காவிரியில் கழிவு நீர்

காவிரியில் கழிவு நீர் கலப்பதாக தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் கருநாடக அரசிற்குக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். 

காவிரி மட்டுமன்றி தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் சாக்கடைக் கழிவு நீர் மட்டுமன்றி அபாயகரமான கழிவுகளான சாயக் கழிவு, 

தோல் தொழிற்சாலைக் கழிவு, 
காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் கழிவு, 

வாகனங்களைக் கழுவி வெளியேற்றும் ஆயில் மற்றும் கிரீஸ் கலந்த கழிவு, 

எனப் பல்வேறு விதமான கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை ஆறு மற்றும் கால்வாய்களின் ஓரத்திலேயே அமைத்துக் கொண்டு வெளியேற்ற அனுமதி கொடுத்தும் 

வீடுகள் அலுவலகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகளை கால்வாய்கள் வழியாக ஆறுகளில் கலந்து வந்த முதற் குற்றவாளிகள் இரு திராவிட இயக்கங்கள்தாம்.

இவர்கள் தவிர கட்சி பேதமின்றி தேர்தலுக்குத் தேர்தல் இந்த இரு அணிகளில் மாறி மாறி தொகுதிப் பிரதிநிதித்துவம் பெரும் அனைத்து இயக்கத் தலைவர்களும் இந்தக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களின் இயக்கங்களில் ஏதேனும் ஒரு பதவியோ அல்லது செல்வாக்கோ வகிப்பதை மறந்துவிட்டு அறிக்கை விடுத்துள்ளனர். 

முதலில் இவர்கள் தங்கள் இயங்கங்களில் அங்கம் வகிப்பவர்களின் தொழிற்சாலைகளில் வெளியேற்றும் கழிவு நீரைச் சுத்திகரிக்காமல் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கலந்தால் இயக்கத்தை விட்டு விலக்கப்படுவர் என அறிக்கை விட்டால் அது வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. 

அதை விடுத்து ஏதோ பொது மக்களின் பாதுகாவலர்கள் போல மினரல் வாட்டரில் குளிக்கும் இது போன்ற தலைவர்கள் வெற்று விளம்பரங்களுக்காகவும் வாக்கு வங்கியைக் குறி வைத்தும் இது போன்று அறிக்கைகள் விடுவதை இனியாவது தவிர்க்க வேண்டும்

ஈரோட்டில் காலை ஆறு மணியளவில் சத்தி பிரதான சாலையில் ஓடும் ஒரு கால்வாயைக் கடக்கும்போது அதில் வெளிப்படையாகக் கலந்து ஓடும் சாயக் கழிவு நீர் என் போன்ற பாமரர்களின் கண்களில் மட்டும் அப்பட்டமாகச் சாய நீராகத் தெரிந்து தொலைக்க மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் கண்கள் மட்டும் கருப்புக் கண்ணாடி அணிந்து காண்பதால் அது சாக்கடைக் கழிவு நீராகக் காட்சியளிக்கிறது போலும். 

கண்ணை மூடிக்கொண்டு பெயருக்குச் செயல்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மக்களின் நலன் கருதி தொடர்ந்து இடைவிடாமல் இது போன்ற குற்றங்களை இழைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து 

முதலில் தமிழக அளவில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் மாசடைவதைத் தடுத்துவிட்டுப் பிறகு காவிரி போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வரும் ஆறுகளில் கலக்கப்படும் கழிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் வாரியத்திடம் முறையீடு செய்தால் அதுதான் பொருத்தமான செயலாகும்.

முதலில் நாம் திருந்துவோம். பிறகு திருந்த வேண்டியவர்கள் நம்மைப் பார்த்து வெட்கப்பட்டுத் தாமாகத் திருந்துவர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!