கொழுத்த புறா!

தங்கசாமியும் ரங்கனும் இளம் பிராயம் முதல் நண்பர்களாக ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வசிப்பது மட்டுமன்றி இருவரும் இன்றுவரை தங்கள் நட்பினை வணிகத்திலும் வளர்த்து வந்துள்ளனர்!

இளமையில் இருவரும் கொண்டிருந்த இலட்சியங்கள் தங்களின் பிறந்த மண்ணிற்காகத் தங்களது உழைப்பை நல்குவது என! ஆனால் நடந்ததோ வேறு! வளர்ந்து ஆளாகியதும் தங்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசியலைத் தங்களின் இருப்பிடமாக்கிக்கொண்டு இளம் வயது இலட்சியங்களை அதன் அடியில் புதைத்து விட்டனர்!

அரசியல் தந்த சலுகைகளால் இவர்களின் ரியல் எஸ்டேட் தொழில் கட்டைப் பஞ்சாயத்துகளால் அமோகமாக வளர்ந்து ஆடம்பர வாழ்விற்கும் வழி வகுத்தது! 

தன் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளில் தனது வளர்ச்சியை அசை போட்டவாறு தன் எதிரே நிறைந்திருந்த புறாக்களுக்கு இரை போட்டுக்கொண்டிருந்தார் தங்கசாமி! 

இந்தப் புறாக்கள் அனைத்துமே ரங்கன் வளர்ப்பவை! இரண்டு மாதங்களாகத்தான் ரங்கனுக்குப் புதிதாக புறாக்கள் வளர்க்கும் ஆசை! எதிரெதிர் வீடென்பதால் தங்கசாமியின் வீட்டு மாடியிலும் அவை பறந்து வந்து அமர்ந்து கொண்டு பயமின்றி இரை தேடும்!

தங்கசாமிக்கு அவற்றில் ஒரு குறிப்பிட்ட புறாவைத்தான் மிகவும் பிடிக்கும்! கொழுகொழுவென்றிருக்கும் தாதா என அவரால் செல்லமாக அழைக்கப்படும் அந்தப் புறா தன் முன்னால் இரைந்து கிடக்கும் தீவனங்களை மற்ற புறாக்களையும் காகங்களையும் உண்ணவிடாமல் தலையைச்  சிலுப்பியவாறு விரட்டிவிட்டுத் தானே  உண்ணும் அழகினை அவர் கண் கொட்டாமல் பார்த்து இரசிப்பது வழக்கம்!

மற்ற புறாக்கள் பாவம் பரிதாபமாக அதை எதிர்க்க இயலாமல் அது கொத்திச்  சிதறுகின்ற இரையை மட்டும் பொறுக்கிவிட்டுத் தங்களின் கூட்டிற்குத் திரும்பிவிடும்! 

தாதாவோ தங்கசாமியின் தோளில் அமர்ந்து கொண்டு அவர் கையிலுள்ள இரையை உண்ணும்! தங்கசாமி தன்னை கூட்டிற்குப் போவென வானில் பறக்கவிடும்போதுதான் அங்கிருந்து பறந்து ரங்கனின் வீட்டிற்குச்  செல்லும்!

அன்றைய தினம் ஞாயிறு! மதிய விருந்துக்கு தன் வீட்டிற்கு வந்து கலந்து கொண்டபின்னர் இருவருமாகச்  சேர்ந்து தங்களது வழக்கமான கட்டைப்  பஞ்சாயத்திற்குச் செல்லலாமென ரங்கன் தொலைபேசியில் அழைத்திருந்ததால் அன்று தனக்கு வரவுள்ள வருமானம் எவ்வளவு இலட்சங்கள் தேறுமெனக் கணக்கிட்டவாறு நண்பரின் இல்லத்தில் நுழைந்தார் தங்கசாமி!

ஆடம்பரமான சாப்பாட்டு மேசையில் விதவிதமாகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த அசைவ உணவு வகைகளை இரசித்து ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ரங்கன் வீட்டின் மாடியில் அமைந்திருந்த புறாக்களின் கூட்டினை நெருங்கி அவற்றில் தனக்குப் பிடித்தமான தாதாவைத் தேடினார் தங்கசாமி!

அவரைப்  பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர் ரங்கன் என்ன நண்பா என்ன பார்க்கிறீர்கள் என வினவினார்! நான் வேறு யாரைத் தேடுவேன் எனக்குப் பிடித்த அந்த வெள்ளை நிற தாதாப்  புறாவைத்தான் எங்கே காணவில்லையே எனப்  பார்க்கிறேன் என்று  பதிலளித்தார் தங்கசாமி!

அதையா தேடுகிறீர்கள் எனக் கேட்டுவிட்டு சற்று பலமாக நகைத்த ரங்கன் அதுதான் உங்கள் வயிற்றில் இப்பொழுது உள்ளதே! இருப்பதில் கொழுத்த புறா அதுதானே! அதனால்தான் இன்றைய சமயலுக்குச்  சரியாக இருக்குமென்று அதை அறுத்து விட்டேன் எனப் பதிலளித்துவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கிச்  சிரித்தார்! 

இதைக் கேட்டவுடன் தங்கசாமிக்கு குமட்டிக்கொண்டு வந்தது! தான் சுவைத்து இரசித்துத் தின்ற அந்த தாதாவின் நிலை போல மற்றவர்களை ஏய்த்து சுகமான வாழ்வு வாழும் தனக்கும் ஒரு நாள் தன் தவறுகளுக்கென கத்தியைத் தீட்டிக்கொண்டு தீர்ப்பு வருமென்பதை அக்கணமே அவர் உணர்ந்தார்! 

அடுத்த நிமிடமே தம் நண்பரின் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் அன்றிலிருந்து தன்னால் பாதிக்கப்பட்ட நபர்களைத் தேடிப்பிடித்து மன்னிப்பு கோரியதோடு மட்டுமன்றி தன் வசமிருந்த பிறரை ஏமாற்றி சேர்த்த சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கினார்!

இப்பொழுதெல்லாம் தங்கசாமி தனது பழைய வணிகமான நெல் அரவை ஆலையில் சாதாரணக் கூலித்  தொழிலாளர்களுடன் சரிசமமாகப் பழகியவாறு அரிசி மூட்டைகளைக்கூட சுமக்கத் தயங்காமல் தனது வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்! மேலும் தனது உழைப்பில் உருவாகும் செல்வத்தின் ஒரு பகுதியை தனது ஊரிலுள்ள கல்விக்கூடங்களுக்கு செலவிட்டு வருகிறார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!