பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிட இல்லம்

பகுத்தறிவு பற்றிய அறிமுகம் எனது ஏழாம் வகுப்பிலிருந்தே துவங்கி விட்டது! 

எங்கள் பள்ளியில் சிறந்த தமிழாசிரியராகவும் சேலம் மாவட்ட பகுத்தறிவுக் கழகத்தில் ஒரு துடிப்பு  மிக்க தொண்டராகவும் தந்தை பெரியார் அவர்களின் தலைமையேற்று வழி நடக்கும் உயர்திரு ஆ.பெரியசாமி தமிழய்யா அவர்களால் என்னுள் இளம் வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு விதை ஊன்றப்பட்டுவிட்டதெனலாம்! 

தமிழய்யா எங்கள் வகுப்பில் நுழைந்து பாடம் எடுத்து முடிக்கும்வரை எங்கள் வகுப்பறை ஆரவாரத்தில் உற்சாகிக்கும்! தமிழர் வரலாறு, இலக்கணம் எனத்துவங்கித் தவறாமல் சமுதாயச் சீர்கேடுகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், பொய்யான இழிவான இதிகாசங்களையும் சாடி எங்களுக்குள் பகுத்தறிவு வளர்ப்பதற்குப் பாடுபட்டார்! 

இலக்கண விதியில் எப்படி எழுதுகிறேன் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும், தமிழய்யா போன்றவர்களால்தான் ஓரளவு என்னால் தமிழில் எழுத்துப் பிழையின்றி இன்றும் எழுத முடிகிறது!

எங்கள் ஊர் சந்தைத் திடலில் அமைந்திருந்த ஒரு மேடையில் தந்தை பெரியார் அவர்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஆர்வமுடன் நானும் கலந்து கொண்டேன்! தந்தையை மேடையிலிருந்து சற்று தூரத்தில் காணவும் அவரது பேச்சைக் கேட்கவும் அன்றைய தினத்தில் புண்ணியம் பெற்றவனானேன்!; 

ஈரோட்டில் நான் வசிக்கத் துவங்கியவுடன், எனது முதல் வேலை ஈரோடு மரப்பாலம் அருகிலுள்ள ஒரு பால் பண்ணையில் துவங்கியது! மூன்று மாதங்கள் அங்கு நான் பணியிலிருந்தேன்! பணி காரணமாக அந்தப் பகுதிகளில் நான் சுற்றித் திரிந்த போது அங்குதான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடமாக்கப்பட்ட இல்லம் இருப்பதென்பதை நான் உணரத் துவங்கினேன்!

ஏதோ ஒருவித உள்ளுணர்வின் காரணமாக நான் அப்பொழுது முதல் பகுத்தறிவு எண்ணங்கள் தாங்கிய சித்தர்களின் எண்ணங்கள் என் ஆழ்மனதில் ஊடுருவி வருவதை உணர்ந்து வந்தேன்! இந்த எண்ணங்களுடனே தந்தை பெரியார் அவர்கள் தனது இல்லத்திற்கு என்னை அழைப்பது போல நான் அடிக்கடி உணர்ந்தேன்!

எனவே எனது வேலைகளுக்கிடையே ஈரோடு நகரத் தெருக்களில் செல்லும்போதெல்லாம் பகுத்தறிவுத் தந்தையின் நினைவிடம் என் கண்ணில் தட்டுப்படாதா என ஆவலுற்றேன்! இறுதியாக ஒரு நாள் நான் அவரது இல்லம் இருந்த தெருவினைக் கண்டு கொண்டேன்!

அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நான் பகுத்தறிவுப் பகலவனின் இல்லத்தில் இருந்தேன்! ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரரான தந்தையின் இல்லம் போதிய பார்வையாளர்கள் இன்றி அமைதியுடன் காணப்பட்டது! தந்தையின் இல்லம் முழுவதும் சமுதாயச் சீர் திருத்தக் கொள்கைகள் தாங்கிய அவரது பொன்மொழிகளும், ஏராளமான புகைப்படங்களும் காட்சியளித்தன! 

அது மட்டுமன்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாருக்கு எழுதிய மடல்கள் காணப்பட்டன! இன்னுமொரு சிறப்பாக கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்கள் தனது மகனின் காவல்துறை வேலை காரணமாகத் தந்தை பெரியார் அவர்களிடம் தயங்கியவாறு எழுதியிருந்த கடிதம் ஒன்றினையும் காண நேர்ந்து துயரமடைய வைத்தது!

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு கப்பல் கழகத்தையே ஆரம்பித்து வெள்ளையரின் கடல் வணிகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிய அந்த மாபெரும் விடுதலை வீரர் இதன் காரணமாகத் தனது சொத்துக்களை இழந்த ஒரு கால கட்டத்தில் தனது மகனின் எதிர்காலம் கருதி அவருக்கு ஏதேனும் அரசு வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்பதாகத் தந்தை பெரியாருக்கு அந்தச் செக்கிழுத்த செம்மல் எழுதியிருந்த கடித வரிகளைக் கண்ட போது எம் இதயத்தில் இரத்தக்கண்ணீர் வடிவதை உணர முடிந்தது!

தந்தை அவர்களின் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தாங்கிய அரிய புகைப்படங்கள் அனைத்தையும் உள்ளம் நெகிழப் பார்த்து வந்தபோது எனது வாழ்நாள் தலைவர் பெருந்தலைவருடன் தந்தை பெரியார் இடம்பெற்ற புகைப்படங்களையும் கண்டு மகிழ முடிந்தது!

இவ்வாறே தந்தையின் விசாலமான அந்தப் பழைய கம்பீரமான மாடிக் கட்டிடத்தின் பின் புறம் சென்றபோது வியப்பின் எல்லைக்கே நான் சென்றேன்!
ஆம் அங்கு ஒரு எளிமையான இல்லம் காணப்பட்டது! சிறிய தளத்துடன் பக்கவாட்டில் ஒருவர் மட்டுமே அமர்ந்து சமைக்கும் வகையில் மிகச் சிறிய சமையல்கூடம்! தாழ்வாரத்துடன்கூடிய ஒரு மேற்கூரையிடப்பட்ட திறந்த அறை! அந்த அறையின் மத்தியில் பேரறிஞர் அண்ணா அவர்கள்தம் மார்பளவுச் சிலை காணப்பட்டது! அறையை ஒட்டிய அமைந்திருந்த மற்றொரு அறையில் அண்ணா அவர்கள் அமர்ந்து எழுதிய மேசை ஒன்றும் நாற்காலியுடன் காணப்பட்டது!

தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட காஞ்சித் தலைவர் தந்தை பெரியார் ஈரோட்டில் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றியபோது தனது துணைவியாருடன் தங்கியிருந்த அந்த எளிமையான இல்லத்தைக் கண்டபோது என் கண்கள் குளமாயின!

ஆடம்பரமாகக் காட்சியளிக்கும் இன்றைய ஆட்சியாளர்களை வளர்த்து விட்ட அந்த மாபெரும் தலைவர் தங்கியிருந்த அந்தச் சாதாரண ஓட்டு வீட்டைக் கண்ட போது எம்மால் அழுவதா சிரிப்பதா என்பதே புரியவில்லை!

தந்தை பெரியாரின் எழுச்சிக்குப் பிறகுதாம் தமிழர்தம் பெயர்களோடு ஒட்டியிருந்த சாதி எனும் வால் ஒட்ட நறுக்கி எறியப்பட்டது! அவரால் தமிழகத்திற்கு அடையாளம் காணப்பட்ட பேரறிஞரின் எளிமையும் அவர்தம் சொல்லாற்றலும், தமிழகத்தில் திராவிட ஆட்சியாளர்களின் வரவிற்கு வழி கோலியது! 

தந்தை பெரியார் தம்முடைய மேடைப்பேச்சுகளில் அடிக்கடி வெங்காயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்! இதற்கான அர்த்தம் பொது வாழ்க்கைக்கு வருபவர்களின் உண்மையான வாழ்க்கையை உரித்துப் பார்த்தால் வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாது போவது போல அவர்தம் வாழ்க்கை பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் மக்களின் உரிமைகளை அனுபவிக்காத தன்மையாக இருக்க வேண்டுமென்பதுவாம்!

ஆனால் பொது வாழ்க்கையில் இன்றுள்ளவர்களின் நிலையோ வெங்காயமாகத்தான் உள்ளது! அவர்தம் உண்மையான பொது வாழ்க்கை முறையினை உரித்துப்பார்த்தால் மக்களுக்குக் கண்ணீர்தாம் மிஞ்சும்! பொது வாழ்க்கைக்கு வந்து மக்களின் வரிப்பணத்தை அனுபவித்துவிட்டுத் தாங்கள் மக்களுக்காகக் கடுமையாக உழைத்தோம் என்று சொல்லும் பேர்வழிகளைத் தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டதே இல்லை! அவர்களைத் தேனெடுக்கும்போது புறங்கை சுவைத்தவர்களாகத்தாம் அவர் பார்த்தார் அவ்வாறே தம்முடைய அறிக்கைகளில் எழுதியுள்ளார்!

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு மீண்டும் தமிழத்தில் சாதி வெறியும், மத வெறியும் தலைவிரித்தாடத் துவங்கிவிட்டது! இதிலிருந்து மக்களை மீளச் செய்யவும், மீண்டும் தலை தூக்கும் மூடப்பழக்க வழக்கங்களைச் சுட்டெரிக்கத் தந்தை பெரியார் போலப் பல்லாயிரம் பகுத்தறிவுப் பகலவர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும்! 

இதற்கு முதற்கண் நம் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் படிக்கும் இளைய சமுதாயம் ஒட்டு மொத்தமும் இந்த மாபெரும் தலைவர் வாழ்ந்த அவரது இல்லத்தைப் பார்வையிடச் செய்ய வேண்டும்! அண்ணா என்ற மாபெரும் தலைவர் வாழ்ந்த எளிமையான அந்த இல்லத்தைப் பார்வையிட்டால்தான் இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரங்கள் புரிந்து இளைய சமுதாயம் உண்மையிலேயே மக்களுக்காகப் பாடுபடக்கூடிய எளிமையான மக்கள் தொண்டர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்ய வழி கோலும்!

மக்களிடம் பக்தியறிவு இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுகிப் போய் விடாது! ஆனால் பகுத்தறிவு இல்லையென்றால் எல்லாமே பாழ்தாம் என்ற பகுத்தறிவுப் பகலவின் வரிகள் அவரது இல்லத்தை ஒரு முறையல்ல பலமுறை தமிழக இளைய சமுதாயம் காண நேர்ந்தால்தான் அவர் விட்டுச் சென்ற பணிகளை உணரந்து சமூகச் சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க முடியும் என்பதே தந்தை பெரியார் அவ்வப்போது என்னை அவர்தம் இல்லத்திற்கு வரவழைத்து மானசீகமாக வைக்கும் கோரிக்கை! 

ஓவ்வொரு நூற்றாண்டிலும் இந்தத் தமிழ் மண்ணில் சாதி மத பேதம் அகற்றச் சித்தர்கள் பிறப்பெடுத்துக் கொண்டுதான் உள்ளனர்! அந்த வகையில் சென்ற நூற்றாண்டில் பிறந்து தம் சுயம் அறியாமல் வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை பெரியாரும் ஒரு மாபெரும் தவச்சித்தர்தாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!