விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நாடு தனது 68 ஆவது விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளது! வழக்கம்போல விடுமுறை நாளைக் கொண்டாடுவது போல மக்கள் விடுதலை தினத்தைக் கொண்டாட உள்ளனர்!

எவ்வளவுதான் நாட்டுப்பற்று மிக்கவர்களாக மக்கள் தங்களைப் பறை சாற்றிக்கொண்டாலும் மக்களிடம் நாட்டுப் பற்றுக் குறைந்துள்ளதை 12.08.14 அன்று  கண்கூடாகக் காண நேர்ந்தது!

நேற்று ஈரோட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள்!

பாரத மக்களின் பெருவிருப்பத்திற்கு உரிய மாண்புமிகு கலாம் அவர்கள் நிறைவுநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்!

அவரை நேரில் காண வேண்டுமென்ற ஆவலில் பத்து வயதிற்கும் குறைந்த பள்ளிச் சிறுவர்கள்கூட பெருந்திரளாக வந்திருந்தனர்!

கடுமையான போக்குவரத்து நெரிசல்கூட திரு கலாம் அவர்களைக் காண வேண்டுமென்ற ஆவலில் வந்த கூட்டத்தால் உருவானதைக் கண்ணுற்றபோது நம் இளைய சமுதாயம் அவர் மேல் வைத்துள்ள ஏராளமான மதிப்பினை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டதால் எமக்குள் மிகுந்த மகிழ்ச்சி அலைகள்!

இந்த நிகழ்விற்கு எனது பணியை முடித்துவிட்டுச் சென்றதால் அரங்கில் நுழைய இயலாமல் புத்தக அரங்கில்தான் அதுவும் ஏராளமான மக்களுக்கிடையில் நீந்திச் சென்றவாறு உள்ளே பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கி வாயிலாக அவரது உரையைக் கேட்க முடிந்தது!

விழா முடிந்தவுடன் மேதை கலாம் அவர்கள் கலந்து கொண்ட விழா என்பதோடு மட்டுமன்றி நிறைவு நாள் விழா என்பதாலும் இறுதி நிகழ்வாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது!

கூட்ட அரங்கில் இருந்தவர்கள் எப்படி நடந்து கொண்டனரோ யாம் அறியோம்! அதே சமயம் புத்தக அரங்கில் இருந்த எனக்கு நாட்டுப்பண் இசைக்கப்படுவதாக வெளியான அறிவுpப்பு கேட்டவுடன் சற்று மவுனம் காத்து புத்தகம் எடுப்பதைத் தவிர்த்து நின்றவாக்கில் உள்ளுக்குள் நாட்டுப்பண்ணை இசைத்து மரியாதை செழுத்தினேன்!

ஆனால் புத்தக அரங்கில் இருந்த ஏராளமான மக்கள் குறிப்பாக படித்தவர்கள் அனைவருமே நடந்து கொண்டும், பேசிக்கொண்டும், புத்தகங்களை எடுத்தவாறு இருந்தனரே தவிர நாட்டுப்பண் இசைக்கப்படுவதை ஒரு பொருட்டாகக் கருதியதாகத் தெரியவில்லை!

ஒரு சகோதரி என்னைச் சற்று வழி விடுங்கள் என வேண்டியவாறு புத்தகம் எடுப்ததற்காகக் கடந்ததால் எனது கவனம் கலைந்து தேசிய கீதம் உள்ளுக்குள் வாசிப்பதும் தடைபட்டது!

நாட்டுப்பண் இசைக்கும்போது அதனை மக்கள் மதிப்பதில்லை என்பதால்தான் திரை அரங்குகளில்கூட இப்பொழுது நாட்டுப்பண் இசைப்பதை நிறுத்திவிட்டனர்!

இந்த நாட்டை உலக அரங்கில் ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு சென்ற மக்களின் மரியாதைக்குரிய ஒரு மாமேதை கலந்து கொண்ட நிகழ்வில்கூட நம் நாட்டுப்பண் இசைக்கப்படுவதை செவியால் உணர்ந்தும் மக்கள் செவியற்றவர்கள் போல நடந்து கொண்ட நிகழ்வினைக் கண்ணுற்ற போதுதாம் நம் மக்களை இன்றும் அடிமைகளாக நடத்தும் இன்றைய அரசியல்வாதிகளின் செயல் ஒருவேளை நியாயம்தானோ என எண்ணத் தோன்றியது!

இந்த நாடு அடிமைப்பட்ட காலத்தில் நான்கூடப் பிறக்கவில்லைதான்! எனினும் அன்னியர் ஆட்சியில் நம் மக்கள் அடைந்த இன்னல்களை இளம் வயது முதல் மக்களைப் போலவே நானும் படித்தறிந்துள்ளேன்!

அதே போன்று விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பட்ட இன்னல்களை நாம் நேரில் கண்டதில்லைதான்! ஆனால் அந்தத் தலைவர்கள் எதற்காகப் போராடி நம் நாட்டு மக்களுக்கு அடிமை விலங்கொடித்து விடுதலை வாங்கித் தந்தார்களோ அந்த நோக்கம் பாழ்பட்டுப்போக நம் மக்களின் இது போன்ற அலட்சியங்கள்தாம் காரணமாகிறதோ எனத்தான் எண்ணத் தோன்றுகிறது!

நாடு அன்னியரிடம் விடுதலை பெற்று ஆண்டுகள் பல கடந்தாலும் இன்று நம்மவரே நம்மை அடிமைப்படுத்தி வைத்து அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சி மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துச் சுகப்படும் அரசியல்வாதிகள் நிறைந்த கால கட்டம் இது!

நாட்டுப்பண் இசைக்கப்படுவதைக் கேட்கும்போது அதற்கு மரியாதை செலுத்தத் தவறுவதென்பது சாதாரண அலட்சியமல்ல! அது நம் நாட்டையே அலட்சியப்படுத்துவதற்குச் சமம்!

இது போன்ற அலட்சியங்கள் படித்த மக்கள் பெருகிவரும் நம் நாட்டில் குறிப்பாகத் தமிகத்தில் நடைபெற வேண்டாம் என்பதுதாம் எம் போன்றவர்களின் கோரிக்கை!

இலஞ்சம், ஊழல், அடக்குமுறை, எதேச்சாதிகாரம், அரசியல் ஆணவம், இவைகளைச் சகித்துக்கொண்டு காந்தி மகான் நமக்குத் தந்த அகிம்சை குணத்தைக் கைவிடாமல் பணிந்து வாழ்வதென மக்கள் திட்டமாக முடிவெடுத்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 15 விடுதலைத் திருநாள் வழக்கமான விடுமுறைக் கொண்டாட்டமாகவே மக்களுக்கு விடியப்போகிறது!

காந்தி மகான் தன்னுடைய எழுத்தில் வடித்தவாறு நள்ளிரவிலும் தன்னந்தனியாக ஒரு இளம்பெண் எவ்வித அச்சமும் இன்றி நடமாடும் நிலை என்று இந்த நாட்டில் உருவாகிறதோ அன்றுதான் இந்த நாடு உண்மையிலேயே விடுதலை பெற்ற நாடு என்பதாகத்தான் நானும் கருதுகிறேன்!

அந்த நிலை உருவாக வேண்டுமென்றால் நம் மக்களிடம் மேற்குறிப்பிட்டவாறு உள்ள அலட்சிய குணங்கள் தொலைய வேண்டும்!

காந்தி மகான் நமக்கு வழங்கிய சத்தியாக்கிரகம், அகிம்சை, போன்ற ஏராளமான வன்முறையற்ற அற வழிகளைக் கையாண்டு நம் நாட்டை இன்றும் சுரண்டும் அரசியல் எத்தர்களைத் திருத்துவதற்கு இன்னுமொரு சுதந்திரப் போரை

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவியின் வீர வரிகளைக் கொண்டு துவங்கிட, அவர்தம் பாதம் பதிந்த மண்ணை முகர்ந்து நான்கு ஆண்டுகள் அவர்தம் இல்லத்துச் சுவாசத்தைச் சுவாசித்தவன் என்ற உணர்வுடன் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக மக்களுக்கு வேண்டுகோளாக விடுத்து

இந்த நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடி மடிந்தாலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான தியாகிகளின் தியாகங்களைப் போற்றி அவர்தம் பாதம் பணிந்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!