பேரறிஞர் அண்ணா!

அண்ணா! இந்த மூன்றெழுத்துச் சொல் பெருந்தலைவர் காமசராசரின் பொற்கால ஆட்சிச் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்றுக்குச் சொந்தமானது!

காமராசர் ஆட்சிக்காலத்தில் நிலவிய கடும் பஞ்சத்தின் காரணமாகத் தமிழக ஏழை எளிய மக்கள் குறிப்பாகப் படிப்பறிவற்ற இளைஞர்கள் உட்பட பாமர மக்கள் தன்னிலை மறந்திருந்த நேரம் அது! 

ஈவேரா என்ற மூன்றெழுத்து வெண்தாடி வேந்தரின் தம்பியாகத் தமிழக அரசியலில் களமிறங்கிய அறிஞர் அண்ணா அவர்களின் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தால் அகமகிழ்ந்த அன்றைய தமிழக மக்கள் 
வெல்லவே முடியாத வாய்மைத் தலைவரான காமராசரை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றி பேரறிஞர் என அந்நாளில் போற்றப்பட்ட அண்ணா அவர்களைத் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர்!

தன்னுடைய பேரைச் சொல்லிப் பிற்காலத்தில் ஆட்சி செழுத்தப்போகும் தம் தம்பிகள் இன்றைக்குத் தமிழகத்தை வெகுவாகச் செல்லரித்துக் கொண்டிருக்கும் இலஞ்சத்தையும் ஊழலையும் வளர்த்துச் சீரழிப்பதை உடல் ரீதியாக அறிந்தாரோ என்னவோ 
அந்தத் தலைவர் தாம் பதவி ஏற்ற ஈராண்டுக்குள்ளாகவே தம் உடலில் புற்று நோய் தாக்கி இயற்கை எய்தினார்!

இன்று உலகளவில் புற்று நோய்க்குப் பலியாகும் பெரும்பாலானவர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற வகையில் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் புகையிலையில் தயாராகும் மூக்குப் பொடி போடும் பழக்கமிருந்ததே அவரது உடலில் புற்று நோய் தாக்குவதற்கு மற்றொரு காரணியாயிற்று!

ஈராண்டுக்குள் அண்ணா அவர்களைக் காலன் அழைத்துக் கொண்டாலும், தமிழ்நாடு என்ற பெயரினை இந்த மண் பெறுவதற்குச் சட்டமியற்றிப் பெயர் மாற்றம் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என இயம்பி மாற்றுக் கட்சியினரையும் மதிக்க வேண்டும் என்ற பண்பாளர் வகுத்த 
கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற கோட்பாடுகள் 
அண்ணாவால் வளர்ந்த திராவிட இயக்கங்களால் காற்றில் பறக்க விடப்பட்டதுதாம் வேதனையிலும் வேதனை!

அண்ணா அவர்கள் குறிப்பிட்டது போலப் பதவி என்பது ஒருவர் தம் மீது அணியும் துண்டு போன்றது என்பதை இன்றைய திராவிட ஆட்சியாளர்கள் 

அது கர்ணனின் கவச குண்டலம் போலத் தம்முடன் பிறக்கும் போதே இருப்பதாகப் பேராசைப்பட்டு நிரந்தரமாக அணிந்திருப்பதையும், 
அதை விடக் கேவலமாக ஏதோ தங்கள் குடும்பம்தான் ஆட்சி சுக உல்லாசங்களை அனுபவிக்கப் பிறந்தவர்கள் என வாரிசுகளுக்கும் பதவி கொடுத்து மக்கள் வரிப் பணத்தைத் தின்று தீர்ப்பதை 
எதையும் தாங்கும் இதயம் படைத்த அண்ணா அவர்களின் ஆருயிர் இன்றைக்கிருந்தால் தாங்குமா என்பதை எம்மால் அறிய இயலவில்லை!

அண்ணா என்ற ஆலம் விதை பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் இல்லத்தில் எளிமையாகத் தமிழக அரசியல் நிலத்தில் விதைக்கப்படுவதற்கு முன் அவர் விடுதலை இதழ் ஆசிரியராகப் பணியாற்றிய அந்த எளிய இல்லத்தைப் பார்வையிடும்போது எம் கண்கள் குளமாகின்றன!

அந்த ஆலம் விதை அடையாறு ஆல மரமாகப் பல்வேறு இயக்கங்களாகப் பிரிந்து விழுதுகள் விட்ட நிலையில் அடிமரம் காணாமல் போனது போன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் எளிமையும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் கண்ட கனவுகளும் இன்றுவரை கனவாகவே காணாமல் போனதுதாம் வேதனையிலும் வேதனை!

நடுத்தர மக்கள் வாங்கும் ஒரு கிலோ பொன்னி அரிசி இன்று 55 ரூபாய்க்கு விற்கும் நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற மலிவு விலை விளம்பரத்தில் தங்களின் ஆட்சி சுகத்தைத் தக்க வைத்திருக்கும் நிலையினைப் பாராட்டுபவர்கள், ஒன்றை மட்டும் மறந்தே விட்டனர்!

படியரிசி ஒரு ரூபாய்க்கு அண்ணா அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை விட இது ஒன்றும் மேலானதல்ல! உண்மையைச் சொல்லப்போனால் ஏராளமான இலவசத் திட்டங்கள் என்ற போதையில் தமிழக மக்களை அமிழ்த்து வைத்து ஆட்சி சுகம் காணும் ஆட்சியாளர்கள் மக்களை வாக்கு வங்கிக்கெனவே பிச்சைக்காரர்கள் நிலையில்தான் வைத்துள்ளனர் என்பதுதாம் மறுக்க இயலாத உண்மை!

தமிழர்களின் திருமண அமைப்பில் தங்களின் பழக்க வழக்கங்களை நுழைத்துவிட்ட மதவாத அமைப்பின் திருமண முறைப்படி ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் தனது உழைப்பில் உருவான பணத்தில் அரைப் பவுன் தாலியை இதுவரை அணிவித்து வந்துள்ளான்! 

அவனையும் முழுச்சோம்பேறியாக்கி அவன் தன் உழைப்பில் அணிவிக்க வேண்டிய தாலியினை இன்றைக்குப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயர் தாங்கிய இயக்கம் டெண்டர் விட்டுக் கொள்முதல் செய்து இலவசச் சீர்வரிசைகளுடன் திருமணமும் முடித்து வைப்பதைப் பகுத்தறிவாளரான அண்ணா அவர்கள் இன்றிருந்தால் ஏற்றுக் கொள்வாரா என்பதை அவரது தம்பிகளின் மனச்சாட்சிக்கே விட்டுவிடலாம்!

தந்தை பெரியார் அவர்கள் தன் பகுத்தறிவு இயக்கக் கொடியென முழுக் கருப்பு நிறத்தில் ஒரு புள்ளியாகச் சிகப்பு நிறம் அமைத்தார்.

அது மதவாத சாதியவாத இருட்டில் வெளிச்சம் பாச்சும் கதிரவனைக் குறிக்கும்.

அண்ணா அவர்கள் வடிவமைத்த கொடியோ வடக்கில் வாழ்ந்த இமய மலை வேந்தன் முருகனின் சிகப்பு நிறம் மற்றும் தெற்கில் வாழ்ந்த மாயோன் எனும் கண்ணனின் கருப்பு நிறம் இரண்டும் இணைந்த

இமயம் முதல் குமரி வரை உள்ள மொத்த நிலப்பரப்பும் தமிழருக்கே சொந்தமென்றும்

அறைகூவல் விடுக்கும் வண்ணம் அமைத்திருந்தார்.

அதே சமயம் தன்னால் ஆட்சி சுகம் அனுபவிக்கும் திமுகவினர் ஊழலில் திளைத்து அஸ்தமனமாகி விடுவர் என்று கணித்தே மலையிடைச் சூரியனாகக் கடலிடைப் புகுந்து காணாமல் போகும் நிலை உருவாகியே தீரும் என்று கணித்தே தன் சின்னத்தை வடிவமைத்தார்.

இதோ அஸ்தமனச் சூரியனின் அந்திமக் காலம் துவங்கி விட்டது 

தமிழர் நாட்டில்

பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்தப் பிறந்தநாள் துவங்கியாவது மக்களிடம் உண்மையான அரசியல் குறித்த விழிப்புணர்வும், 
மதவாதம் குறித்த பகுத்தறிவும், வள்ளுவமும், வள்ளலாரும், மகாகவி பாரதியும், பாவேந்தரும் கனவு கண்ட உன்னதத் தமிழகம் உருவாக ஏற்பட வேண்டுமென்பதே எம்முடைய ஏக்கமுள்ள தமிழ்க்கனவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!