மரங்களைக் காப்போம்! வெப்பக் கொடுமையிலிருந்து மீள்வோம்!

ஈரோட்டில் சத்தி சாலை மற்றும் இரயில் நிலையச் சாலை இரண்டிலும் இரண்டு எடை மேடை நிலையங்கள் செயல்படுகின்றன

இந்த இரு எடை நிலையங்களிலும் அதிகாலையில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் ஈரோட்டில் அமைந்துள்ள பல்வேறு ஆலைகளுக்கு எரிபொருள் தேவைக்கென இரண்டு ஆட்கள் கட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு தடித்த அடிப்பகுதி உடைய மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் அடியோடு வெட்டி வரப்படுகின்றன!

நாள்தோறும் தவறாமல் இவ்வாறு வெட்டி வரப்படும் மரங்கள் பெரும்பாலும் மழை வளம் குன்றிய மணப்பாறை போன்ற ஊர்களிலிருந்துதாம் வருகின்றன.

தினமும் ஏராளமான அளவில் ஒரு நகருக்கே இவ்வளவு வாகனங்களில் விறகுகளுக்கென வெட்டி வரப்படும் மரங்களின் சராசரி அளவினை தமிழக அளவில் கணக்கிட்டால் தலை சுற்றி மயக்கமேற்படும் நிலை உருவாகிறது.

இது போன்று வெட்டி வரப்படும் மரங்கள் வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளதா என்பதும் தெரியவில்லை.

ஏராளமான அளவில் தமிழகமெங்கும் இவ்வாறு வெ;ட்டப்படும் மரங்களை நாம் இழப்பதால் ஓரு பக்கம் ஆக்சிஜன் இழப்பும், மழை வள இழப்பும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தினசரி அவசியமான நிழல் இழப்பு என ஏராளமும், மறு பக்கம் இவைகளை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடும் கவலை தருவதாக உள்ளது.

இவ்வாறு வரும் வாகனங்களில் தமிழகமெங்கும் நிலத்தடி நீரை சத்தமின்றி எடுத்துப் பயனின்றி வளரும் விவசாய முள் மரம் எனவும் வேலி மரம் எனவும் அழைக்கப்படும் மரங்கள் ஏதேனும் ஒன்றிரண்டு வாகனங்களில் மட்டுமே அரிதாக வெட்டி வரப்படுவது மட்டுமே எம் போன்று வன ஆர்வலர்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.

வனத்துறையினரும் சுற்றுச்சூழல் அலுவலர்களும் இது போன்று வெட்டி வரப்படும் மரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த பின்வரும் வழி முறைகளைக் கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே தமிழகம் பாலை நிலமாக மாறுவதிலிருந்து தப்பிக்க இயலும்

முதலாவதாக இது போன்று எரிபொருள் தேவை உள்ள ஆலைகளை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களுக்குத் தேவைப்படும் வெப்ப ஆற்றலைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஈரோட்டில் சாய ஆலைகள், மற்றும் நூல் தொழில் தொடர்பான ஆலைகளின் தண்ணீர்க் கொதிகலன்களை எரிப்பதற்காகத்தான் இங்கு வெட்டி வரப்படும் மரங்கள் எரி பொருளாகின்றன.

இரண்டாவதாக இது போன்று கனரக வாகனங்களில் வெட்டப்பட்டு கொண்டுவரப்படும் பயனள்ள மரங்களை வெட்டுவதை சட்ட விரோதமென அறிவித்து அந்த வாகனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என அறிவிக்கலாம்.

விவசாய முள் மரம் போன்ற தமிழகத்திற்கு அவசியமற்ற மரங்களையும் பட்டுப்போய் பயனற்றுப்போன மரங்களை மட்டுமே வெட்டுவதற்கும் எரிபொருள் தேவைக்கும் கமிழகம் எங்கும் உள்ள ஆலைகளுக்கு அனுமதிக்க முடியும் எனச் சட்டமியற்றி கடுமையாக்கினால்

தமிழக நிலங்களை வெகுவாக ஆக்கிரமித்து நீர் சுரண்டும் இது போன்ற விச மரங்கள் ஒரேயடியாகத் தொலைந்து தமிழகம் பாலைவனமாவதிலிருந்து மீண்டு சோலை வனமாவதற்குச் சற்றேனும் வழி பிறக்கும்.

மேலும் காற்று மழை காரணமாகவோ வேறு வகையிலோ ஒரு மரம் சாய்ந்து விட்டால் அதை அப்புறப்படுத்துகிறோம் என்ற போர்வையில் துண்டு துண்டாக வெட்டி விறகாக்குவதை இனி அனுமதிக்காமல் அவற்றை வெளி நாடுகளில் உள்ளது போன்று வேறோடு மீட்டு மீண்டும் நட்டு அதன் ஆயுள் காலம் நீள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

மீறி வெட்டி விறகாக்கும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் அபராதம் விதித்தால் வீட்டு அழகைத் தடுப்பதாகக் கருதி அவற்றை வெட்டும் சுயநலவாதிகள் பயப்படும் நிலை உருவாகும்.

சிக்னலில் பாதசாரிகள் கடப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்திலும் தங்களின் வாகனங்களை நிறுத்தி சாலைவிதிகளை காற்றில் பறக்கவிடும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சிக்னலில் மட்டும் குறிப்பாகப் பெருந்துறை நோக்கிப் பயணிப்பவர்கள் பத்தடி முன்பாகவே இடது புறம் தள்ளி ஓரமாகத்தான் நின்று செல்வர்.

இதற்குக் காரணம் அந்த இடத்தில் கடும் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க ஒரே ஒரு உயர்ந்த மரம் நிழல் பரப்பி நிற்பதுதாம். நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்ற பழமொழிக்குரிய உண்மையான விளக்கத்தை நான் இந்த இடத்தில்தான் உண்மையாகப் புரிந்து கொண்டேன்.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்திற்குக் காரணம் தமிழகத்தில் இது போன்று வெட்டப்படும் மரங்களால் வன அடர்த்தி குறைவதால்தான்.

ஒரு மரம் வளர்ந்து ஆளாகி மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருப்பது வருடக்கணக்கில். ஆனால் ஒரே நாளில் அதனை வெட்டி வீழ்த்தி விறகாக்குவது இனியும் தொடர வேண்டுமா?

சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை விரும்பாதவர்கள் இதனை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடனும் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் இனியாவது தமிழகம் வளமுறத் தங்களின் பங்களிப்பினை நல்குவார்கள் என்ற நம்பிக்கையுடனும் மரங்களைக் காப்போம் வெப்பக் கொடுமையிலிருந்து மீள்வோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!