மனைவி அமைவதெல்லாம்!

எனக்குத் திருமண வயது வந்தவுடன் எனது தந்தை எனக்குப் பெண் தேடத் துவங்க முடிவு செய்து முதலாவதாகத் தனது அத்தை மகளைச் சந்தித்து எனக்கேற்ற பெண் ஏதேனும் இந்த நகரில் உள்ளதா என வினவியுள்ளார்! 

அதற்கு அவர் உடனே எனது பேத்தி ஒருத்தி உள்ளார்! அவளைப் பார்த்துவிட்டு வேறு இடம் பார்க்கலாம் எனச் சொல்லவே இருவரும் உடனே எனது வருங்காலத் துணையைப் பார்க்கச் சென்றுள்ளனர்!

அன்றைய தினம் சூலை 1. எனக்கெனப் பார்க்கச் சென்ற தனது வருங்கால மருமகளின் பிறந்த நாள் அதுவாகும்! தனது அத்தை மகளின் மகளாகத் தனக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமான எனது வருங்கால மாமியாரையும், அவரது மகளையும் பார்த்தவுடன் இந்தப் பெண்தான் தனது மருமகள் என முடிவு செய்துவிட்டே ஊர் திரும்பினார் எனது தந்தை!

வீட்டிலுள்ள அனைவரிடமும் தீர்க்கமாகத் தான் பார்த்து வந்த பெண்தான் தனது வருங்கால மருமகள் என்று எடுத்தியம்பி, எனது சித்தப்பா அமரர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் உடனே என்னையும் ஒரு மகிழுந்தில் அங்கு எனது உறவுகள் புடை சூழப் பெண் பார்க்க அனுப்பினார்!

முதல் முறையாகக் பெண் பார்க்கும் படலம்! எனக்குள் இயல்பாகவே இருந்த கூச்ச உணர்வு காரணமாக எனது வருங்காலத் துணைவியை அன்று நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

எனினும் தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை என எனது தற்போதைய வளர்ப்பு யசோதை அன்னையாக என் மீது பாசம் செழுத்தும் எனது வருங்கால மாமியாரின் உபசரிப்பும் அவர்தம் குணநலன்களையும் கண்டவுடன் தாயைப் படிக்கட்டுத்துறையில் கண்டால் பெண்ணை வீட்டில் சென்று பார்க்க வேண்டியதில்லை என்ற பழமொழிக்கேற்ப எனது வருங்காலத் துணைவியும் தன் தாயாரின் குணநலன்களைத்தான் கொண்டிருப்பார் என்ற முடிவுடன் திருமணத்திற்குச் சம்மதித்தேன்!

அதன் பின்னர் சில நாட்களில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில்தான்  எனது வருங்காலத் துணைவியின் முகம் பார்த்துத் தெளிந்தேன்! திருமணம் நிச்சயமான பிறகு பலமுறை இந்த நகருக்குச் செல்ல நேர்ந்தாலும் இன்றுள்ளது போலப் பெண் வீட்டிற்குச் சர்வ சாதாரணமாகத் தன் வருங்காலத் துணைவியைச் சந்திக்கும் சாக்கில் அவர்கள் இல்லத்திற்கு நான் செல்ல முயற்சித்ததில்லை!

செப்டம்பர் 14 நான் எனது மனைவியை வாழ்க்கைத்துணையாகக் கரம் பிடித்த நாள்! நேற்றுடன் இருபத்தெட்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனத் தமிழ்க்கவி பாடியதற்கேற்ப வந்தமைந்தவர் எனது மனைவி!

மணமான புதிதில் தன் வருங்கால மருமகள் இவள்தான் எனத் தன் முதல் தேர்விலேயே முடிவு செய்த எனது தந்தையைக் கண்டாலே எனது மனைவி நடுங்குவார்! காரணம் எனது தந்தையின் கண்கள் சற்று பெரியதாக இருந்ததால் அவரது பார்வையே சற்று அச்சமூட்டுவதாக இருக்கும்!

நான் என் தந்தைக்குள் இருக்கும் மென்மைத்தன்மையை எனது மனைவியிடம் எடுத்தியம்பி அவருக்குள் இருந்த அச்சத்தைப் போக்கினேன்! நாட்கள் செல்லச் செல்ல அவரைச் சரியாகப் புரிந்து கொண்ட எனது மனைவியுடன்தான் எனது தந்தை தான் இறக்கும் வரை குடும்ப விவகாரங்கள் எதனையும் என்னிடம்கூடத் தெரிவிக்காமல் ஆலோசித்து முடிவெடுப்பார்!

என்னுடன் பிறந்த மூன்று சகோதர சகோதரிகளிடமும், அவர்கள் குடும்பம் சார்ந்த உறவுகளிடமும் எனது மனைவி இன்றுவரை உரிமையுடன் பழகி வருகிரார்! 

மணமான சில ஆண்டுகள் கழிந்த நிலையில் எனக்கும் எனது தந்தைக்கும் இடையே வணிகம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் தோன்றும்போதெல்லாம் எனது மனைவி என்றைக்குமே என் பக்க நியாயத்தைச் சார்ந்து நின்றதில்லை! என் பக்கமே உண்மை இருந்தாலும் எனது மனைவி எனது குடும்பத்தவர் பக்கமே இருந்து என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் அதிகம்! இந்தத் தன்மையே எங்கள் கூட்டுக்குடும்ப உறவில் விரிசல் விழாமல் பாதுகாத்து வந்துள்ளதற்குக் காரணமெனலாம்!

எனது துணைவிக்கு எனது உறவினர்கள் மேல் இருந்த அளவற்ற பாசமும், எனது உறவுகளின் நல்லது கெட்டதுக்கெல்லாம் தம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என்ற உண்மையான அக்கறையுமே இது வரை எங்கள் உறவுகளிடம் நல்ல தொடர்பில் இருக்க உதவுகின்றது!

ஒருமித்த எண்ணம் என்பார்களே அது போல எனது உறவுகளில் எவருக்கேனும் ஏதேனும் செய்ய வேண்டும் என நான் எண்ணும்போதே அவரும் அதே எண்ணத்தை உடனடியாக வெளிப்படுத்துவார்! இது எனது மனைவி சார்ந்த உறவினர்களிடமும் எங்கள் இருவராலும் ஒருமித்த உணர்வாகப் பெரும்பாலும் வெளிப்பட்டுள்ளது! நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற நம் தமிழ்க்கவியின் வைர வரிகளுக்கேற்ப எங்களின் ஒருமித்த எண்ணங்கள் இதோ இன்றுவரை தொடர்கின்றன! இனியும் தொடரும்! 

எல்லாம் சரி உங்களுக்குள் கருத்து வேறுபாடுகளே தோன்றியதில்லையா என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் உண்டு! எங்களுக்குள் பல சந்தர்ப்பங்களில் கருத்து வேற்றுமை ஏற்படுவதுண்டு! அதன் பொருட்டு இருவரும் பேசிக்கொள்ளாத நிலையும் ஏற்படும்! 

ஆனால் இந்த நிலையினை நாங்கள் இருவரும் மூன்று நாட்களுக்கு மேல் நீட்டிக்க அனுமதித்ததிலலை!  எவர் பக்கம் தவறிருந்தாலும் அவரவர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களிடமுள்ள வீணான பிடிவாதங்களைத் தவிர்த்துக் கொண்டதாலேயே இதுவும் சாத்தியமாயிற்று! 

ஒரே ஒரு முறை நான் பணியாற்றிய இடத்தில் தொடர விருப்பமற்ற மன நிலையில் இருந்தபோது எனது மனைவி அந்த இடத்திலேயே பணி தொடரும்படி என்னை வற்புறுத்திட அதனால் ஏற்பட்ட பிரிவால் சுமார் மூன்று மாதங்கள் எனது குடும்பத்தை விட்டு நான் பிரிந்திருக்க நேர்ந்ததே (இந்தப் பிரிவில் ஏற்பட்ட வெற்றிடத்தையும் வாரத்திற்கொருமுறை நான் இல்லம் வந்து சரிசெய்துவிட்டேன்) எனக்கு நானே எனது தவறுகளுக்கெல்லாம் கொடுத்துக் கொண்ட தண்டனை எனலாம்!

நாங்கள் வசிக்க நேர்ந்த பல்வேறு ஊர்களில் குடியிருந்த வீடுகளுக்கு அருகிலுள்ளவர்களிடம் உறவினர்கள் போலப் பழகி இன்றுவரை எங்களுடன் அந்தக் குடும்பங்கள் தொடர்பில் இருப்பதற்கும் என்னிடம் பழகும் மக்களிடம் சாதிமத பேதம் பாராமல் அவர்களிடம் உறவு பாராட்டி அவர்களுடனான எனது நட்பு தொடர்வதற்கும் எனது மனைவியின் நற்குணமே காரணமெனலாம்! 

எனது வணிகம் சார்ந்த துன்பங்களால் எனது கரம் பிடித்த நாள் முதற்கொண்டு இன்றுவரை இன்பங்களை விடத் துன்பங்களையே பலமுறை அனுபவித்து வந்திருந்தாலும் என் வாழ்க்கைப் பாதை சரிவர அமையக் கவியரசின் பாடல் வரிகளுக்கேற்ப எனது குடும்ப வண்டியின் சரிசமமான சக்கரமாகத் திகழ்வதாலேயே எனது மனைவியின் தயவால் எனது வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறதெனலாம்! 

எங்களுக்குப் பிறந்த முதல் மகள் பிறவியிலேயே உடலில் ஒருவித குறையுடன் பிறந்து எங்களுடன் வாழ்ந்த இருபது மாதங்களும் எனது துணைவி எனது வீட்டு இலக்குமியாகத் திகழ்ந்த அந்த மழலைக்கு ஒரு கைதேர்ந்த செவிலியாகப் பணியாற்றி அனுபவித்த துன்பங்கள் அனைத்தும், எனது இரண்டாவது மகளின் பிறப்பிற்குப் பின்னர் சற்று மறைந்தாலும் இன்றுவரை அந்தச் செல்வத்தை இழந்துவிட்டதற்காக மனதுக்குள் நாங்கள் இருவரும் தவிப்பதை எங்களைத்தவிர யாரும் அறிய இயலாது! 

உலகில் பிறப்பெடுப்பவர்க்கெல்லாம் இது போன்ற வாழ்க்கை அமைவது சாத்தியமா என எனக்குள் நான் எண்ணும்போதெல்லாம், நல்ல மனைவி! நல்ல பிள்ளை! நல்ல குடும்பம்! தெய்வீகம்! என நானும் எனது மனைவியும் பிறந்த இடங்களும் சிறப்பாக அமைந்ததால்தான் எங்கள் துன்பங்களுக்கிடையிலும் நாங்கள் சிறப்பாக வாழ முடிகிறதெனலாம்! 

எழுதுவதற்கு இன்னும் ஏராளம் இருந்தாலும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல எனது இன்ப துன்பங்களில் சிவசக்தியாக விளங்கி இன்றுவரை எனது வாழ்வின் ஏற்றத்திற்குத் தோள் கொடுத்துவரும் எனது மனைவியின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுவதற்குத் தவறி விடக்கூடாது என்பதாலேயே இதனை எழுத நான் இங்கு கடமைப்பட்டுள்ளேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!