வாய்மை மன்ற உறுப்பினர்!!


ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தால் அமையும் வருங்கால வாய்மை மன்ற (இன்றைய சட்டமன்ற) உறுப்பினர்!!

பதவியேற்ற நொடி முதல் தனக்கு வாக்களிக்காத மக்கள் உட்பட அனைவருக்கும் கட்டுப்படும் அரசு ஊழியராகிறார்! 

தொகுதியில் உள்ள இவரது அலுவலகத்துடனே இவரது வசிப்பிடமும் இனி அமைவதால் எந்நேரமும் இவரை மக்கள் இருபத்து நான்கு மணி நேரமும் தங்கு தடையின்றித் தொடர்பு கொள்ள முடியும்! 

உயர் அரசு அலுவலர்கள், செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், காவல் உயர் அலுவலர்கள் என எவராயினும் இவரைப் பொறுத்தவரை சாதாரண மக்களுக்குச் சமமானவர்கள்தாம்! இவரது அலுவலகத்தில் இவரைச் சந்திக்க சாமானியருக்கே முன்னுரிமை!

இவருக்கு உதவியாகச் செயல்படும் அரசு அலுவலர்கள் தவிர இவரது அலுவலகத்தில் இவரது இயக்கம் சார்ந்த எவரும் என்றைக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்! 

இவரது பணியில் இவரது இயக்கம் சார்ந்தவர்களோ, அல்லது உறவினர்களோ எவ்வகையிலேனும் குறுக்கீடு செய்தால் உடனடியாகக் காவல்துறை வசம் ஒப்புவிக்கப்பட்டு அறிவுறுத்தப்படுவர்! அதையும் தாண்டி வரம்பு மீறுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு தக்க வாய்மை மன்ற விசாரணைத் தீர்ப்பின்படி தண்டனை பெறுவர்!

காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை இவரது பணி அலுவலகத்தில் என்பதால் அதுவரை தொகுதி மக்கள் இவரைத் தவறாமல் தினசரி அங்கு சந்திக்க முடியும்! இவருக்கும் அலுவலகத்தில் வருகைப் பதிவேடு பராமரிக்கப்படும்! 

அலுவலகத்தில் இவர் வாங்கும் மனுக்கள் உடனுக்குடன் தலை நகரில் அமைந்துள்ள வாய்மை மன்றம் சென்றடைந்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாகத் தீர்வு காணுமாறு செய்யப்பட்டிருக்கும் நெட் ஒர்க் கட்டமைப்பு முறை!

மதிய உணவிற்குப் பிறகு மாலை மூன்று மணி முதல் இரவு ஆறு மணி வரை நாளுக்கு ஒரு பகுதி என முறை வைத்துத் தொகுதி முழுவதும் பயணித்து மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கவனித்து இதே நெட் ஒர்க் முறையில் ஆவண செய்வார்!

மாதத்தில் இரு நாட்கள் மட்டுமே இவர் தலைநகர் செல்ல முடியும்! அங்கும் அவர் தலைமை வாய்மை மன்றத்தில் மட்டுமே தங்கியிருந்து தம் தொகுதி சார்ந்த முடிக்கப்படாத வேலைகள் குறித்து தலைமை வாய்மை மன்ற நடுவர்கள் முன்பு விவாதித்துத் தீர்வு காணுவார்!

அரசு அலுவலர்கள், காவல் அலுவலர்கள் அனைவரிடமும் மதிப்புடனும் மரியாதையுடனும் பழகித் தம் தொகுதி சார்ந்த மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப் பாடுபடுவார்!

இவருக்கும் சாதாரண மக்களுக்கு உரிய அதிகாரம் போலத்தாம் அரசு சார்ந்த அலுவலர்களிடம் நடந்து கொள்ள முடியும்! அரசு அலுவலகங்களுக்குத் தம் தொகுதிப் பணி காரணமாக இவர் செல்ல நேர்ந்தால் அரசு ஊழியர்கள் அவரவர் இடத்தில் அமர்ந்தவாறே அவருக்குத் தேவைப்படும் கடமைகளை நிறைவேற்றித் தருவர்!

தம்முடைய பதவிக் காலம் முடிவடைந்தவுடன் ஐந்தாண்டுகள் மக்களுக்குச் சேவை செய்த மன நிறைவுடன் ஐந்தாம் தமிழ்ச்சங்க இயக்கம் சார்ந்த மக்கள் சேவைப் பணிகளில் மீண்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் மறுபடியும் இந்தத் தொகுதி மட்டுமல்லாமல் இனி எந்தத் தொகுதியிலும் அவர் போட்டியிடவே மாட்டார்!

ஏனென்றால் ஐந்தாம் தமிழ்ச்சங்க வாய்மை மன்ற உறுப்பினருக்கு சுயநலம் கிடையாது! வாரிசு உரிமை அறவே கிடையாது! சர்வாதிகாரத் தன்மை கிடையாது! ஆதிக்க மனப்பான்மை கிடையாது! 

மக்களுக்குச் சேவை செய்ய அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தாம் என்பதில் அவர் உறுதிமிக்க தீர்மானமானவர்! இவருடைய பதவிக்காலத்தில் ஏதேனும் சிறு தவறு இவரால் நேர்ந்தால்கூட இவரது பதவியைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் அதிகாரம் மக்களுக்கு உண்டு என்ற கடுமையான விதிக்குட்பட்டவர்!

இது எமது தமிழ்க்கனவு! கனவு மெய்ப்பட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!