செய்க தவம்!

செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை யெய்தலாம்! வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை! அன்புடையார் 
இன்புற்று வாழ்தலியல்பு! இது மகாகவி பாரதி வாக்கு!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உயிரினங்களைப் பலிகொடுத்துத் தத்தம் குலதெய்வங்களைத்  தவம் செய்கிறோம் என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்!

அன்பே சிவம் எனும் உயரிய சொல்லுக்கேற்ப உயிர்களின் மீது அன்பு செழுத்துவதே உண்மையான தவமாகும்! வண்டியில் பிணைக்கப்பட்டுத் தன்னைச் சுமந்து வந்த எருதினைத் தடவிக்கொடுத்துக்  கண்ணீர் சொரிந்து என்னைச் சுமந்ததால் உனக்கு வலி ஏற்பட்டதோ எனக் கண்ணீர் பெருக்கிய வள்ளலாரின் செய்கையே உண்மையான உயரிய தவமாகும்!

பாரதப் போரில் இதோ என் எதிரே நிற்கும் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள், என் உறவினர்கள் எனப் போர் செய்ய மறுத்துத் தம் ஆயுதங்களைத் துறந்து தவம் செய்யக் கானகம் சென்ற அருச்சுனன் செய்த தவமே உண்மையான தவம்!

ஒரு முறை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் ஒரு சிற்றுந்தில் அமர்ந்திருந்தேன்! அந்தச் சிற்றுந்தில் அமர்ந்திருந்த கிராமத்துப் பெண்கள் சுவாரசியமாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்! அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதைக் கேட்க நானும் ஆவலுற்றேன்!

அவர்கள் பேச்சில் எனக்குத் கிடைத்த தகவல் இதுதாம்! 

அன்றைய தினம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒரு கொழுத்த பன்றியினைப் பலி கொடுக்கப்போகிறார்களாம்! அதற்கென ஒரு பன்றியினைக் குட்டியாக இருக்கும்போதே தங்கள் பிள்ளையைப் போலச் செல்லமாக வளர்த்து வருவார்களாம்! 

விழா நாளுக்குள் அந்தப் பன்றி நன்கு வளர்ந்து கொழுகொழுவெனக் காட்சியளிக்குமாம்! விழா நாளன்று அதற்கு மாலை மரியாதை செய்து அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவார்களாம்! இதைத்தான் அவர்கள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்!

இதன் பின்னர் அவர்கள் தெரிவித்ததுதான் என்னை மனம் பதற வைத்தது! 

இவ்வாறு அழைத்து வரும் அந்தப் பன்றியினைத் தங்கள் கோயிலில் ஆண்கள் பலர் கூர்மையான ஈட்டிகள் கொண்டு கதறக் கதறக் குத்திக் கொன்று பலி கொடுப்பார்களாம்! இதையும் அவர்கள் உற்சாகத்துடன் தங்களுக்குள் மகிழ்ச்சி பொங்கப் பேசிக் கொண்டனர்!

இந்த உரையாடல் முடியும்போது அந்த வழியாக அந்தப் பலி ஊர்வலம் கடந்து சென்றது! நான் அவர்களில் சற்று வயதான ஒரு அம்மாவிடம், அம்மா ஒரு பிள்ளையைப் போல பாசம் காட்டி வளர்த்த அந்தப் பன்றியைத் தெய்வத்திற்கென அதுவும் குரூரமாகப் பலி கொடுக்கின்றீர்களே இதுவே அந்தத் தெய்வம் பலி கேட்கிறது என்பதற்காக நீங்கள் பெற்றெடுத்த ஒரு குழந்தையைப் பலி கொடுப்பீர்களா என்று வினவினேன்! 

என் பேச்சில் தெரிந்த நியாயத்தை ஏற்ற அந்தத் தாய்மார்களும் நீங்கள் சொல்வது நியாயம்தான்! பிள்ளையைப் போல வளர்த்த ஒரு உயிரை இப்படி அநியாயமாக வதைப்பது தவறுதான் என ஒப்புக்கொண்டனர்!

இது போன்ற ஏராளமான கொடிய உயிர்ப்பலிகள் தமிழகமெங்கும் பக்தி என்ற பெயரில் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன! எனது பங்காளி முறை உறவினர்கள்கூட வருடாவருடம் இது போன்ற பலி கொடுக்கும் நிகழ்வுகளைத் தொடர்கின்றனர்! இதனைத்தாம் அவர்க்ள குலதெய்வ வழிபாடு என்றும் அழைக்கின்றனர்!

அறியாமையில் திலைக்கும் இவர்களிடம் நம்முடைய அறிவுரைகள் ஏறாது என்பதால் நான் அவர்களின் அழைப்பினை இதுபோன்ற தவங்களில் கலந்து கொள்ளச் சொல்லும்போதெல்லாம் நிராகரித்துவிடுகிறேன்! வீட்டு வரி என்ற பெயரில் இவர்கள் கேட்கும் ஒரு தொகையையும் நான் கொடுப்பதில்லை!

உயிரினங்களை நம் மனமறிந்து துன்புறுத்துவது கூடாது, உயினங்களைக் கொன்று தின்னல் பாவம் என்ற சித்தர்களின் வழியில் வாழ முடிவு செய்து விட்ட என் போன்றவர்கள் பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் எனக்கென வாதிடவா முடியும்?

இந்த உலகில்  இன்றும் வன்முறை எண்ணங்கள் தலை தூக்குவதற்கு இதுபோன்ற உயிர்பலி விழாக்கள் நடத்தப்படுவதுதாம் தலையாய காரணம்!

அன்பை மட்டுமே கொள்கையாகக் கொண்ட தெய்வங்கள் நம் கண்ணுக்குப் புலப்படாமல் உலகில் மறைவாக வாழ்ந்தால் உயிர்களைக் கொன்று தரும் இரத்தப் பலி, அலகு குத்துதல், தீ மிதித்தல், அங்கம் வருத்திப் பிரார்த்தனைகள் நிறைவேற்றல் போன்ற செயல்களை அந்தத் தெய்வங்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்!

உலகை இரத்தக் களரியில் அச்சுறுத்தும் சாத்தான்கள் எனும் கொடிய குண தெய்வங்களே இதுபோன்ற இரத்தம் சிந்தும் உயிர்ப்பலிகளை விரும்புகின்றன! 

அறியாமையில் திலைக்கும் நம் மக்கள் தங்களின் வாழ்விற்கு உதவும் தெய்வங்கள் என்ற அறியாமையில் இதுபோன்ற இரத்தவெறித் தெய்வங்களைத்தான் உண்மையில் சாந்தப்படுத்துவதாகக் கருதித் தவறாக அவைகளின் இரத்தவெறியை அதிகரித்து வந்துள்ளனர்!

இனியாவது தங்களின் அறியாமையிலிருந்து மக்கள் வெளியேறி அன்பைப் போதிக்கும் உண்மையான தெய்வங்களை அடையாளம் கண்டுகொண்டால் அவர்களைத் தேடி காடு மேடு மலை குகை என எங்கும் அலைய வேண்டியதே இல்லை!

உயிர்கள் மீது மிக்க அன்போடு உள்ளத்தில் எழும் அன்பு உணர்வோடு இந்தப் பேரண்டப் பெருவெளியில் தங்கள் எண்ணங்களைத் தூய்மையாக வெளிப்படுத்தினால் உங்களைச் சுற்றி நல்ல தெய்வங்கள் எப்பொழும் கண்ணுக்குப் புலப்படாமல் நன்மை செய்து நிற்கும்!

அன்புடன் உங்கள் உள்ளே கடந்து பாருங்கள்!  உள்ஒளி பரவும்! உயரிய வாழ்க்கை அமையும்! கடவுள் தன்மை உங்களுக்குள்ளேயே நிலைபெற்று நிறைந்து நிற்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!