ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

இன்று ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து ஆசிரியரை வைத்த பின்னரே தெய்வத்தை அந்நாளைய தமிழர்கள் மதித்தனர்!

என்னை மனிதனாக்கிய ஆசிரியப் பெருமக்களை இந்த நேரத்தில் நான் நினை கூறாவிட்டால் நன்றி மறந்தவனாவேன்!

எனக்குத் தமிழ் கற்றுத்தந்து பகுத்தறிவு தந்த தமிழய்யா உயர்திரு ஆ.பெரியசாமி அவர்களை மானசீகமாக வணங்கி இந்த நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் தமிழாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இதயம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!

எனக்கு பிறவியிலேயே இடது கைப் பழக்கம் உண்டு! நான் ஒன்றாம் வகுப்பில் நுழைந்து எனது பாடப்பலகையில் எழுதத் துவங்கியபோது எனது கரங்களில் பலத்த அடி விழுந்தது! அப்பொழுது எனக்கு ஆசிரியையாக இருந்த திருமதி புஸ்பா அவர்கள்தான் என்னை அடித்தவர்!

அந்த நாட்களில் விபரம் தெரியாமல் இருந்துவிட்ட ஆசிரியை அவர்! அவரது எச்சரிக்கையால் எனது எழுதும் பழக்கம் வலது கையில் துவங்கியது! 

எனது கையெழுத்தை மட்டும் அன்று அவர் மாற்றவில்லை! தலையெழுத்தையே மாற்றிவிட்டார் எனத்தான் கருத வேண்டியுள்ளது!

ஆயிரத்தில் ஒருவர்தாம் இடது கைப் பழக்கத்துடன் பிறப்பர்! மாபாரத அருச்சுனன் ஒரு இடது கைப்பழக்க வீரன்தான்! 

பொதுவாக இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்களின் வலது கையை 
இயக்கும் மூளையின் அமைப்பின் வித்தியாசமான சமிக்கை இது!

இதை அறியாமல் அந்நாளில் என் முதல் ஆசிரியை செய்த தவறால் எனது வலது கைப் பழக்க எழுத்துக்கள் சற்று கிறுக்கலாகத்தான் வெளிப்படும்!

மேலும் எனக்குள் ஓவியம் தீட்டுவதில் அதீத ஆர்வம் உண்டு! இந்த ஆர்வமும் வலது கைப்பழக்கத்தால் சரிவர நிறைவேறாமலே போனது!

என்னுடைய இந்த அனுபவத்தை மனதில் கொண்டே இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் இடது கையில் எழுதுவது கண்டால் நான் உற்சாகமாகி அவர்களை அவ்வாறே எழுதுமாறு ஊக்குவிப்பேன்!

அடுத்து எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர்! அவர் பெயர் இங்கு வேண்டாமே! ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு நான் மாறியபோது அவரது வகுப்பில் என்னைத் தள்ளிவிட்டனர்! அவரோ கடுமையாக அடிப்பவர் என்ற அவப்பெயர் பள்ளி முழுக்க உண்டு!

ஆறாம் வகுப்பில் சராசரியாக எழுபது மதிப்பெண் பெற்ற நான் ஏழாம் வகுப்பில் படித்த முழு வருடமும் எனது அனைத்து தேர்வுகளிலும் சிகப்புக் கோடுதான்!
எனவே நான் சந்திக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் மாணவச் செல்வங்களை அடித்துப் பாடம் சொல்லித் தராதீர்கள் என்றுதான் வேண்டுவேன்!

எனக்கு எட்டாம் வகுப்பு நடத்திய ஆசிரியை சற்று கண்டிப்பானவர்! மேலும் அவர் நகரத்திலிருந்து வந்ததால் சற்று மிகைப்படுத்திய அலங்காரத்துடன் வருவார்! ஒரு முறை நான் பாடத்தில் செய்த ஏதோ ஒரு தவறுக்காக என்னை அவர் கண்டித்தார்!

இதனை என் தாயாரிடம் நான் எடுத்துக் கூறும்போது அவரது நாகரீக கோலத்தை சற்று ஏளனமாகச் சொல்லி இதற்கு எனது தாயாரிடமிருந்து எனக்கு ஆதரவான குரல் கேட்குமென்ற நம்பிக்கையுடன் விளக்கினேன்! 

நடந்த கதையோ வேறு! எனது தாயாருக்கு உடனடியாக என்மேல் கோபம் மேலிட்டது! கிட்டத்தட்ட என்னை அடிக்காத குறைதான்! நீ எப்படி உனது ஆசிரியையை மரியாதைக் குறைவாகப் பேசலாம் என்று திட்டி இனி இப்படிப் பேசக்கூடாது என எனக்கு அறிவுரை வழங்கினார்!

அந்தக் கணம் முதல் நான் ஆசிரியப் பெருமக்களை எந்த நேரத்திலும் அவர்கள் என்னை நல்வழிப்படுத்துவதற்காக கடுமை காட்டியபோதெல்லாம் அவர்கள் செயல் நியாயமென உணர்ந்து எனது தவறுகளைத் தவிர்த்துக் கொள்வேன்!

பத்தாம் வகுப்பு மாணவர்களை முதல் வருடமும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை இரண்டாம் வருடமும் வழி நடத்தும் வழக்கத்திற்கு மாறாக தேசிய மாணவர் படையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே வற்புறுத்தி என்னை இணையச் செய்து, எனக்கு அற்புதமான பயிற்சி தந்து எனது உடல்நலம் சிறக்க உதவி செய்த எனது தந்தையின் மிகச்சிறந்த நண்பராக விளங்கி ஓய்வு பெற்ற நிலையில் சமீபத்தில் அகால மரணமுற்ற ஐயா முத்துசாமி அவர்களை என் வாழ்நாளெல்லாம் மறக்க இயலாதுதான்!

என் கையெழுத்தை மாற்றிய திருமதி புஸ்பா அவர்கள் எனது தலையெழுத்தையும் மாற்றி அமைத்து இதோ ஒரு படைப்பாளியாக என்னை  மாற்றியுள்ளார் என்பதால் அவரும் என் வாழ் நாளெல்லாம் மறக்க இயலாத மிகச் சிறந்த ஆசிரியைதாம்! 

ஒன்றாம் வகுப்பு துவங்கி புகுமுக வகுப்பு வரை எனக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரியர், ஆசிரியை பெருமக்கள் அனைவருக்கும் எனது வளர்ச்சியில் மலையளவு பங்குண்டு!

எனது மகளைத் தன் வளர்ப்பு மகளாகக் கருதி எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உயரிய பயிற்சி கொடுத்து இன்றும் எங்கள் குடும்பத்துடன் நல் உறவு பாராட்டும் மதிப்பிற்குரிய தமிழாசிரியர் திரு கவுஸ் அவர்களும் எனது மரியாதைக்குரிய நல்லாசிரியர்தாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!