வாலிபம் என்பது கலைகின்ற மேகம்!

வாலிபம் என்பது கலைகின்ற மேகம்! 
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்! 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி! 
துயர் வந்த பின்னே தவிப்பவனோ ஏமாளி! 

என்று பூம்புகார் திரைப்படத்தில் ஒரு பாடல் வரி வரும்!

இந்தப் பாடல் வரிகள் எவருக்குப் பொருந்துமோ தெரியாது எனது 
வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும்! 

இளம் வயதிலேயே வணிக வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன்! எனக்கு அப்பொழுது பதினேழு வயதுதான்! 

ஏமாற்றி வணிகம் செய்தால் இலட்சங்களில் லாபம் தரும் நல்ல தொழில்தான் என்னுடையது! ஆனால் என்னுள் இந்த தொழிலில் நேர்மையாக வாழ வேண்டும் என்ற ஒரே இலட்சியம் இளம் வயதிலேயே துளிர் விட்டுவிட்டது!

வணிகம் வளரும்போதும் எப்போதும் மாறாத நேர்மை உணர்வு! வரவுக்கும் செலவிற்கும் சரியாக இருந்ததே ஒழிய உபரியான வருமானம் பார்க்க இயலவில்லை! 

காலை ஒன்பது மணிக்கு கடை திறந்து மதியம் வரை வணிகம் செய்தபின்னர் மதிய உணவிற்குப் பின்னர் பெரு நகரங்களில் உள்ள மொத்த வணிகர்களிடம் கொள்முதல் செய்வதற்காக தினமும் எனது பயணம் துவங்கிவிடும்!

அங்கு மாலை ஐந்து மணிக்குச் சென்றடைந்தால் ஐந்தாறு நிறுவனங்களில் பொருட்கள் வாங்கி அவற்றை பண்டலிட்டு முடிக்க இரவு எட்டாகிவிடும்! 

அதன் பின்னர் அவைகளைச் சுமந்து கொண்டு பேருந்து நிலையம் சென்று வழக்கமாக ஏறும் பேருந்தினைப் பிடித்து (சில நடத்துனர்கள் அதற்குரிய கட்டணம் செழுத்துவேன் என்றாலும் நின்று கொண்டு பயணம் செய்பவர்களை ஏற்றுவதற்காக பேருந்தில் சுமைகளுடன் ஏற அனுமதிக்க மாட்டார்கள்) அமர்ந்து ஊர் வந்து சேரும்போது இரவு பனிரெண்டு மணியாகும்!

அரசுப் பேருந்துகளில் ஏறிவிட்டால் நாங்கள் வணிகம் செய்த ஊரில் எங்கள் வணிக இடம் வழியாகத்தான் சென்றாக வேண்டும்! எனினும் அந்த இடம் பேருந்து நிலையம் தாண்டிய அடுத்த நிறுத்தம்! எனவே இதற்குரிய கட்டணத்தைச் செலுத்துவதாகச் சொன்னாலும் நிறுத்த மாட்டோம் என பேருந்து நிலையத்திலேயே பல சமயங்களில் இறக்கி விட்டுவிடுவர்! 

அந்த நேரத்தில் அங்கிருந்து எங்கள் கடை வரை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சுமந்து வந்து சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும்!

கிட்டத்தட்ட இருபத்து ஐந்து வருடங்கள் நான் கொள்முதல் செய்து வாங்கிவந்த பொருட்களைச் சுமந்ததற்குக் கூலியாக ஒரு தொகையை ஒதுக்கிக் கணக்கிட்டாலே இலட்சங்களில் வரும்! அந்த அளவிற்குச் சுமந்துள்ளேன்!

ஆனால் நேர்மை என்ற ஒரே குறிக்கோளுடன் எந்தவித தீய பழக்க வழக்கங்களுமின்றி வாழ்ந்து நியாயமாகக் கிடைக்கக்கூடிய இலாபத்தைக்கூட வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுத்து இருபத்தைந்தாண்டுகள் விடாப்பிடியாக இதே உணர்வினைக் கடைபிடித்ததால் வணிகத்தில் பெருத்த நட்டத்தைத்தான் சந்திக்க வேண்டியிருந்தது! 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே எனக்குள் எழாததால் ஏற்பட்ட விளைவு இது! நாற்பத்து மூன்று வயதில் வணிகத்தில் கடும் நட்டத்தைச் சந்தித்தபோதுதான் மேற்கண்ட பாடல் வரிகளுக்கேற்ப வாழவில்லையே என்ற புத்தி வந்து வாழ்வில் பணத்தின் தேவை புரியத் தொடங்கியது! 

வாலிப வயதிலேயே வள்ளுவத்தை முழுமையாகப் படித்திருந்தால் செல்வமும் ஒருவரின் வாழ்க்கைத் தேவைக்கு மிக அவசியம் என உணர்ந்திருக்க இயலும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!