வணிகத் தவறுகள்!

பொதுவாக ஒரு வணிகம் துவங்குபவர் தன்னுடைய சொந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டுதான் வணிகம் தொடங்க வேண்டும்!

நாம் இந்த வணிகத்தை துவக்கிய பின்னர் இந்தத் துறை சார்ந்த மொத்த வணிகர்கள் நம் இருப்பிடம் தேடி வரத்துவங்குவர்!

பெரும்பாலான மொத்த வணிகர்கள் கடன் கொடுத்து தங்கள் வணிகக் கணக்தை நம்மிடம் துவங்குவர்! ஒரு சில மொத்த வணிகர்கள் மட்டும் ரொக்கத்திற்கு விற்பனை எனக் கொள்கை வைத்திருப்பர்!

எந்தத் தொழிலாக இருந்தாலும் கடனாகக் கிடைக்கிறதே என வாங்கி வாங்கி நம் கடையில் அடுக்கி வைத்துவிடக்கூடாது!

குறிப்பாக வணிகம் தொடங்கிய புதிதில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு வணிகம் நடக்குமா என்பதுவே நமக்குத் தெரியாது! ஏற்கனவே வேறு ஒருவர் நமக்கு அருகில் இதே வணிகத்தைச் செய்து வந்திருந்தால் அவருக்கு வரும் வாடிக்கையாளர் அளவிற்கு நமக்கு வருவது கடினம்!

நம்முடைய பொறுமையும், வாடிக்கையாளர்களிடம் பழகும் விதமும், நம்முடைய பொருட்களின் தரமும், நம்முடைய விலைக் கொள்கையுமே மெல்ல மெல்ல நம் வணிகம் உயர்வதற்கு உதவும்!

எனவே இந்த நிலையில் நம்முடைய விற்பனை அளவிற்கேற்பவே நம்முடைய கொள்முதலும் இருந்தாக வேண்டும்! உதாரணத்திற்கு தினசரி ஆயிரம் ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது என்றால் ஆயிரம் ரூபாய்க்குள்தான் நம்முடைய கொள்முதலும் இருக்க வேண்டும்!

எந்தப் பொருள் அதிகம் விற்கிறதோ அந்த பொருளை எப்பொழுதும் இல்லை என்று சொல்லாமல் விற்பனைக்கு வைத்திருப்பதும், எந்தப் பொருள் குறைவாக விற்கிறதோ அந்தப் பொருளை மிகக் குறைவாகவே இருப்பு வைத்துக்கொள்வதுதான் வணிகத்தில் மிகவும் பாதுகாப்பானது!

இதை விடுத்து கடனுக்குக் கிடைக்கிறதே என்று ஏராளமாக வாங்கி அடுக்கி வைத்துவிட்டு கடன் கொடுத்தவர் அடுத்த வாரமே அல்லது அடுத்த மாதமே கடன் தொகையைத் திருப்பிக் கேட்டால் விற்காத பொருட்களை திருப்பித் தரும் நிலையோ அல்லது அப்படிச் செய்யாதவராயின் என்னைப்போன்று கடன்பட்டாவது அதற்குரிய தொகையைத் தந்து விற்காத பொருட்கள் தேங்கி முதலீடு முடங்க நேரிடும்!

ஒரு இலட்சம் முதலீடு போட்டு ஒரு தொழில் தொடங்குபவராக இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அந்தப் பணத்தில் ஒரு கணிணியை வாங்கி அதில் நம்முடைய விற்பனை மற்றும் கொள்முதல் மற்றும் செலவுக் கணக்குகளோடு பொருட்களையும் ஏற்றி பில் செய்து இலாப நட்டம் பார்க்கின்ற வசதியுள்ள ஒரு கணிணி மென்பொருளை கையாள்வதுதான் மிகச் சிறந்த பாதுகாப்பாக அவருக்கு அமையும்!

ஒவ்வொரு நாளும் துல்லியமாக நம்முடைய கொள்முதல் அளவு, விற்பனைத் திறன், எந்தப் பொருள் அதிகமாக விற்கிறது, எந்தப் பொருள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது என்ற தகவல்கள் உடனுக்குடன் கணிணி மென்பொருள் வாயிலாக நமக்குத் தெரிய வருவதால் அதற்கேற்ப நம்முடைய விற்பனை உத்திகளை மாற்றிக் கொள்ள இயலும்!

கணிணி வேண்டியதில்லை என்று நினைப்பவராக இருந்தால்கூட தங்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளதா என அறிந்து கொள்ள கட்டாயம் வருடாந்திர முடிவில் (வணிகர்களுக்கு ஏப்ரல் ஒன்று தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 தேதி வரை) மார்ச் இறுதியில் ஒன்றிரண்டு நாட்கள் வணிக இலாபம் போனாலும் நிறுவனத்தின் விற்பனையை நிறுத்திவிட்டு தங்களின் சரக்கு இருப்பினை கட்டாயம் சரி பார்க்க வேண்டும்!

அவ்வாறு செய்யாதவர்கள் நிச்சயம் தங்களின் வணிக வளர்ச்சியைத் துல்லியமாக அறிந்து கொள்வதைத் தவற விட்டவர்களாவர்! மேலும் தங்களின் இலாபம் என்னவெனத் தெரியாத நிலையில் முதலீட்டு இருப்பு குறைந்து தங்களின் வணிகம் நட்டத்திலிருப்பதை அறியாமல் போகும் நிலையடைவர்!

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக வணிகம் துவங்கி நன்கு வளரும் வரை ஓரளவிற்குப் பொருட்களின் விலையிலிருந்து தள்ளுபடி தருவதில் தவறில்லை! அது நம்முடைய வணிகத்தை உயர்த்துவதற்குப் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை!

ஆனால் அதே சமயம் நமக்கு உண்மையிலேயே கிடைக்க வேண்டிய இலாபத்தை என்போல் ஒரேயடியாக வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுத்து ஏமாந்து விடவும் கூடாது! பிறகு என்னைப் போல விழுந்துவிட்டால் லாபமடைந்த வாடிக்கையாளர்கள் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றப் போவதில்லை!

நம்முடைய சொந்த நிறுவனம்தானே என்று வரவு அறியாமல் செலவழிப்பதும் நம்மை வீழ்த்திவிடக் காரணமாகிவிடும்! எனவே நம்முடைய வணிகத்தில் நமக்கு வணிகச் செலவுகள் போக மாதம் இவ்வளவுதான் வருமானம் கிடைக்கும் என்று துல்லியமாக அறிந்து அதற்கேற்ப ஒரு தொகையை நம்முடைய சம்பளமாகக் கருதி மாதந்தோறும் எடுத்து வந்தால் தவறேதுமில்லை!

அதை விடுத்து நினைத்த நேரம் பணம் எடுப்பது, கேட்டவருக்கெல்லாம் கடன் கொடுப்பது, வருமானம் அறியாமல் நிதி நிறுவனச் சீட்டுகளில் சேர்வதற்குப் பணத்தை ஒதுக்குவது, விற்பனைக்கேற்ற கொள்முதல் இன்றி அளவிற்கு அதிகமாக வாங்கிக் குவித்து அதற்குரிய பணத்தை வட்டிக்குக் கடன் வாங்கி அடைப்பது போன்றவை அவரது வணிகத்தை வெகு விரைவில் முடிவிற்குக் கொண்டு வரக் காரணமாகிவிடும்!

மேலும் நிறுவனம் துவங்கி வணிகம் சரிவர நடக்கவில்லை என்பதற்காக வணிக நேரத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வது நினைத்த நாளில் கடைக்கு விடுமுறை விடுவது என்பவையும் வணிகத் தவறுகள்தாம்!

நல்ல ஒழுக்கமும் பணிவு குணம் உள்ளவர்களாகப் பணியாளர்கள் அமைவது இன்றைய உலகில் கடினம்தான்! எனினும் நம்மிடம் பணியில் அமர்பவர்களை நம்பித்தான் ஆக வேண்டும்! தவறு செய்பவர் எவரேனும் இருந்தால் நிச்சயம் நம் உள்ளுணர்வு அவர்களை நம்மிடம் காட்டிக்கொடுத்துவிடும்! முடிந்தவரை அவர்களைத் திருத்த முயலலாம்! திருந்தாதவர்களை நிறுத்திவிடலாம்!

ஒழுக்கமும் பணிவு குணமும் நிறைந்து உழைப்பதற்கு அஞ்சாத பணியாளர்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம் தொழிலுக்குத் தங்களின் உழைப்பினை முதல் போடாமல் வழங்கும் இவர்களுக்கு நம்முடைய வருடாந்திர வருமான இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவதென நாம் முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தவும் செய்தால் நிச்சயம் நமக்கு நிரந்தரமான பணியாளர்கள் அமைவது திண்ணம்!

மிகவும் போட்டிகள் நிறைந்த கால கட்டம் இன்றையது! எனவே நாம் தொழில் துவங்குகின்ற இடம் போட்டிகள் அற்றதாக அதே சமயம் இந்தத் தொழிலுக்கு அந்தப் பகுதியில் தேவை மிக்கதாக உள்ளதா எனச் சரியாக ஆய்வு செய்து தொழில் தொடங்க வேண்டியதுதான் மிக மிக அவசியம்!

எனக்குத் தெரிந்து பலர் இந்த ஒரு விசயத்தில் கவனம் செழுத்தாமல் வணிகம் துவங்கிவிட்டு போட்டியுள்ள இடங்களில் வணிகம் நடத்த இயலாமலும், போட்டிகளற்ற இடங்களில் வாங்குவதற்கு போதிய வாடிக்கையாளர்கள் இன்றிய நிலையிலும் ஓராண்டுக்குள் தங்களின் முதலீட்டில் பாதியளவிற்கு நட்டப்பட்டு வணிகத்தை முடித்துக் கொண்டு வருந்துவதைக் கண்டுள்ளேன்! 

சொந்த முதலீடாக இருந்து வணிகம் நடத்த இயலாதவர்களாக இருந்தால்கூடப் பரவாயில்லை! சொந்தத்திலோ, நட்பிலோ அல்லது வங்கியிலோ கடன் வாங்கி அவதிப்படுபவர்கள்தாம் பரிதாபத்திற்கு உரியவர்கள்!

மேற்கண்டவற்றில் புதிதாக ஒரு தொழில் தொடங்குபவர்களின் நன்மைக்காக வணிகத்தில் பல ஆண்டுகள் அனுபவப்பட்ட என்னுடைய சில வணிகத் தவறுகளையும் (அனைத்தும் அல்ல) உதாரணமாக்கியுள்ளேன்!

வாழ்ந்தவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்று விதியேதுமில்லை! வீழ்ந்தவர்களும் இதோ இது போன்ற அனுபவங்கள் வாயிலாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க முடியும் என்பதற்கு என் வணிக அனுபவமே மிகச்சிறந்த உதாரணம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!