சாலை ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்!

1.சாலையில் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது எதிரே ஒரு வாகனம் வந்தால் எதிரில் வருபவரின் இடத்தைத் தாங்கள் ஆக்கிரமிப்பதால் குற்றம் தங்களுடையதே என உணர்ந்து பின் வாங்குதல்!

2.குண்டும் குழியுமான சாலை என்பதற்காக இடது புறம் செல்வதற்குப் பதிலாக வலது புறம் சாலை நன்றாக இருக்கிறது என்பதற்காகச் செல்லும்போது எதிரே வருபவர்களைக் கண்டால் இடது புறம் ஒதுங்கி வழி விடுதல் நம் கடமை என உணர்தல்!

3.வாகனங்களை வலது மற்றும் இடது புறமாகத் திருப்பும்போது சிக்னல் விளக்குப் போடுதல் அல்லது உரிய சைகையினைத் தங்கள் இடது வலது கைகளால் காட்டித் திரும்புதல்!

4. நெருக்கத்தில்  மஞ்சள் சிக்னல் விழுவதைக் கண்டவுடன் வாகனத்தை உடனடியாக நிறுத்தத் தேவையில்லை! அப்படி நிறுத்தினால் நம்மைப் பின்தொடர்ந்துவரும் அவசரக் குடுக்கைகள் நமது வாகனத்தின் பின்பக்கத்தில் வந்து மோதக்கூடும்! அதே சமயம் தொலைவிலேயே மஞ்சள் சிக்னலைப் பார்த்துவிட்டால் கட்டாயம் தங்களின் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்ற உணர்வுடன் நிறுத்துதல்!

5.சிகப்பு சிக்னல் இருக்கும்போது சாலையில் எந்தப் போக்குவரத்து இல்லையென்றாலும் அவசரப்படாமல் பச்சை விளக்கு போடும்வரை அமைதியாகக் காத்திருத்தல்!

6.சிக்னலில் நிற்கும்போது வாகனத்தை நிறுத்தி நம் எரிபொருளைச் சேமிப்பதுடன் நல்ல சுவாசக் காற்று நகர மக்களுக்குக் கிடைக்க நம்மாலான பங்களிப்பை நிறைவேற்றல்!  பச்சை விளக்கு விழுந்தவுடன் நம் வாகனம் தொல்லை தராமல் உடனே கிளம்புமாறு  நல்ல நிலையில் வைத்திருத்தல்!

7.போக்குவரத்து நெரிசலில் எவரேனும் தவறாக நம் பாதையில் வந்து குறுக்கிட்டாலோ அல்லது இலேசாக மோதிவிட்டாலோ உணர்ச்சி வசப்படாமல் ஒரு புன்னகை செய்து அவரது தவறை மன்னித்தால் அவரும் தம் குற்றம் அறிந்த உணர்வுடன் விலக  இது அநாவசிய சண்டைகளைத் தவிர்க்க உதவுதல்!

8.வாகனத்தில் செல்லும்போது தவிர்க்க இயலாமல் எச்சில் துப்ப வேண்டி வந்தால் இடதுபுறம் ஒதுங்கிச் சென்று அருகில் கட்டாயம் கழிவுக் கால்வாய் இருக்கும் அங்கு துப்பிவிட்டுச் செல்லுதல்!

9.பேருந்து ஓட்டுநரென்றால் உரிய நிறுத்தங்களில் நிறுத்திப் பயணிகளைப் பத்திரமாக இறக்கிவிட்டுச் செல்லுதல்!

10.பேருந்துகளை நகர்ப்புறங்களில் ஓட்டும்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட தெருக்களில்தான் செல்ல வேண்டுமென்ற காவல் துறையின் விதிகள் அமுலில் இருக்கும் என்றால் அந்த வழியிலேயே எப்பொழுதும் சென்று குறிப்பிட்ட நிறுத்தங்களில் ஏறி இறங்கும் பயணிகளுக்கு அலைச்சல் இல்லாமல் சேவை செய்தல்!

11.நகரங்களில் மணிக்கு 30 கல் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்ற விதியைத் தவறாமல் நெரிசல் மிக்க இடங்களில் (குறிப்பாகப் பெரிய வாகனங்கள்) கடைப்பிடித்தல்!

12.நகரங்களில் இடது பக்கமாகச் செல்லாமல் வலது பக்கம் தாறுமாறான வேகத்துடன் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க இடமின்றித் தவிக்கும் நிலையை உருவாக்காமல் நிதானமாக இடது புறமாகச் செல்லுதல்!

13.இரவில் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனம் எதிரில் வந்தாலும் அதிகப் பிரகாசமுள்ள விளக்கை அணைத்து அவருடைய கண் பார்வைச் சிரமத்தைக் குறைத்தல்!

14.இரவில் பின்புறமாக வாகனத்தை எடுக்கும்பொழுது கட்டாயம் பின்புற விளக்குகள் எரியுமாறு தங்களின் வாகனத்தை வைத்திருத்தல்!

15.சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த நேர்ந்தால் இடது பக்கம் நன்கு ஒதுக்கி பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி நேராக  நிறுத்துதல்!

16.ஒரு வழிச் சாலையென்றாலும் முன்னே செல்லும் வாகனத்தை முந்த நேரும்போது வாகனத்தின் விளக்குகளை மாற்றி மாற்றி சிக்னல் செய்து வழி கிடைத்த பின்னரே முந்துதல்!

17.இருவழிப் பாதையெனில் இடது பக்கம் நமக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ அது போல வலது பக்கம் எதிரே வருபவர்களுக்கு முழு உரிமை உள்ளதென நினைந்து அவர்களின் வழியில் குறுக்கிடாது கண்ணியம் காத்தலே போக்குவரத்து விபத்துகளைத் தவிர்ப்பதில் நம்முடைய பங்கு தலையாயதானதெனக் கருதுதல்!

இதோ மேற்கண்ட போக்குவரத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கினை உங்களுக்குள் சற்று உள்வாங்கிப் படியுங்கள்!

பத்திற்கும் மேற்பட்டவைகளை அல்லது எல்லாவற்றையும் நான் சரியாகக் கடைப்பிடிக்கிறேன் என உங்கள் மனதிற்குள் பட்டால் உங்களால் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறுகளோ, அதன் காரணமாக விபத்துகளோ ஏற்பட வாய்ப்பில்லை!

இந்த விதிமுறைகளை இதுவரை நான் கண்டுகொண்டதில்லை! ஆனால் இனிமேல் நான் கண்டிப்பாக இவற்றைக் கடைபிடிப்பேன் என உங்கள் மனதிற்குள் உறுதி கொண்டால் ஒரு பொறுப்புள்ள சாலை ஆளுநராக நீங்கள் தகுதி உடையவராவீர்கள் என்பது நிச்சயம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!