அறம் சார்ந்த உணர்வுக்குக் கிடைத்த உண்மையான உயரிய அனுபவம்!

வெளியில் சொல்ல முடியாத பல்வேறு நெருக்கடிகளாலும் எனது வணிகத்திற்கு எதிராகப் பரவிய வதந்திகளாலும், ஒரு கட்டத்தில் வணிகத்திற்கெனப் பொருட்களைக் கடனாகக் கொடுத்து வணிகம் செய்து வந்த மொத்த வணிகர்கள் எனக்குக் கடன் கொடுப்பதை ஒரே நேரத்தில் நிறுத்திவிட்டனர்! 

தரமான பொருட்களை மலிவாக என்னிடம் கடன் பெற்றுப் பயனடைந்த எனது வாடிக்கையாளர்களோ எனது நிலை அறியாமல் என்னிடம் தங்கள் கடனைத் திரும்பக் கொடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மனச்சாட்சியின்றி நடந்து கொண்டனர்!

இந்த நிலையில் வணிகத்திற்குத் தேவைப்படும் பணத்தினைப் புரட்ட வேண்டிய ஒரு கட்டத்தில் விழுந்த வணிகத்தை எப்படியேனும் தூக்கி நிறுத்திக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் என்னுடைய உள்ளுணர்வு நீ இப்பொழுது இருக்கும் நிலையில் மேலும் மேலும் பொய் சொல்லிக் கடன் வாங்காதே என எச்சரிப்பதை உணர்ந்த நிலையிலும் வேறு வழியின்றி என்னை நம்பிக் கேட்கும்போதெல்லாம் கடன் கொடுத்த நண்பர்களிடம் வெகு விரைவில் திருப்பித் தந்துவிடுவேன் என்று உறுதியளித்துக் கடன் வாங்கி என்னுடைய வணிகத்தைக் காப்பாற்ற முயன்றேன்!

இது மேலும் கடனாளியாகத்தான் வழி செய்ததே தவிர வணிகத்தைக் காப்பாற்றுவதற்குத் துணை செய்யவே இல்லை! தினசரி நடக்கும் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தை விட வாங்கிய கடன் தொகைக்கு அதிகளவு வட்டியாக வெளியேறத் துவங்கவே சரக்கு இருப்பு நிலை வெகுவாகக் குறைந்துவிட்ட ஒரு கால கட்டத்தில் வாங்கிய அசலைத் திருப்பித் தருமாறு நெருக்கிய நண்பர்களின் ஒட்டு மொத்த நெருக்கடி தொடர்ந்த நிலையில் அசலையும் திருப்பித்தர  முடியவில்லை!

விற்பதற்கு வழக்கமாக இருப்பில் இருக்க வேண்டிய பொருட்கள் வெகுவேகமாக வட்டிக்கே சென்று குறைந்துவிட்டதால் மெதுவாக விற்கக்கூடிய பொருட்கள் மட்டுமே கடையில் தேங்கி நின்றது! அவற்றையும் வந்த விலைக்கு இலாபமின்றி விற்று கடனுக்குரிய வட்டியாகக் கட்டக் கட்ட ஒரு கட்டத்தில் வருகின்ற வாடிக்கையார்கள் கேட்கும் பொருட்கள் விற்பதற்கு இன்றி தினசரி வணிகம் ஒரேயடியாகக் குறைந்து விட்ட நிலை உருவானது!

சமாளிக்கவே இயலாத நிலையில் வேறு வழியின்றி வணிகத்தை முடித்துக்கொண்டு வழக்கு மன்றத்தில் அறிவிப்புக் கொடுத்துவிட்டு நண்பர்களின் அறிவுரைப்படி வேறு ஊருக்கு மாறுதலானேன்!

கடன் கொடுத்த பெரும்பாலான  நண்பர்கள் என் நிலை அறிந்து வழக்கிலிருந்து விலகிக் கொள்ள ஒரு நண்பர் மட்டும் தன் பங்குதாரர்களின் நெருக்கடி காரணமாக வழக்கில் ஈடுபட்டு பல ஆண்டுகள் வாய்தா வாங்கிய நிலையில் வழக்கு மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. பின்னர் ஒரு வழியாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் சென்று பதில் அளிக்க வருமாறு வழக்கு மன்றத்திலிருந்து அழைப்பு வந்தது!  

வழக்கின் நிலை அறிய முதன் முறையாக எனது வழக்குரைஞரிடம் சென்றபோது அவர் என்னிடம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என வினவினார்! நான் அப்பொழுது எனது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தால் ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருந்தேன்! எனவே நான் ஒரு வேலையில் இருப்பதாக அவரிடம் சொன்னேன்!

அதற்கு அவர் நீங்கள் இப்படி உண்மையைச் சொன்னால் வழக்கு தோற்றுவிடும்! எனவே எந்த வேலையுமின்றி எனது தாயாரின் தயவில் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்கூறச் சொன்னார்! 

வணிகம் முடிவுக்கு வந்த அந்தக் கணம் முதல் இனி எக்காரணம் கொண்டும் எவரிடத்தும் பொய் சொல்வதில்லை என்ற தீர்மானமான முடிவில் இருந்த எனக்கு வழக்குரைஞரின் அறிவுரைப்படி நடப்பதற்கு எனது ஆழ்மனது ஒப்புக்கொள்ளவே இல்லை!

எனினும் வழக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு வழக்கு மன்றத்திலிருந்து அழைப்பு வரும்போதெல்லாம் வழக்கு மன்றம் சென்றுவிடுவேன்! எனக்குக் கடன் கொடுத்த நண்பர்கள் எவரும் என்னைக் காண அங்கு ஒரு நாளும் வராதது எனக்குள் வியப்பளித்தது! மேலும் என்னை வழக்கு மன்றக்கூண்டில் ஏற்றி விசாரிக்கும் நாள் தள்ளிக் கொண்டே போனது! இடையில் ஒரு நாள் கூண்டில் ஏறிய அடுத்த நிமிடமே வேறு வழக்கிற்காக என்னை இறக்கி விட்டுவிட்டனர்!

இறுதியாக ஒரு நாள் நான் விசாரணைக்கூண்டில் ஏறி நின்றேன்! பொய் சொல்வதற்கு மனம் ஒப்பாத நிலையில் எதிர் தரப்பு வழக்குரைஞர் எத்தகைய கேள்விகளை எழுப்புவாரோ என்ற அச்சத்துடன் இருந்தேன்! 

எதிர் தரப்பு வழக்குரைஞரோ எனது வணிகத்தில் பட்ட கசப்பான அனுபவங்களுக்கேற்ப  உண்மையைச் சொல்வதற்கேற்ற கேள்விகளையே என்னிடம் எழுப்பினார்! நானும் அவையெல்லாம் உண்மையாக இருந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்!

வழக்கு மன்ற நடுவர் நீங்கள் இவருக்கு ஆதரவான கேள்விகளையே கேட்கிறீர்களே எனச் சிரித்தவாறே வினவ எதிர் தரப்பு வழக்குரைஞர் உட்பட சுற்றி நின்ற அனைத்து வழக்குரைஞர்களும் பலத்துச் சிரித்தனர்! அற உணர்வு பொங்கிய மன நிறைவுடன் நான் அமைதியாக நின்றேன்!

அன்றைய தினமே வழக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது! பொய் சொல்லக்கூடாது என்ற உறுதியான மன நிலையில் இருந்த எனக்கு உண்மையே பேசுமாறு வாய்ப்பு அமைந்ததற்காக என்னை வழி நடத்தும் உயரிய சக்திகளுக்கு நன்றி தெரிவித்தவாறு வழக்கு மன்றத்திலிருந்து வெளியேறினேன்!

அறம் சார்ந்த உணர்வுடனே வாழ்வது என்ற உறுதியான மன நிலையில் இனி வரும் காலத்திலும் வாழ்வது என்ற எனது நிலைப்பாட்டிற்கு ஏற்ப அற உணர்வு மனதில் உறுதியாகத் தழைத்தோங்கும் போது பொய்மைக்கு அங்கு வேலையில்லை என்பதை எனது உணர்வு ரீதியாக உண்மையாக உணர்ந்த அந்த மகத்தான தருணத்தை இப்பபொழுதும் நினைவு கூறும்போதுகூட அறமே வெல்லும் என்ற உன்னதமான வாசகம்தான் எனது ஆழ் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!