செவ்வாய், 16 ஜூன், 2015

சுடுகாட்டிற்கு வழி!!

Leave a Comment
பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எத்துணை முறை படித்தாலும் எமது தாகம் தீர்வதில்லை!

சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு நிகழ்வைப் படிக்க நேர்ந்தது!

பெருந்தலைவர் முதல்வராக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் ஐயா எங்கள் கிராமத்து சுடுகாட்டிற்கு வழி இல்லை! எனவே சுடுகாடு செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என வேண்டினராம்!

உடனே கர்மவீரர் நான் உங்களின் வாழ்க்கை வசதிகள் முன்னேறுவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் எதற்கு சுடுகாட்டிற்கு வழி கேட்கிறீர்கள் என்றாராம்!

இதைப் படித்தவுடன் என்னுள் சிரிப்பலைகளும் அதனுடனே எனது கண்களில் கண்ணீரும் வழிந்தோடியது!

எந்த நேரமும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர் சுடுகாட்டிற்கு வழி கேட்ட மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று எண்ணி அளித்த பதிலைப் படித்தவுடன்

சாராய ஆலைகளுக்கு முதலாளிகளாக விளங்கி,  குடிக்கு அடிமைகளாக பல தமிழ்த் தலைமுறைகளை விளங்க வைத்து,

அவர்தம் குடும்பங்களைக் கண்ணீரில் மிதக்க விட்டு,

குடித்துக் குடல் வெந்து செத்துச் சுடுகாடு சென்றவர்களின் சுடுகாட்டுக்கூரைகளிலும் ஊழல் செய்து,

அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் மக்களை வெட்டி வீழ்த்திச் சுடுகாட்டிற்கு அனுப்பும்

 இன்றைய அரசியல்வியாதிகளை நினைந்து

கர்ம வீரரின் நல்ல உள்ளம் புரிந்து இனியாவது இவர்கள் திருந்த வழி காட்ட வேண்டும் என்றுதாம் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலிடம் வேண்ட முடிகிறது!

Read More...

வாய்மை மன்ற உறுப்பினர்!!

Leave a Comment

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் அமையும் வருங்கால வாய்மை மன்ற (இன்றைய சட்டமன்ற) உறுப்பினர்!!

பதவியேற்ற நொடி முதல் தனக்கு வாக்களிக்காத மக்கள் உட்பட அனைவருக்கும் கட்டுப்படும் அரசு ஊழியராகிறார்! 

தொகுதியில் உள்ள இவரது அலுவலகத்துடனே இவரது வசிப்பிடமும் இனி அமைவதால் எந்நேரமும் இவரை மக்கள் இருபத்து நான்கு மணி நேரமும் தங்கு தடையின்றித் தொடர்பு கொள்ள முடியும்! 

உயர் அரசு அலுவலர்கள், செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், காவல் உயர் அலுவலர்கள் என எவராயினும் இவரைப் பொறுத்தவரை சாதாரண மக்களுக்குச் சமமானவர்கள்தாம்! இவரது அலுவலகத்தில் இவரைச் சந்திக்க சாமானியருக்கே முன்னுரிமை!

இவருக்கு உதவியாகச் செயல்படும் அரசு அலுவலர்கள் தவிர இவரது அலுவலகத்தில் இவரது இயக்கம் சார்ந்த எவரும் என்றைக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்! 

இவரது பணியில் இவரது இயக்கம் சார்ந்தவர்களோ, அல்லது உறவினர்களோ எவ்வகையிலேனும் குறுக்கீடு செய்தால் உடனடியாகக் காவல்துறை வசம் ஒப்புவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவர்! அதையும் தாண்டி வரம்பு மீறுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தக்க வாய்மை மன்ற விசாரணைத் தீர்ப்பின்படி தண்டனை பெறுவர்!

காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை இவரது பணி அலுவலகத்தில் என்பதால் அதுவரை தொகுதி மக்கள் இவரைத் தவறாமல் தினசரி அங்கு சந்திக்க முடியும்! இவருக்கும் அலுவலகத்தில் வருகைப் பதிவேடு பராமரிக்கப்படும்! 

அலுவலகத்தில் இவர் வாங்கும் மனுக்கள் உடனுக்குடன் தலை நகரில் அமைந்துள்ள வாய்மை மன்றம் சென்றடைந்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாகத் தீர்வு காணுமாறு செய்யப்பட்டிருக்கும் நெட் ஒர்க் கட்டமைப்பு முறை!

மதிய உணவிற்குப் பிறகு மாலை மூன்று மணி முதல் இரவு ஆறு மணி வரை நாளுக்கு ஒரு பகுதி என முறை வைத்துத் தொகுதி முழுவதும் பயணித்து மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கவனித்து இதே நெட் ஒர்க் முறையில் ஆவண செய்வார்!

மாதத்தில் இரு நாட்கள் மட்டுமே இவர் தலைநகர் செல்ல முடியும்! அங்கும் அவர் தலைமை வாய்மை மன்றத்தில் மட்டுமே தங்கியிருந்து தம் தொகுதி சார்ந்த முடிக்கப்படாத வேலைகள் குறித்து தலைமை வாய்மை மன்ற நடுவர்கள் முன்பு விவாதித்துத் தீர்வு காணுவார்!

அரசு அலுவலர்கள், காவல் அலுவலர்கள் அனைவரிடமும் மதிப்புடனும் மரியாதையுடனும் பழகித் தம் தொகுதி சார்ந்த மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப் பாடுபடுவார்!

இவருக்கும் சாதாரண மக்களுக்கு உரிய அதிகாரம் போலத்தாம் அரசு சார்ந்த அலுவலர்களிடம் நடந்து கொள்ள முடியும்! அரசு அலுவலகங்களுக்குத் தம் தொகுதிப் பணி காரணமாக இவர் செல்ல நேர்ந்தால் அரசு ஊழியர்கள் அவரவர் இடத்தில் அமர்ந்தவாறே அவருக்குத் தேவைப்படும் கடமைகளை நிறைவேற்றித் தருவர்!

தம்முடைய பதவிக் காலம் முடிவடைந்தவுடன் ஐந்தாண்டுகள் மக்களுக்குச் சேவை செய்த மன நிறைவுடன் ஐந்தாம் தமிழ்ச்சங்க இயக்கம் சார்ந்த மக்கள் சேவைப் பணிகளில் மீண்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் மறுபடியும் இந்தத் தொகுதி மட்டுமல்லாமல் இனி எந்தத் தொகுதியிலும் அவர் போட்டியிடவே மாட்டார்!

ஏனென்றால் ஐந்தாம் தமிழ்ச்சங்க வாய்மை மன்ற உறுப்பினருக்கு சுயநலம் கிடையாது! வாரிசு உரிமை அறவே கிடையாது! சர்வாதிகாரத் தன்மை கிடையாது! ஆதிக்க மனப்பான்மை கிடையாது! 

மக்களுக்குச் சேவை செய்ய அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தாம் என்பதில் அவர் உறுதிமிக்க தீர்மானமானவர்! இவருடைய பதவிக்காலத்தில் ஏதேனும் சிறு தவறு இவரால் நேர்ந்தால்கூட இவரது பதவியைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு உண்டு என்ற கடுமையான விதிக்குட்பட்டவர்!

இது எமது தமிழ்க்கனவு! கனவு மெய்ப்பட வேண்டும்!

Read More...

வெள்ளி, 5 ஜூன், 2015

கற்பிழந்து போன காவிரியின் அவலக் கதை!

Leave a Comment
கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்போம் என்று முழங்கிய பாரதி இன்றிருந்திருந்தால் அந்த வரிசையில் என்னையும் சேர்த்துப் பாடியிருப்பான் என்பது நிச்சயம்!

தமிழர்கள் காவிரி என்று எனக்கு ஏன்தான் இந்தப் பெயர் வைத்தார்கள் என நான் வருந்த வேண்டிய பரிதாப நிலையில்தான் இன்றுள்ளேன்!

நான் தோன்றிய காலம் துவங்கி இதோ இந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை எனது பாதையில் வெள்ளையர்கள் துவங்கி சுயநல அரசியல்வாதிகள் வரை கட்டிய அணைகள் காரணமாக கடல் போல் விரிந்து பரந்தவள் என்ற என்னுடைய பெயருக்கு உரிய விளக்கமே பொய்யாகிப் போனது!

தன்னை நம்பியுள்ள உயிர்கள் மற்றும் பயிர்களின் தாகத்தினைத் தீர்த்து ஆற்றுபடுத்துவதனாலேயே ஆறு எனப் பெயர் பெற்ற நான் இன்றோ சுயநலமாகக் கட்டப்பட்ட அணைகளில் உயிரற்ற உடலாக ஆங்காங்கே தேங்கித் தவிக்கிறேன்!

ஓடிக் கொண்டிருந்தால்தான் அது ஆறு! ஓடாமல் தங்கி விட்டால் அது குட்டை. என்னுடைய இன்றைய நிலையும் இந்தக் குட்டைக்குச் சமம்தான்!

என்னை நம்பியிருக்கும் மனித உயிர்களே இன்று என்னை அலங்கோலப்படுத்துவதாலேயே நான் கற்பிழந்து போனவளானேன்! 

என்னுடன் சங்கமமாகும் எனது தோழிகளாக விளங்கிய பல ஆறுகள் இன்று காணாமல் போய்விட்டனர்!

அவர்களில் நொய்யல் திருமணி முத்தாறு போன்றவர்கள் இன்று சாயக் கழிவுகளாலும், சாக்கடைக் கழிவுகளாலும் மாசுபடுத்தப் பட்டு அலங்கோலமாகிச் சீரழிந்துவிட்டனர்!

எனது மடியிலிருந்து ஒரு காலத்தில் அமுதெமெனச் சுரந்த நீர் இன்று சாயக் கழிவுகளாலும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளாலும், வயல்களில் கலக்கும் இரசாயன உரங்களாலும், சாக்கடைக் கழிவுகளாலும், இன்னும் ஏராளம் என் கரையில் கட்டப்பட்ட விசம் கக்கும் ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளாலும், என்னுடைய நீர் சுரக்கும் மடி நஞ்சாக்கப்பட்டும் நான் கற்பிழந்து போனேன்!

என்னைத் தாயெனப் போற்றும் இதே மனித இனம் என்னுள் கலந்த நஞ்சு கலந்த நீரைப் பருகி ஏராளமான வியாதிகளை வாங்கி உயிர் வெளியேறி உடல் சாம்பலாகி அந்த வியாதிச் சாம்பலும் என்னுள் கரைக்கப்பட்டு வியாதி வளர்ப்பதை உயிரற்ற உடலாகக் காட்சியளிக்கும் நிலையிலும் கண்டு பதறும்  இந்தத் தாயின் கண்ணீர்த் துளிகள் என்னையன்றி வேறு எவரும் அறிய இயலாது!

போதாத குறைக்கு பரிகாரம் என்ற பெயரில் என்னுள் ஏராளமான பரிகாரப் பொருட்களும், உடுத்தி அழுக்கேறிய துணிகளும், பிணச் சாம்பலும், என் கரையெங்கும் புனிதத்தலங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே அசுத்தத் தலமாக்கப்படுவதையும் என்னை நாசமாக்கும் பக்தி மார்க்கங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே மறுக்கின்றன!

என்னுள் வாழ்ந்து என்னுள் கலக்கும் கழிவுகளை உண்டு சுத்தப்படுத்தும் கடமையைச் செய்து வரும் மீன் போன்ற உயிரினங்களை உயிர்த் தத்துவம் அறியாத, உயிர்களின் பிறவி நோக்கம் அறியாத சுயநல மனித இனம், இவை படைக்கப்பட்டதே தனக்குத்தான் என அளவிற்கு அதிகமாக வலையிட்டு வாரி உண்பதால் என்னுள் கலக்கும் கழிவுகள் சுத்திகரிக்க இயலாமல் அப்படியே நஞ்சாகித் தங்கிவிட்டன! 

போதாத குறைக்கு ஓடிக் கொண்டிருந்தால்தான் ஒரு ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் என்ற இயற்கை விதியை மறந்த மனித இனம் என்னை அணைகள் கட்டித் தேக்கி விட்டதால் என் மடியில் சுரக்கும் நீர் இப்பொழுது நஞ்சுதான்!

என்னை நம்பியுள்ள என் பிள்ளைகளே என் கற்பினைச் சூறையாடிவிட்ட நிலையில் இனி நான் எந்த உச்ச வாய்மை மன்றத்தில் வழக்கு தொடுத்து எனது கற்பின் மேன்மையை மீட்டெடுக்க முடியும்?

கற்பிழந்த பெண்ணுக்கும் மறு வாழ்வு கொடுக்க ஒரு நல்ல ஆண்மகன் இந்த உலகில் உண்டு! 

அவ்வப்போது வெள்ள காலங்களில் மட்டுமே நான் சரணடயும் என் கடல் கணவன் ஒருவேளை தன் உப்புத் தன்மை நீங்கி அங்கிருந்து நான் தேங்கியிருக்கும் அணைகளைத் தேடி வந்து எனக்கு மறு வாழ்வு தர வேண்டுமாயின் 

என்னைக் கற்பிழக்கச் செய்த இந்த மனித இனம் ஒரு மாபெரும் பிரளயத்தைச் சந்தித்து மாண்ட பின்னர்தான் இழந்த எனது கற்பு மீட்டெடுக்க இயலும் என்பதும் விதியாகும்! 

இந்த விதியை இன்று வரை என்னை நாசப்படுத்தும் இந்த மனித இனத்தால் நிச்சயம் மாற்றி எழுதவே இயலாது என்பதுதாம் கண்கூடான உண்மை! 

Read More...

செவ்வாய், 2 ஜூன், 2015

தமிழகத்தின் இப்போதய தேவை! சர்வாதிகாரமற்ற அரசியல் இயக்கங்கள்!

Leave a Comment

வல்லரசு நாடாக உலகெங்கும் கருதப்படும் அமெரிக்காவில்கூட ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இரு அரசியல் இயக்கங்கள் மட்டுமே உள்ளன.

பாரதப் பாராளுமன்ற அமைப்பு உருவாகக் காரணமான பிரிட்டன் பாராளுமன்றத்தில்கூட இதே நிலைதாம்.

இது மட்டுமன்றி இந்த இயக்கங்களில் இயக்க உறுப்பினர்களின் ஒட்டு மொத்த ஆதரவினைப் பெற்று விளங்கும் தலைவர்கள் நாட்டு மக்களின் அமோக ஆதரவு பெற்று நாடாளும் நிலை வந்தால்கூட அவர்களின் பதவிக் காலம் அதிகபட்சம் பத்தாண்டுகள்தாம். 

அதன் பிறகு இந்தத் தலைவர்கள் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் வெளியேறி  தகுதி மிக்க பல்வேறு புதிய தலைவர்கள் வருவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதே இந்த நாடுகளில் உள்ள சனநாயக நடைமுறை!

வாசிங்டன், கென்னடி, ஒபாமா, என அமெரிக்காவிலும், தாட்சர், கேமரூன் என பிரிட்டனிலும் உலக மக்கள் தொடர்ந்து ஆரோக்கியமான தலைவர்களைக் கண்டு வருகின்றனர்.

நம் நாட்டின் நிலையோ இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது பரிதாபகரமான நிலைதாம். சர்வாதிகாரத் தலைவர்களைக் கொண்ட இயக்கங்களையும் அவர்களின் தலைவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய இடமே கிட்டாது! 

உலகிலேயே அதிக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் பிடித்து ஏராளமான வாக்காளர்களை உடைய நம் பாரத நாட்டில் உள்ள இயக்கங்களின் நிலையோ சர்வாதிகாரிகளின் இருப்பிடமாகத்தாம் திகழ்கின்றன! 

அரசியல் இயக்கங்கள் துவங்கி, சாதிகளுக்காக, மதங்களுக்காக, ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் இயக்கங்களில் பாரதத்தைப் பொருத்தவரை முழுக்க முழுக்க சர்வாதிகாரிகள்தாம்!

தனி மனித ஆதிக்கம்தான் இந்த இயக்கங்களில் தலைவிரித்து ஆடுகிறது. இவர்களை எதிர்ப்பவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படும் பரிதாப நிலை!

தனி மனிதத் துதிபாடிகள் நிறைந்த பக்திச் சபை போலத்தான் நம் நாட்டு அரசியல் இயக்கங்கள் திகழ்கின்றன! 

இயக்கத்தை துவக்கும் தனி நபரோ அல்லது இயக்கத்தைக் கைப்பற்றித் தன் பிடிக்குக் கொண்டுவரும் எவரோ அவர்களே அந்த இயக்கம் உள்ளவரை இயக்கத்தின் தலைவராகத் தொடர முடியும்! 

நம் நாட்டின் போதாத காலத்திற்கு அந்தத் தலைவருக்கு வாரிசுகள் இருந்து தொலைத்துவிட்டால் வேறு எவரும் அந்தத் தலைவர் குடும்பம் தவிர தலைமை ஏற்க முடியவே முடியாது!

தேர்தல் ஆணைய நடைமுறைக்கென இந்த இயக்கங்களில் தேர்தல் நடத்தப்பட்டாலும் அது வெறும் கண் துடைப்பிற்காகத்தான்! 

சன நாயக அமைப்புகள் என இவைகள் மார்தட்டிக் கொண்டாலும் சர்வாதிகார அமைப்புகள்தாம் இவை என்பது தேர்தல் ஆணையத்திற்கே நன்கு விளங்கும்!

நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதற்கொண்டும் அதற்கு முன்னர் துவக்கப்பட்ட இயக்கங்களில்கூட இதுவரை செல்வாக்கு மிக்க தலைவர்கள் ஆதிக்கம் செழுத்தி வந்துள்ள பதவிக்கு எதிராக ஒரு சாமான்யன்கூடப் போட்டியிட்டதாகவோ வெற்றி பெற்றதாகவோ எமது அறிவிற்கு எட்டியவரை செய்தி கிட்டியதில்லை!

படிக்காத மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு திகழ்ந்த இந்த நாடு இன்றோ படித்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தும் தனி மனிதத் துதிபாட்டு மன்றங்களாகத் திகழும் இது போன்ற இயக்கங்களை இன்னமும் ஆதரிப்பதுதாம் எம்முள் வியப்பலைகளை ஏற்படுத்துகிறது!

தனி மனித ஆதிக்கம் செழுத்தும் இது போன்ற அமைப்புகளை முற்றிலும் நிராகரிக்கும் அறிவுத் தெளிவு மிக்கவர்களாக பாரத அளவில் இல்லாமல் போனாலும் 

ஏராளமான படித்த இளைய சமுதாயம் நிறைந்த நம் தமிழகத்திலாவது புதிய ஒரு சகாப்தம் உருவாக வேண்டுமென்பதே இப்போதைக்கு எம்முன் நிறைவேறாத எதிர்காலத்தில் நிறைவேறப் போகும் ஏக்கமுள்ள தமிழ்க்கனவாகும்! 

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஒரு வேளை தமிழக இளைய சமுதாயத்தின் துணை கொண்டு துவங்கி வளர்ந்து மக்களால் ஏற்கப்படும் காலம் உருவானால் அது நிச்சயம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ளது போன்று உண்மையான ஒரு சனநாயக அமைப்பாக விளங்கி பாரத நாட்டிற்கே வழி காட்டியாகத் திகழும் என்பதில் எம்முள் எவ்வித ஐயமும் கிடையாது!

Read More...