நாய் வால் போல வாழ்வோம்!

மனிதர்களில் தங்களின் பிடிவாத குணத்தை விடாது வாழ்பவர்கள், தீய பழக்க வழக்கங்களை பழகி அவற்றிலிருந்து விலக மறுப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்பவர்கள், போன்ற  விரும்பத்தகாத பல்வேறு குணங்களைப் பொதுவாக நாய் வாலுக்கு ஒப்பிட்டு நாய் வாலை நிமிர்த்த முடியுமா? என்ற வினாவுடன் ஒரு பழமொழியே நம் தாய்த் தமிழ்மொழியில் உள்ளது! 

நாய் குட்டியாக இருக்கும்போது அதன் வால் எப்படி இருக்குமென்பதை ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது! குட்டியாக இருக்கும் பொழுது சற்றுத் தளர்வாக இருக்கும்! நாய் வளர வளர அதனுடைய வால்  சற்று மேல் நோக்கி நிமிரத் துவங்கி இறுதியாக பின்னோக்கி நிமிரவே முடியாமல் வளைந்துவிடும்!

அதன் பிறகு அந்த வாலை நாம் எத்துணை முறை பிடித்து நேராக்க முயன்றாலும் அது நிமிரவே நிமிராமல் பிடிவாதமாகத் தன் பழைய வளைந்த நிலைக்கே திரும்பிவிடும்!

இதைப் பார்த்துத்தான் மேற்கண்ட குணம் உடையவர்களை இந்தப் பழமொழியில் நாய் வாலுடன் ஒப்பிட்டு உவமை சொல்வர்!

மாறாத குணம் உடையவர்கள் பிறவியிலிருந்தே தங்களிடம் இது போன்ற குணங்களைக் கொண்டவர்களாகப் பிறப்பதில்லை! இவர்தம் பெற்றோர்தம் குண நலன்கள், வளர்க்கும் விதம், வாழும் சூழல், வளரும் விதம், பழகும் உறவு மற்றும் நட்பு அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற குண நலன்களே பின்னர் இவர்களின் தனிப்பட்ட குண நலன்களாக மாறுகின்றன!

நற்குடிப் பிறப்பு, நல்ல உறவுகள், நல்ல நட்பினைத் தேர்ந்தெடுத்தல், நல்ல ஆசிரியரின் அறிவுரைப்படி நடத்தல், உள்ளத்தில் நேர்மையாக வாழ்வதென உறுதி கொள்ளல் போன்றவைதாம் ஒரு மனிதரை நற்குணங்கள் படைத்தவராக மாற்றுகின்றன!

என் அனுபவத்தில் இது போன்ற இருவகையான மனிதர்களையும் சந்தித்து வந்துள்ளேன்! திருத்தவே முடியாத குணமுடையவர்களையும், தவறு செய்தால் தம் தவறை உணர்ந்து சரி செய்து கொண்டு திருந்தி வாழ முயற்சிக்கும் மனிதர்களையும் நாம் புரிந்து கொண்டுதான் நம்முடைய வாழ்நாளைக் கழித்தாக வேண்டும்!

எங்கள் குடும்பம் நன்றாக வசதியாக வாழ்ந்த காலத்தில் எங்களை மதிப்புடன் நடத்திய உறவுகளில் சிலர் எங்களின் வாழ்க்கை வசதி குறைவடைந்த ஒரு கட்டத்தில் எங்களைச் சரிவர மதிப்பதில்லை என்ற வருத்தம் எங்கள் குடும்பத்தவருக்கு உண்டு!

குறிப்பாக எனது மனைவிக்குத் தன்னை முன்பெல்லாம் உரிமையாக மரியாதையாக அமைத்தவர்கள் தற்பொழுது ஒருமையில் பெயர் சொல்லி அழைப்பதாக என்னிடம் வருத்தப்படுவார்! நான் அவரை பின் வருமாறுதான் எடுத்தியம்பிச் சமாதானப்படுத்துவேன்!

மனிதர்களில் குணம் மாறாதவர்களைத் திருத்த முடியாதவர்கள் என்று கருதியே அவர்கள் குணத்தினை நாய் வாலைத் திருத்த முடியுமா எனப் பழமொழி கூறி அவர்களைத் தள்ளி வைப்பர்! இந்தப் பழமொழிக்கேற்ப வாழ முயற்சிப்பவர்களைக் கண்டு நாம் ஏன் வருந்த வேண்டும்? அவர்களை விட்டு விலக முயற்சிக்க வேண்டும்?

மாறாக நாமும் அவர்களைப் போல அதே வித நாய்வால் குணத்துடன்தான் வாழ்ந்தாக வேண்டும்! இதில் அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால் அவர்களின் குணம் நிமிர்த்த முடியாத வால் குணம்! நம்முடையதோ இதோ பின்வருமாறு இப்படித்தான் இருந்தாக வேண்டும்!

ஒரு தெரு நாய்கூட ஒரு நபர் தனக்கு ஒரு ரொட்டித் துண்டை உணவாகப் போட்டால் நன்றியுடன் வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிடும்! தனக்கு உணவிட்ட அந்த ஒரு நன்றிக்காகவே அந்த நாய் அதே நபர் தன்னை அடிக்க முற்பட்டாலும் நன்றியுடன் வாலாட்டிக்கொண்டுதான் அவரை அண்டி நிற்கும்!

நாமும் இந்தத் தெரு நாயைப் போன்றவர்கள்தாம்! தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு உறவுக்கூட்டத்தில் வந்து பிறப்பெடுத்துவிட்டோம்! இதே உறவினர்கள்தாம் நாம் நன்றாக வாழ்ந்த காலகட்டத்தில் நம் மீது அன்பு செழுத்திவிட்டு, இப்பொழுது நம்மைத் தாழ்வாக மதிக்கின்றனர்! 

நாம் அவர்களது மாறிவிட்ட நிமிர்த்த முடியாத குணத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, முன்பு நம் மீது அவர்கள் காட்டிய பழைய அன்பினை நினைந்து நன்றிக்கு இலக்கணமாகத் திகழும் நாய்க்கு உரிய அதே அன்பு காட்டுவதற்கு அடையாளமான வாலாட்டும் குணத்துடன் வாழ்ந்துவிட்டுப்போவோம்! 

அவர்களின் குணம் நிமிர்த்த முடியாத குணம் என்றால், நம்முடைய குணம் நன்றியுடன் வாலாட்டும் குணமாகவே இருந்து விட்டுப்போகட்டுமே!
இதுதான் நான் எனது துணைவியாருக்கு அவ்வப்போது கூறும் சமாதானம்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!