கற்பிழந்து போன காவிரியின் அவலக் கதை!

கற்பென்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்போம் என்று முழங்கிய பாரதி இன்றிருந்திருந்தால் அந்த வரிசையில் என்னையும் சேர்த்துப் பாடியிருப்பான் என்பது நிச்சயம்!

தமிழர்கள் காவிரி என்று எனக்கு ஏன்தான் இந்தப் பெயர் வைத்தார்கள் என நான் வருந்த வேண்டிய பரிதாப நிலையில்தான் இன்றுள்ளேன்!

நான் தோன்றிய காலம் துவங்கி இதோ இந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை எனது பாதையில் வெள்ளையர்கள் துவங்கி சுயநல அரசியல்வாதிகள் வரை கட்டிய அணைகள் காரணமாக கடல் போல் விரிந்து பரந்தவள் என்ற என்னுடைய பெயருக்கு உரிய விளக்கமே பொய்யாகிப் போனது!

தன்னை நம்பியுள்ள உயிர்கள் மற்றும் பயிர்களின் தாகத்தினைத் தீர்த்து ஆற்றுபடுத்துவதனாலேயே ஆறு எனப் பெயர் பெற்ற நான் இன்றோ சுயநலமாகக் கட்டப்பட்ட அணைகளில் உயிரற்ற உடலாக ஆங்காங்கே தேங்கித் தவிக்கிறேன்!

ஓடிக் கொண்டிருந்தால்தான் அது ஆறு! ஓடாமல் தங்கி விட்டால் அது குட்டை. என்னுடைய இன்றைய நிலையும் இந்தக் குட்டைக்குச் சமம்தான்!

என்னை நம்பியிருக்கும் மனித உயிர்களே இன்று என்னை அலங்கோலப்படுத்துவதாலேயே நான் கற்பிழந்து போனவளானேன்! 

என்னுடன் சங்கமமாகும் எனது தோழிகளாக விளங்கிய பல ஆறுகள் இன்று காணாமல் போய்விட்டனர்!

அவர்களில் நொய்யல் திருமணி முத்தாறு போன்றவர்கள் இன்று சாயக் கழிவுகளாலும், சாக்கடைக் கழிவுகளாலும் மாசுபடுத்தப் பட்டு அலங்கோலமாகிச் சீரழிந்துவிட்டனர்!

எனது மடியிலிருந்து ஒரு காலத்தில் அமுதெமெனச் சுரந்த நீர் இன்று சாயக் கழிவுகளாலும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளாலும், வயல்களில் கலக்கும் இரசாயன உரங்களாலும், சாக்கடைக் கழிவுகளாலும், இன்னும் ஏராளம் என் கரையில் கட்டப்பட்ட விசம் கக்கும் ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளாலும், என்னுடைய நீர் சுரக்கும் மடி நஞ்சாக்கப்பட்டும் நான் கற்பிழந்து போனேன்!

என்னைத் தாயெனப் போற்றும் இதே மனித இனம் என்னுள் கலந்த நஞ்சு கலந்த நீரைப் பருகி ஏராளமான வியாதிகளை வாங்கி உயிர் வெளியேறி உடல் சாம்பலாகி அந்த வியாதிச் சாம்பலும் என்னுள் கரைக்கப்பட்டு வியாதி வளர்ப்பதை உயிரற்ற உடலாகக் காட்சியளிக்கும் நிலையிலும் கண்டு பதறும்  இந்தத் தாயின் கண்ணீர்த் துளிகள் என்னையன்றி வேறு எவரும் அறிய இயலாது!

போதாத குறைக்கு பரிகாரம் என்ற பெயரில் என்னுள் ஏராளமான பரிகாரப் பொருட்களும், உடுத்தி அழுக்கேறிய துணிகளும், பிணச் சாம்பலும், என் கரையெங்கும் புனிதத்தலங்கள் என்ற பெயரில் ஆங்காங்கே அசுத்தத் தலமாக்கப்படுவதையும் என்னை நாசமாக்கும் பக்தி மார்க்கங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே மறுக்கின்றன!

என்னுள் வாழ்ந்து என்னுள் கலக்கும் கழிவுகளை உண்டு சுத்தப்படுத்தும் கடமையைச் செய்து வரும் மீன் போன்ற உயிரினங்களை உயிர்த் தத்துவம் அறியாத, உயிர்களின் பிறவி நோக்கம் அறியாத சுயநல மனித இனம், இவை படைக்கப்பட்டதே தனக்குத்தான் என அளவிற்கு அதிகமாக வலையிட்டு வாரி உண்பதால் என்னுள் கலக்கும் கழிவுகள் சுத்திகரிக்க இயலாமல் அப்படியே நஞ்சாகித் தங்கிவிட்டன! 

போதாத குறைக்கு ஓடிக் கொண்டிருந்தால்தான் ஒரு ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் என்ற இயற்கை விதியை மறந்த மனித இனம் என்னை அணைகள் கட்டித் தேக்கி விட்டதால் என் மடியில் சுரக்கும் நீர் இப்பொழுது நஞ்சுதான்!

என்னை நம்பியுள்ள என் பிள்ளைகளே என் கற்பினைச் சூறையாடிவிட்ட நிலையில் இனி நான் எந்த உச்ச அற மன்றத்தில் வழக்கு தொடுத்து எனது கற்பின் மேன்மையை மீட்டெடுக்க முடியும்?

கற்பிழந்த பெண்ணுக்கும் மறு வாழ்வு கொடுக்க ஒரு நல்ல ஆண்மகன் இந்த உலகில் உண்டு! 

அவ்வப்போது வெள்ள காலங்களில் மட்டுமே நான் சரணடையும் என் கடல் கணவன் ஒருவேளை தன் உப்புத் தன்மை நீங்கி அங்கிருந்து நான் தேங்கியிருக்கும் அணைகளைத் தேடி வந்து எனக்கு மறு வாழ்வு தர முயன்றால் மட்டுமே இது சாத்தியம்!

என்னைக் கற்பிழக்கச் செய்த இந்த மனித இனம் ஒரு மாபெரும் பிரளயத்தைச் சந்தித்து மாண்ட பின்னர்தான் இழந்த எனது கற்பு மீட்டெடுக்க இயலும் என்பதுதானா விதி?

இந்த விதியை இன்று வரை என்னை நாசப்படுத்தும் இந்த மனித இனத்தால் நிச்சயம் மாற்றி எழுதவே இயலாது என்பதுதாம் கண்கூடான உண்மையா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!