படித்ததில் பிடித்த கதை!

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்ட்டாய் அவர்களின் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது!  தனி மனித வாழ்வின் மேன்மையை மிக அழகாக அவர் கையாண்ட நேர்த்தி மிகவும் பிடித்ததால் அதனைச சுருக்கமாக இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!

ரஷ்யாவின் ஒரு கிராமத்துத் தலைவராக ஒழுக்கமுடன் வாழ்ந்த வசதியான ஒரு பெரியவரும், அதே கிராமத்தில் அளவாகக் குடிப்பது, மற்றும் பொடிபோடுதல் போன்ற பழக்க வழக்கங்களுடன் நெஞ்சில் ஈர உணர்வுள்ள அவரது நண்பருமான இன்னொரு பெரியவரும் இயேசுவின் எருசலேம் நகருக்குப் புனித யாத்திரைக்குப் புறப்பட்டனர்!

போதிய பணம் மற்றும் உணவுகளுடன் புறப்பட்ட இருவரில் முதலாமவர் தாம் கிராமத்தில் விட்டு வந்த பணிகளைத் தங்களின் வாரிசுகள் சரியாகக் கவனிப்பார்களோ, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ, இந்தப் புனித யாத்திரையைத் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்ற பல்வேறான எண்ணங்களைத் தம் கிராமத்தைச் சுற்றியவாறு பயணிக்க இரண்டாமவரோ எவ்விதக் கவலைகளுமின்றித் தம்முள் இறை சிந்தனையோடு மட்டுமே பயணப்பட்டார்!

ஆங்காங்கே இது போன்ற பயணிகளுக்கு மக்களிடயே கிடைக்கும் பணிவிடைகளுடன் நீண்ட தொலைவு கடந்த நிலையில் ஒரு பஞ்சம் தாண்டவமாடிய பிரதேசத்தில் அவர்களின் பயணம் உணவிற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடான நிலையில் தொடர்ந்தது!

ஓரிடத்தில் இரண்டாமவர் தாகமெடுத்த நிலையில் பின்தங்க முதலாமவர் இவர் தன்னுடன் வந்து சேர்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்ந்தார்! இரண்டாமவர் கடும் தாகமுற்றதால் வழியில் இருந்த ஒரு குடிசையில் நுழைந்து தண்ணீர் கேட்க முட்பட உயிருக்குப் போராடிய நிலையில் அங்கிருந்தவர்களின் பஞ்ச கோலமும் தனது தண்ணீர்த் தேவை நிறைவேறாத நிலையில் அவருக்குள் ஈர உணர்வினை வெளிப்படுத்த அவரது புனிதப் பயண நோக்கம் அக்கணமே மாறிவிட்டது!

உயிரிழக்கும் நிலையிலிருந்த அந்தக் குடும்பத்தின் உணவுத் தேவையை முதலில் தம்மிடமிருந்த உணவைக் கொண்டு ஈடு செய்த அவர், அடுத்த சில நாட்கள் அந்த வீட்டிலேயே தங்கி அவர்களின் தற்போதைய நிலையறிந்து, அவர்கள் தங்களின் பஞ்சத்தின் காரணமாக அடகு வைத்த நிலங்கள், விற்றுவிட்ட குதிரை மற்றும் வண்டி, கறவை மாடு, மற்றும் வீட்டுப் பாத்திரங்கள் முழுவதும் தாம் பயணத்திற்கெனப் கொண்டு சென்றிருந்த பணத்தில் செலவிட்டு மீட்டு அவர்களிடம் அளித்துவிட்டு ஒரு இரவில் அவர்கள் தனக்கு நன்றி எதுவும் பாராட்ட வாய்ப்பற்ற நிலையில் தம்முடைய கிராமத்திற்கே திரும்பி விடுகிறார்!

கிராமம் திரும்பிய அவர் தம்முடைய பணம் தொலைந்துவிட்டதாகத் தம் வீட்டினரிடம் சொல்ல அவர்களோ நீங்கள் பத்திரமாகத் திரும்பி வந்ததே போதும் என இயல்பாக எடுத்துக் கொண்டனர்! 

முன்னவர் நடை பயணம் மற்றும் கப்பல் பயணம் எனத் தொடர்ந்து எருசலேம் நகரை அடையும் வரை தம் நண்பரை மீண்டும் சந்திக்க இயலாதது, தம் வழக்கமான கிராமத்தில் தாம் விட்டு வந்த பணிகள் பற்றிய, தாம் கொண்டு வந்த பணம் தொலைந்து விடுமோ என்பன போன்ற மன நிலையில் எருசலேம் நகரில் இயேசுவின் தலைமைக் கோயிலில் தரிசனத்திற்குப் பெருங் கூட்டத்தில் நிற்கும்போது, கர்த்தருக்கு எதிரில் முதலாவதாகத் தம் நண்பர் தரிசித்துக் கொண்டிருப்பதைக் காண நேர்கிறது!

கூட்டத்தில் முண்டியடித்து அவரை நெருங்க முயற்சித்தும் அன்றும், அதன் பிறகு அங்கிருந்த மூன்று நாட்களும் இதோ போன்று தம் நண்பரின் முன் வரிசைக் காட்சியைக் கண்டும் அவரைக் காண இயலாத நிலையில் தம் கிராமம் திரும்புகிறார்!

நடைப் பயணமாகக் கிளம்பித் திரும்பும் இது போன்ற புனித யாத்திரைகள் அந்நாட்களில் மாதக்கணக்கில் நீள்வதால் வரும் வழியில் தம் நண்பர் குடிநீருக்கெனப் பஞ்சமுற்ற பிரதேசத்தில் இருந்த குடிசை வீட்டை அணுகி அவரைப் பற்றி விசாரிக்கலாம் எனச் செல்ல அவர்களும் பஞ்சம் நீங்கி வளமுற்ற நிலையில் அவரைப் பலவிதமாக உபசரித்துப் பின்னர் தமக்கு உதவிய அவரது நண்பரின் பெயர்கூடத் தெரியாத நிலையில் அவர்தம் கருணையைப் பலவாறாக எடுத்தியம்பி அவர்தாம் எங்களுக்கு உயிர் கொடுத்த கடவுளாவார் என்றெல்லாம் போற்றினர்!

அவர்களிடமிருந்து விடைபெற்றுத் தம் கிராமம் திரும்பிய அவர் தாம் கவலைப் பட்டவாறு தம் குடும்பம் இந்த நாட்களில் பலவிதமாகக் கீழிறங்கிய நிலையில் இருப்பதைக் கண்ணுற்றார்! 

அடுத்து தம் நண்பரைக் காண அவரது இல்லம் சென்று அவரது குடும்பம் எப்பொழுதும் போல வழக்கமான நிலையில் இருப்பதையும் தம் நண்பரோ தம்முடைய பயணத்தில் எதுவும் நடைபெறாதது போலத் தம்மிடம் நடந்து கொண்டதுடன் தமது வழக்கமான தேனீ வளர்ப்புத் தொழிலில் மிகுந்த உற்சாகத்துடன் அக்கம் பக்கத்தவர்களுக்கு உதவும் பாங்குடனும் திகழ்வதைக் கண்டார்!

இந்தக் கதையிலிருந்து டால்ஸ்டாய் அவர்கள் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால், நெஞ்சில் இரக்கமுற்றவர்கள் இறை சக்திகளின் இருப்பிடத்திற்குத் தொலைவில் இருந்தாலும் அவர்களின் உண்மையான இரக்க குணமே அவர்களை இறை சக்கிகளுக்கு மிக அண்மையில் இருக்குமாறு வைத்துக் கொள்ளும் என்பதும், அத்தகையவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கு வழக்கமாக நடைபெறும் எந்தச் செயலும் தவறாமல் ஒழுங்குடன் முறையாக நடைபெறும் என்பதுதாம்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!