தை அடைந்தேன்! அங்கு சென்றபிறகு அந்த நிறுவனத்தின் பிரம்மாண்டம் கண்டு நான் அப்பொழுதுதான் எனது சுய விபரம் அடங்கிய ஒரு தாளைக்கூட அங்கு கொண்டு செல்லவில்லையே என உணர்ந்தேன்!

இருப்பினும் என்னிடம் ஒரு சிறிய லெட்டர் பேடும் பேனாவும் எப்பொழுதும் நான் சென்னை சென்றபோது வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அந்த லெட்டர்பேடில் எனது பயோடேட்டாவை எழுதிக் கையொப்பமிட்டுவிட்டு நேர்முகத் தேர்வு செய்யும் அறையின்  உள்ளே சென்றேன்! அது ஒரு துணி வர்த்தக நிறுவனம்! நிறுவனத்தின் உள்ளே ஒரு சிறிய அறையில்தான் நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருந்தது!

உள்ளிருந்து ஒரு பத்தொன்பது வயது இளம் சிறுவன் வந்தான்! அலுவலக உதவியாளன் அவன்! வரிசையில் நின்றிருந்த எங்களிடம் பயோ டேட்டாக்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்! அவன் உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் உற்சாகமாக ஏதேனும் ஒரு பாட்டைப் பாடியவாறு இருந்தான்! நான் அவனிடம் நட்பாக அவ்வப்போது புன்னகைத்தேன்!

ஒவ்வொருவராக உள்ளே செல்லவும் வரிசை மெல்ல நகரத் துவங்கியது! எனக்கு முன்பு மூன்று இளைஞர்களும், எனக்குப் பின்னே சில இளைஞர்களும் வரிசையில் நின்றிருந்தனர்! இந்த நிலையில் திடீரென நேர்முகத்தேர்வு நடத்தியவர் ஏதோ அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டார்! உள்ளிருந்து வந்த அவர் யாரென எனக்குத் தெரியாததால் நான் அவர் செல்வதைக் கவனமாகக் கவனிக்கவில்லை! 

உள்ளிருந்து அந்த அலுவலக உதவியாள இளைஞன் வெளியில் வந்து இன்று நேர்காணல் முடிந்துவிட்டது! நீங்கள் அனைவரும் சென்றுவிட்டு நாளை வாருங்கள் எனக்கூறவே அங்கிருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர்! 

நான் மட்டும் அங்கிருந்து வெளியேறாமல் நின்றிருந்தேன்! உள்ளே சென்றுவிட்டு திரும்ப வந்த அலுவலக உதவி இளைஞன் நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் அதுதான் நேர்காணல் முடிந்துவிட்டதே நாளை வாருங்கள் என என்னை அப்புறப்படுத்த முயன்றான்!

முன்னதாக நான் நேர்கானல் செய்தவர் யாரென அங்கு வரிசையில் காத்துத் திரும்பிய ஒரு உள்ளுரில் வேறு நிறுவனத்தில் பணியாற்றி இங்கு வேலைக்கு முயன்ற ஒரு இளைஞனிடம் விசாரித்து அறிந்திருந்தேன்! அதன்படி அவரை அங்கு அண்ணாச்சி என அழைப்பார்களாம்! 

எனவே நான் அந்த இளைஞனிடம் நான் சிறிது நேரம் காத்திருந்து அண்ணாச்சி வந்த பின்னர் அவரை ஒரு முறை சந்தித்துப்பேசிவிட்டுச் சென்றுவிடுகிறேன் என வேண்ட அவனும் எனது பரிதாப நிலை கண்டு எதுவும் கூறாமல் சென்றுவிட்டான்!

என்னுடைய நல்ல நேரமோ என்னவோ சிறிது நேரத்தில் அண்ணாச்சி அவர்கள் மீண்டும் வந்துவிட்டார்! உள்ளே சென்ற அவர் கண்ணாடிக்கதவு வழியாக வெளியே நின்ற என்னைப் பார்த்து அந்த இளைஞனிடம் நான் யார் எதற்காக அங்கு வந்துள்ளேன் என விசாரித்து என்னை உள்ளே அனுப்பச் சொன்னார்!

நானும் உள்ளே சென்று நன்றி கூறி அவர்முன் அமர்ந்தேன்! நான் எனது பயோ டேட்டாவில் எனது பல ஆண்டுகள் செய்து வந்த சொந்த வணிகம் காரணமாகவும், நானாக முயன்று கற்ற கணினி மற்றும் டேலி கணினிக் கணக்கறிவு ஆகிய திறமைகளை எழுதியிருந்தேன்! எனது கைப்பட அப்பொழுதான் எழுதப்பட்ட சிறிய தாளாக இருந்தாலும் நேர்த்தியாக அது இருந்த விதம் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்!

அவர் அதனைப் படித்துவிட்டு என்னிடம் நீங்கள் நாளை வாருங்கள் என்றார்! நான் உடனே நான் நாளை இரவு ஊருக்குத் திரும்புகிறேன். அதன் பிறகு தீபாவளி கழித்துத்தான் மீண்டும் வர முடியும் என எனது அப்போதய நிலையை மனதில் கொண்டு பதில் அளித்தேன்!

அவர் உடனடியாக எனது பயோ டேட்டாவை மேசையின் மீது போட்டுவிட்டு நான் உங்களை நாளை வேலைக்கு வரச் சொல்கிறேன், நீங்கள் என்னவென்றால் தீபாவளி கழித்து வருவதாகச் சொல்கிறீர்களே அப்படி என்றால் நீங்கள் செல்லலாம் என்றார்! 

அப்பொழுதுதான் எனக்குள் அவர் எனக்கு வேலை தருவதெனத் தீர்மானித்துவிட்டுத்தான் என்னை நாளை வரச் சொல்லியிருக்கிறார் என்ற விபரம் புரியவே உடனடியாக அவரிடம் சற்றுப் பணிவாக நான் நாளை இங்கு வந்தாலும் எனக்குத் தங்குமிடத்தில் சிக்கல் உள்ளது ஏனென்றால் நான் எனது மைத்துனருடன் தங்கியிருப்பதால் அவர் நாளை ஊர் திரும்புவதால் நானும் ஊருக்குத் திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக எனது நிலையை எடுத்துரைத்தேன்!

அவர் உடனடியாக உங்களுக்கு இங்கு தங்குமிடம், மற்றும் உணவு இரண்டையும் நாங்களே செய்து தருகிறோம்! அத்துடன் உங்கள் வேலைக்கேற்ற சம்பளமும் கிடைக்குமெனக்கூறவே நான் உற்சாகமாகி அப்படியென்றால் நான் ஊர் திரும்ப வேண்டிய அவசியமில்லை! நாளையே உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு வந்து சேர்ந்துவிடுகிறேன் என உறுதியளித்து அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு மிகுந்த மகிழ்வுடன் பழவந்தாங்கல் திரும்பினேன்!

இரவு இல்லம் திரும்பிய மைத்துனரிடம் எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது எனவே நாளை நான் ஊருக்கு வரப்போவதில்லை எனவும் கூறிவிட்டு எனக்குச் செலவிற்கென ஒரு ஆயிரம் ருபாயை மட்டும் பெற்றுக் கொண்டு நான் இனி வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கி அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாக வாக்களித்துப் பணம் பெற்றுக்கொண்டேன்!

அடுத்த நாள் நான் அந்த நிறுவனத்திற்குச் சென்று அவர்களின் புதிய கிளையின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன்!

எனக்குக் கணினியில் பில் போடும் வேலை எனக் கொடுக்கப்பட்டிருந்தது! அந்தப் பிரிவிலோ அதே வேலையை ஏற்கனவே ஒருவர் செய்து கொண்டிருக்க பழைய நபரான அவர் என்னை கணினி அருகிலேயே நெருங்கவிடவில்லை!

நான் வேறு வழியின்றி அவருக்கு அருகில் இருந்த காசாளருக்கு அருகில் அமர்ந்து கொண்டேன்! எனக்குள் இயல்பாகவே இருக்கும் சும்மா இருந்து சம்பளம் வாங்கக்கூடாதென்ற கொள்கை காரணமாக அந்த இடத்தில் வேறு ஏதேனும் வேலை செய்ய இயலுமா எனக் கவனித்தேன்!

வாடிக்கையாளர்கள் துணிகளை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணம் செழுத்தியபின்னர் அந்தத் தொகைக்குரிய பில்லைச் சரிபார்த்து உரிய துணிவகைகளைப் பேக்கிங் செய்து தருவதற்கு அங்கு யாருமில்லை! அவ்வப்போது இந்த வேலையைக் காசாளரே கவனித்தார்!

நான் அவரிடம் பேசி அந்த வேலையை நான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு அதையே தொடர்ந்தேன்! எனக்கு ஏற்கனவே இருந்த சொந்த வணிக அனுபவம் மற்றும் வணிகத்தில் நட்டப்பட்டு தற்போது விட்டு விட்டு வந்த வணிகத்தின் மேலாளர் பதவியில் கிடைத்த அனுபவம் காரணமாக எனக்குப் புதியதான இந்த வணிகத்தில் குறிப்பாக நான் இருக்குமிடத்தில் தினசரி என்ன நிகழ்கிறது என்பதையும் எனது வேலையினூடே கவனித்து வந்தேன்! 

அது புதிய கிளையாக இருந்ததால் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலையிலும் மாலையிலும் நிறுவன உரிமையாளர், அவரது இளம்வயது மகன், மற்றும் என்னை வேலைக்குச் சேர்த்த அண்ணாச்சி, மேலும் அங்கிருந்த மேலாளர் உட்பட ஒவ்வொரு தளமாக வலம் வந்து ஒவ்வொரு பிரிவிலும் என்ன நடக்கின்றது என விசாரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்! ஊழியர்கள் அனைவரும் அவர்கள் வரும்போது மரியாதைக்காக எழுந்து நிற்பது வழக்கம்! என் வயது கருதி என்னை எழுந்திருக்க வேண்டாம் என உரிமையாளரும் அவரது மகனும் சைகை காட்டினாலும் நானும் எழுந்து நின்று மரியாதை செழுத்துவேன்!

இவ்வாறு மூன்று நாட்கள் கழிந்த நிலையில் மூன்றாம் நாள் இரவில் நான் ஏதோ ஒருவித உள்ளுணர்வில் கடந்த மூன்று நாட்களாக எனது பிரிவில் நடந்த குழப்பங்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுதி என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டதற்காக அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்து மறுநாள் காலை அவரிடம் தருவதென முடிவு செய்து எனது சட்டையில் வைத்துக் கொண்டேன்!

நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் காசாளர் தனது கணக்கினை இரவு முடிக்கும்போது மூன்றாயிரம் நான்காயிரம் என பணம் குறைந்து கணக்கு முடிக்கும் நிலை காணப்பட்டது! 

காசாளர் பணம் வாங்கிக் கொண்டிருக்கும்போது அவரிடம் அது ஆயத்த ஆடைப் பிரிவென்பதால் முந்தய நாட்களில் வாங்கியிருந்த ஆடைகளில் பழுது அல்லது குறைபாடு என ஏதேனும் ஒன்றுக்காக வாடிக்கையாளர்கள் அவரிடம் வாதம் செய்வதும் அதன் காரணமாக அவரது கவனம் சிதறுவதையும் நான் அடிக்கடி காண நேர்ந்தது!

அடுத்து அது புதிய நிறுவனம்! இரவு ஒன்பது மணிக்கு மேல்; பதினோறு மணிவரை அங்கு வாடிக்கையாளர்கள் குறைவாகவே வருவர்! எனினும் அங்கு மாலையிலிருந்து போடப்பட்ட அனைத்து விளக்குகளும் தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும்! இது அந்த நேரத்திற்கு தேவையற்றது! மேலும் அவற்றின் பயன்பாட்டை குறைத்தால் மின்கட்டணச் செலவு மிச்சமாகும் என்பது எனது கருத்து!

இந்த இரண்டையும் குறிப்பிட்டு காசாளரின் கவனம் சிதறாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றித்தர வேண்டும் ஆடை விவகாரங்களைக் கவனிப்பதற்கெனவே வேறு எவரையேனும் நியமித்தால் பணம் குறைவது கட்டுப்படும் எனவும் நான் எழுதியிருந்தேன்!

மறு நாள் நான் அந்தக் கடிதத்துடன் எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன்! வழக்கம்போல உரிமையாளர்களின் அணிவரிசையில் முன்னதாக நான் வேலைக்குச் சேர்ந்த பழைய நிறுவனத்தின் மேலாளரும் உடன் வந்தார்! 

அவர் காசாளர் அருகில நான் இருப்பதைக் கண்ணுற்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னைப் பார்த்து உங்களை யார் காசாளர் அருகில் அமரச் சொன்னது எனச் சற்று குரலை உயர்த்திச் சொல்லவே நான உடனடியாக அந்த இடத்தை விட்டு விலக வெளியே வந்து நின்று கொண்டு என்னை வேலைக்குச் சேர்த்த அண்ணாச்சியை அழைத்து அவரிம் எனது சட்டைப்பையில் தயாராக வைத்திருந்த கடிதத்தைக் கொடுக்க அவரும் அதை உடனடியாகப் பிரித்துப் பார்க்காமல் தன்னுடைய சட்டைப்பையில் அதனை வைத்துக் கொண்டு உரிமையாளர்களுடன் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார்!

அதன் பின்னர் நான் காசாளர் அருகில் அமராமல் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு வழக்கம் போல எனது பணியைத் தொடர்ந்தேன்!

மறு நாள் காலை நான் எனது பிரிவிற்குச் சென்றபோது அங்கு அதிரடியாகச் சில மாற்றங்களைக் காண நேர்ந்தது! பழைய என்னை விடச் சில வயது அதிகமிருந்த காசாளருக்குப்பதில் ஒரு அனுபவமுள்ள இளம் வயது காசாளர் அங்கிருந்தார்! மேலும் ஆயத்த ஆடைகளை மாற்றுவதற்காக வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்து அவர்கள் குறைகளைத் தீர்த்து வைப்பதெற்கென ஒருவரும் அங்கு புதிதாக வந்திருந்தார்!

என்னை யாரும் எதுவும் சொல்லாததாலும் புதிய இளம் வயது காசாளர் என்னைப்பற்றி விசாரித்தறிந்து அவர் பக்கத்திலேயே என்னை அமர்த்திக் கொள்ள நானும வழக்கம் போல எனது பணியைச் செய்யத் துவங்கினேன்! இளம் காசாளர் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருந்ததால் அன்றிலிருந்து பணம் குறைவது நின்றுவிட்டது!

மேலும் ஒவ்வொரு நாள் இரவு ஒன்பது மணியானதும் சரியாக ஒரு மின் பணியாளர் ஒவ்வொரு தளமாக வந்து தேவையற்ற மின்விளக்குகள் மற்றும் குளிர் சாதன அமைப்புகளை நிறுத்தத் துவங்கினார்! தீபாவளி நெருங்கத் துவங்கி தீபாவளி நாள் இரவு மணி 2 வரை கடுமையான கூட்ட நெரிசலையும் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆட்கள் துணையுடன் வெற்றிகரமாகக் குழப்பமின்றியும் பண இழப்பு ஏதுமின்றியும் சமாளிக்க முடிந்தது! 

இதனை ஏன் இவ்வாறு விரிவாக எழுதியுள்ளேன் என்றால் ஒரு தகுதியும் திறமையும், உழைப்பிற்கு அஞ்சாத தன்மையும் முக்கியமாக நேர்மையும் உடைய ஒருவர் எந்த வயதாக இருந்தாலும் அவரிடம் காணப்படும் இயல்புகளை அவரது முகம் பார்த்த கணத்திலேயே உணர்ந்து இளைஞர்களை எதிர்பார்த்திருந்த நிலையில் நாற்பத்து மூன்று வயதான எனக்கு வேலை வாய்ப்பளித்த அண்ணாச்சி போலவும், செல்வாக்கில் சாதாரணமாகத் தோன்றிய எனது கடிதத்தினை அலட்சியப்படுத்தாமல் உரிய மாற்றங்களை உடனடியாகச் செயல்படுத்தி தாங்கள் ஒரு சிறந்த நிர்வாகிகள் என நிரூபித்த நிறுவன உரிமையாளர்களையும், 

அங்கு பணியில் இருந்த போது பணியாட்களைச் சோதித்தே வெளியில் அனுப்பிய நிலையில் என்னைச் சோதித்த முன்னாளைய காவல்துறைப் பணி மூப்பு ஆய்வாளராக இருந்து தற்பொழுது அங்கு பாதுகாப்புப் பணியாளராக இருந்த அலுவலர் என்னை மரியாதையுடன் மெதுவாகத் தடவிச் சோதிக்காமல் என் முகம் பார்த்து இவர் சோதிக்கப்படத் தக்கவர் அல்ல என்று தனது காவல் பணியில் பல குற்றவாளிகளைக் கண்டுள்ள அனுபவம் கருதி நம்பி அனுப்பியதை இந்தக் காலத்து இளைய சமுதாயத்தினர் முன்பு அடையாளப்படுத்துவதற்காகத்தான்!

எந்த இடத்தில் வேலை செய்தாலும் ஒருவித உள்ளுணர்வுடன் இருத்தல், மற்றும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்துக் கவனமாக இருத்தல் மிகுந்த நன்மை பயக்கும் என்பதுவும், அதனினும் மேலாக என்னுடைய திறமையின் மேல் நான் முழு நம்பிக்கை வைத்து எப்படியாவது ஒரு வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை இறுதி வரை கைவிடாததுவும் நன்மையளித்தது !

தீபாவளி முடிந்தபின்னர் நான் ஊருக்கு விடுப்பு கிடைத்த போதெல்லாம் வந்து போனதுவும், எனது ஒரே செல்ல மகளின் படிப்பு நான் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதால் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவும் நான் அந்த வேலையிலிருந்து விடுபட்டு மீண்டும் ஊருக்கே திரும்பி முன்பு வேலை பார்த்த அதே நிறுவனத்தில் மீண்டும் மேலாளராகச் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணியாற்றிவிட்டுத் தற்பொழுது வேறிடத்தில் பணியாற்றுவதும் பின் குறிப்பாகும்!

Read More...

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

அவரவர் கோபம் அவரவருக்கு!

Leave a Comment
எனது தந்தையார் தனது மூத்த அண்ணாருடன் இணைந்து உணவகம் நடத்திச் சேர்த்த சொத்துக்களை ஒரு கட்டத்தில் என் பெரியப்பா தனக்கே உரிமையென எடுத்துக்கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தும் தனக்குரிய பங்கினை முறையாகப் பெற இயலாத என் தந்தை 

பெருத்த ஏமாற்றத்துடன் அவரிடமிருந்து கிடைத்த சொற்பப்  பணத்துடன் அனைத்து சொத்துக்களிலும் இனி தனக்கோ தனது வாரிசுகளுக்கோ எந்தவித உரிமையும் கிடையாது என எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்!

இதன் காரணமாக எனது பெரியப்பா குடும்பத்துடன் எங்கள் குடும்பம் பேச்சு வார்த்தையின்றிப் போனது! பல ஆண்டுகள் செய்து வந்த வணிகத்திலிருந்து ஒரேயடியாக விலக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபமும், தன்னுடைய கடுமையான உழைப்பினால் சேர்த்த சொத்துக்களை இழந்துவிட்டதால் தனக்கு வாழ வழியின்றிப் போனதால் ஏற்பட்ட விரக்தியியிலும் சில ஆண்டுகள் என் தந்தை வேறு எந்த வணிகத்திலும் ஈடுபட விரும்பவில்லை!

வருமானமின்றிப்போனதால் ஏற்பட்ட குடும்பச் சுமைகள் ஒரு பக்கம்! குடும்பம் ஒன்றாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் எஞ்சியிருந்த எங்கள் மூவரையும் வளர்த்து படிக்க வைக்க எனது தந்தையார் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! இதுவும் எனது தந்தையாருக்குத் தன் அண்ணன் குடும்பம் மேலிருந்த கோபம் அதிகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது!

குடும்பம் பிரிந்த பொழுது எனக்கு பனிரெண்டு வயதுதான்! எனது பெரியப்பா குடும்பத்துடன் எங்கள் குடும்பத்தவர் தொடர்பு கொண்டால் எனது தகப்பனாரிடம் திட்டு வாங்க நேரிடுமே என்பதை விட அவர் மனம் வேதனைப்படுமே என்பதால் நான் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொண்டதில்லை!

இரண்டாண்டுகள் இவ்வாறே கழிந்தபின் எனது தந்தை தன்னிடம் மீதமுள்ள பணத்தைக் கொண்டு பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டுச் சிறிது பணம் சேர்த்தார்! அந்தப் பணத்தைக் கொண்டு எங்கள் ஊரின் கடை கோடியில் எனது சகோதரிக்குச் சொந்தமான ஒரு நிலத்தை வாங்கி அதில் ஒரு அரிசி அரவை ஆலையைக் கட்டத் துவங்கினார்!

இந்த ஆலையை அரசு விதிப்படி கட்டிடத்தைச் சற்று பெரியதாகக் கட்டத் துவங்கவே அவரிடமிருந்த முதலீடு முழுவதும் கட்டிடப் பணியிலேயே முடங்கியது! மேலும் ஆலைக்கு மின் இணைப்புப் பெற மின்வாரியத்தை அணுகினால் ஆலைக்கு தகுதியான பவர் தருவதற்கென தனியான மின்சார டிரான்ஸ்பார்மர் ஆலை அருகில் இருந்தால்தான் தரமுடியுமென சில ஆண்டுகள் இழுத்தடித்தனர்!

ஒருவழியாக தன்னுடைய செலவில் அதனையும் நிறுவி மின் இணைப்பு பெற்றபோது அரவை ஆலைக்குரிய இயந்திரங்கள் மற்ற நெல் காயவைப்பதற்கான களம் அமைத்தல் போன்ற செலவினங்களுக்குப் பணம் இன்றிப் போனதால் அந்தத் திட்டமும் தள்ளிப் போனது! 

பின்னர் எங்கள் ஊரில் பரவலாக இருந்த பருத்தி அரவை ஆலையைத் துவக்குவதென முடிவு செய்து அதற்குரிய இரண்டாம்தர பாகங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்த நிலையிலும் இந்த ஆலையையும் நடத்துவதற்குப் போதிய பணம் இன்றிப்போனது! 

எவ்வளவோ முயன்றும் அந்த நாட்களில் என் தந்தைக்கு வங்கிக் கடன் ஏதும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு வேதனையான செய்திதாம்! இந்த நிலையில் நான் எனது பதினொன்றாம் வகுப்பினை முடித்துவிட்டு நாமக்கல்லில் எனது சிறிய தகப்பனார் பணியாற்றிய கலைக்கல்லூரியில் சேர்ந்து புகுமுக வகுப்பினைத் தட்டுத்தடுமாறிப் படித்து முடித்திருந்தேன்!

மேற்கொண்டு படிக்க இயலாதவாறு எனது சூழல் அமைந்ததால் ஓராண்டு எனது சிறிய தகப்பனார் நாமக்கல்லில் துவங்கிய ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அந்த தொழிலில் உள்ள இலாபங்கள் பற்றிய எனது சிறிய தகப்பனார் தந்த ஆலோசனையின் பேரில் நாங்கள் அதுவரை வசித்து வந்த சொந்த ஊரை விட்டு இருந்த சொத்துக்களையும் விற்றுவிட்டு ஆட்டோமொபைல் வணிகம் செய்வதற்காக வேறு ஊருக்குக் குடி பெயர்ந்து வந்தபோது எனக்கு வயது பதினெட்டு!

அப்பொழுதுகூட எனது தந்தையாருக்குத் தன் அண்ணன் குடும்பத்தின் மீதிருந்த கோபம் குறையவில்லை! வெளியில் இப்படி நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் அவர் தன் அண்ணன் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பது எனக்குள் நன்றாகவே விளங்கும்!

நாமக்கல்லிலும் எங்களால் இரு ஆண்டுகளுக்குமேல் தாக்குப்பிடிக்க இயலவில்லை! அங்கும் எனது சிறிய தகப்பனாருடன் ஏற்பட்ட வணிக மனவருத்தம் காரணமாக நாங்கள் அவரிடமிருந்தும் பிரிய நேர்ந்தது! அவருடனான உறவும் என் தந்தைக்கு முறிந்தது!

அது மட்டுமல்ல! பல்வேறு காரணங்களால் எங்கள் தகப்பனாரின் மன வருத்தத்தைச் சம்பாதித்து அவரது ஒட்டுமொத்த உடன் பிறந்தவர்கள் குடும்பமும் பல்வேறு கால கட்டங்களில்  எங்களுடன் பேச்சுவார்த்தை இன்றிப் போனது! 

என் வயது இருபதைத் தாண்டியபின் என் தந்தையிடம் சுதந்திரமாக இருக்க முடிந்ததால் அதன்பிறகு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் எனது பெரியப்பா குடும்பத்துடன் நான் தொடர்பு கொண்டு விட்டுப்போன குடும்ப உறவைப் புதுப்பிக்கத் தொடங்கினேன்!

அது மட்டுமன்றி உறவு விட்டுப்போன அனைத்து குடும்பங்களுடனும் நான் உறவினைப் புதுப்பிக்கத் துவங்கினேன்!

இந்தப் பிறவியில் விரும்பியோ விரும்பாமலோ ஒரு உறவுக்கூட்டத்தில் பிறப்பெடுத்துவிட்டோம்! இது தேகம் சார்ந்த உறவு! அடுத்து குடும்பத்தில் நிகழும் திருமணங்களால் மேலும் சில உறவுகளை நாம் புதியதாகப் பெறுகிறோம்!

இவையன்றி நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இதோ இந்த நிமிடம் வரை பல்வேறு இன மொழி மார்க்கம் சார்ந்த பலரிடம் நாம் நட்பு பாராட்டுகிறோம்! வாழ்க்கை என்பதே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதுதாம்! 

இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் அனுபவங்களில் ஒன்றுதான் பிரிவு என்பது! அந்தப் பிரிவு என்ன காரணத்திற்காக ஏற்படுகின்றதென்பது அவரவர் மனச்சாட்சி சார்ந்ததாகும்! 

ஒவ்வொருவர் தரப்பிலும் ஒவ்வொரு காரணம் இருக்கும்! அவரவர் நிலையில் அது சரியானதாகக்கூட இருக்கலாம்! 

இந்த நிலையில் என் தந்தைக்கு விரோதமானவர்கள் எனக்கு விரோதமாக இருக்க வேண்டியதில்லை என்ற கொள்கையை உடையவன் நான்! அது போன்றே எனக்கு உறவாக இருப்பவர்களுக்கு விரோதமாக இருக்கும் அவர்தம் உறவும் நட்பும் எனக்கும் விரோதமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை என்பதில் நான் எப்பொழுதும் உறுதியாகவே இருந்து வந்துள்ளேன்!

ஏனெனில் அவரவர் கோபம் அவரவருக்கு! அதை நம் மீது திணிக்கும் அதிகாரத்தை நான் என்றைக்குமே அவர்களுக்குக் கொடுப்பதில்லை! 

என் குணம் அறிந்ததால் என் தந்தையும் என்னைக் கண்டித்ததில்லை! திருமணமாகி எனக்கு மனைவியாக வாய்த்தவரும் குடும்ப உறவுகள் பிரியாமல் இருக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பதாலும் எவ்வளவோ மன வருத்தங்களுக்கு இடையிலும் நான் எனது குடும்ப உறவுகள் ஒற்றுமையாக இருப்பதற்காகப் பாடுபட்டு வருகிறேன்!

என் தந்தையும் தனது இறுதிக் காலத்தை மருத்துவமனையில் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது எங்களின் வேண்டுகோளைச் செவியேற்று அதுவரை தன்னிடம் பேச்சு வார்தையின்றிப் போன குடும்ப உறவுகள்  அனைவரும்  தன்னை வந்து நலம் விசாரித்துச் செல்ல அனுமதியளித்து தன் இறுதி மூச்சினை நிறுத்தினார்!

என் தந்தையின் குணம் எப்படிப்பட்டதென்பதை நான் நன்கறிவேன்! தன்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மதித்தவர்களின் நல்லது கெட்டதுகளில் எவ்வித வேறுபாட்டையும் வெளிக்காட்டாமல் வயதான காலத்திலும் தன்னுடைய உடல் நலன் பாராமல் முன்னிருந்து பொருட்செலவு பாராமல் கலந்து கொண்டு நடத்தி வைத்துள்ளதையும் 

தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாத உறவுகளை வெளிப்படையாக வெறுப்பது போலப் பாவனை செய்தாலும் தன் வாழ்நாள் இறுதிவரை தன் தேகம் சார்ந்த உறவுகளின் மேல் அவர் வைத்திருந்த பாசத்தை அறியக்கூட இயலாத ஆழ்மன உணர்வு தொலைத்தவனல்ல நான்!

Read More...

புதன், 13 ஆகஸ்ட், 2014

விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Leave a Comment
நாடு தனது 68 ஆவது விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளது! வழக்கம்போல விடுமுறை நாளைக் கொண்டாடுவது போல மக்கள் விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளனர்!

எவ்வளவுதான் நாட்டுப்பற்று மிக்கவர்களாக மக்கள் தங்களைப் பறை சாற்றிக்கொண்டாலும் மக்களிடம் நாட்டுப் பற்றுக் குறைந்துள்ளதை 12.08.14 அன்று  கண்கூடாகக் காண நேர்ந்தது!

நேற்று ஈரோட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்!

பாரத மக்களின் பெருவிருப்பத்திற்கு உரிய மாண்புமிகு கலாம் அவர்கள் நிறைவுநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்!

அவரை நேரில் காண வேண்டுமென்ற ஆவலில் பத்து வயதிற்கும் குறைந்த பள்ளிச் சிறுவர்கள்கூட பெருந்திரளாக வந்திருந்தனர்!

கடுமையான போக்குவரத்து நெரிசல்கூட திரு கலாம் அவர்களைக் காண வேண்டுமென்ற ஆவலில் வந்த கூட்டத்தால் உருவானதைக் கண்ணுற்றபோது நம் இளைய சமுதாயம் அவர் மேல் வைத்துள்ள ஏராளமான மதிப்பினை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டதால் எமக்குள் மிகுந்த மகிழ்ச்சி அலைகள்!

இந்த நிகழ்விற்கு எனது பணியை முடித்துவிட்டுச் சென்றதால் அரங்கில் நுழைய இயலாமல் புத்தக அரங்கில்தான் அதுவும் ஏராளமான மக்களுக்கிடையில் நீந்திச் சென்றவாறு உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கி வாயிலாக அவரது உரையைக் கேட்க முடிந்தது!

விழா முடிந்தவுடன் மேதை கலாம் அவர்கள் கலந்து கொண்ட விழா என்பதோடு மட்டுமன்றி நிறைவு நாள் விழா என்பதாலும் இறுதி நிகழ்வாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது!

கூட்ட அரங்கில் இருந்தவர்கள் எப்படி நடந்து கொண்டனரோ யாம் அறியோம்! அதே சமயம் புத்தக அரங்கில் இருந்த எனக்கு நாட்டுப்பண் இசைக்கப்படுவதாக வெளியான அறிவுpப்பு கேட்டவுடன் சற்று மவுனம் காத்து புத்தகம் எடுப்பதைத் தவிர்த்து நின்றவாக்கில் உள்ளுக்குள் நாட்டுப்பண்ணை இசைத்து மரியாதை செழுத்தினேன்!

ஆனால் புத்தக அரங்கில் இருந்த ஏராளமான மக்கள் குறிப்பாக படித்தவர்கள் அனைவருமே நடந்து கொண்டும், பேசிக்கொண்டும், புத்தகங்களை எடுத்தவாறு இருந்தனரே தவிர நாட்டுப்பண் இசைக்கப்படுவதை ஒரு பொருட்டாகக் கருதியதாகத் தெரியவில்லை!

ஒரு சகோதரி என்னைச் சற்று வழி விடுங்கள் என வேண்டியவாறு புத்தகம் எடுப்ததற்காகக் கடந்ததால் எனது கவனம் கலைந்து தேசிய கீதம் உள்ளுக்குள் வாசிப்பதும் தடைபட்டது!

நாட்டுப்பண் இசைக்கும்போது அதனை மக்கள் மதிப்பதில்லை என்பதால்தான் திரை அரங்குகளில்கூட இப்பொழுது நாட்டுப்பண் இசைப்பதை நிறுத்திவிட்டனர்!

இந்த நாட்டை உலக அரங்கில் ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு சென்ற மக்களின் மரியாதைக்குரிய ஒரு மாமேதை கலந்து கொண்ட நிகழ்வில்கூட நம் நாட்டுப்பண் இசைக்கப்படுவதை செவியால் உணர்ந்தும் மக்கள் செவியற்றவர்கள் போல நடந்து கொண்ட நிகழ்வினைக் கண்ணுற்ற போதுதாம் நம் மக்களை இன்றும் அடிமைகளாக நடத்தும் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் ஒருவேளை நியாயம்தானோ என எண்ணத் தோன்றியது!

இந்த நாடு அடிமைப்பட்ட காலத்தில் நான்கூடப் பிறக்கவில்லைதான்! எனினும் அன்னியர் ஆட்சியில் நம் மக்கள் அடைந்த இன்னல்களை இளம் வயது முதல் மக்களைப் போலவே நானும் படித்தறிந்துள்ளேன்!

அதே போன்று விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பட்ட இன்னல்களை நாம் நேரில் கண்டதில்லைதான்! ஆனால் அந்தத் தலைவர்கள் எதற்காகப் போராடி நம் நாட்டு மக்களுக்கு அடிமை விலங்கொடித்து விடுதலை வாங்கித் தந்தார்களோ அந்த நோக்கம் பாழ்பட்டுப்போக நம் மக்களின் இது போன்ற அலட்சியங்கள்தாம் காரணமாகிறதோ எனத்தான் எண்ணத் தோன்றுகிறது!

நாடு அன்னியரிடம் விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று நம்மவரே நம்மை அடிமைப்படுத்தி வைத்து அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துச் சுகப்படும் அரசியல்வாதிகள் நிறைந்த கால கட்டம் இது!

நாட்டுப்பண் இசைக்கப்படுவதைக் கேட்கும்போது அதற்கு மரியாதை செலுத்தத் தவறுவதென்பது சாதாரண அலட்சியமல்ல! அது நம் நாட்டையே அலட்சியப்படுத்துவதற்குச் சமம்!

இது போன்ற அலட்சியங்கள் படித்த மக்கள் பெருகிவரும் நம் நாட்டில் குறிப்பாகத் தமிகத்தில் நடைபெற வேண்டாம் என்பதுதாம் எம் போன்றவர்களின் கோரிக்கை!

இலஞ்சம், ஊழல், அடக்குமுறை, எதேச்சாதிகாரம், அரசியல் ஆணவம், இவைகளைச் சகித்துக்கொண்டு காந்தி மகான் நமக்குத் தந்த அகிம்சை குணத்தைக் கைவிடாமல் பணிந்து வாழ்வதென மக்கள் திட்டமாக முடிவெடுத்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 15 விடுதலைத் திருநாள் வழக்கமான விடுமுறைக் கொண்டாட்டமாகவே மக்களுக்கு விடியப்போகிறது!

காந்தி மகான் தன்னுடைய எழுத்தில் வடித்தவாறு நள்ளிரவிலும் தன்னந்தனியாக ஒரு இளம்பெண் எவ்வித அச்சமும் இன்றி நடமாடும் நிலை என்று இந்த நாட்டில் உருவாகிறதோ அன்றுதான் இந்த நாடு உண்மையிலேயே விடுதலை பெற்ற நாடு என்பதாகத்தான் நானும் கருதுகிறேன்!

அந்த நிலை உருவாக வேண்டுமென்றால் நம் மக்களிடம் மேற்குறிப்பிட்டவாறு உள்ள அலட்சிய குணங்கள் தொலைய வேண்டும்!

காந்தி மகான் நமக்கு வழங்கிய சத்தியாக்கிரகம், அகிம்சை, போன்ற ஏராளமான வன்முறையற்ற அற வழிகளைக் கையாண்டு நம் நாட்டை இன்றும் சுரண்டும் அரசியல் எத்தர்களைத் திருத்துவதற்கு இன்னுமொரு சுதந்திரப் போரை

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவியின் வீர வரிகளைக் கொண்டு துவங்கிட, அவர்தம் பாதம் பதிந்த மண்ணை முகர்ந்து நான்கு ஆண்டுகள் அவர்தம் இல்லத்துச் சுவாசத்தைச் சுவாசித்தவன் என்ற உணர்வுடன் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக மக்களுக்கு வேண்டுகோளாக விடுத்து

இந்த நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடி மடிந்தாலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான தியாகிகளின் தியாகங்களைப் போற்றி அவர்தம் பாதம் பணிந்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Read More...

சனி, 9 ஆகஸ்ட், 2014

வணிகமும் வணிகவரித்துறையும்!

Leave a Comment
என்னுடைய வணிகம் துவங்கியது திராவிட ஆட்சியாளர்கள் காலத்தில்!

இவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வணிகவரித்துறையில் இலஞ்சம் ஆதிக்கம் செழுத்தத் துவங்கிவிட்டதெனலாம்!

இவர்களைக் கேட்டால் இணை வணிகவரி அலுவலர் துவங்கி ஒவ்வொரு மட்டத்திலும் இவ்வளவு என ஒரு தொகையை மேலிடத்திற்கு வழங்க வேண்டும் அதனால்தான் நாங்கள் இலஞ்சம் வாங்க வேண்டியதாயிற்று என்பார்கள்!

மேலிடம் என்பது எவரென இன்றுள்ள தமிழகத்தின் எல்கேஜி குழந்தைகூட சரியாகச் சொல்லிவிடும்!

இப்படியாகத் துவங்கியதுதான் இந்தத் துறையின் இலஞ்ச வரலாறு!

தேனெடுத்துத் தருபவர்கள் புறங்கையைச் சுவைக்காமலா இருப்பார்கள்? எப்படியோ ஓகோவென இலஞ்சம் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறந்தது! இன்னும் பறக்கிறது!

எனக்குத் தெரிந்தவரையிலேயே இந்தத் துறை சார்ந்த அன்பர்கள் அடிக்கடி வணிகர்களிடம் கைநீட்டிக் கைநீட்டி தங்களின் வயோதிக காலத்தில் அட்டாக் வந்து செயலற்றவர்களாக நிறைய பேரைப் பார்த்துள்ளேன்! இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!

வணிகர்களுக்குள் விற்பனை வரி குறித்த விழிப்புணர்வு இன்றுவரை இல்லையெனத்தான் கருத வேண்டும்! வரி ஏய்ப்பு என்பது வேறு! வரிக்கு உட்படுத்தாத வணிகம் என்பது வேறு!

பெரும்பாலான வணிகர்கள் வரிக்கு உட்படுத்தாத வணிகம்தான் இன்றுவரை செய்து வருகின்றனர் அது வரி ஏய்ப்புக் குற்றமாகாது!

ஒரு வணிகர் தம்மிடமுள்ள வரிக்குட்பட்ட பொருட்களின் மீது வரி வசூலித்துவிட்டு அதனை அரசுக்குக் கட்டாமல் மறைத்துவிடுவதுதான் உண்மையிலேயே வரி ஏய்ப்பு என்பதாகும்! இது புரியாமல் அநேக வணிகர்கள் வணிக வரித்துறை அலுவலர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடு படுவர்!

வரிக்கு உட்படுத்தப்படாமல் பெரும்பாலான வணிகர்கள் வணிகம் செய்வதற்குக் காரணமே அரசு செய்யும் தவறுகள்தான் பிரதானமெனலாம்!

குறிப்பாக வணிக வரி உற்பத்தி நிலையிலிருந்தே துவங்குகிறது! உற்பத்தி துவங்குபவர்கள் முதலாவதாக மத்திய அரசின் பல்வேறு வரிகளை வணிகர்களிடமிருந்து வசூலித்துக் கட்டவேண்டியுள்ளது! மத்திய அரசின் வரியும் எளிமையானதாக இருப்பதில்லை! பொருளின் உற்பத்தி விலையில் நாற்பது சத அளவிற்குப் பல்வேறு வித வரிகள்!

உற்பத்தியாகும் பொருளின் அடக்கவிலையுடன் தங்களின் இலாபத்தையும் சேர்த்து இந்த வரியை விதித்தால் இன்றைய போட்டியான உலகத்தில் தங்களின் விலை எடுபடாது என்பதாலேயே பெரும்பாலான உற்பத்தியாளர்கள் வரிக்கு உட்படுத்தாமல் வணிகருக்கு விற்க என்ன வழி என ஆராயத் துவங்கிவிடுவர்!

அது மட்டுமன்றி உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தங்களின் வருடாந்தர உற்பத்தி மற்றும் விற்பனை அளவினை முடிந்தவரை குறைத்துக் காட்டினால்தான் மத்திய அரசின் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியும் என்று கருதிச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்!

பெரும்பாலான உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தங்களின் வருடாந்திர உற்பத்தி மற்றும் விற்பனை அளவினை வருமான வரி காரணமாக குறைத்துக் காட்டுவதைத்  தவிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு!

எந்த உற்பத்தியாளராகவும் வணிகராகவும் இருப்பவர்கள் தங்களின் தொழிலில் ஏற்படும் போட்டிகள் காரணமாக வணிகத்தில் பல சமயங்களில் இறங்குமுகம் காண்பதுண்டு!

இது தெரியாமல் உற்பத்தியாளரோ, வணிகரோ தங்களின் விற்பனை அளவினை சென்ற ஆண்டை விடக் குறைத்துக் காட்டிவிட்டனர் என்பதற்காக, இவர்கள் வரி ஏய்ப்பு செய்ய முற்பட்டிருப்பர் என நேரடி ஆய்வுக்கு வரித்துறையினர் வந்துவிடுவதால்தான் பெரும்பாலானவர்கள் தங்களின் வணிகத்தில் ஒரு சம நிலையான கணக்கினை சமர்ப்பித்து வர முயல்கின்றனர்!

அடுத்து மாநில அரசின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான வரிவிதிப்பு முறை! அதிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்ற இறக்க விகிதங்கள்!

ஐந்து சத வரியில் நான்கு பொருட்களையும் பதினைந்து சத வரியில் நானூறு பொருட்களையும் விகிதப்படுத்தினால் வணிகர்கள் குறிப்பாக உற்பத்தியாளர்கள் வரிக்கு உட்படுத்தாமல் வணிகம் செய்யத்தான் வழி காண்பார்கள்! இவர்களிடம் தகுந்த பில் இல்லாமல் வாங்கும் வணிகரும் அதனை வரிக்கு உட்படுத்தாமல்தான் விற்கப் பார்ப்பார்!

இவை போதாதென மத்திய அரசு தங்களின் விருப்பம்போல வாகன எரிபொருள்களின் விலையை அடிக்கடி ஏற்றுகிறது! அது மட்டுமன்றி பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதற்குரிய கட்டணம் பெரும் சரக்கு வாகனத்துறை மத்திய அரசின் சேவைவரிப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது! சேவை வரியும் சாதாரணமல்ல! சுமார் 12.5 சதவீதம்! இதுவும் பொருட்களின் உற்பத்தி விலை துவங்கி விற்பனை விலை வரை அதிகரிக்க ஒரு காரணமாகிவிட்டது!

இப்பொழுது மத்திய அரசின் வெளிமாநிலங்களுக்கிடையிலான வரியில் சில மாற்றங்கள் வந்து மதிப்புக்கூட்டு வரி முறை அமலில் உள்ளது! இந்த வரிப் பிரிவிலும் வணிகர்கள் தங்களை உட்படுத்திக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணமே அதிக விற்றுமுதல் காட்டி இரு அரசுகளிடமும் விற்பனை உற்பத்தி வருமானம் எனப் பல்வேறு வரிகளில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்க வேண்டுமே என்ற பயம் காரணம்தான்!

எவர் எப்படியோ நான் சொந்தமாக வணிகம் செய்தவரை என்னுடைய வணிகத்தில் வரிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் எண்பத்தைந்து சதவீத அளவிற்கு விற்றுள்ளேன்! மீதமுள்ள பதினைந்து சதப் பொருட்களுக்கு அதை என்னிடம் விற்கும் வணிகர் வரிக்கு உட்படுத்தாமல் விற்றிருப்பார்.

எனவே அதனை அப்படியே வாங்கிய விதத்திலேயே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்!

ஒருமுறை இன்றைய திராவிட ஆட்சியாளர்களின் குளறுபடியான வணிகவரி விதிப்பு முறையால் என்னிடம் விற்பனை வரி கட்டப்பட்டிருந்த பொருட்களுக்கே மீண்டும் விற்பனை வரி அதுவும் இலஞ்சத்துடன் கட்டுமாறு விற்பனை வரி அலுவலர்கள் தவறான உத்தரவு போட விதியே என அதற்கும் தண்டமாக வரி கட்டினேன்!

இதே போல ஒரு முறை எனக்கு வந்த சரக்கு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது! இத்தனைக்கும் அது வரி கட்டப்பட்ட பொருள்தான்! ஆனால் விலாசம் சரியில்லை என்ற காரணத்திற்காக அது அங்கு நிறுத்திவைக்கப்பட்டது!

வேறு வழியின்றி நேரில் சென்றால் அங்கிருந்த அலுவலர் அதனை விடுவிக்க இலஞ்சம் கேட்டார்! நான் வரி கட்டிய பொருளுக்கு எப்படித் தர முடியும் என வாதிட்டேன்! என்னிடம் பணம் கிடைக்காது என்பதால் இந்தப் பொருளுக்கு முன்வைப்பு வரி கட்டினால்தான் விடுவிக்க முடியுமென்றார்!

அந்தப் பணம் நம் விற்பனைவரிக் கணக்கில்தானே இருக்கப்போகிறது என்பதால் வேறு வழியின்றி அதற்குரிய பணத்தைக் கட்டிவிட்டு பொருளை எடுத்து வந்தேன்!

என்னைப் பொருத்தவரை அந்தந்த வருடத்திற்கான வருடாந்திர விற்பனை அளவினை உள்ளது உள்ளபடியே விற்பனைவரி அலுவலகத்தில் தாக்கல் செய்வேன்! வணிகம் துவங்கியதிலிருந்து சுமார் ஒன்பது ஆண்டுகள் வரை இதே கொள்கைதான்!

கடன் சுமை  மற்றும் பல்வேறுவித காரணங்களினால் என்னுடைய வணிகம் பத்தாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விடச் சில இலட்சங்கள் குறைவாக விற்பனை ஆகியிருந்தது!

நானும் வழக்கம்போல அந்த ஆண்டிற்குரிய உண்மையான கணக்கு வழக்குகளை வணிக வரித்துறையில் தாக்கல் செய்தேன்! அதன் எதிர் விளைவை உடனடியாக நான் சந்தித்தேன்!

ஒரு நாள் வணிகமே இன்றிக் காத்து வாங்கிக்கொண்டிருந்த நிலையில் என்னுடைய கடைக்கு பெருநகரத்திலிருந்து உயர்வணிக வரி அலுவலர்கள் இருவர் தணிக்கைக்கு வந்தனர்! தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த காரணத்தைக் கூறினர்!

காரணம் மேற்கண்டதுதாம்! கடையிலிருந்த ஆவணங்கள் அனைத்தையும் சோதனையிட்டனர்! நான்தான் வரி ஏய்க்காதவனாயிற்றே! மேலும் கணக்கு வழக்குகளையும் ஒழுங்காக வைத்திருப்பேன்!

வணிகம் மோசமான நிலையில் இருந்ததால் ஒரு மாதக் கணக்கு மட்டும் எழுதவில்லை! அவர்கள் எதிர்பார்த்து வந்த அளவிற்கு என்னிடம் தவறு ஏதும் இல்லையென்பதை அவர்களாகவே உணர்ந்து கொண்டனர்!

எனது வணிகமும் நானும் இருந்த பரிதாப நிலை கண்டு மனம் இறங்கி தங்களுக்கென எதுவும் வேண்டாம் எனினும் தங்களை அனுப்பிய மேல் அலுவலருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என வற்புறுத்த வேறு வழியின்று எனது நண்பரிடம் கடன் வாங்கி அவர்கள் கேட்ட தொகையை கொடுத்தனுப்பினேன்!

அப்பொழுதும்கூட என்னிடம் வரி கட்டப்பட்ட பொருட்களின் ஒரு சிறு பட்டியலைத் தயாரித்து இவை வரிக்கு உட்படாதவை என்பதாக ஒரு தொகையை அபராதமாகவும் விதித்துச் சென்றனர்!

இது போதாதென்று அடுத்த மாதமே நான் வணிகம் செய்த நகரிலிருந்த உள்ளுர் அமலாக்கப்பிரிவிலிருந்தும் இன்னொரு தணிக்கைக் கடிதம் வந்தது!

வேறு வழியின்றி நேரில் சென்றால் மேற்சொன்ன இதே விவகாரத்திற்குத்தான் இங்கிருந்தும் தணிக்கை வேண்டிய கடிதம்! இங்கும் என் பரிதாப நிலை கண்டு மீண்டும் வரி கட்டிய பொருட்களிலேயே சிறு பட்டியலைத் தயாரித்து அதற்குரிய அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிட்டு பணம் ஏதும் வாங்காமல் அனுப்பிவிட்டனர்! கல்லுக்குள் ஈரம்!

இந்த இரண்டு அபராத வரிகளையும் கட்டும் வரை எனது வணிகம் தாக்குப்பிடிக்க இயலாமல் வீழ்ந்துவிட்டது! நான்தான் ஏற்கனவே முன்கூட்டிய வரியை என் கணக்கில் வைத்துவிட்டுத்தான் கடை மூடி விட்டேனே! அது மட்டுமன்றி என்னுடைய வைப்புத்தொகையும் வணிக வரி அலுவலகத்தில் இருப்பதால் அரசிற்கு என்னால் நட்டமேதுமில்லை!

நான் வணிகர் நல வாரியத்தில் ஆயட்கால உறுப்பினராகப் பதிவு பெற்றவன்! வணிகத்தில் நட்டமடையும் வணிகர்களுக்கு ஒரு இலட்சத்திற்கு மேல் அரசு உதவி உண்டு என்பதையும் நான் அறிவேன்!

எனினும் அரசிடம் உதவி பெறுவதை உண்மையாக வணிகம் செய்து இலட்சக்கணக்கில் வரிக்கு உட்படுத்திய வணிகம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு மறைமுகமாக உதவியுள்ள என்போன்றவர்கள் இது போன்று அரசிடம் கையேந்தி நிற்பதை கேவலமாக நினைப்பவர்கள்!

நானோ புலிக்கொடியைத் தனதாகக் கொண்ட சோழ மரபில் வந்தவன்! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா!

வணிகத்தில் வரிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் விற்கப்பட்டு அரசுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஏய்ப்பில்லாத வரி வருமானம் வர வேண்டும் என்றாலும், இந்தத் துறையில் இலஞ்சம் ஒழிய வேண்டுமென்றாலும் ஒரே வழிதான் உள்ளது!

அது ஏற்ற இறக்கமில்லாத ஒரே சமநிலையான எவருமே எளிமையானது எனக் கருதுமாறு வரி விதிப்பு முறை அமைவதுதாம்!

உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, மொத்த வணிகர், சில்லறை வணிகர் என அனைத்து தரப்பிலும் ஒழிவு மறைவற்ற வணிகம் நடைபெற மத்திய மாநில அரசுகள் வலிக்காமல் ஊசி போடும் முறையைக் கையாளத் துணிய வேண்டும்!

உண்மையாக நடக்கும் சிலரிடம் வரி பெற்று பலரிடம் வரி பெறாமல் விடுவதை இதன் வாயிலாகத் தவிர்க்க முடியும்! இந்தத் துறைகளில் இலஞ்சமும் ஒழியும் நிலை உருவாகும்!

வாய்மை உணர்வுள்ள ஆட்சியாளர்கள் நிர்வாகத்திற்கு வந்தால்தான் இது சாத்தியம்! அந்த நிலை எப்பொழுது உருவாகும் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாகும்!

Read More...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வணிகத் தவறுகள்!

Leave a Comment
பொதுவாக ஒரு வணிகம் துவங்குபவர் தன்னுடைய சொந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டுதான் வணிகம் தொடங்க வேண்டும்!

நாம் இந்த வணிகத்தை துவக்கிய பின்னர் இந்தத் துறை சார்ந்த மொத்த வணிகர்கள் நம் இருப்பிடம் தேடி வரத்துவங்குவர்!

பெரும்பாலான மொத்த வணிகர்கள் கடன் கொடுத்து தங்கள் வணிகக் கணக்தை நம்மிடம் துவங்குவர்! ஒரு சில மொத்த வணிகர்கள் மட்டும் ரொக்கத்திற்கு விற்பனை எனக் கொள்கை வைத்திருப்பர்!

எந்தத் தொழிலாக இருந்தாலும் கடனாகக் கிடைக்கிறதே என வாங்கி வாங்கி நம் கடையில் அடுக்கி வைத்துவிடக்கூடாது!

குறிப்பாக வணிகம் தொடங்கிய புதிதில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு வணிகம் நடக்குமா என்பதுவே நமக்குத் தெரியாது! ஏற்கனவே வேறு ஒருவர் நமக்கு அருகில் இதே வணிகத்தைச் செய்து வந்திருந்தால் அவருக்கு வரும் வாடிக்கையாளர் அளவிற்கு நமக்கு வருவது கடினம்!

நம்முடைய பொறுமையும், வாடிக்கையாளர்களிடம் பழகும் விதமும், நம்முடைய பொருட்களின் தரமும், நம்முடைய விலைக் கொள்கையுமே மெல்ல மெல்ல நம் வணிகம் உயர்வதற்கு உதவும்!

எனவே இந்த நிலையில் நம்முடைய விற்பனை அளவிற்கேற்பவே நம்முடைய கொள்முதலும் இருந்தாக வேண்டும்! உதாரணத்திற்கு தினசரி ஆயிரம் ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது என்றால் ஆயிரம் ரூபாய்க்குள்தான் நம்முடைய கொள்முதலும் இருக்க வேண்டும்!

எந்தப் பொருள் அதிகம் விற்கிறதோ அந்த பொருளை எப்பொழுதும் இல்லை என்று சொல்லாமல் விற்பனைக்கு வைத்திருப்பதும், எந்தப் பொருள் குறைவாக விற்கிறதோ அந்தப் பொருளை மிகக் குறைவாகவே இருப்பு வைத்துக்கொள்வதுதான் வணிகத்தில் மிகவும் பாதுகாப்பானது!

இதை விடுத்து கடனுக்குக் கிடைக்கிறதே என்று ஏராளமாக வாங்கி அடுக்கி வைத்துவிட்டு கடன் கொடுத்தவர் அடுத்த வாரமே அல்லது அடுத்த மாதமே கடன் தொகையைத் திருப்பிக் கேட்டால் விற்காத பொருட்களை திருப்பித் தரும் நிலையோ அல்லது அப்படிச் செய்யாதவராயின் என்னைப்போன்று கடன்பட்டாவது அதற்குரிய தொகையைத் தந்து விற்காத பொருட்கள் தேங்கி முதலீடு முடங்க நேரிடும்!

ஒரு இலட்சம் முதலீடு போட்டு ஒரு தொழில் தொடங்குபவராக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அந்தப் பணத்தில் ஒரு கணிணியை வாங்கி அதில் நம்முடைய விற்பனை மற்றும் கொள்முதல் மற்றும் செலவுக் கணக்குகளோடு பொருட்களையும் ஏற்றி பில் செய்து இலாப நட்டம் பார்க்கின்ற வசதியுள்ள ஒரு கணிணி மென்பொருளை கையாள்வதுதான் மிகச் சிறந்த பாதுகாப்பாக அவருக்கு அமையும்!

ஒவ்வொரு நாளும் துல்லியமாக நம்முடைய கொள்முதல் அளவு, விற்பனைத் திறன், எந்தப் பொருள் அதிகமாக விற்கிறது, எந்தப் பொருள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது என்ற தகவல்கள் உடனுக்குடன் கணிணி மென்பொருள் வாயிலாக நமக்குத் தெரிய வருவதால் அதற்கேற்ப நம்முடைய விற்பனை உத்திகளை மாற்றிக் கொள்ள இயலும்!

கணிணி வேண்டியதில்லை என்று நினைப்பவராக இருந்தால்கூட தங்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளதா என அறிந்து கொள்ள கட்டாயம் வருடாந்திர முடிவில் (வணிகர்களுக்கு ஏப்ரல் ஒன்று தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை) மார்ச் இறுதியில் ஒன்றிரண்டு நாட்கள் வணிக இலாபம் போனாலும் நிறுவனத்தின் விற்பனையை நிறுத்திவிட்டு தங்களின் சரக்கு இருப்பினை கட்டாயம் சரி பார்க்க வேண்டும்!

அவ்வாறு செய்யாதவர்கள் நிச்சயம் தங்களின் வணிக வளர்ச்சியைத் துல்லியமாக அறிந்து கொள்வதைத் தவற விட்டவர்களாவர்! மேலும் தங்களின் இலாபம் என்னவெனத் தெரியாத நிலையில் முதலீட்டு இருப்பு குறைந்து தங்களின் வணிகம் நட்டத்திலிருப்பதை அறியாமல் போகும் நிலையடைவர்!

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக வணிகம் துவங்கி நன்கு வளரும் வரை ஓரளவிற்குப் பொருட்களின் விலையிலிருந்து தள்ளுபடி தருவதில் தவறில்லை! அது நம்முடைய வணிகத்தை உயர்த்துவதற்குப் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை!

ஆனால் அதே சமயம் நமக்கு உண்மையிலேயே கிடைக்க வேண்டிய இலாபத்தை என்போல் ஒரேயடியாக வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுத்து ஏமாந்து விடவும் கூடாது! பிறகு என்னைப் போல விழுந்துவிட்டால் லாபமடைந்த வாடிக்கையாளர்கள் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றப் போவதில்லை!

நம்முடைய சொந்த நிறுவனம்தானே என்று வரவு அறியாமல் செலவழிப்பதும் நம்மை வீழ்த்திவிடக் காரணமாகிவிடும்! எனவே நம்முடைய வணிகத்தில் நமக்கு வணிகச் செலவுகள் போக மாதம் இவ்வளவுதான் வருமானம் கிடைக்கும் என்று துல்லியமாக அறிந்து அதற்கேற்ப ஒரு தொகையை நம்முடைய சம்பளமாகக் கருதி மாதந்தோறும் எடுத்து வந்தால் தவறேதுமில்லை!

அதை விடுத்து நினைத்த நேரம் பணம் எடுப்பது, கேட்டவருக்கெல்லாம் கடன் கொடுப்பது, வருமானம் அறியாமல் நிதி நிறுவனச் சீட்டுகளில் சேர்வதற்குப் பணத்தை ஒதுக்குவது, விற்பனைக்கேற்ற கொள்முதல் இன்றி அளவிற்கு அதிகமாக வாங்கிக் குவித்து அதற்குரிய பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி அடைப்பது போன்றவை அவரது வணிகத்தை வெகு விரைவில் முடிவிற்குக் கொண்டு வரக் காரணமாகிவிடும்!

மேலும் நிறுவனம் துவங்கி வணிகம் சரிவர நடக்கவில்லை என்பதற்காக வணிக நேரத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வது நினைத்த நாளில் கடைக்கு விடுமுறை விடுவது என்பவையும் வணிகத் தவறுகள்தாம்!

நல்ல ஒழுக்கமும் பணிவு குணம் உள்ளவர்களாகப் பணியாளர்கள் அமைவது இன்றைய உலகில் கடினம்தான்! எனினும் நம்மிடம் பணியில் அமர்பவர்களை நம்பித்தான் ஆக வேண்டும்! தவறு செய்பவர் எவரேனும் இருந்தால் நிச்சயம் நம் உள்ளுணர்வு அவர்களை நம்மிடம் காட்டிக்கொடுத்துவிடும்! முடிந்தவரை அவர்களைத் திருத்த முயலலாம்! திருந்தாதவர்களை நிறுத்திவிடலாம்!

ஒழுக்கமும் பணிவு குணமும் நிறைந்து உழைப்பதற்கு அஞ்சாத பணியாளர்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம் தொழிலுக்குத் தங்களின் உழைப்பினை முதல் போடாமல் வழங்கும் இவர்களுக்கு நம்முடைய வருடாந்திர வருமான இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவதென நாம் முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தவும் செய்தால் நிச்சயம் நமக்கு நிரந்தரமான பணியாளர்கள் அமைவது திண்ணம்!

மிகவும் போட்டிகள் நிறைந்த கால கட்டம் இன்றையது! எனவே நாம் தொழில் துவங்குகின்ற இடம் போட்டிகள் அற்றதாக அதே சமயம் இந்தத் தொழிலுக்கு அந்தப் பகுதியில் தேவை மிக்கதாக உள்ளதா எனச் சரியாக ஆய்வு செய்து தொழில் தொடங்க வேண்டியதுதான் மிக மிக அவசியம்!

எனக்குத் தெரிந்து பலர் இந்த ஒரு விசயத்தில் கவனம் செழுத்தாமல் வணிகம் துவங்கிவிட்டு போட்டியுள்ள இடங்களில் வணிகம் நடத்த இயலாமலும், போட்டிகளற்ற இடங்களில் வாங்குவதற்கு போதிய வாடிக்கையாளர்கள் இன்றிய நிலையிலும் ஓராண்டுக்குள் தங்களின் முதலீட்டில் பாதியளவிற்கு நட்டப்பட்டு வணிகத்தை முடித்துக் கொண்டு வருந்துவதைக் கண்டுள்ளேன்! 

சொந்த முதலீடாக இருந்து வணிகம் நடத்த இயலாதவர்களாக இருந்தால்கூடப் பரவாயில்லை! சொந்தத்திலோ, நட்பிலோ அல்லது வங்கியிலோ கடன் வாங்கி அவதிப்படுபவர்கள்தாம் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

மேற்கண்டவற்றில் புதிதாக ஒரு தொழில் தொடங்குபவர்களின் நன்மைக்காக வணிகத்தில் பல ஆண்டுகள் அனுபவப்பட்ட என்னுடைய சில வணிகத் தவறுகளையும் (அனைத்தும் அல்ல) உதாரணமாக்கியுள்ளேன்!

வாழ்ந்தவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்று விதியேதுமில்லை! வீழ்ந்தவர்களும் இதோ இது போன்ற அனுபவங்கள் வாயிலாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க முடியும் என்பதற்கு என் வணிக அனுபவமே மிகச்சிறந்த உதாரணம்!

Read More...

வாலிபம் என்பது கலைகின்ற மேகம்!

Leave a Comment
வாலிபம் என்பது கலைகின்ற மேகம்! 
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்! 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி! 
துயர் வந்த பின்னே தவிப்பவனோ ஏமாளி! 

என்று பூம்புகார் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும்!

இந்தப் பாடல் வரிகள் எவருக்குப் பொருந்துமோ தெரியாது எனது 
வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும்! 

இளம் வயதிலேயே வணிக வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன்! எனக்கு அப்பொழுது பதினேழு வயதுதான்! 

ஏமாற்றி வணிகம் செய்தால் இலட்சங்களில் லாபம் தரும் நல்ல தொழில்தான் என்னுடையது! ஆனால் என்னுள் இந்த தொழிலில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற ஒரே இலட்சியம் இளம் வயதிலேயே துளிர் விட்டுவிட்டது!

வணிகம் வளரும்போதும் எப்போதும் மாறாத நேர்மை உணர்வு! வரவுக்கும் செலவிற்கும் சரியாக இருந்ததே ஒழிய உபரியான வருமானம் பார்க்க இயலவில்லை! 

காலை ஒன்பது மணிக்கு கடை திறந்து மதியம் வரை வணிகம் செய்தபின்னர் மதிய உணவிற்குப் பின்னர் பெரு நகரங்களில் உள்ள மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்வதற்காக தினமும் எனது பயணம் துவங்கிவிடும்!

அங்கு மாலை ஐந்து மணிக்குச் சென்றடைந்தால் ஐந்தாறு நிறுவனங்களில் பொருட்கள் வாங்கி அவற்றை பண்டலிட்டு முடிக்க இரவு எட்டாகிவிடும்! 

அதன் பின்னர் அவைகளைச் சுமந்து கொண்டு பேருந்து நிலையம் சென்று வழக்கமாக ஏறும் பேருந்தினைப் பிடித்து (சில நடத்துனர்கள் அதற்குரிய கட்டணம் செழுத்துவேன் என்றாலும் நின்று கொண்டு பயணம் செய்பவர்களை ஏற்றுவதற்காக பேருந்தில் சுமைகளுடன் ஏற அனுமதிக்க மாட்டார்கள்) அமர்ந்து ஊர் வந்து சேரும்போது இரவு பனிரெண்டு மணியாகும்!

அரசுப் பேருந்துகளில் ஏறிவிட்டால் நாங்கள் வணிகம் செய்த ஊரில் எங்கள் வணிக இடம் வழியாகத்தான் சென்றாக வேண்டும்! எனினும் அந்த இடம் பேருந்து நிலையம் தாண்டிய அடுத்த நிறுத்தம்! எனவே இதற்குரிய கட்டணத்தைச் செலுத்துவதாகச் சொன்னாலும் நிறுத்த மாட்டோம் என பேருந்து நிலையத்திலேயே பல சமயங்களில் இறக்கி விட்டுவிடுவர்! 

அந்த நேரத்தில் அங்கிருந்து எங்கள் கடை வரை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சுமந்து வந்து சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும்!

கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடங்கள் நான் கொள்முதல் செய்து வாங்கிவந்த பொருட்களைச் சுமந்ததற்குக் கூலியாக ஒரு தொகையை ஒதுக்கிக் கணக்கிட்டாலே இலட்சங்களில் வரும்! அந்த அளவிற்குச் சுமந்துள்ளேன்!

ஆனால் நேர்மை என்ற ஒரே குறிக்கோளுடன் எந்தவித தீய பழக்க வழக்கங்களுமின்றி வாழ்ந்து நியாயமாகக் கிடைக்கக்கூடிய இலாபத்தைக்கூட வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுத்து இருபத்தைந்தாண்டுகள் விடாப்பிடியாக இதே உணர்வினைக் கடைபிடித்ததால் வணிகத்தில் பெருத்த நட்டத்தைத்தான் சந்திக்க வேண்டியிருந்தது! 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே எனக்குள் எழாததால் ஏற்பட்ட விளைவு இது! நாற்பத்து மூன்று வயதில் வணிகத்தில் கடும் நட்டத்தைச் சந்தித்தபோதுதான் மேற்கண்ட பாடல் வரிகளுக்கேற்ப வாழவில்லையே என்ற புத்தி வந்து வாழ்வில் பணத்தின் தேவை புரியத் தொடங்கியது! 

வாலிப வயதிலேயே வள்ளுவத்தை முழுமையாகப் படித்திருந்தால் செல்வமும் ஒருவரின் வாழ்க்கைத் தேவைக்கு மிக அவசியம் என உணர்ந்திருக்க இயலும்!

Read More...

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 9. விருந்தோம்பல்!

Leave a Comment
உலகிலேயே விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்ற பெருமைக்குரிய மகுடத்தை இன்றைய தலைமுறைத் தமிழர்கள் இழந்து வருகின்றனரோ என ஐயுற்று இந்த இழி நிலை மாற வேண்டும் எனத் தவிக்கிறது நம் முன்னோர்களின் மனம்! 

விருந்தோம்பலில் தவிர்க்க வேண்டிய இழி குண மகுடங்களெனப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றது வள்ளுவம்.

விருந்து வெளியிருக்கத் தான் மட்டும் தனித்து உண்ணல்,

முகரும்போதே வாடும் அனிச்சமலர் போன்று, வந்த விருந்தினரின் முகம் திரிந்து வாடுமாறு நோக்குதல்,

பொருளை வருந்திப் பாதுகாத்து அவற்றை மற்றவர்க்கு உதவாது பயனற்றதாக்குதல், இவையெல்லாம் அறிவற்றவர்களின் செயலாம்.

அதே சமயம் விருந்தோம்பலில் சிறந்தவர்களின் உயர் குண மகுடங்களாக வள்ளுவம் இவற்றையும் விவரிக்கின்றது.

அகமும் முகமும் மலர்ந்து விருந்தினரை வரவேற்று உபசரித்துத் தம் உழைப்பில் கிடைத்த செல்வத்தை, மனைவியின் துணையுடன் சிக்கனம் செய்து, அச் செல்வத்தை விருந்தினருக்கென்றே செலவிட்டு வாழ்தல்,

விருந்தினர் உண்டது போக மீதமுள்ள உணவு குறைவாக இருந்தாலும் நிறைவாக உண்டு வாழும் குணநலம்,

வந்த விருந்தை உபசரித்து வழியனுப்பியபின், இனி வரும் விருந்துக்காக ஏங்கிக் காத்திருத்தல் போன்றவை விருந்தளிப்போரின் உயர் குண மகுடங்களாம்.

இத்தகு உன்னத குணமுடையோர்தாம், தம்முடைய விருந்தோம்பலின் தன்மைக்கேற்ப திருமகள் எனும் செல்வம் நிலைத்து வாழும் வளமும், 

ஞானிகளின் விருந்தினராகும் தகுதியும், தமது விளை நிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும் நன்மையும் அடையப்பெறுவர் என வளளுவம் சிறப்பு செய்கிறது.

Read More...