கலாம் அவர்களின் கனவுகள் விதைக்கப்படப் போகின்றன.

எனக்குள் ஏற்பட்ட ஒரு உந்துதல் காரணமாக திரு அப்துல் கலாம் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு முதன்முறையாகக் கடந்த 22.07.15 அன்று ஒரு கடிதத்தை எழுதினேன். 

அந்தக் கடிதம் எழுதிய கணம் முதல் நேற்று 27.07.15 வரை  எனது இடது கண் புருவம் தொடர்ந்து பலமாகத் துடித்தவண்ணம் இருந்தது.

ஏதோ நிகழப் போவதாக என்னுள் ஒரு உள்ளுணர்வு. 

எனினும் அது நல்லதாகவே இருக்க வேண்டும் என்றே எனது ஆழ்மனதுக்குச் சொல்லி வந்தேன்.

எனினும் நாம் விரும்பாதது நடந்தே விட்டது. அந்த மாமனிதரை இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும், பாரத மக்களும், உலகெங்கும் வாழும் மக்களும் இழந்து தவிக்கிறோம்.

அலைகள் தாலாட்டும் இராமேசுவரம் மண்ணில் இந்த மாமனிதரின் உடல் நாளை புதைக்கப்பட்டாலும், பாரத இளைஞர்களைக் கனவு காணுங்கள் என உறக்கம் தட்டி எழுப்பிய அவர்தம் கனவுகள் புதைக்கப்படப் போவதில்லை.

அவை விதைக்கப்படப் போகின்றன. அந்தக் கனவுகள் முளைத்து ஆல்போல் உயரும்போது இந்த உலகம் முழுமையும் அவர் விரும்பிய கனவுகள்படியே காட்சியளிக்கும்!

நல்லோர்களின் மரணங்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததற்காகப் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று இசுலாத்தில்கூட வாழ்ந்தவர்களின் மறைவைத் துக்கமாக அனுசரிப்பதில்லை!

மாமனிதர் கலாம் அவர்கள் பாரதி கனவு கண்ட அக்கினிக் குஞ்சு! வயது காரமாக இந்த அக்கினிக் குஞ்சு தன் உடலெனும் சிறகுகள் உதிர்த்து விண்ணில் பறந்து பிரபஞ்சப் பேராற்றலில் கலந்துவிட்டாலும் 

நம் பாரத இளைஞர்கள் குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள்  அவரின் இலட்சியத் தீயைத் தம் நெஞ்சில் சுமந்து பெருந்தீயெனப் பற்றிப் பரவி இந்த தேசம் முழுவதும் வெந்து தணிந்து புதுயுகம் மலரப் பாடுபட வேண்டும்.

அவர் நம் தமிழகம் எவ்வாறெல்லாம் வரும் காலத்தில் திகழ வேண்டும் என ஒரு நூலைப் படைக்கத் துவங்கி அது முடிவு பெறாத நிலையில் வெளிவந்தாலும் அதை முழுமையாக முடித்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்களாக நம் தமிழக இளைய சமுதாயம் திகழ வேண்டும்.

கலாம் அவர்கள் கண்ட கனவுகள் அனைத்தும் அவர் இலக்காகத் தீர்மானித்த வரும்  2020 ஆம் ஆண்டுக்குள் மெய்ப்படும் காலம் உருவாக்கப்பட வேண்டும்

கலாம் அவர்களின் மறைவு கேட்டு வாடும் உள்ளங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறோம்!

கலாம் அவர்கள் காட்டிய வழியில் வழி நடப்போம் எனச் சூளுரைப்பதே நாம் அவருக்குச் செழுத்தும் மகத்தான அஞ்சலி என உறுதியேற்போம்!

மாமனிதர் கலாம் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழும்!

புவிப்பந்தில் தமிழகம் உள்ளவரை என்றென்றும் வாழ்வாங்கு வாழும் கலாம் அவர்களின் நீடித்த புகழ்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!