செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஒரு அப்பாவிப் பாமரனின் சந்தேகம்!

Leave a Comment

தமிழக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அடைந்து தனது பதவியை இழந்தவுடன் அவருக்குப் பதிலாக ஒரு புதிய முதல்வர் பதவியேற்றார்!

நாடு முழுவதும் என்ன நடக்கிறது என ஊடகங்கள் வாயிலாகக்கூட மக்கள் தெரிந்து கொள்ள இயலாது செய்தி ஊடகங்கள் முடக்கப்பட்ட நிலையில் பதவியேற்றவுடன் புதிய முதல்வர் உடனடியாக கருநாடகத்திற்கு ஊழல் குற்றத்தில் சிறை சென்ற பழைய முதல்வரைப் பார்க்கச் சென்றது அரசு முறைப் பயணமாகக் கருதப்படலாமா?

இந்தப் பயணத்திற்கு ஆன செலவு முழுவதும் அரசின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுவது!  சிறை தண்டனை பெற்ற ஒருவரை காண்பதற்காக ஒரு முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் செல்வது அதிகார விதி மீறலாகக் கருதப்படுமா?

இவர் மட்டுமன்றி பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருநாடக மாநிலத்திற்கு இதே காரணத்தை முன்னிட்டுச் சென்றது அரசின் வரிப்பணத்தில் என்றால் மக்களின் வரிப்பணம் காரணமின்றி வீணடிப்பது சட்ட மீறலா?

நாடு முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுவதும் தமிழகத்திலேயே இல்லை கோட்டையே காலி என ஒரு பிரபலமான தமிழ் வார இதழில் செய்தி வெளிவந்துள்ளது! அப்படி என்றால் இது போன்ற பதவியில் உள்ளவர்கள் தங்களின் கடமையைச் செய்யாமல் எங்கோ சென்றது அதிகார விதி மீறலாகச் சட்டப்படி கருதலாமா?

தயவு செய்து சட்டம் தெரிந்தவர்கள் மட்டும் பாமரனின் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள்! அதே சமயம் பெரும் செல்வத்திற்கு ஆசைப்பட்டு சட்டத்திலுள்ள சந்து பொந்துகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கிரிமினல்களுக்காகப் பாடுபடும் சட்ட வல்லுநர்கள் தயவு செய்து தங்களின் பரிந்துரைகளை இந்தப் பாமரனுக்குத் தெரிவிக்காதீர்கள்!

Read More...

தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு ஆதரவானவர்களா?

Leave a Comment
இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவியுள்ள நம் நாட்டில் தற்பொழுது மக்களே ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாக ஒருவித அச்சம் தோன்றுகிறது!
ஒரு சாதாரண சாதிச் சான்றிதழ் துவங்கி அரசு மானியம், அரசின் உதவித் தொகைகள், அரசுப் பணி நியமனங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள், என ஒவ்வொரு மட்டத்திலும் ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் கூட்டணி அமைத்து புற்று நோயாக வளர்த்துள்ள இலஞ்சமும் ஊழலும் புரையோடியவாறு நம் நாடு மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளது!

தமிழ்நாட்டு மக்களை இன்றுள்ள பலமான இரண்டு திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்களாக வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 55 சதவீத மக்கள் இரண்டு இயக்கங்களின் ஊழலையும் ஆதரிப்பவர்களாக உள்ளதாகத்தான் அர்த்தம்!

மீதமுள்ள வாக்களிக்காத 20 சத மக்கள் தவிர 25 சதவீத உதிரிக்கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் அந்த உதிரிக் கட்சிகள் பெரும்பாலும் இந்த இரண்டு பலம் வாய்ந்த திராவிட இயக்கங்களைச் சார்ந்தே தேர்தல்களில் களம் இறங்குவதால் அவர்களும் ஊழல் இயக்கங்களுக்குத் துணை போன நிலையில் ஊழல் இயக்கங்களாகவே கருத வேண்டிய நிலையில் உள்ளனர்!
இந்த நிலையில் ஊழலைப் பற்றிப் பேசவே தகுதியற்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை வாரியிறைத்தவாறு நீ செய்தது பெரிய ஊழல் நான் செய்தது சிறிய ஊழல்தான் என தங்களது ஊழலை நியாயப்படுத்த முயல்கின்றனர்!

தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடமோ, அல்லது ஆளரவமற்ற இடத்தில் நடந்துவரும் ஒரு ஆணிடமோ ஒரு திருடன் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வது சட்டப்படி திருட்டுக் குற்றத்தில்தான் வருகிறது! அதே போன்று ஒரு நகைக்கடையையே கொள்ளையடித்து கோடிகளில் திருடுபவனும் திருட்டுக் குற்றத்தில்தான் வருகிறான்!

தங்களின் ஒரு கையொப்பத்திற்காக நூறு ரூபாயாக இருந்தாலும் சரி, ஒரு திட்டத்திற்காக கோடி ரூபாயாக இருந்தாலும் சரி இலஞ்சம் வாங்குபர்களில் ஒருவரை பத்தாயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் என்பதற்காக ஒரு வருடம் சிறை தண்டனை கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் வாங்குபவருக்கு சதவீத அடிப்படையில் 100 வருடம் சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!

திருடனிடம் இருப்பது கத்தி! அவனிடம் உயிர் பயத்தில் மக்கள் தங்களின் செல்வத்தை இழக்கின்றனர்! ஆனால் ஆட்சியாளர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் இருப்பது சாதாரண மை நிரப்பிய பேனாதாம்! இவர்களோ தங்களின் அதிகார பலத்தைப் பிரயோகித்து சாதாரண பேனாவில் கையொப்பமிடுவதற்கே மக்களிடமும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களிலும் வழிப்பறி செய்கின்றனர்!

பரிதாபமாக இந்த நாட்டில் பத்தாயிரம் வாங்கிய அரசு அலுவலர் ஒரு வருடம் சிறை தண்டனையை அனுபவிக்க கோடிகளில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளோ ஒரு வாரத்தில் பிணைத்தொகை செழுத்தி பிணையில் வெளிவருவதும், பின்னர் சவுகரியமாக பல ஆண்டுகள் வழக்கினைத் தம் பணபலத்தாலும், இலவசங்களில் மயங்கி வாக்களிக்கும் அப்பாவிகளான பொதுமக்களின் வாக்கு வங்கி பலத்தாலும் ஆட்சி சுகம் அனுபவிப்பது இந்த நாட்டைத் தவிர வேறு எங்கும் நிகழ்வதாகத் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்! இலஞ்ச ஊழல் மரத்தின் சிறு கிளைகள்தாம் வாய்மை மன்றங்களால் அவ்வப்போது வெட்டப்பட்டு வருகின்றன!
இலஞ்ச ஊழல் மரத்தின் ஆணி வேரோ பூமிக்கடியில் வெகு தூரம் பக்க வேர்களுடன் பரவி நிற்கிறது!

ஆட்சியாளர்கள்தான் இலஞ்ச ஊழல் மரத்தின் ஆணி வேர்!

வ்வொரு துறையிலும் இலஞ்சம் வாங்கித் தேனெடுத்துக் கொடுத்துப் புறங்கை சுவைத்து ஆட்சியாளர்களுக்குக் கப்பம் கட்டும் அரசு அலுவலர்கள்தாம் பக்க வேர்கள்! இந்த பக்க வேர்களும், ஆணி வேரும் உறுதியாக நிற்க விச மரமாகக் காட்சியளிக்கும் இலஞ்ச ஊழல் மரத்தினைத் தங்களின் உழைப்பெனும் வேர்வையைத் தண்ணீர் எனும் பணமாக மாற்றி வளர்ப்பவர்கள் உண்மையிலேயே நம் நாட்டு மக்கள்தாம்!

இவர்கள் திருந்தினால்தான் இவர்களின் உழைப்பெனும் வேர்வைத் தண்ணீர்ப் பணம் இலஞ்ச ஊழல் விச மரத்திற்குக் கிடைக்காமல் இந்த மரம் தானாகவே பட்டுப் போன நிலையில் ஆணிவேரோடும் பக்கவாட்டு வேர்களுடனும் மக்களால் பிடுங்கி எறியப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் காலம் உருவாகும்! அந்தப் பொற்காலம் எப்பொழுது என்பதுதாம் இப்பொழுதுள்ள கேள்வியே!

அது வரை ஐந்து ரூபாய் திருடுபவரும், கோடிகளில் திருடுபவரும் சரிசமமாகத்தான் இன்றுள்ள நிலையில்  குறைந்த தண்டனையில் சட்டத்திலிருந்து கிரிமினல் வழக்குறைஞர்களால் தப்புவிக்கப்பட்டு மக்களின் முன்னால் வெகு கம்பீரமாக நல்லவர்களாகக் காட்சியளிப்பர்!

Read More...

புதன், 8 அக்டோபர், 2014

அமைதிப் பூங்கா!

Leave a Comment
தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் வழக்கில் பதவி இழந்ததும், தமிழத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டும், அவரது கைதினைக் கண்டித்துத் தாமாகவே கடைகளை அடைத்தும், தங்களின் கண்டனத்தைத் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் தொலைக்காட்சி இயக்கம் செய்திகளை கூறிக் கொண்டிருக்கிறது!

பொதுமக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு குறிப்பிட்ட பாஜக தலைவருக்கும் எதிராகக் கண்டனம் தெரிவித்து அவர்களது உருவப் பொம்மைகளை எரித்தும், ஆங்காங்கே போக்குவரத்து மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது!

தமிழக மக்கள் எப்பொழுதும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக் காட்சி ஊடகங்களைக் கண்டு கழித்து செய்தி ஊடகங்களைப் புறக்கணிப்பதால் இதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட கேபிள் தொலைக்காட்சி வசதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆளும் இயக்கம்

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட இது போன்ற ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள இயலாத வண்ணம் தங்கள் தலைவி கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகத் தொடங்கியது முதல் தமிழகததில் மின்சார வசதியை நிறுத்தியும், பின்னர் இது போன்ற செய்தி ஊடகங்களைக் குறிப்பாக எதிர்க்கட்சியினரின் ஊடகங்களையும் ஒளி பரப்பாவதை மறைத்துவிட்டது!

இதில் இன்னொரு வேடிக்கையான செய்தி என்னவென்றால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதிகைத் தொலைக்காட்சி அலைவரிசையும் மறைக்கப்பட்டது என்பதுதாம். இதனை ஏன் மத்திய அரசும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பதுதாம் புரியாத புதிர்!

இது மட்டுமன்றி இந்த ஊடகம் ஆளும் இயக்கத் தலைவர் பதவி இழந்து புதிய முதல்வர் பதவியேற்ற நிலையிலும் தொடர்ந்து பழைய முதல்வரைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் தமிழக முதல்வர் என்றே குறிப்பிட்டதும், தற்பொழுது சற்றுச் சுருதி குறைந்து மக்கள் முதல்வர் என்று முன்னாள் முதல்வரைக் குறிப்பிட்டு வர்ணனை செய்கிறது!

பொதுவாக இந்த ஊடகத்தில் ஆளும் இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதால் இந்த ஊடகத்தை அவ்வளவாக மக்கள் கண்டு கொள்ளாத நிலையில் இன்னும் தொடர்ந்து தங்கள் இயக்கத்திற்கு ஆதரவாக மக்கள் இருப்பதாகவும், மக்களின் கொந்தளிப்பே தமிழகத்தில் நிலவுவதாகவும் தமிழக மக்கள் வேறு எந்த இயக்கங்களிலும் இல்லாதது போலவும் இடைவிடாது செய்தி வெளியிட்டுப் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது!

ஒரே விசயத்தைத் தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரமும் ஒளிபரப்பி இன்னமும் தமிழகத்தில் வன்முறைகள் ஆங்காங்கே நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அமைதி நிலவுவதாகவும் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாகவும் முழுப்பூசணியைச் சோற்றில் மறைக்கப் பார்க்கும் இந்த ஊடகத்தின் பரிதாப நிலையினை என்னென்பது?

Read More...

செவ்வாய், 7 அக்டோபர், 2014

தமிழகத்தில் தொலைய வேண்டும்! அரசியல் தற்கொலைகள்!

Leave a Comment

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கருநாடக வாய்மை மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறப்பட்ட செய்தியை அறிந்ததும் தமிழகத்தில் ஆங்காங்கே தீக்குளித்தும், தூக்கிக்கிட்டுக் கொண்டும், மாரடைப்பாலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அவர்தம் குடும்பத்தவர்க்கு தம் ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறது!

தீக்குளித்தும், தூக்கிட்டும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணி இரக்க மனம் படைத்த எவருமே மனம் கலங்காதிருக்க மாட்டர்! விலை மதிப்பற்ற உயிர்களை ஊழல் அரசியல்வாதிகளின் உயர் செல்வாக்கு அறியாமல் அப்பாவியான வசதி வாய்ப்பற்ற மக்கள் தமது இன்னுயிர் துறப்பது இனியும் தொடரத் தமிழராய்த் தமிழகத்தில் பிறந்த எவரும் அனுமதிக்கக்கூடாது!

தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவருமே வசதி குறைவானவர்கள் என்பதுவும், இது போன்றவர்கள் தங்களின் குடும்பச் சுமை தாளாமல் தங்களின் மரணத்திற்குப் பின்னர் கிடைக்கும் கட்சி நிதி உதவியிலாவது தங்கள் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை தொலையட்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகப் பரவலான கருத்தும் தமிழகத்தில் உள்ளதும் நாம் அறிந்ததே!

தற்செயலாக மாரடைப்பால் இறந்தவர்களைத் தங்களின் தலைவரின் நிலை கருதித் துககம் தாளாது மரணமுற்றதாக எண்ணிக்கைக்கென அரசியல் இயக்கங்கள் அவர்களுக்கும் நிதி உதவி அளிப்பதும் தமிழகத்தில் நிலவுகிறது!

இதை எனது சொந்த அனுபவத்திலேயே என்னால் உறுதிப்படுத்த முடியும்! எனது மூத்த தாய் மாமா அவர்கள் தற்போதய ஆளும் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்! அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நாட்களுக்குப் பிறகுதாம் இதே ஆளும் கட்சித் தலைவியார் டான்சி நில பேர ஊழல் வழக்கிற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்! இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் எனது மாமா அவர்கள் மரணமுற்றார்.

எனது மாமா அவர்கள் மரணமடைவதற்குச் சில மணி நேரங்கள் முன்பு நான் எனது நிறுவனத்தில் பணியிலிருந்தேன்! அவர் இருந்த நகருக்கும் எனது இருப்பிடத்திற்கும் 100 கல் தொலைவு! அப்பொழுது காலை பத்து மணி இருக்கும்! ஒரு நாய்க்குட்டி ஒன்று எங்கள் நிறுவனத்தில் நுழைந்துவிட்டு எவ்வளவு போராடியும் சற்றுச் சிணுங்கியவாறு வெளியேற மறுத்தது! 

என்னுடைய உள்ளுணர்வு இன்று ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என அப்பொழுது முதல் எச்சரிக்கத் துவங்கியது! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழிந்துதான் அந்தக் குட்டி நாயை எங்களால் அப்புறப் படுத்த முடிந்தது! அன்று மாலையே எனது மாமா இறந்து விட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது!

பொதுவாக நம் ஆன்மீகத்தில் நாயை கால பைரவருக்கு ஒப்பிடுவர்! அன்றைய தினம் எனக்குக் கிடைத்த இந்த அனுபத்தின் போது எனது மாமா அவர்கள்தான் தனது மரணத்திற்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வால் தனது மரணத்தைக் கால பைரவர் வடிவில் வந்து உணர்த்தினாரோ எனவும் எனது தாய் மாமா 
அவர்களின் மரணத்தில் இன்றுவரை எனக்குள் ஒருவித தீராத சந்தேகமும் இருந்து வருகிறது!

அதன் பின்னர் இயக்கத் தலைவியின் கைது காரணமாகத் துக்கம் தாளாமல் மாரடைப்பால் காலமானதாக எனது தாய் மாமா பெயரும் இடம் பெற்ற ஒரு இரங்கல் அறிக்கை செய்தித் தாள்களில் வந்ததும், சில மாதங்கள் கழிந்து எனது மாமா குடும்பத்தவர்கள் அனைவரும் தலைநகருக்கு இயக்க செலவில் அழைத்துச் செல்லப்பட்டு தங்குவதற்கும் வசதி செய்து தரப்பட்டு பின்னர் ஒரு தொகையும் அவர்களிடம் ஆடம்பரமாக நடத்தப்பட்ட விழாவில் வழங்கப்பட்டது!

அரசு வழங்கும் இலவசங்களை வாங்கக்கூடாது என்ற எனது கொள்கையை மீறி இரண்டாயிரம் ரூபாய் பெறாத நீண்ட நாள் உழைக்காத ஒரு சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியையே எனக்குத் தெரியாமல் அக்கம்பக்கத்துக் குடும்பங்களின் தூண்டலின் பேரில் வாங்கிவிட்டு என் மனைவி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட தற்கால நிலைமை இப்படி இருக்க ஆளும் இயக்கத்தின் தலைவி என்பதை விட ஒரு முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் அத்துடன் கணிசமான தொகை உதவி என்றால் எவர்தாம் இந்த வாய்ப்பினை நழுவ விடுவர்!

இரண்டுமுறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் இன்றுவரை நலமாக இருக்கும் எனது தாயாரை விட ஐந்து வயது குறைநத எனது தாய்மாமா அவர்களுக்கு வாழ வேண்டிய வயதிலேயே வாய்க்கரிசி போட்டுவிட்டு நான் வந்தபோது நடந்த உண்மை நிகழ்ச்சி இது!

இதை அழுத்தமாக நான் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு! எனது தந்தை தனது முதுமையிலும் ஓரளவு எனது தாயாருக்காகத் தனது மரணத்திற்குப் பின் ஒரு தொகையை ஒதுக்கிவிட்டுத்தான் மறைந்தார். அவருக்கு நாங்கள் நான்கு பேர் கல் போல உயிரோடு இருக்க, ஆளும் அரசியல் இயக்கத்தவர்கள் எனது தாயாரை அனாதை எனச் சொல்லி அரசிடம் விதவை உதவித் தொகை வாங்கித் தருவதாக வாக்கு வங்கியை மனதில் கொண்டு அணுகியுள்ளனர்.

கிராமத்தில் வாழ்ந்த எனது அப்பாவித் தாயார் எங்களிடம் இது பற்றி வினவ எங்களுக்குக் கடும் கோபமேற்பட்டு நாங்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில்தான் நீங்கள் அனாதையாவீர்கள்! நாங்கள் குத்துக்கல் போல உயிரோடு இருக்கும் வரை இது போன்ற அரசியல் அனாதைகளின் பேச்சைக் கேட்டு இது போன்ற தவறான அரசு உதவிகளை வாங்கிவிட வேண்டாம் என எச்சரித்து வந்தோம்! 

வாய்மை ஒரு நாள் நிச்சயம் ஆட்சி பீடம் ஏறும் போது இது போன்ற பொய்மை அரசியல்வாதிகள்தாம் ஒரு கால கட்டத்தில் அனாதைகளாகப் போகின்றனர் என்பது எழுதி வைக்கப்பட்ட பேரண்ட விதி! இந்த விதியிலிருந்து எவருமே நான் உட்பட ஏதேனும் குற்றம் செய்தால் தப்பவே இயலாது என்பதை இனியாவது போலி அரசியல்வாதிகள் உணர வேண்டும்!

இயக்கத்தில் நல்ல பதவியில் அமர்ந்து கொண்டு செல்வாக்காகத் திகழ்பவர்கள், ஒரு கட்டத்தில் தங்களின் பதவி பறிக்கப்பட்டாலோ, அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலோ சர்வ சாதாரணமாகத் தங்களின் கொள்கைக்கு இந்த இயக்கம் ஒத்துவரவில்லை என ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அது வரை தாங்கள் அசிங்கமாகப் பேசிய எதிர் இயக்கத்திற்கு கரை வேட்டியும் துண்டையும் மாற்றிக் கொண்டு பச்சோந்தி குணத்துடன் நிறம் மாறிச் செல்வதும், அவர்களும் இவர்களின் செல்வாக்கிற்கெனத் தங்களை நிந்தித்ததை மன்னித்து ஏற்றுக் கொள்வதையும் இது போன்று அப்பாவித் தொண்டர்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

அது போன்றே அரசியல் இயக்கங்களில் நல்ல செல்வாக்குடன் பதவியில் உள்ள எவரும் இது போன்று தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அவர்கள் தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதெற்கெனத் தங்களின் இலஞ்சப்பணத்தை வாரி இறைத்து, கட்அவுட்டுகள், சுவரொட்டிகள், காசு கொடுத்து ஆட்களைத் திரட்டி மொட்டையடித்தல், பால்குடம் ஏந்துதல், அங்கப் பிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல், மனித சங்கிலி அமைத்தல், ஆடம்பர மேடை போட்டு முழங்குதல், உண்டு கொண்டே உண்ணாவிரதம் இருத்தல் என விதவிதமான செய்கைகளில் ஈடுபட்டு தலைமையிடம் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பாகவும்தான் இவைகளைப் பயன்படுத்துகிறார்களே தவிரத் தங்களைப் போல உணர்ச்சி வசப்பட்டு இன்னுயிர் மாய்த்துக்கொள்ள முன்வருவதில்லை என்பதை அப்பாவிகள் உணரும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

ஆளும் இயக்கத் தலைவியின் சிறைத் தண்டனையை அறிந்தவுடன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தாங்கள் செய்வது கொடிய பாவமென்று நினையாமல் அதன் எதிர் விளைவுகள் இன்னதென்று அறியாமல் ஒரு பேருந்தை எரித்து அதில் மூன்று அப்பாவிக் கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்று அதற்கெனத் தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ள நிலையும், இளமையில் சிறை சென்று இன்று வயதான கோலத்தில் தங்களின் குழந்தைகளையும் குடும்பத்தையும் பிரிந்து மரண பயத்துடன் வாழும் சாதாரண இயக்கத் தொண்டர்களின் கதியை ஊடகங்கள் இடைவிடாது வெளியிட்டு உணர்ச்சி வயப்பட்டு இன்னுயிர் நீக்குபவர்கள், மற்றும் உணர்ச்சி வயப்பட்டு பேருந்துகளை எரிப்பவர்கள், தனியார் மற்றும் பொதுச் சொத்துகளை நாசமாக்குபவர்களை எச்சரிக்கும் வழியை ஏற்படுத்த வேண்டும்!

தீக்குளித்தல், இயக்கத்திற்கெனத் தூக்கிட்டு மரணமடைபவர்களின் குடும்பத்திற்கு அரசியல் இயக்கங்கள் தரும் நிதி உதவிகள் அப்பாவிகளைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக அமைவதாகவும், இவ்வாறு நிதி வழங்கும் இயக்கங்களின் தேர்தல் உரிமம் கொலைக்குற்றமாகக் கருதி இரத்து செய்யப்படும் எனவும் கடுமையான ஒரு சட்டமே  உச்ச வாய்மை மன்றத்தால் இயற்றப்படும் நிலை இனியாவது இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்!

அப்பொழுதான்; ஊழல் அரசியல்வாதிகளின் செயல்களுக்காக அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டு பலியாவதும் இவர்களின் எரியும் தேகத்தில் போலி அரசியல்வாதிகள் குளிர் காயும் அநாகரீகச் செயல் நிரந்தரமாகத் தொலையும் நிலை இந்த நாட்டில் உருவாகும்!

Read More...