அமைதிப் பூங்கா!

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் வழக்கில் பதவி இழந்ததும், தமிழத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டும், அவரது கைதினைக் கண்டித்துத் தாமாகவே கடைகளை அடைத்தும், தங்களின் கண்டனத்தைத் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் தொலைக்காட்சி இயக்கம் செய்திகளை கூறிக் கொண்டிருக்கிறது!

பொதுமக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு குறிப்பிட்ட பாஜக தலைவருக்கும் எதிராகக் கண்டனம் தெரிவித்து அவர்களது உருவப் பொம்மைகளை எரித்தும், ஆங்காங்கே போக்குவரத்து மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது!

தமிழக மக்கள் எப்பொழுதும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக் காட்சி ஊடகங்களைக் கண்டு கழித்து செய்தி ஊடகங்களைப் புறக்கணிப்பதால் இதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட கேபிள் தொலைக்காட்சி வசதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆளும் இயக்கம்

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட இது போன்ற ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள இயலாத வண்ணம் தங்கள் தலைவி கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகத் தொடங்கியது முதல் தமிழகததில் மின்சார வசதியை நிறுத்தியும், பின்னர் இது போன்ற செய்தி ஊடகங்களைக் குறிப்பாக எதிர்க்கட்சியினரின் ஊடகங்களையும் ஒளி பரப்பாவதை மறைத்துவிட்டது!

இதில் இன்னொரு வேடிக்கையான செய்தி என்னவென்றால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதிகைத் தொலைக்காட்சி அலைவரிசையும் மறைக்கப்பட்டது என்பதுதாம். இதனை ஏன் மத்திய அரசும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பதுதாம் புரியாத புதிர்!

இது மட்டுமன்றி இந்த ஊடகம் ஆளும் இயக்கத் தலைவர் பதவி இழந்து புதிய முதல்வர் பதவியேற்ற நிலையிலும் தொடர்ந்து பழைய முதல்வரைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் தமிழக முதல்வர் என்றே குறிப்பிட்டதும், தற்பொழுது சற்றுச் சுருதி குறைந்து மக்கள் முதல்வர் என்று முன்னாள் முதல்வரைக் குறிப்பிட்டு வர்ணனை செய்கிறது!

பொதுவாக இந்த ஊடகத்தில் ஆளும் இயக்கத்தின் செயல்பாடுகள் மட்டுமே ஒளிபரப்பப்படுவதால் இந்த ஊடகத்தை அவ்வளவாக மக்கள் கண்டு கொள்ளாத நிலையில் இன்னும் தொடர்ந்து தங்கள் இயக்கத்திற்கு ஆதரவாக மக்கள் இருப்பதாகவும், மக்களின் கொந்தளிப்பே தமிழகத்தில் நிலவுவதாகவும் தமிழக மக்கள் வேறு எந்த இயக்கங்களிலும் இல்லாதது போலவும் இடைவிடாது செய்தி வெளியிட்டுப் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது!

ஒரே விசயத்தைத் தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரமும் ஒளிபரப்பி இன்னமும் தமிழகத்தில் வன்முறைகள் ஆங்காங்கே நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அமைதி நிலவுவதாகவும் தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாகவும் முழுப்பூசணியைச் சோற்றில் மறைக்கப் பார்க்கும் இந்த ஊடகத்தின் பரிதாப நிலையினை என்னென்பது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!