சென்னையில் எனது வேலை அனுபவம்!

நான் மேலாளராகப் பணி புரிந்த நிறுவனத்தில் எனக்குக் கீழ் வேலை பார்த்தவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்காததால் நிறுவன உரிமையாளரிடம் நான் பலமுறை இது குறித்து முறையிட வேண்டியதாயிற்று!

அவரோ நீ மற்றவர்களைக் குறை சொல்லாதே அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டியது உனது பொறுப்பு எனவும்தான் அடிக்கடி கூறுவார்!

இந்தக் காலத்து இளைய தலைமுறையினர் வேலை என வரும்போது தங்களுக்குரிய கடமையைச் செய்து அதற்கெனத் தனக்குக் கிடைக்கும் ஊதியத்தை உயர்த்திக்கொள்வதில் அவ்வளவாக அக்கரை காட்டுவதில்லை! முடிந்தவரை தனக்குத் தரப்பட்ட வேலையைச் செம்மையாகச் செய்து கொடுத்து நல்ல பேரை எடுக்க வேண்டுமென்ற ஆவலற்றும் இருக்கின்றனர்!

பெரும்பாலான இளைய தலைமுறையினர் தங்களின் பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்பட்டதன் விளைவு இது! அது மட்டுமன்றி இவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பணியாற்றும் இடங்களில் அவர்களின் மேலாளர் அல்லது உரிமையாளர்களால் தங்களின் பணியில் கவனக்குறைவு காரணமாக ஏதேனும் திட்டு வாங்க நேர்ந்தால் தங்களின் பிள்ளைகள் செய்த தவறு என்னவென்பதை ஆராய்ந்து அவர்களை நல்வழிப்படுத்தாமல் நிறுவன மேலாளரை அல்லது உரிமையாளர்களை தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து குறை சொல்லி தங்கள் பிள்ளைகளின் தவறினை நியாயப்படுத்தி விடுகின்றனர்! 

பெற்றோர்தம் இது போன்ற தவறுகளால் இன்றைய தினத்தில் இளைய சமுதாயத்தினர் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களை அடிக்கடி மாற்றுகின்ற நிலை ஏற்பட்டு விடுகிறது! அது மட்டுமன்றி குறுகிய காலங்களில் இவர்கள் பல்வேறு நிறுவனங்களில் மாறி மாறி வேலை செய்யத் துவங்கும் போது அந்த நிறுவனம் சார்ந்த தொழிலின் அடிப்படை அறிவு கூட இவர்களுக்குக் கிடைக்காமல் போவதால் செல்லுமிடமெல்லாம் தட்டுத் தடுமாறியே தங்களின் வேலைத் திறனை வெளிப்படுத்த வேண்டியுள்ளது! இதை விடக் கொடுமை பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் எங்கு வேலை பார்க்கிறார்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை!

இத்தகைய மனப்போக்குடன் இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்திடம் (அப்பொழுது எனக்கு வயது நாற்பத்து மூன்று) மேலாளராக வேலை பார்த்ததால் என்னுடைய அறிவுரைகள் அவர்களிடம் எடுபடுவதில்லை! இதன் காரணமாக எனக்கும் நிறுவன உரிமையாளருக்கும் வணிகம் குறித்து அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்!

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் தற்பொழுதுள்ள வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடிக்கொள்வதென நான் முடிவு செய்தேன்! இதனை எனது மனைவியிடம் தெரிவித்தபோது அவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இதே வேலையில் தொடருமாறு என்னை வற்புறுத்தினார்! அவர் மட்டுமன்றி எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதே கருத்தையே கொண்டிருந்தனர்!

எனினும் என்னுடைய மனம் இந்த வேலையில் தொடர்வதை விரும்பாததால் மீண்டும் மீண்டும் இந்த வேலையை விட்டுவிடுவது என்ற எனது கருத்து வலுப்பெற்றது! இதனை எனது துணைவியார் ஒப்புக்கொள்ள மறுத்து பலமுறை என்னிடம் சண்டையிடத் துவங்கவே ஒரு கட்டத்தில் நான் எனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் தலைமறைவாகச் சென்னைக்கு இரயிலேறிவிட்டேன்! 

இரயிலில் அதே வகுப்பில் பயணம் செய்த ஒரு கிறித்தவ நண்பருடன் உரையாடத்துவங்கும்போது அவர் எனது முக வாட்டம் கண்டு என்னைப்பற்றிய விபரம் கேட்டுப் பின்னர் சென்னையில் தாங்கள் முன்பின் அறிமுகமில்லாத இடங்களில் தங்க வேண்டாம்! உங்களின் உறவினர் யாரேனும் அங்கிருந்தால் அவர்களிடம் சென்று தங்குங்கள்! அது மட்டுமன்றி நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியதால் உங்கள் வீட்டில் அனைவரும் தவித்துப்போவார்கள்! எனவே சென்னை சென்றவுடன் நீங்கள் உங்கள் உறவினர் வசம் சென்றடைந்தபின் நீங்கள் தற்போது எங்கே உள்ளீர்கள் என்ற தகவலையும் அவர்களுக்குத் தெரிவித்துவிடுங்கள் என வேண்டிக்கொண்டு தனது தொலைபேசி எண்ணையும் என்னிடம் வழங்கி விடைபெற்றார்!

நானும் வேறு வழியின்றி சென்னையில் அங்கு தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த எனது மனைவியின் சித்தி மகனிடம் சென்றடைந்து நான் சென்னை வந்துவிட்ட தகவலை தெரிவித்துவிடச் சொன்னேன்! மேலும் அவரிடம் நான் இங்கு தங்கி சில நாட்களில் ஒரு வேலை தேடிக்கொள்வேன்! நீயும் உனது நண்பர்களின் துணையுடன் எனக்குத் தகுந்த ஒரு வேலையை ஏற்பாடு செய்து தா என வேண்டிக்கொண்டேன்!

நான் எனது மைத்துனருடன் தங்கியிருந்த சில நாட்களில் நான் கொண்டு சென்றிருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலவழியத் தொடங்கியது! எனக்குச் சென்னையில் பழைய வணிகம் காரணமாக ஏராளமான நிறுவனங்களுடன் தொடர்பிருந்தபோதும் அந்தத் தொழில் சார்ந்த துறையில் எவரிடமும் வேலை தேடிச் செல்வதில்லை என முடிவு செய்ததால் வேறு எங்கும் எனக்கு பழக்கமில்லாத இடங்களில் சென்று வேலை தேட இயலவில்லை!

இதன் காரணமாக எனது மைத்துனர் எனக்கு ஏதேனும் வேலை தேடித் தருவார் என நான் நம்பினேன்! அவரோ நாட்களைக் கடத்தி என்னை ஊருக்குத் திரும்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்! என்னிடமுள்ள பணமும் குறையத் துவங்கியதால் என்னுடைய நிலை பரிதாபமாயிற்று! எனினும் எப்படியாவது சென்னையிலேயே ஒரு வேலையில் சேர்வது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்!

இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகை வேறு அப்பொழுது நெருங்கியிருந்தது! எனது மைத்துனர் இன்னும் இரண்டு நாட்களில் தான் இந்தப் பண்டிகைக்காக வீடு திரும்ப இருப்பதால் நீங்களும் என்னுடன் ஊருக்குத் திரும்பத் தயாராகுங்கள் என்றார்! 

நான் அப்பொழுது தங்கியிருந்ததோ பழவந்தாங்கலில் எனது மைத்துனர் உட்பட வேலை தேடும் ஆறு இளைஞர்கள் தங்கியிருந்த ஒரு இல்லமாகும்!

எனது மைத்துனர் அங்கிருந்து கிளம்பிவிட்டால் நானும் கிளம்பியாக வேண்டிய கட்டாயம்! எனினும் எனக்குள் ஒரு உத்வேகம்! எப்படியாவது சென்னையில் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதென! அன்றைய தினம் காலையில் ஒரு செய்தித்தாளில் சென்னை கோடம்பாக்கத்தில் பிரபலமான ஒரு நிறுவனத்தின் புதிய கிளைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் படித்திருந்தேன்!

இங்கு ஏதேனும் எனக்குத் தகுந்த ஒரு வேலையை முயற்சிப்பது என முடிவு செய்த நான் எனது மைத்துனரிடம் இன்று ஒரு இடத்திற்கு வேலை தேடிச் செல்கிறேன்! அங்கு ஜு எனக்கு வேலை ஏதும் கிடைக்காவிட்டால் உன்னுடன் நான் ஊருக்குத் திரும்பிவிடுகிறேன் எனச் சொல்ல அவரும் சம்மதித்தார்!

நான் சென்னைக்குச் சென்றபோது கொண்டு சென்றது வெறும் ஆயிரம் ரூபாய்கள்தாம்! அதிலும் சென்னை சென்ற இரயில் கட்டணம், மாற்றுடை ஏதுமின்றி அங்கு சென்றதால் வழியில் சேலத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்கிய துணிமணிகள், சென்னையில் நான் ஒரு மாதத்திற்கு வாங்கியிருந்த மின்சார இரயிலுக்கான மாதக் கட்டணம், 

இது தவிர எனது மைத்துனரின் உதவியைத் தவிர்த்துவிட்டு நான் எனக்கெனச் செலவிட்ட உணவுச் செலவு இவை உட்பட என்னிடம் அன்றைய தினத்தில் மீதமிருந்தது வெறும் 100 ரூபாய்தான்! இந்த நிலையில் நான் எனது மைத்துனரின் தயவில்தான் ஊர் திரும்ப இயலும்!

நான் மின்சார இரயிலில் பயணித்து கோடம்பாக்கத்திலுள்ள அந்த நிறுவனத்தை அடைந்தேன்! அங்கு சென்றபிறகு அந்த நிறுவனத்தின் பிரம்மாண்டம் கண்ட நான் அப்பொழுதுதான் எனது சுய விபரம் அடங்கிய ஒரு தாளைக்கூட அங்கு கொண்டு செல்லவில்லையே என உணர்ந்தேன்!

இருப்பினும் என்னிடம் ஒரு சிறிய லெட்டர் பேடும் பேனாவும் நான் சென்னை சென்றபோது வாங்கி வைத்துக்கொண்டிருந்தேன். உடனடியாக அந்த லெட்டர்பேடில் எனது பயோடேட்டாவை எழுதிக் கையொப்பமிட்டுவிட்டு நேர்முகத் தேர்வு செய்யும் அறையின்  உள்ளே சென்றேன்! அது ஒரு துணி வர்த்தக நிறுவனம்!  சேகர் எம்போரியம். குளிரூட்டப்பட்ட ஒரு சிறிய அறையில்தான் நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருந்தது!

உள்ளிருந்து ஒரு 17 வயது இளம் சிறுவன் வந்தான்! அலுவலக உதவியாளன் அவன்! வரிசையில் நின்றிருந்த எங்களிடம் பயோ டேட்டாக்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்! அவன் உள்ளே செல்லும்போதும் வெளியே வரும்போதும் உற்சாகமாக ஏதேனும் ஒரு பாட்டைப் பாடியவாறு இருந்தான்! நான் அவனிடம் நட்பாக அவ்வப்போது புன்னகைத்தேன்!

ஒவ்வொருவராக உள்ளே செல்லவும் வரிசை மெல்ல நகரத் துவங்கியது! எனக்கு முன்பு மூன்று இளைஞர்களும், எனக்குப் பின்னே சில இளைஞர்களும் வரிசையில் நின்றிருந்தனர்! இந்த நிலையில் திடீரென நேர்முகத்தேர்வு நடத்தியவர் ஏதோ அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட்டார்! உள்ளிருந்து வந்த அவர் யாரென எனக்குத் தெரியாததால் நான் அவர் செல்வதைக்  கவனிக்கவில்லை! 

உள்ளிருந்து அந்த அலுவலக இளைஞன் வெளியில் வந்து இன்று நேர்காணல் முடிந்துவிட்டது! நீங்கள் அனைவரும் சென்றுவிட்டு நாளை வாருங்கள் எனக்கூறவே அங்கிருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர்! 

நான் மட்டும் அங்கிருந்து வெளியேறாமல் நின்றிருந்தேன்!  திரும்ப வந்த இளைஞன் நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் அதுதான் நேர்காணல் முடிந்துவிட்டதே நாளை வாருங்கள் என என்னை அப்புறப்படுத்த முயன்றான்!

முன்னதாக நான் நேர்கானல் செய்தவர் யாரென அங்கு வரிசையில் காத்துத் திரும்பிய  உள்ளுரில் வேறு நிறுவனத்தில் பணியாற்றி இங்கு வேலைக்கு முயன்ற ஒரு இளைஞனிடம் விசாரித்து அறிந்திருந்தேன்! அதன்படி அவரை அங்கு அண்ணாச்சி என அழைப்பார்களாம்! 

எனவே நான் அந்தச் சிறுவனிடம் நான் சிறிது நேரம் காத்திருந்து அண்ணாச்சி வந்த பின்னர் அவரை ஒரு முறை சந்தித்துப்பேசிவிட்டுச் சென்றுவிடுகிறேன் என வேண்ட அவனும் எனது பரிதாப நிலை கண்டு எதுவும் கூறாமல் சென்றுவிட்டான்!

என்னுடைய நல்ல நேரமோ என்னவோ சிறிது நேரத்தில் அண்ணாச்சி அவர்கள் மீண்டும் வந்துவிட்டார்! உள்ளே சென்ற அவர் கண்ணாடிக்கதவு வழியாக வெளியே நின்ற என்னைப் பார்த்து எதற்காக அங்கு வந்துள்ளேன் என விசாரித்து என்னை உள்ளே அனுப்பச் சொன்னார்!

நானும் உள்ளே சென்று நன்றி கூறி அவர்முன் அமர்ந்தேன்! நான் எனது பயோ டேட்டாவில் பல ஆண்டுகள் செய்து வந்த சொந்த வணிகம் காரணமாகவும், நானாக முயன்று கற்ற கணினி மற்றும் டேலி கணினிக் கணக்கறிவு ஆகிய திறமைகளை எழுதியிருந்தேன்! எனது கைப்பட அப்பொழுதான் எழுதப்பட்ட சிறிய தாளாக இருந்தாலும் நேர்த்தியாக அது இருந்த விதம் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்!

அவர் அதனைப் படித்துவிட்டு என்னிடம் நீங்கள் நாளை வாருங்கள் என்றார்! நான் உடனே நான் நாளை இரவு ஊருக்குத் திரும்புகிறேன். அதன் பிறகு தீபாவளி கழித்துத்தான் மீண்டும் வர முடியும் என எனது அப்போதய நிலையை மனதில் கொண்டு பதில் அளித்தேன்!

அவர் உடனடியாக எனது பயோ டேட்டாவை மேசையின் மீது போட்டுவிட்டு நான் உங்களை நாளை வேலைக்கு வரச் சொல்கிறேன், நீங்கள் என்னவென்றால் தீபாவளி கழித்து வருவதாகச் சொல்கிறீர்களே அப்படி என்றால் நீங்கள் செல்லலாம் என்றார்! 

அப்பொழுதுதான் எனக்குள் அவர் எனக்கு வேலை தருவதெனத் தீர்மானித்துவிட்டுத்தான் என்னை நாளை வரச் சொல்லியிருக்கிறார் என்ற விபரம் புரியவே உடனடியாக அவரிடம் சற்றுப் பணிவாக நான் நாளை இங்கு வந்தாலும் எனக்குத் தங்குமிடத்தில் சிக்கல் உள்ளது ஏனென்றால் நான் எனது மைத்துனருடன் தங்கியிருப்பதால் அவர் நாளை ஊர் திரும்புவதால் நானும் ஊருக்குத் திரும்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக எனது நிலையை எடுத்துரைத்தேன்!

அவர் உடனடியாக உங்களுக்கு இங்கு தங்குமிடம், மற்றும் உணவு இரண்டையும் நாங்களே செய்து தருகிறோம்! அத்துடன் உங்கள் வேலைக்கேற்ற சம்பளமும் கிடைக்குமெனக்கூறவே நான் உற்சாகமாகி அப்படியென்றால் நான் ஊர் திரும்ப வேண்டிய அவசியமில்லை! நாளையே உங்கள் நிறுவனத்தில் வேலைக்கு வந்து சேர்ந்துவிடுகிறேன் என உறுதியளித்து அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு மிகுந்த மகிழ்வுடன் பழவந்தாங்கல் திரும்பினேன்!

இரவு இல்லம் திரும்பிய மைத்துனரிடம் எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது எனவே நாளை நான் ஊருக்கு வரப்போவதில்லை எனவும் கூறிவிட்டு எனக்குச் செலவிற்கென ஒரு ஆயிரம் ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு நான் இனி வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கி அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாக வாக்களித்துப் பணம் பெற்றுக்கொண்டேன்!

அடுத்த நாள் நான் அந்த நிறுவனத்திற்குச் சென்று அவர்களின் புதிய கிளையின் இரண்டாவது மாடியில் அமைந்திருந்த விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன்!

எனக்குக் கணினியில் பில் போடும் வேலை எனக் கொடுக்கப்பட்டிருந்தது! அந்தப் பிரிவிலோ அதே வேலையை ஏற்கனவே ஒருவர் செய்து கொண்டிருக்க பழைய நபரான அவர் என்னை கணினி அருகிலேயே நெருங்கவிடவில்லை!

நான் வேறு வழியின்றி காசாளருக்கு அருகில் அமர்ந்து கொண்டேன்! எனக்குள் இயல்பாகவே இருக்கும் சும்மா இருந்து சம்பளம் வாங்கக்கூடாதென்ற கொள்கை காரணமாக அந்த இடத்தில் வேறு ஏதேனும் வேலை செய்ய இயலுமா எனக் கவனித்தேன்!

வாடிக்கையாளர்கள் துணிகளை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணம் செழுத்திய பின்னர் அந்தத் தொகைக்குரிய பில்லைச் சரிபார்த்து உரிய துணிவகைகளைப் பேக்கிங் செய்து தருவதற்கு அங்கு யாருமில்லை! அவ்வப்போது இந்த வேலையைக் காசாளரே கவனித்தார்!

நான் அவரிடம் பேசி அந்த வேலையை நான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு அதையே தொடர்ந்தேன்! எனக்கு ஏற்கனவே இருந்த சொந்த வணிக அனுபவம் மற்றும் வணிகத்தில் நட்டப்பட்டு தற்போது விட்டு விட்டு வந்த வணிகத்தின் மேலாளர் பதவியில் கிடைத்த அனுபவம் காரணமாக எனக்குப் புதியதான இந்த வணிகத்தில் குறிப்பாக நான் இருக்குமிடத்தில் தினசரி என்ன நிகழ்கிறது என்பதையும் எனது வேலையினூடே கவனித்து வந்தேன்! 

அது புதிய கிளையாக இருந்ததால் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலையிலும் மாலையிலும் நிறுவன உரிமையாளர், அவரது இளம்வயது மகன், மற்றும் என்னை வேலைக்குச் சேர்த்த அண்ணாச்சி, மேலும் அங்கிருந்த மேலாளர் உட்பட ஒரு குழு ஒவ்வொரு தளமாக வலம் வந்து ஒவ்வொரு பிரிவிலும் என்ன நடக்கின்றது என விசாரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்! ஊழியர்கள் அனைவரும் அவர்கள் வரும்போது மரியாதைக்காக எழுந்து நிற்பது வழக்கம்! என் வயது கருதி என்னை எழுந்திருக்க வேண்டாம் என உரிமையாளரும் அவரது மகனும் சைகை காட்டினாலும் நானும் எழுந்து நின்று மரியாதை செழுத்துவேன்!

இவ்வாறு மூன்று நாட்கள் கழிந்த நிலையில் மூன்றாம் நாள் இரவில் நான் ஏதோ ஒருவித உள்ளுணர்வில் கடந்த மூன்று நாட்களாக எனது பிரிவில் நடந்த குழப்பங்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுதி என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டதற்காக அண்ணாச்சி அவர்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்து மறுநாள் காலை அவரிடம் தருவதென முடிவு செய்து எனது சட்டையில் வைத்துக் கொண்டேன்!

நான் வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் காசாளர் தனது கணக்கினை இரவு முடிக்கும்போது மூன்றாயிரம் நான்காயிரம் என பணம் குறைந்து கணக்கு முடிக்கும் நிலை காணப்பட்டது! 

காசாளர் பணம் வாங்கிக் கொண்டிருக்கும்போது அவரிடம் அது ஆயத்த ஆடைப் பிரிவென்பதால் முந்தய நாட்களில் வாங்கியிருந்த ஆடைகளில் பழுது அல்லது குறைபாடு என ஏதேனும் ஒன்றுக்காக வாடிக்கையாளர்கள் அவரிடம் வாதம் செய்வதும் அதன் காரணமாக அவரது கவனம் சிதறுவதையும் நான் அடிக்கடி காண நேர்ந்தது!

அடுத்து அது புதிய நிறுவனம்! இரவு ஒன்பது மணிக்கு மேல் பதினோறு மணிவரை அங்கு வாடிக்கையாளர்கள் குறைவாகவே வருவர்! எனினும் அங்கு மாலையிலிருந்து போடப்பட்ட அனைத்து விளக்குகளும் தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும்! இது அந்த நேரத்திற்கு தேவையற்றது! மேலும் அவற்றின் பயன்பாட்டை குறைத்தால் மின்கட்டணச் செலவு மிச்சமாகும் என்பது எனது கருத்து!

இந்த இரண்டையும் குறிப்பிட்டு காசாளரின் கவனம் சிதறாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றித்தர வேண்டும் ஆடை விவகாரங்களைக் கவனிப்பதற்கெனவே வேறு எவரையேனும் நியமித்தால் பணம் குறைவது கட்டுப்படும் எனவும் நான் எழுதியிருந்தேன்!

மறு நாள் நான் அந்தக் கடிதத்துடன் எனது இருக்கையில் அமர்ந்திருந்தேன்! வழக்கம்போல உரிமையாளர்களின் அணிவரிசையில் முன்னதாக நான் வேலைக்குச் சேர்ந்த பழைய நிறுவனத்தின் மேலாளரும் உடன் வந்தார்! 

அவர் காசாளர் அருகில நான் இருப்பதைக் கண்ணுற்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னைப் பார்த்து உங்களை யார் காசாளர் அருகில் அமரச் சொன்னது எனச் சற்று குரலை உயர்த்திச் சொல்லவே நான உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகி வெளியே வந்து நின்று கொண்டு என்னை வேலைக்குச் சேர்த்த அண்ணாச்சியை அழைத்து அவரிம் எனது சட்டைப்பையில் தயாராக வைத்திருந்த கடிதத்தைக் கொடுக்க அவரும் அதை உடனடியாகப் பிரித்துப் பார்க்காமல் தன்னுடைய சட்டைப்பையில் அதனை வைத்துக் கொண்டு உரிமையாளர்களுடன் வேறு பிரிவுக்குச் சென்றுவிட்டார்!

அதன் பின்னர் நான் காசாளர் அருகில் அமராமல் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு வழக்கம் போல எனது பணியைத் தொடர்ந்தேன்!

மறு நாள் காலை நான் எனது பிரிவிற்குச் சென்றபோது அங்கு அதிரடியாகச் சில மாற்றங்களைக் காண நேர்ந்தது! பழைய என்னை விடச் சில வயது அதிகமிருந்த காசாளருக்குப்பதில் ஒரு அனுபவமுள்ள இளம் வயது காசாளர் அங்கிருந்தார்! மேலும் ஆயத்த ஆடைகளை மாற்றுவதற்காக வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்து அவர்கள் குறைகளைத் தீர்த்து வைப்பதெற்கென ஒருவரும் அங்கு புதிதாக வந்திருந்தார்!

என்னை யாரும் எதுவும் சொல்லாததாலும் புதிய இளம் வயது காசாளர் என்னைப்பற்றி விசாரித்தறிந்து அவர் பக்கத்திலேயே என்னை அமர்த்திக் கொள்ள நானும வழக்கம் போல எனது பணியைச் செய்யத் துவங்கினேன்! இளம் காசாளர் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனத்துடன் இருந்ததால் அன்றிலிருந்து பணம் குறைவது நின்றுவிட்டது!

மேலும் ஒவ்வொரு நாள் இரவு ஒன்பது மணியானதும் சரியாக ஒரு மின் பணியாளர் ஒவ்வொரு தளமாக வந்து தேவையற்ற மின்விளக்குகள் மற்றும் குளிர் சாதன அமைப்புகளை நிறுத்தத் துவங்கினார்! தீபாவளி நெருங்கத் துவங்கி தீபாவளி நாள் இரவு மணி 2 வரை கடுமையான கூட்ட நெரிசலையும் அப்பொழுதுதான் புதிதாக அறிமுகமாகயிருந்த  டெபிிட் கார்டு போன்றவற்றைைக் காசாளர் கவனித்து தடுமாற விடாமல் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆட்கள் துணையுடன் வெற்றிகரமாகக் குழப்பமின்றியும் பண இழப்பு ஏதுமின்றியும் சமாளிக்க முடிந்தது! 

இதனை ஏன் இவ்வாறு விரிவாக எழுதியுள்ளேன் என்றால் ஒரு தகுதியும் திறமையும், உழைப்பிற்கு அஞ்சாத தன்மையும் முக்கியமாக நேர்மையும் உடைய ஒருவர் எந்த வயதாக இருந்தாலும் அவரிடம் காணப்படும் இயல்புகளை அவரது முகம் பார்த்த கணத்திலேயே உணர்ந்து இளைஞர்களை எதிர்பார்த்திருந்த நிலையில் நாற்பத்து மூன்று வயதான எனக்கு வேலை வாய்ப்பளித்த அண்ணாச்சி போலவும், செல்வாக்கில் சாதாரணமாகத் தோன்றிய எனது கடிதத்தினை அலட்சியப்படுத்தாமல் உரிய மாற்றங்களை உடனடியாகச் செயல்படுத்தி தாங்கள் ஒரு சிறந்த நிர்வாகிகள் என நிரூபித்த நிறுவன உரிமையாளர்களையும், 

அங்கு பணியில் இருந்த போது பணியாட்களைச் சோதித்தே வெளியில் அனுப்பிய நிலையில் என்னைச் சோதித்த முன்னாளைய காவல்துறைப் பணி மூப்பு ஆய்வாளராக இருந்து தற்பொழுது அங்கு பாதுகாப்புப் பணியாளராக இருந்த அலுவலர் என்னை மரியாதையுடன் மெதுவாகத் தடவிச் சோதிக்காமல் என் முகம் பார்த்து இவர் சோதிக்கப்படத் தக்கவர் அல்ல என்று தனது காவல் பணியில் பல குற்றவாளிகளைக் கண்டுள்ள அனுபவம் கருதி நம்பி அனுப்பியதை இந்தக் காலத்து இளைய சமுதாயத்தினர் முன்பு அடையாளப்படுத்துவதற்காகத்தான்!

எந்த இடத்தில் வேலை செய்தாலும் ஒருவித உள்ளுணர்வுடன் இருத்தல், மற்றும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்துக் கவனமாக இருத்தல் மிகுந்த நன்மை பயக்கும் என்பதுவும், அதனினும் மேலாக என்னுடைய திறமையின் மேல் நான் முழு நம்பிக்கை வைத்து எப்படியாவது ஒரு வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையினை இறுதி வரை கைவிடாததுவும் நன்மையளித்தது !

தீபாவளி முடிந்தபின்னர் நான் ஊருக்கு விடுப்பு கிடைத்த போதெல்லாம் வந்து போனதுவும், எனது ஒரே செல்ல மகளின் படிப்பு நான் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதால் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவும் நான் அந்த வேலையிலிருந்து விடுபட்டு மீண்டும் ஊருக்கே திரும்பி முன்பு வேலை பார்த்த அதே நிறுவனத்தில் மீண்டும் மேலாளராகச் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணியாற்றிவிட்டுத் தற்பொழுது விதி 
மேலும் பல அனுபவம் தர வேறு வேறு நிறுவனங்களில் வேலை செய்ய வைப்பது பின் குறிப்பாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!