செவ்வாய், 7 ஜூலை, 2015

அழைத்தவர் குரலுக்கு வருவோம்!

Leave a Comment

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றார் கீதையிலே கண்ணன். வைணவனாகப் பிறந்ததாலே என்னவோ அவரின் வரிகளை இன்று வரை எங்கள் குடும்பம் பின்பற்றி வருகிறது.

நாங்கள் வணிகத்திற்கென சொந்த ஊரை விட்டு வேற்றூர் சென்று நிரந்தரமாகக் குடியேற வேண்டிய நிலையேற்பட்டது.

எங்கள் சொந்த ஊரிலிருந்து நாங்கள் குடியேறிய ஊர் சுமார் 70 கல் தொலைவில் இருந்தது. தொலைபேசி வசதிகள் துவங்கியிருந்த காலம் அது.

எங்கள் உறவினர்கள் தங்களின் குடும்பத் திருமணம் போன்றவற்றிற்கு எங்களை அழைக்க வேண்டுமென்றால் எங்கள் ஒரு குடும்பத்திற்காகவே இவ்வளவு தொலைவு வர வேண்டும். 

இரத்த உறவு சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களையும் குறிப்பாக வசதி குறைந்த குடும்பத்தவர்களை எனது தந்தை முடிந்தவரை ஒரு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தாலே நாங்கள் உங்கள் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வோம் எனத் தெரிவித்து அவர்களின் சிரமத்தைக் குறைப்பார். 

துக்க காரியமென்றால் தொலைபேசியில் தகவல் தெரிவித்தாலே உடனடியாக எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சென்றுவிடுவோம்.

எனது தந்தையிடமிருந்து பிரிந்து நான் மேலும் இருபது கல் தொலைவிலிருந்த வேறு நகருக்கு வணிகம் செய்யச் சென்றபின் எனது தந்தையை அழைக்க வருபவர்கள் அங்கிருந்து எனது தந்தையின் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு என்னையும் அழைக்க நான் குடியிருக்கும் நகருக்கு வரவா என்பார்கள். 

நான் உடனே நீங்கள் சிரமப்பட்டு என் ஒருவனுக்காக இங்கு வர வேண்டாம். தொலைபேசியில் அழைத்ததே போதும். திருணம் உட்பட எதற்கும் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நாங்கள் கட்டாயம் உங்கள் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என உறுதியளித்து அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் எனது குடும்பத்துடன் சென்று கலந்து கொள்வேன்.

எனது மனைவி வழி உறவுகள் என் மனைவியை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தாலும், எனது உறவுகள் என்னை மட்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தாலும் தவிர்க்க இயலாத காரணங்கள் தவிர நாங்கள் கட்டாயம் அழைத்தவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம்.

திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நாங்கள் அழைப்பிதழ் பெறாமல் வெறும் தொலைபேசி அழைப்பை மட்டுமே ஏற்றுக் கலந்து கொண்டவைதாம் ஏராளம். 

எனது சொந்த ஊர் உறவினர்களின் துக்க நிகழ்வுகளில் மட்டும் எனக்கு எதற்கு வீண் சிரமம் எனக் கருதி எனக்குத் தகவல் தராமல் எனது குடும்ப உறவுகள் மட்டுமே கலந்து கொண்டு எனக்கு பல மாதங்கள் கழிந்து அந்தத் தகவல் தெரிய வருவதால் இதற்கென எனது உறவுகளிடம் நாள் கடந்து துக்கம் விசாரிக்க இயலாத நிலை  ஏற்படுவதைத்தாம் எங்களால் இதுவரை தவிர்க்க இயலவில்லை.

தொலை தொடர்பு வசதிகள் ஏராளம் பெருகிவிட்ட காலகட்டம் இது. திருமண அழைப்பிதழைக்கூட இன்று ஒரு செல்பேசியில் அனுப்பிப் பார்க்க முடிகின்ற அதி நவீன வசதிகள் கொண்ட விஞ்ஞான காலம் இது.

உறவை விட்டுத் தனித்தனியே பிரிந்து வாழும் எல்லோரையும் அவரவர் இருப்பிடம் சென்றே அழைக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் ஏற்படும் சிரமங்களை நன்கு புரிந்தவர்கள் நாங்கள். 

நேரில் வந்து அழைக்க வேண்டும், என்னை அழைப்பவர்கள் எனது துணைவியையும் அழைக்க வேண்டும் என்ற அற்பமான எதிர்பார்ப்புகளைப் புறம் தள்ளி அழைப்பவர்களின் சிரமங்களை உணர்ந்து இப்பொழுதும்கூட எங்கள் ஒருவருக்காக மட்டும் அழைக்க நேரில் வருபவர்களை சிரமப்பட வேண்டாம் என அறிவுறுத்தி இன்றுவரை ஒரு தொலைபேசி அழைப்பினை மட்டுமே ஏற்று உறவுகள் சிறக்க வாழ்ந்து வருகிறோம். இனியும் இப்படியே வாழ்வோம்.

இன்னும் சொல்லப்போனால் எனது தந்தையுடன் ஏற்பட்ட வணிகக் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருசில உறவுகள் எங்கள் குடும்பத்தை அவர்தம் குடும்ப நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. 

எனது தந்தை மனம் வேதனைப்படுமே என்பதற்காகவே நான் அந்த நிகழ்வுகளைத் தவிர்த்தேனே தவிர என் தந்தை உயிரோடிருந்தபோது அனுமதித்திருந்தால் அழையா விருந்தாளியாகக்கூட அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள முற்பட்டிருப்பேன். 

இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அழையா விருந்தாளியாகி அவமானப்பட நேர்ந்தாலும் பிறப்பெடுத்தபோது இருந்து வணிகக் காரணங்களால் தொடர்பற்றுப் பிரிந்துபோன உறவுகளையும் வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துவதுதான் எனது உன்னதமான நோக்கமே தவிர விருந்துண்டு வருவதல்ல என்பதையும் இங்கு குறிப்பிட்டே தீரவேண்டும்!