தமிழக இளைய சமுதாயமே உங்களின் வருங்கால நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் புதிதாகத் துவக்கியுள்ள பிரபலமான நாளிதழின் தiலைப்புச் செய்தியினைப் படிக்க நேர்ந்தது! 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பாகக் கூட்டணிகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தும் அந்த நாளிதழ் இன்றைய அரசியல் இயக்கங்களின் மன நிலையைக் கணித்துச் செய்தி வெளியிட்டுள்ளது!

இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகத்தின் இரு பிரதான இயக்கங்களின் நிலைப்பாடு அந்த இயக்கங்களின் தலைவர்கள் செய்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வெளிவர இருக்கும் வாய்மை மன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில்தாம் அவற்றின் எதிர்காலத்தைத் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என அந்தச் செய்தி கூறுகிறது!

இந்த இரு அணிகளில் மட்டுமே தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தி குண நி;றம் காட்டி அணி மாறித் தங்களின் வாக்கு வங்கிச் சதவிகிதத்தை இங்குள்ள ஏராளமான உதிரி இயக்கங்கள் (குறிப்பாக சாதியம் சார்ந்த அரசியல் இயக்கங்கள்) தக்க வைத்துக் கொண்டு தங்கள் இயக்கம் சாதிய அடிப்படையில் செல்வாக்கு வகிக்கும் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே கைப்பற்றித் தொடர்ந்து தங்களின் அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்கு முயல்கின்றன!

இது போன்ற உதிரி இயக்கங்கள் தங்களின் மேடைகளில் ஏதோ தாங்கள்தாம் வரும் 2016 ஆண்டில் தமிழக மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக முதல்வர் கனவுகளுடன் பேசுவதும் தமிழக மக்களின் நகைப்புக்குரிய ஒரு வழக்கமான செயல்கள்தாம்!

இந்த இரு இயக்கங்களின் ஊழல் குணத்தை வெளிப்படுத்தியவண்ணம் தமிழகத்தில் இருந்த இது போன்ற உதிரி சாதிக்கட்சிகளின் துணையோடு கடந்த நாடாளுமன்றத் தேர்தலைத் சந்தித்தது பாஜக! 

இந்த மதவாத இயக்கத்தின் வருகையை விரும்பாத தமிழக மக்கள் வேண்டா வெறுப்பாக இருக்கின்ற இரு ஊழல் இயக்கங்களில் ஒன்றின் வாக்கு வங்கிச் சதவிகிதத்தை அதிகரித்துவிட இது புரியாத ஆளும் இயக்கம் தலைகால் புரியாமல் தங்களின் இயக்கம் ஊழல் வழக்கினைச் சந்தித்தபோது நடத்திய அராஜக தர்பார் உலகறிந்தது! பஜக இயக்கம் அகில பாரத அளவில் மதவாத வன்முறையும் கிரிமினல் குற்றவாளிகளை நாடாளுமன்ற சட்டமன்ற உருப்பினர்களாகக் கொண்டது என்பதும் நாடறிந்த உண்மை! இத்தகைய குணம் உடையவர்களைக்  கொண்ட ஒரு இயக்கம் நிச்சயம் ஊழல் நிறைந்த இயக்கமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?

இத்தகைய சூழலில் அகில பாரத அளவில் இந்த இயக்கம் பெற்ற வெற்றியைத் தமிழகத்திலும் எப்படியாவது அடைவது என்ற நோக்கில் தமிழகத்தில் பிரபலமான மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளையும், நாடாளத் துடிக்கும் நடிகர்களையும் எப்படியேனும் வளைத்து தங்களின் செல்வாக்கினைத் தமிழகத்தில் நிலை நிறுத்த வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றது!

பெருந்தலைவரின் மறைவிற்குப் பிறகு பணக்காரர்கள் மட்டுமே ஆதிக்கம் செழுத்தும் காங்கிரசு இயக்கம் தங்களைத் தேர்தலுக்குத் தேர்தல் சுமந்து வளர்த்த இரு ஊழல் திராவிட இயக்கங்கள் தங்களின் தோள் வலி தாங்காமல் இறக்கி விட்டு அம்போ என விட்டுவிட்ட நிலையிலும், வழக்கமாகக் காணப்படும் உட்கட்சிக் கோஷ்டிச் சண்டையின் உச்சகட்டமாக மீண்டும் பிளவுபட்டு படு மோசமான நிலையில் தனது வாக்கு வங்கி பலவீனப்பட்ட நிலையில் காணச் சகியாமல் பரிதவித்துத் தவிக்கிறது!

பொதுவாக நாம் ஒரு விவாதத்தில் பங்கேற்றால் அந்த விவாதத்தில் பங்கு கொள்ளும் அனைவருமே ஊழல்வாதிகளை வெறுத்தேதாம் தங்களின் விவாதத்தை வெளிப்படுத்துகின்றனர்!

ஆனாலும் தமிழகத்தின் போதாத காலம் இவர்கள் அனைவரும் தேர்தல் காலங்களில் ஏதேனும் ஓர் ஊழல் இயக்கத்திற்குத்தாம் தவறாமல் அந்த நேரத்து நிலைக்கு ஏற்ப இருப்பதில் இது மேலென்ற மன நிலையுடன் வாக்களிக்கின்றனர்! 

ஊழலை வெறுப்பவர்கள் ஏன் தங்களின் சனநாயகக் கடமையின்போது ஊழல் பேர்வழிகளையே சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் வாக்களித்து வெற்றியடையச் செய்து மீண்டும் மீண்டும் ஊழல் சகதியில் சிக்கி அவதியுறுகின்றனர் என்பதுதாம் இங்குள்ள கேள்வியே!

தமிழகத்தின் போதாத காலத்திற்கு இங்குள்ள அனைத்து இயக்கங்களுமே தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இளைய சமுதாயத்தைத்தான் புரட்சி செய்யுங்கள்! தமிழகத்தின் வரலாற்றை மாற்றி எழுதுங்கள் என வேண்டுகோள் விடுக்கின்றனர்!

அப்படியானால் ஊழலுக்கு ஆதரவாகத்தான் இந்த ஊழல் இயக்கங்கள் புரட்சி செய்ய இளைய சமுதாயத்தை அழைக்கின்றனவா?

இந்த நிலையில் தமிழக இளைய சமுதாயமே உங்களின் வருங்கால நிலைப்பாடு என்ன? வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கும்? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? 

தங்களின் மேலான பதில்களை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தில் பதிவு செய்ய அழைக்கிறோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!