இது ஒரு நல்ல துவக்கம்!!

பிறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! 
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! 

என்ற கவிஞரின் வைர வரிகளுக்கேற்ப மறைந்தாலும் என்றென்றும் மக்கள் நினைவுகளில் வாழும் கலாம் அவர்களின் மறைவுகூட ஒரு நல்ல தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது.

திரு கலாம் அவர்கள் மறைவுச் செய்தியினை உலகம் கேட்டது 27.07.15 அன்று இரவு 8.30 மணி வாக்கில்தாம்.

இதைக் கேள்விப்பட்ட நேரம் முதல் நாடெங்கும் உள்ள மக்கள் மனதில் சோக இருள் சூழ்ந்தது.

எனினும் அவரின் மறைவைக் கேட்டவுடன் நள்ளிரவு வரையில்கூட ஆங்காங்கே மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செழுத்தி வருவதாக ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வரத்துவங்கின.

மறு நாள் காலை கலாம் அவர்கள் வாழ்ந்த இராமேசுவரத்தில் மட்டும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதாகவும், (கவனியுங்கள் அதுகூட அவர் மீது அந்தத் தீவு மக்கள் கொண்டிருந்த அபரிமிதமான பாசத்தின் காரணமாகத்தானே தவிர கட்டாயத்தின் காரணமாக அல்லவே அல்ல) அந்தத் தீவில் வாழும் மீனவர்கள் கலாம் அவர்களின் மறைவு காரணமாக மூன்று நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படவில்லை. என்பதை ஒரு குறையாகச் சில அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கான காரணம் என்னவென்பதற்கு அரசு அளித்த பதிலும் இப்பொழுது விவாதத்திற்கு உரியதல்ல.

ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அல்லும் பகலும் தனது எண்ணங்களை மாணவ சக்தியிடம் வெளியிட்டுப் பாடுபட்ட திரு கலாம் அவர்கள் விண்ணுலகு சென்ற நிலையிலும் தனது மறைவு காரணமாக விடுமுறை விடப்பட்டு அதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதை நிச்சயமாக விரும்பவே மாட்டார்.

அன்றைய தினம் கல்வி நிலையங்களுக்குச் சென்றதால்தான் கனவு காணுங்கள் எனத் தங்களைத் தட்டி எழுப்பி வழி நடத்தி வந்த திரு கலாம் அவர்களுக்குக் கோடிக்கணக்கான மாணவச் செல்வங்கள் தங்களின் இதயம் நிறைந்த அஞ்சலியினைச் செழுத்த முடிந்தது.

இன்னும் சொல்லப்போனால் கலாம் அவர்களின் மறைவுச் செய்திகளை இப்பொழுது வரை வெளியிட்டுவரும் செய்தி ஊடகங்கள் தவிர அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள 30.07.15 அன்று வரை மூன்று நாட்களுக்குக்கூட மூட்டை கட்டிக் காத்திருக்க இயலாத வணிக நோக்கத் தொலைக்காட்சி ஊடகங்கள் வழக்கம்போலக் குத்தாட்டப் பாடல்களையும், மக்களைத் தவறாக வழி நடத்தும் தொலைக்காட்சித் தொடர்களையும் நடத்தி வருகின்றன.

எனினும் திரு கலாம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டபின்பு குறிப்பாகத் தமிழகத்தில் எங்குமே இதுவரை கடையடைப்போ வன்முறைகளோ நடைபெற்றதாக ஒரு சிறு செய்திகூட வரவில்லை.

அவர் சர்வ வல்லமை படைத்த ஒரு அரசியல் தலைவராக இல்லாதிருக்கலாம். 

ஆனால் அவர் ஒரு மாபெரும் எளிமை மிக்க தலைவராக, குறிப்பாக இளைய சமுதாயத்தால் அடையாளம் காணப்பட்டு கோடிக்கணக்கான மாணவ சமுதாயம் தன்னுடைய கருத்துக்களை ஏற்றுப் பின் தொடருமாறு ஒரு சமூகப் போராளியாக திகழ்ந்திருந்தார்.

அவர் பின்னே அணிவகுத்து நின்றது அகிம்சைப் படை. 

அதனால்தான் அவரது மறைவுக்குப் பின்னர் இந்த நிமிடம் வரை இளைய சமுதாயமும் மக்களும் அமைதியாக மெழுகு வர்த்திகள் ஏந்தியும், ஆங்காங்கே இரங்கல் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், அவரின் நல் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர் மீது பாசம் வைத்திருந்தவர்கள் கட்அவுட்டுகள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செழுத்தி மௌனப் பேரணி நடத்தியும் அஞ்சலி செழுத்தி வருகின்றனர்.

30.07.15 அன்று கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என அரசு அறிவிப்பு செய்திருந்தாலும், திரு கலாம் அவர்களின் மறைவுக்கு அன்றைய தினம் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைப்பதாகவும், தொழிலாளர் இயக்கங்கள் அன்றைய தினம் தாங்கள் வேலை செய்வதில்லையெனவும் முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

அரசியல் தலைவர்களுக்கு இயற்கையாக வரும் உடல் நலக்குறைவினைக் கேள்வியுற்றால்கூட வன்முறை வெறியாட்டங்கள் தாண்டவமாடும் ஒரு மோசமான அரசியல் அநாகரீகத்தைப் பண்பாடாகக் கொண்ட தமிழக அரசியல் சக்திகள் 

ஆற்றல் மிக்க தலைவராகக் கருதப்பட்ட திரு கலாம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நிலவும் உண்மைத் தன்மையைக் கண்டு கொண்டு இனியாவது தங்களின் இயக்கம் சார்ந்தவர்கள் நல்வழி நடக்கத் தலைப்படுமாறு அவர்களை வழி நடத்த வேண்டும்.

யார் உயர்ந்த தலைவர் என்பதைத் தன் மறைவின் வாயிலாகக்கூட ஒரு மகத்தான செய்தியாக வெளியிட்ட திரு கலாம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் நிகழ்வுகள்கூட ஒரு நல்ல துவக்கம்தான்.

தம் மறைவிற்குப் பின்னரும் தமிழகத்தை அமைதியாக வழி நடத்தும் திரு கலாம் அவர்களின் பெயர் உலகம் உள்ளவரை சரித்திரத்தில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு நீங்காத இடம் பெற்றிருக்கும் என்பதுதாம் கண்கூடான உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!