நாணல் போல வளைவதுவும் சட்டமாகலாம்!


பதருன்னிசா அந்த செய்தியை கேட்டவுடன் அவளெதிரே உலகமே சுழலுவது போல தோன்ற சட்டென மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்த அவளுக்குள் இயல்பாகவே அமைந்திருந்த மன உறுதி அவளது பதட்டத்தை விலக்க தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனைக்கு விரைந்தாள்! 

பலத்த அடிபட்ட நிலையில் ஏராள செலவு பிடிக்கும் என்ற என்ற செய்தியுடன் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தனது கணவரை காண்கையில் மீண்டும் அவளது மன உறுதி குலைந்தாலும் சுதாரித்துக்கொண்டு எப்படியேனும் தனது கணவரது உயிரை காத்து அவரை பழைய நிலையில் நடமாடச் செய்வதென உறுதி கொண்டாள்!

உறவுகள் உதவவே என்ற தர்மம் தொலைந்த பூமியில் பிறந்து தொலைந்த அவளால் தனது கணவரை பழைய நிலைக்கு மீட்க இந்த பூமியில் தனது நடுத்தர குடும்பம் தனது கணவரது விபத்திற்கு முன்னர் வாங்கியிருந்த வீட்டையும் நகைகளையும் விற்றே ஏராள மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடிந்தது!

கணவரின் வருமானமும் இழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவும் தனது கணவரை ஓரளவிற்கு நடமாட செய்யவும் அவள் பட்ட பாடுகள் ஏடுகளில் எழுத வேண்டுமெனில் ஏராள பக்கங்கள் தேவைப்படும்!

அவளது கணவருக்கு விபத்து ஏற்படுத்திய போக்குவரத்து கழகத்தின் மீது நட்ட ஈடு வேண்டி வழக்கு தொடர திறமையான வழக்கறிஞர் அமைய, கீழ் வாய்மை மன்றமும் வழக்கை தீர ஆராய்ந்து உரிய நட்ட ஈடு வழங்க வேண்டுமென விபத்து ஏற்படுத்திய பேருந்துக்குரிய அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது!

போக்குவரத்து கழகமோ தனது வழக்கறிஞர் மூலம் சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி உயர் வாய்மை மன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்துச்சென்று அவளது கணவருக்கு சேரவேண்டிய நட்ட ஈட்டினை தர முன் வராமல் தப்பிக்க முயன்றது! 

வழக்கு எந்தவித முடிவிற்கும் வராமலே கிட்டத்தட்ட ஏழாண்டுகள் கடந்தன! தனது குழந்தைகளை படிக்க வைக்கவே சிரமப்பட்ட அவளால் வயதுக்கு வந்த தனது மூத்த மகளை திருமணச் சந்தையில் நல்ல விலை கொடுத்து அனுப்பவே ஏராளமான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது!

நல்ல வேளையாக அவளுக்கு வாய்த்த மூத்த மருமகன் நல்லவனாக அமையவே தனது மகளுக்கு போட வேண்டிய நகைகள் பற்றிய எந்தவிதமான தொல்லைகளும் இல்லாததால் தனது அடுத்த மகளுக்குத் திருமணம் செய்விக்க எதிர் வரும் நாட்களுடன் போராடியவாறு தனது வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தாள்!

இந்த நிலையில் அவளது கணவரின் வழக்கு நடைபெறும் உயர் உயர்வாய்மை மன்றத்தில் கடந்த ஏழாண்டுகளாக அடுத்தடுத்து நடுவர்கள் மாறியவாறு விசாரித்து வந்த நிலையில் புதிதாக பதவியேற்று நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிக்கத் துவங்கினார் நடுவர் தமிழ்ச்செல்வன்!

வழக்கமான நடுவர்கள் போலல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் தீர்ப்புகள் வழங்குவதில் மக்களிடையே நல்ல பெயரெடுத்தவர் அவர்! தனது பார்வையில் பதருன்னிசாவின் கணவரது வழக்கு வந்த போது அவர் வழக்கம் போலவே தனது பாணியில் வழக்கினை முடிவிற்கு கொண்டு வர எண்ணினார்!

முதற்கட்டமாக வழக்கு தொடுத்த பதருன்னிசாவின் குடும்பத்தை வாய்மை மன்ற வளாகத்திற்கு வரவழைத்து அவர்களின் தற்போதைய வாழ்வியல் சூழல்களை விசாரித்தறிந்தார்! அதன் பிறகு தனது தீர்ப்பினை தாமதமின்றி விரைவில் அறிவித்தார்.

வழக்கின் தீர்ப்பு நாள் என்பதால் அன்றைய தினம் தீர்ப்பைக் கேட்க பதருன்னிசா தனது குடும்பத்துடன் வாய்மை மன்றப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தாள்!

நடுவர் தமிழழகன் தனது ஆசனத்தில் வந்தமர்ந்ததும் வழக்கமான மன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் தனது இறுதித் தீர்ப்பினை பின்வருமாறு வழங்கினார்!

இந்த மன்றம் வாதி பிரதிவாதி இருவரது வாதங்களையும் கவனமுடன் ஆராய்ந்தது! சட்டம் என்பது பாதகமின்றி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்பதற்கெனவே இயற்றப்பட்டது! 

இந்த வழக்கில் வாதியின் வழக்கின்படி அவருக்குச் சேரவேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்க இயலாது என பிரதிவாதியான போக்குவரத்து கழகம் மறுக்கின்றது! இந்த நிலையில் பல்வேறு விபத்து சம்பவங்களில் நம் அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் இங்கு நாம் கவனத்தில்  கொள்ளவேண்டும்!

உதாரணத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் கருவூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறினை மனதில் நினைத்தவாறு அதி வேகமாக பேருந்தை ஓட்டிச்சென்றார் ஒரு ஓட்டுனர்! 

அந்த பேருந்து அதிகாலையில் ஒரு இரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது! அதே சமயம் தனது கடமையில் தவறிய ஒரு பணியாளர் தமது தாமதமான செயலால் இரயில் வரும் சமயத்தில் கிராசிங்கின் கேட்டை மூடத்துவங்க அதையறியாமல் வேகமாக தனது வாகனத்தை செலுத்திய ஓட்டுனரால் அவரும் அவர் தவிர ஏராளமானவர்களும் விபத்தில் சிக்கி தம் இன்னுயிர் ஈந்தனர்!

அவர்கள் தவிர பேருந்தில் பயணித்த ஏராளம் பயணிகள் கடுமையாக அடிபட்டு உடல் பாதிப்புகளை அடைந்தனர்! இந்த சம்பவத்தில் நம் தமிழக அரசு விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிராமல் உடனடியாக இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரண தொகையை அறிவித்தது!

சட்டப்படி பார்த்தால் இந்த விபத்தில் இன்னுயிர் ஈந்தவர்களின் குடும்பத்தவர்களின் முக்கிய எதிரிகளாக அதிவேகமாகப் பேருந்தை ஓட்டிய ஓட்டுனரும் உரிய நேரத்தில் தனது கடமையைச் செய்யாத கேட் கீப்பரும்தான்! 

எனவே விபத்தில் இறந்தவர்களுக்கும் அடிபட்டவர்களுக்கும் அவர்கள்தான் உரிய இழப்பீட்டினை தர வேண்டும் என, அரசு சட்டத்திலுள்ள குறைகளை பயன்படுத்தி தப்பித்துக்கொண்டிருக்கலாம்! அந்த விபத்தில் தவறு செய்த இருவரில் ஓட்டுனர் விபத்தில் பலியாகிவிட்டார்! மற்றவர் வழக்கைச் சந்தித்து தனது வேலையை இழந்திருக்கக்கூடும்!

சட்டப்படி இவர்களின் தவறுகளுக்கு உரிய நிவாரண தொகையை வழங்க முடிகின்ற அளவிற்கு இயலாத சாதாரண நடுத்தர குடும்பத்தவர்கள் இவர்கள் என்பதுவும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்! எனவே விபத்திற்குக் காரணமானவற்றை ஆராயாமல் மனிதாபிமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டதால்தான் நம் தமிழக அரசு அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை தானாக முன்வந்து வழங்கியது! 

வகுத்தலும் காத்தலும் வல்லதரசு என்ற வள்ளுவரின் உயர் குறளுக்கு ஏற்ப அமைந்தவைதாம் மனு வாய்மைச் சோழன், நெடுஞ்செழியன், கரிகாலன் போன்ற வாய்மையாளர்கள் நடுவர்களாக ஆட்சி புரிந்த வாய்மை மன்றங்கள் பல படைத்த பண்டையத் தமிழக அரசியல் வரலாறு!

இந்த வழக்கும் கன்றின் மேல் தேர் ஏற்றிய குற்றத்திற்காக வாய்மையை நிலை நாட்டிய வழக்கின்  கோணத்தில்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்! பிரதிவாதி தரப்பு குறிப்பிட்டது போல தனது ஓட்;டுனர் மீது தவறில்லை, வாதிதான் குறுக்கே வந்து விழுந்தார், சரியான மருத்துவ சான்றிதழ்கள் இல்லை, வாதி வந்த வாகனத்திற்கு ஆயுள்காப்பீடு இல்லை போன்ற காரணங்களை இந்த வழக்கில் பிரதிவாதிக்குச் சாதகமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை!

விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வியல் சூழல்கள் முதலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்! வாதியின் துணைவியார் தனது கணவர் விபத்தினால் பாதிக்கப்பட்டவுடன் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டார் என்பதையும் தனது குழந்தைகளை படிக்க வைக்கவும் குடும்ப பாரத்தை சுமக்கவும்  தனியொருவராக எந்தளவு பாடுபட்டுள்ளார் என்பதையும் மனிதாபிமானத்துடன் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்!

ஒரு பேருந்து செயல்படுவதற்கு முன்பு அதற்கு காப்பீட்டு கட்டணம் கட்டணம் கட்டப்பட்டுள்ளது! அந்த பேருந்து விபத்தால் சேதப்பட்டால் மட்டுமே அதற்குரிய காப்பீடு பெற வேண்டுமென்ற நிபந்தனையில்லை! அந்த பேருந்தால் ஏற்படும் விபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கும் உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படுவதற்கு உரியதாகவும் அந்த கட்டணம் கருதப்பட வேண்டும்!

மேலும் போக்குவரத்து கழகமும் காப்பீட்டு நிறுவனமும் அரசின் கட்டுப்பாட்டில் வருபவைதான்! மக்களின் நலனுக்காக செயல்படும் இவைகள் தங்களின் பொறுப்பற்ற செயலால் தங்களின் கடமையிலிருந்து தவறுவதை அனுமதிக்ககூடாது!

எனவே வாதிக்கு அந்த பேருந்து ஏற்படுத்திய விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அந்த குடும்பம் அனுபவித்த இன்னல்களையும் கருத்தில் கொண்டு கீழ் மன்றம் அறிவித்த தொகையை உரிய வட்டியுடனும் தகுந்த வழக்கு செலவுடனும்; வாகனத்தை காப்பீடு செய்த நிறுவனத்திடமிருந்து ஒரு மாத காலத்தில் வசூலித்து இந்த மன்றத்தில் செழுத்த வேண்டுமென பிரதிவாதிக்கு இந்த மன்றம் உத்தரவிடுகிறது! 

இந்த விபத்து குறித்த தகவல்களை முழுமையாக ஏற்று மேலும் காலம் தாழ்த்தாமல் இந்த வாய்மை மன்றத் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனமும் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டுமென இந்த மன்றம் உத்தரவிடுகிறது!

தீர்ப்பை வாசித்து முடித்துவிட்டு கம்பீரமாக எழுந்து சென்ற நடுவருக்கும், அவரைத் தம் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரோடு கரம் குவித்து வணங்கிய பதருன்னிசாவின் மன உறுதிக்கும், தலை வணங்கியவாறு பார்வையாளர்கள் வெளியேறிய காட்சியைக் கண்டு, வாய்மை தேவதை கண் கட்டப்பட்ட நிலையிலும் ஆனந்தப் புன்னகை புரிந்தாள்!

நாணல் போல வளைவதுவும் சட்டமாகலாம்! இது நாளைய தலைமுறைக்கு தேவையாகலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!