தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு ஆதரவானவர்களா?

இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவியுள்ள நம் நாட்டில் தற்பொழுது மக்களே ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாக ஒருவித அச்சம் தோன்றுகிறது!
ஒரு சாதாரண சாதிச் சான்றிதழ் துவங்கி அரசு மானியம், அரசின் உதவித் தொகைகள், அரசுப் பணி நியமனங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள், என ஒவ்வொரு மட்டத்திலும் ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் கூட்டணி அமைத்து புற்று நோயாக வளர்த்துள்ள இலஞ்சமும் ஊழலும் புரையோடியவாறு நம் நாடு மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளது!

தமிழ்நாட்டு மக்களை இன்றுள்ள பலமான இரண்டு திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்களாக வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 55 சதவீத மக்கள் இரண்டு இயக்கங்களின் ஊழலையும் ஆதரிப்பவர்களாக உள்ளதாகத்தான் அர்த்தம்!

மீதமுள்ள வாக்களிக்காத 20 சத மக்கள் தவிர 25 சதவீத உதிரிக்கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் அந்த உதிரிக் கட்சிகள் பெரும்பாலும் இந்த இரண்டு பலம் வாய்ந்த திராவிட இயக்கங்களைச் சார்ந்தே தேர்தல்களில் களம் இறங்குவதால் அவர்களும் ஊழல் இயக்கங்களுக்குத் துணை போன நிலையில் ஊழல் இயக்கங்களாகவே கருத வேண்டிய நிலையில் உள்ளனர்!
இந்த நிலையில் ஊழலைப் பற்றிப் பேசவே தகுதியற்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை வாரியிறைத்தவாறு நீ செய்தது பெரிய ஊழல் நான் செய்தது சிறிய ஊழல்தான் என தங்களது ஊழலை நியாயப்படுத்த முயல்கின்றனர்!

தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடமோ, அல்லது ஆளரவமற்ற இடத்தில் நடந்துவரும் ஒரு ஆணிடமோ ஒரு திருடன் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்வது சட்டப்படி திருட்டுக் குற்றத்தில்தான் வருகிறது! அதே போன்று ஒரு நகைக்கடையையே கொள்ளையடித்து கோடிகளில் திருடுபவனும் திருட்டுக் குற்றத்தில்தான் வருகிறான்!

தங்களின் ஒரு கையொப்பத்திற்காக நூறு ரூபாயாக இருந்தாலும் சரி, ஒரு திட்டத்திற்காக கோடி ரூபாயாக இருந்தாலும் சரி இலஞ்சம் வாங்குபர்களில் ஒருவரை பத்தாயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் என்பதற்காக ஒரு வருடம் சிறை தண்டனை கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் வாங்குபவருக்கு சதவீத அடிப்படையில் 100 வருடம் சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டும்!

திருடனிடம் இருப்பது கத்தி! அவனிடம் உயிர் பயத்தில் மக்கள் தங்களின் செல்வத்தை இழக்கின்றனர்! ஆனால் ஆட்சியாளர்களிடமும், அரசு அலுவலர்களிடமும் இருப்பது சாதாரண மை நிரப்பிய பேனாதாம்! இவர்களோ தங்களின் அதிகார பலத்தைப் பிரயோகித்து சாதாரண பேனாவில் கையொப்பமிடுவதற்கே மக்களிடமும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களிலும் வழிப்பறி செய்கின்றனர்!

பரிதாபமாக இந்த நாட்டில் பத்தாயிரம் வாங்கிய அரசு அலுவலர் ஒரு வருடம் சிறை தண்டனையை அனுபவிக்க கோடிகளில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளோ ஒரு வாரத்தில் பிணைத்தொகை செழுத்தி பிணையில் வெளிவருவதும், பின்னர் சவுகரியமாக பல ஆண்டுகள் வழக்கினைத் தம் பணபலத்தாலும், இலவசங்களில் மயங்கி வாக்களிக்கும் அப்பாவிகளான பொதுமக்களின் வாக்கு வங்கி பலத்தாலும் ஆட்சி சுகம் அனுபவிப்பது இந்த நாட்டைத் தவிர வேறு எங்கும் நிகழ்வதாகத் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்! இலஞ்ச ஊழல் மரத்தின் சிறு கிளைகள்தாம் வாய்மை மன்றங்களால் அவ்வப்போது வெட்டப்பட்டு வருகின்றன!
இலஞ்ச ஊழல் மரத்தின் ஆணி வேரோ பூமிக்கடியில் வெகு தூரம் பக்க வேர்களுடன் பரவி நிற்கிறது!

ஆட்சியாளர்கள்தான் இலஞ்ச ஊழல் மரத்தின் ஆணி வேர்!

வ்வொரு துறையிலும் இலஞ்சம் வாங்கித் தேனெடுத்துக் கொடுத்துப் புறங்கை சுவைத்து ஆட்சியாளர்களுக்குக் கப்பம் கட்டும் அரசு அலுவலர்கள்தாம் பக்க வேர்கள்! இந்த பக்க வேர்களும், ஆணி வேரும் உறுதியாக நிற்க விச மரமாகக் காட்சியளிக்கும் இலஞ்ச ஊழல் மரத்தினைத் தங்களின் உழைப்பெனும் வேர்வையைத் தண்ணீர் எனும் பணமாக மாற்றி வளர்ப்பவர்கள் உண்மையிலேயே நம் நாட்டு மக்கள்தாம்!

இவர்கள் திருந்தினால்தான் இவர்களின் உழைப்பெனும் வேர்வைத் தண்ணீர்ப் பணம் இலஞ்ச ஊழல் விச மரத்திற்குக் கிடைக்காமல் இந்த மரம் தானாகவே பட்டுப் போன நிலையில் ஆணிவேரோடும் பக்கவாட்டு வேர்களுடனும் மக்களால் பிடுங்கி எறியப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் காலம் உருவாகும்! அந்தப் பொற்காலம் எப்பொழுது என்பதுதாம் இப்பொழுதுள்ள கேள்வியே!

அது வரை ஐந்து ரூபாய் திருடுபவரும், கோடிகளில் திருடுபவரும் சரிசமமாகத்தான் இன்றுள்ள நிலையில்  குறைந்த தண்டனையில் சட்டத்திலிருந்து கிரிமினல் வழக்குறைஞர்களால் தப்புவிக்கப்பட்டு மக்களின் முன்னால் வெகு கம்பீரமாக நல்லவர்களாகக் காட்சியளிப்பர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!