பாரதி நினைவு நாள்!

காலனே என் எதிரே வாடா உன்னைக் காலால் மிதித்தே கொல்வேன் எனத் தான் இறக்கும் தருவாயில்கூடச் சிறிதும் மரண பய அச்சமின்றிக் காலனை வீறு கொண்டழைத்த முண்டாசு மீசைக் கவி பாரதியின் நினைவு நாள் இன்று!

வாழ்ந்த போது பாரதியைப் புரிந்து கொள்ளாத இந்தத் தமிழ்நாட்டு மக்கள் பாரதி மறைந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!

பாரதியைக் கொண்டாடுகிறோமே தவிர பாரதி பாடிய வரிகளைப் பின்பற்றுகிறோமா என்றால் இல்லை என்றுதாம் தலை குனிந்து ஏற்றாக வேண்டும்!

ஒவ்வொரு கவிக்குள்ளும் ஏராளக் கனவுகள் உண்டு! படைப்பாளிகளுக்கே உரித்தான கனவுகள் அவை! பாரதிக்குள் இருந்த கனவுகளோ இந்தப் பேரண்டமளவிற்கு விரிந்து பரந்த கனவுகள்!

பெண்ணடிமை, சாதி மத பேதம், அஞ்சி வாழும் வாழ்க்கை முறை, மூடப்பழக்க வழக்கங்கள், பொய்மை வாழ்க்கை, அடிமை வாழ்க்கை, ஏய்த்துப் பிழைத்தல், பகுத்தறிவின்மை, போன்ற எண்ணற்ற கொடுமைகள் இந்த நாட்டை விட்டு அகல வேண்டும் எனக் கனவு கண்டவர் பாரதி!

கனவு மெய்ப்பட வேண்டும் எனத் தம் கவிதையில் ஏங்கிய அந்த மகாகவியின் இன்னொரு கவிதையோ 

போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

என்று மயங்குவது போல் இன்றும் இந்த ஞாலம் முழுவதும் மக்கள் ஒரு பொய்யான வாழ்க்கை முறையைத்தாம் வாழ்ந்து வருகின்றனர்!

பாரதிக்கிருந்த துணிவும் ஆற்றலும் நமக்கில்லையெனினும், இந்த விஞ்ஞானம் ஆட்சி செய்யும் காலத்திலும் பாரதி கனவு கண்ட அந்த உன்னதமான தமிழகத்தையும் பாரதத்தையும் நம்மால் மீட்டெடுக்க இயலவில்லை என்பதே நிச்சய உண்மை! 

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய் என்ற அந்த மகாகவியின் அன்பு வரிகளை மனதில் ஏற்றி 

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிட்டும்,
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே எனப் போற்றியும்,
சாதிகள் இல்லை! குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம், 
நீதி உயர்ந்த மதி கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்,

என்ற பாரதியின் பாப்பா பாட்டில் வரும் அற்புதமான வாழ்க்கை முறைதனை நம் இளைய சமுதாயத்தின் முன் என்றென்றும் கொண்டு சேர்க்க அனைவரும் பாடுபட வேண்டும் என்ற வேண்டுதல்களுடன்

மகாகவி மறையவில்லை! இதோ இந்தத் தமிழகத்தின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஏராளமான பாரதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற நம்பிக்கையுடன் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்! தெருக்களெல்லாம் தமிழ் முழக்கம் செய்வோம்! 

பாரதி பாடியவாறே இன்றைய பொய்மையான தமிழின நிலைகள் 
போகட்டும்! போகட்டும் என வழியனுப்பிவிட்டு

வாய்மையான வலிய தமிழினம் வரட்டும் வரட்டும் என்ற வரவேற்போடு
மகாகவியின்  கனவுகள் மெய்ப்பட உழைப்போம் என உறுதியேற்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!