தூய்மை பாரதம்! தூய்மைத் தமிழகம்!

நாடெங்கும் காந்திய வழியில் தூய்மைப் படுத்தும் திட்டத்தை பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்து அவரே முறைப்படி தூய்மைப்படுத்தி இந்தத் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்!

நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் பிரதமரைப் போலவே தூய்மைத் திட்டத்தில் இணைந்து ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் இறங்கியுள்ளனர்!

இதனைத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் வாயிலாகக் காணும் போது பெரும்பாலானவர்களின் செயல் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்து தாங்கள் இந்தச் செயலைச் செய்வது மேலிடத்திற்குத் தெரிய வேண்டும் என்பது போலத்தான் உள்ளதே தவிர உண்மையான அக்கறையுடன் தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை!

எனினும் துப்புறவுத் தொழிலாளர்கள் வற்புறுத்தலின் பேரில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவது ஆங்காங்கே தென்படுகிறது! 

தனி மனிதர் தாமாக மனமுவந்து திருந்தாத வரை இந்த நாடு பாரதப் பிரதமர் அவர்கள் எதிர்பார்ப்பது போன்று உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவரது இலக்கு எட்டப்படும் என்பதாகத் தெரியவில்லை!

ஒரு தெருவில் தனி மனிதர் திருந்தினால் அந்தத் தெருவே தூய்மையடையும்! 

ஒரு தெரு தூய்மையடைந்தால் அந்தத் தெருவைக் காணும் அடுத்த தெருவில் உள்ளவர்கள் தங்கள் தெருவைத் தூய்மைப் படுத்திக் கொள்ள முன்வருவர்!

இப்படியாகத்தான் ஊர், நகரம், மாநிலம், என விரிவடைந்து நாடே ஒரு கட்டத்தில் தூய்மையடைய முடியும்! குப்பைத் தொட்டிகள் என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியிருப்பதை இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த வேண்டியுள்ளது!

சாக்கடைகளில் கண்ட கண்ட பொருட்களை கொட்டிவிட்டு அவற்றை துப்புறவுத் தொழிலாளர்கள் அவ்வப்போது வந்து சேகரித்து கடும் துர்நாற்றத்துடன் தெரு ஓரங்களில் குவித்து வைத்துவிட்டுச் சென்று அவை மீண்டும் வாகனங்கள் வாயிலாக அப்புறப்படுத்தப்படும் வரை அந்த நாற்றத்தை அனுபவிக்கும் மக்களின் செயலை என்னென்பது?

அதுமட்டுமன்றி இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் அடைபடும் சாக்கடைகளில் போக வேண்டிய கழிவு நீர் மழைக்காலங்களில் தெரு முழுவதும் தாழ்வான இடங்களில் அமைந்துள்ள குடியிருப்புகளிலும் புகுந்து விதவிதமான நோய்கள் பரவுவதற்கும், சாக்கடைகள் குப்பைகளால் அடைபட்டு கழிவு நீர் தேங்குவதால் ஏராளமான கொசு உற்பத்திப் பண்ணைகளாக விளங்குவதற்கும் காரணம் மக்கள்தாம்!

தாங்களே தவறுக்கு மேல் தவறு செய்துவிட்டு ஊராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சரியில்லை என்று குற்றம் சாட்டுவது நம் மக்களின் வாடிக்கையாகிவிட்டது!

குடிநீர் பிடிக்கும் குழாயைச் சுற்றி மழைக் காலங்களில் வெளியேற வழியில்லாமல் தண்ணீர் தேங்கியுள்ளது என்று தெரிந்தும் அந்த நீர் வெளியேறச் சற்று வழியேற்படுத்தி அந்த இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் சாக்கடைக் கழிவு நீர் போலக் கொசுக்கள் மொய்த்திருக்கும் நிலையில் அந்த சகதி நீரில் நின்று குடிநீர் பிடிப்பதோடு மட்டுமன்றி இதற்கும் ஊராட்சி நகராட்சி ஊழியர்கள்தாம் காரணம் எனப் பழி போடுவதும் நம் மக்களின் வாடிக்கை!

தெருவிற்குத் தெரு குப்பைத் தொட்டி வைத்திருந்தாலும் அதில் குப்பைகளைக் கொட்டாமல் அதற்கு அருகிலேயே கொட்டுவதும், சாலையோரங்களில் குப்பைகளைக் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதும் வீட்டிற்கு வெளியே வீசியெறிவதும் மக்களின் வாடிக்கையான செயலாகிவிட்டது!

இந்த நிலையில் இந்தத் திட்டமும் பாரதப் பிரதமர் அறிவித்துள்ள ஆறுகள் கால்வாய்களைத் தூய்மைப் படுத்தும் திட்டமும் வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென்றால் மாற்று வழி ஒன்றுதாம் உள்ளது! 

வல்லரசான அமெரிக்க நாட்டில் வாரத்திற்கு இரண்டு நாட்களை விடுமுறையாக்கி மக்கள் அந்த இரண்டு தினங்களையும் முழுமையாக ஓய்வாகக் கழிக்கின்றனர்!

நம் நாட்டிலும் அதே போன்று வாரத்திற்கு .இரண்டு நாட்களை விடுமுறையாக்க வேண்டும்! அதில் ஒரு நாளை நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் அவரவர் பகுதிகளை தூய்மைப் படுத்த வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்!

குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், மற்றும் அதி முக்கிய பொறுப்பிலுள்ள மருத்துவர்கள் போன்ற விதிவிலக்கானவர்கள் தவிர அனைவரும் கட்டாயம் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயச் சட்டமாக்கப்பட வேண்டும்!

குழுவாக இணைந்து ஆறுகள் கால்வாய்கள் போன்ற முக்கியமான இடங்களைத் தூய்மைப்படுத்த விரும்புபவர்களுக்கு இரயில், பேருந்து போன்றவைகளில் அவர்கள் தூய்மைப் பணி ஆற்ற வேண்டிய இடங்களுக்கு இலவசமாகச் சென்று திரும்பும் வசதிகளை மத்திய மாநில அரசுகள் செய்து தர வேண்டும்!

குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது இந்தத் திட்டம் நம் நாட்டில் செயல்படுத்தப்பட்டால் நாடும் சுத்தமாகும்! கண்ட கண்ட வியாதிகளில் இருந்து மக்களும் விடுபடும் நிலை உருவாகும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!