வணிகமும் வணிகவரித்துறையும்!

என்னுடைய வணிகம் துவங்கியது திராவிட ஆட்சியாளர்கள் காலத்தில்!

இவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வணிகவரித்துறையில் இலஞ்சம் ஆதிக்கம் செழுத்தத் துவங்கிவிட்டதெனலாம்!

இவர்களைக் கேட்டால் இணை வணிகவரி அலுவலர் துவங்கி ஒவ்வொரு மட்டத்திலும் இவ்வளவு என ஒரு தொகையை மேலிடத்திற்கு வழங்க வேண்டும் அதனால்தான் நாங்கள் இலஞ்சம் வாங்க வேண்டியதாயிற்று என்பார்கள்!

மேலிடம் என்பது எவரென இன்றுள்ள தமிழகத்தின் எல்கேஜி குழந்தைகூட சரியாகச் சொல்லிவிடும்!

இப்படியாகத் துவங்கியதுதான் இந்தத் துறையின் இலஞ்ச வரலாறு!

தேனெடுத்துத் தருபவர்கள் புறங்கையைச் சுவைக்காமலா இருப்பார்கள்? எப்படியோ ஓகோவென இலஞ்சம் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறந்தது! இன்னும் பறக்கிறது!

எனக்குத் தெரிந்தவரையிலேயே இந்தத் துறை சார்ந்த அன்பர்கள் அடிக்கடி வணிகர்களிடம் கைநீட்டிக் கைநீட்டி தங்களின் வயோதிக காலத்தில் அட்டாக் வந்து செயலற்றவர்களாக நிறைய பேரைப் பார்த்துள்ளேன்! இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!

வணிகர்களுக்குள் விற்பனை வரி குறித்த விழிப்புணர்வு இன்றுவரை இல்லையெனத்தான் கருத வேண்டும்! வரி ஏய்ப்பு என்பது வேறு! வரிக்கு உட்படுத்தாத வணிகம் என்பது வேறு!

பெரும்பாலான வணிகர்கள் வரிக்கு உட்படுத்தாத வணிகம்தான் இன்றுவரை செய்து வருகின்றனர் அது வரி ஏய்ப்புக் குற்றமாகாது!

ஒரு வணிகர் தம்மிடமுள்ள வரிக்குட்பட்ட பொருட்களின் மீது வரி வசூலித்துவிட்டு அதனை அரசுக்குக் கட்டாமல் மறைத்துவிடுவதுதான் உண்மையிலேயே வரி ஏய்ப்பு என்பதாகும்! இது புரியாமல் அநேக வணிகர்கள் வணிக வரித்துறை அலுவலர்களிடம் சிக்கிக் கொண்டு படாத பாடு படுவர்!

வரிக்கு உட்படுத்தப்படாமல் பெரும்பாலான வணிகர்கள் வணிகம் செய்வதற்குக் காரணமே அரசு செய்யும் தவறுகள்தான் பிரதானமெனலாம்!

குறிப்பாக வணிக வரி உற்பத்தி நிலையிலிருந்தே துவங்குகிறது! உற்பத்தி துவங்குபவர்கள் முதலாவதாக மத்திய அரசின் பல்வேறு வரிகளை வணிகர்களிடமிருந்து வசூலித்துக் கட்டவேண்டியுள்ளது! மத்திய அரசின் வரியும் எளிமையானதாக இருப்பதில்லை! பொருளின் உற்பத்தி விலையில் நாற்பது சத அளவிற்குப் பல்வேறு வித வரிகள்!

உற்பத்தியாகும் பொருளின் அடக்கவிலையுடன் தங்களின் இலாபத்தையும் சேர்த்து இந்த வரியை விதித்தால் இன்றைய போட்டியான உலகத்தில் தங்களின் விலை எடுபடாது என்பதாலேயே பெரும்பாலான உற்பத்தியாளர்கள் வரிக்கு உட்படுத்தாமல் வணிகருக்கு விற்க என்ன வழி என ஆராயத் துவங்கிவிடுவர்!

அது மட்டுமன்றி உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தங்களின் வருடாந்தர உற்பத்தி மற்றும் விற்பனை அளவினை முடிந்தவரை குறைத்துக் காட்டினால்தான் மத்திய அரசின் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியும் என்று கருதிச் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்!

பெரும்பாலான உற்பத்தியாளர்களும் வணிகர்களும் தங்களின் வருடாந்திர உற்பத்தி மற்றும் விற்பனை அளவினை வருமான வரி காரணமாக குறைத்துக் காட்டுவதைத்  தவிர்ப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு!

எந்த உற்பத்தியாளராகவும் வணிகராகவும் இருப்பவர்கள் தங்களின் தொழிலில் ஏற்படும் போட்டிகள் காரணமாக வணிகத்தில் பல சமயங்களில் இறங்குமுகம் காண்பதுண்டு!

இது தெரியாமல் உற்பத்தியாளரோ, வணிகரோ தங்களின் விற்பனை அளவினை சென்ற ஆண்டை விடக் குறைத்துக் காட்டிவிட்டனர் என்பதற்காக, இவர்கள் வரி ஏய்ப்பு செய்ய முற்பட்டிருப்பர் என நேரடி ஆய்வுக்கு வரித்துறையினர் வந்துவிடுவதால்தான் பெரும்பாலானவர்கள் தங்களின் வணிகத்தில் ஒரு சம நிலையான கணக்கினை சமர்ப்பித்து வர முயல்கின்றனர்!

அடுத்து மாநில அரசின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான வரிவிதிப்பு முறை! அதிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்ற இறக்க விகிதங்கள்!

ஐந்து சத வரியில் நான்கு பொருட்களையும் பதினைந்து சத வரியில் நானூறு பொருட்களையும் விகிதப்படுத்தினால் வணிகர்கள் குறிப்பாக உற்பத்தியாளர்கள் வரிக்கு உட்படுத்தாமல் வணிகம் செய்யத்தான் வழி காண்பார்கள்! இவர்களிடம் தகுந்த பில் இல்லாமல் வாங்கும் வணிகரும் அதனை வரிக்கு உட்படுத்தாமல்தான் விற்கப் பார்ப்பார்!

இவை போதாதென மத்திய அரசு தங்களின் விருப்பம்போல வாகன எரிபொருள்களின் விலையை அடிக்கடி ஏற்றுகிறது! அது மட்டுமன்றி பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று அதற்குரிய கட்டணம் பெரும் சரக்கு வாகனத்துறை மத்திய அரசின் சேவைவரிப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டது! சேவை வரியும் சாதாரணமல்ல! சுமார் 12.5 சதவீதம்! இதுவும் பொருட்களின் உற்பத்தி விலை துவங்கி விற்பனை விலை வரை அதிகரிக்க ஒரு காரணமாகிவிட்டது!

இப்பொழுது மத்திய அரசின் வெளிமாநிலங்களுக்கிடையிலான வரியில் சில மாற்றங்கள் வந்து மதிப்புக்கூட்டு வரி முறை அமலில் உள்ளது! இந்த வரிப் பிரிவிலும் வணிகர்கள் தங்களை உட்படுத்திக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணமே அதிக விற்றுமுதல் காட்டி இரு அரசுகளிடமும் விற்பனை உற்பத்தி வருமானம் எனப் பல்வேறு வரிகளில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்க வேண்டுமே என்ற பயம் காரணம்தான்!

எவர் எப்படியோ நான் சொந்தமாக வணிகம் செய்தவரை என்னுடைய வணிகத்தில் வரிக்கு உட்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் எண்பத்தைந்து சதவீத அளவிற்கு விற்றுள்ளேன்! மீதமுள்ள பதினைந்து சதப் பொருட்களுக்கு அதை என்னிடம் விற்கும் வணிகர் வரிக்கு உட்படுத்தாமல் விற்றிருப்பார்.

எனவே அதனை அப்படியே வாங்கிய விதத்திலேயே விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்!

ஒருமுறை இன்றைய திராவிட ஆட்சியாளர்களின் குளறுபடியான வணிகவரி விதிப்பு முறையால் என்னிடம் விற்பனை வரி கட்டப்பட்டிருந்த பொருட்களுக்கே மீண்டும் விற்பனை வரி அதுவும் இலஞ்சத்துடன் கட்டுமாறு விற்பனை வரி அலுவலர்கள் தவறான உத்தரவு போட விதியே என அதற்கும் தண்டமாக வரி கட்டினேன்!

இதே போல ஒரு முறை எனக்கு வந்த சரக்கு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது! இத்தனைக்கும் அது வரி கட்டப்பட்ட பொருள்தான்! ஆனால் விலாசம் சரியில்லை என்ற காரணத்திற்காக அது அங்கு நிறுத்திவைக்கப்பட்டது!

வேறு வழியின்றி நேரில் சென்றால் அங்கிருந்த அலுவலர் அதனை விடுவிக்க இலஞ்சம் கேட்டார்! நான் வரி கட்டிய பொருளுக்கு எப்படித் தர முடியும் என வாதிட்டேன்! என்னிடம் பணம் கிடைக்காது என்பதால் இந்தப் பொருளுக்கு முன்வைப்பு வரி கட்டினால்தான் விடுவிக்க முடியுமென்றார்!

அந்தப் பணம் நம் விற்பனைவரிக் கணக்கில்தானே இருக்கப்போகிறது என்பதால் வேறு வழியின்றி அதற்குரிய பணத்தைக் கட்டிவிட்டு பொருளை எடுத்து வந்தேன்!

என்னைப் பொருத்தவரை அந்தந்த வருடத்திற்கான வருடாந்திர விற்பனை அளவினை உள்ளது உள்ளபடியே விற்பனைவரி அலுவலகத்தில் தாக்கல் செய்வேன்! வணிகம் துவங்கியதிலிருந்து சுமார் ஒன்பது ஆண்டுகள் வரை இதே கொள்கைதான்!

கடன் சுமை  மற்றும் பல்வேறுவித காரணங்களினால் என்னுடைய வணிகம் பத்தாம் ஆண்டில் முந்தைய ஆண்டை விடச் சில இலட்சங்கள் குறைவாக விற்பனை ஆகியிருந்தது!

நானும் வழக்கம்போல அந்த ஆண்டிற்குரிய உண்மையான கணக்கு வழக்குகளை வணிக வரித்துறையில் தாக்கல் செய்தேன்! அதன் எதிர் விளைவை உடனடியாக நான் சந்தித்தேன்!

ஒரு நாள் வணிகமே இன்றிக் காத்து வாங்கிக்கொண்டிருந்த நிலையில் என்னுடைய கடைக்கு பெருநகரத்திலிருந்து உயர்வணிக வரி அலுவலர்கள் இருவர் தணிக்கைக்கு வந்தனர்! தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த காரணத்தைக் கூறினர்!

காரணம் மேற்கண்டதுதாம்! கடையிலிருந்த ஆவணங்கள் அனைத்தையும் சோதனையிட்டனர்! நான்தான் வரி ஏய்க்காதவனாயிற்றே! மேலும் கணக்கு வழக்குகளையும் ஒழுங்காக வைத்திருப்பேன்!

வணிகம் மோசமான நிலையில் இருந்ததால் ஒரு மாதக் கணக்கு மட்டும் எழுதவில்லை! அவர்கள் எதிர்பார்த்து வந்த அளவிற்கு என்னிடம் தவறு ஏதும் இல்லையென்பதை அவர்களாகவே உணர்ந்து கொண்டனர்!

எனது வணிகமும் நானும் இருந்த பரிதாப நிலை கண்டு மனம் இறங்கி தங்களுக்கென எதுவும் வேண்டாம் எனினும் தங்களை அனுப்பிய மேல் அலுவலருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என வற்புறுத்த வேறு வழியின்று எனது நண்பரிடம் கடன் வாங்கி அவர்கள் கேட்ட தொகையை கொடுத்தனுப்பினேன்!

அப்பொழுதும்கூட என்னிடம் வரி கட்டப்பட்ட பொருட்களின் ஒரு சிறு பட்டியலைத் தயாரித்து இவை வரிக்கு உட்படாதவை என்பதாக ஒரு தொகையை அபராதமாகவும் விதித்துச் சென்றனர்!

இது போதாதென்று அடுத்த மாதமே நான் வணிகம் செய்த நகரிலிருந்த உள்ளுர் அமலாக்கப்பிரிவிலிருந்தும் இன்னொரு தணிக்கைக் கடிதம் வந்தது!

வேறு வழியின்றி நேரில் சென்றால் மேற்சொன்ன இதே விவகாரத்திற்குத்தான் இங்கிருந்தும் தணிக்கை வேண்டிய கடிதம்! இங்கும் என் பரிதாப நிலை கண்டு மீண்டும் வரி கட்டிய பொருட்களிலேயே சிறு பட்டியலைத் தயாரித்து அதற்குரிய அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிட்டு பணம் ஏதும் வாங்காமல் அனுப்பிவிட்டனர்! கல்லுக்குள் ஈரம்!

இந்த இரண்டு அபராத வரிகளையும் கட்டும் வரை எனது வணிகம் தாக்குப்பிடிக்க இயலாமல் வீழ்ந்துவிட்டது! நான்தான் ஏற்கனவே முன்கூட்டிய வரியை என் கணக்கில் வைத்துவிட்டுத்தான் கடை மூடி விட்டேனே! அது மட்டுமன்றி என்னுடைய வைப்புத்தொகையும் வணிக வரி அலுவலகத்தில் இருப்பதால் அரசிற்கு என்னால் நட்டமேதுமில்லை!

நான் வணிகர் நல வாரியத்தில் ஆயட்கால உறுப்பினராகப் பதிவு பெற்றவன்! வணிகத்தில் நட்டமடையும் வணிகர்களுக்கு ஒரு இலட்சத்திற்கு மேல் அரசு உதவி உண்டு என்பதையும் நான் அறிவேன்!

எனினும் அரசிடம் உதவி பெறுவதை உண்மையாக வணிகம் செய்து இலட்சக்கணக்கில் வரிக்கு உட்படுத்திய வணிகம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு மறைமுகமாக உதவியுள்ள என்போன்றவர்கள் இது போன்று அரசிடம் கையேந்தி நிற்பதை கேவலமாக நினைப்பவர்கள்!

நானோ புலிக்கொடியைத் தனதாகக் கொண்ட சோழ மரபில் வந்தவன்! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா!

வணிகத்தில் வரிக்கு உட்படுத்தப்படும் பொருட்கள் விற்கப்பட்டு அரசுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஏய்ப்பில்லாத வரி வருமானம் வர வேண்டும் என்றாலும், இந்தத் துறையில் இலஞ்சம் ஒழிய வேண்டுமென்றாலும் ஒரே வழிதான் உள்ளது!

அது ஏற்ற இறக்கமில்லாத ஒரே சமநிலையான எவருமே எளிமையானது எனக் கருதுமாறு வரி விதிப்பு முறை அமைவதுதாம்!

உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, மொத்த வணிகர், சில்லறை வணிகர் என அனைத்து தரப்பிலும் ஒழிவு மறைவற்ற வணிகம் நடைபெற மத்திய மாநில அரசுகள் வலிக்காமல் ஊசி போடும் முறையைக் கையாளத் துணிய வேண்டும்!

உண்மையாக நடக்கும் சிலரிடம் வரி பெற்று பலரிடம் வரி பெறாமல் விடுவதை இதன் வாயிலாகத் தவிர்க்க முடியும்! இந்தத் துறைகளில் இலஞ்சமும் ஒழியும் நிலை உருவாகும்!

வாய்மை உணர்வுள்ள ஆட்சியாளர்கள் நிர்வாகத்திற்கு வந்தால்தான் இது சாத்தியம்! அந்த நிலை எப்பொழுது உருவாகும் என்பதுதான் விடை தெரியாத கேள்வியாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!