சனி, 28 மார்ச், 2015

மேகதாதுவில் அணை கட்டுவதால் யாருக்கு இலாபம்?

Leave a Comment
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டுவதை எதிர்த்து இன்றைக்கு தமிழக விவசாய சங்கங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகக் தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

வெள்ளையர்கள் நம் நாட்டு மக்களைப் பிரித்தாண்ட சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியதற்குப் பிரதான் காரணம்.

மாநிலம் விட்டு வேறு மாநிலங்களில் ஓடும் ஆறுகளை அவை உற்பத்தியாகும் இடம் அமைந்துள்ள மாநிலங்கள் இந்த ஆறுகள் முற்றிலும் தமக்கே உரியவை என்ற தவறான நோக்கில் அணை கட்டித் தேக்க முற்படுவதும்

இவற்றை மத்தியில் ஆளும் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும், இது குறித்து உச்ச வாய்மை மன்றம் வரை வழக்குகள் வருடக்கணக்கில் நடைபெற்று வருவதும் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடத்தும் ஒரு மோசமான யுத்தம் எனவே கூறலாம்.

ஆறுகள் உற்பத்தியாகும் மலைப் பிரதேசங்கள் ஊழல் அரசியல்வாதிகளால் காபி, தேயிலை எனப் பணப்பயிர்கள் நிறைந்த எஸ்டேட்டுகளாக வளைக்கப்பட்டு அங்கிருந்த அடர் மரங்கள் நிறைந்த வன வளம் முற்றிலும் சூறையாடப்பட்டதின் விளைவுதான் இன்று ஆறுகள் போதிய மழையின்றி வற்றிப் போகும் நிலைக்கு அதி முக்கிய காரணமென்பது நம் மக்களுக்கு இன்னும் புரிபடவே இல்லை!

அடர்வனமாகக் கிடந்த தமிழக கர்நாடக மலைப்பிரதேசங்களை வெயிலின் கொடுமையைத் தாங்காத ஆங்கிலேயர்கள் தங்களின் வசிப்பிடமாக மாற்ற முற்பட்டு, அங்கிருந்த வன வளத்தை அழித்ததின் பின் தொடர்ச்சியாக நம் அரசியல்வாதிகள் வெள்ளையர்களை விட அதி வேகமாக வனப்பிரதேசங்களை அழித்து வந்ததின் விளைவுதான் இன்று இந்த நாடு மழை மறைவுப் பிரதேசமாக மாறிவிட்டதின் பின்னணியாகும்.

இந்தப் பின்னணியின் விளைவுதான் இன்று தமிகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் காரணமாகும். இந்தப் போராட்டத்தின் எதிரொலி எப்படி இருக்கும் என்பதை யாமறியோம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! கர்நாடக அரசு பிடிவாதமாகச் செயல்பட்டு மேகதாதுவில் அணை கட்டி முடித்து தமிழகத்திற்கு பிச்சையாக வரும் உபரித் தண்ணீரையும் சேமித்துவிட்டால்

தமிழகத்தில் காவிரி என்ற ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது என்பதாகவும் அந்த ஆறு இருந்த இடமே தெரியாத அளவிற்கு தமிழகத்தை ஆண்டு வந்த இரு பெரும் திராவிட இயக்கங்கள் தங்கள் தங்கள் தலைவர்களின் பெயரில் பிளாட்டுகள் போட்டும், வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு அடி மாட்டு விலையில் ஆற்று நிலங்களை விற்று ஏப்பம் விட்டுவிட்டனர் எனவும்,

இந்த ஆறு ஓடிய இடங்களில் இருந்த மிச்சம் மீதி மணல் முழுவதும் கர்நாடக மாநிலத்திற்கே விற்று ஏப்பம் விட்டு சுவிஸ் வங்கிகளில் இந்தப் பணத்தை முதலீடு செய்து விட்டு வாரத்திற்கு ஒரு முறை சுவிஸ் நாட்டு மலைப் பிரதேசங்களில் ஓய்வெடுப்பதற்குச் சென்று வருகின்றனர் எனவும்,

சுவிஸ் நாடு சென்று ஓய்வெடுத்து வரும் எங்கள் தங்கத் தலைவரே தலைவியே உங்களை வாழ்த்த வயதில்லை பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம் என்று அரசியல் ஜால்ரா துதிபாடிகள் தங்களின் அனைத்துக் கட்சி கூட்டணிகளுடன் இனைந்து ஆயிரம் அடி உயரக் கட் அவுட்டுகள் தமிழமெங்கும் சந்து பொந்தெல்லாம் வைத்து காட்சியளிப்பதை சகித்தும்தான்

இனி வருங்காலத் தமிழினச் சந்ததி வரலாற்றுப் பாடத்தில் படித்துதான்  காவிரியின் கதி பற்றி உணர முடியும்!
Read More...