புதன், 5 ஆகஸ்ட், 2015

தமிழகத்தில் மது ஆலைகளையும் மதுக்கடைகளையும் மூட வேண்டிய அவசியமே இல்லை!!!

Leave a Comment
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கினை அமல்படுத்த அரசினை வலியுறுத்திப் போராடி வந்த திரு சசிபெருமாள் அவர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செல்பேசி மின் கோபுரததில் ஏறிப் போராடத் துவங்கியிருக்கிறார்.

அவரது கோரிக்கையை அரசு அலுவலர்கள் உடனடியாகச் செவி சாய்க்காமல் காலம் தாழ்த்திய பின்னர் அவர் வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கப்படும் நிலை உருவாகி 

அதன் காரணமாக அவர் உடல்நிலை மோசமடைந்து மரணமேற்படக் காரணமானதென ஊடகங்கள் வாயிலாக அறிய நேரிட்டது கண்டு ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எமது ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறோம்.

காந்தியவாதியாகத் தம் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்ட திரு சசிபெருமாள் அவர்கள் இது போன்ற மாற்று வழிப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததுதாம் அவரது மரணத்திற்கென எழுதப்பட்ட விதியோ என்னவோ 

சட்டவிதிகள் இது போன்ற போராட்டங்களைத் தற்கொலை முயற்சியாகத்தாம் பதிவு செய்யும் என்பதை ஏனோ அவர் மனதில் கொள்ளத் தவறித் தன் இன்னுயிரையும் ஈந்து விட்டார்.

காந்தியவாதிகளுக்கு அடக்குமுறையாளர்களால் ஏற்படும் கதியினை நாம் சுதந்திரத்திற்கு முன்னரே வெள்ளையர் ஏகாதிபத்தியத்தில் ஏராளம் கண்டுள்ளோம். 

மக்களின் நலனுக்காகப் போராடிய ஒருவரை தமிழ்நாடு இழந்துள்ள நிலையில் ஏராளமான காந்தியவாதிகள் இனி இந்த நாட்டில் தோன்றத்தான் போகின்றனர்.

சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தங்களின் அரசியல் விளையாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழகத்தின் கேவலமான அரசியலுக்குச் சான்றாக இன்று மதுவிலக்கிற்கு எதிராகப் போராடும் அனைத்து மத்திய மாநில இயக்கங்களும் 

தமிழகத்தில் மதுவிலக்கை இரத்து செய்து மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் இரு பெரும் திராவிட இயக்கங்களின் தயவால்தான் இன்றுவரை ந்டந்துள்ள தேர்தல் களங்களை வானர சேனைப் பச்சோந்திகளாக நிமிடத்திற்கு நிமிடம் அணி மாறிச் சந்தித்துத் தங்கள் தொகுதிப் பிரதிநிதித்துவப் பங்கினை அடைந்து வந்துள்ளன என்பது உலகறிநத உண்மை.

அப்பொழுதெல்லாம் தமிழதத்தில் பட்டி தொட்டியெங்கும் காட்சியளித்த மதுக்கடைகள் இவர்களின் கண்களில் மட்டும் ஏன் படவே இல்லை என்பது பாமர மக்களில் ஒருவனாக எனக்குக்கூட இன்றும் விளங்கவில்லை.

வாக்கு வங்கியை வளைப்பதற்காக இவர்கள் போடுகின்ற மதுவிலக்கு நாடகங்கள் வரும் தேர்தலுக்குள் இவர்கள் அமைக்கப்போகும் வியூகத்தில் இதே இரு பெரும் திராவிட இயக்கங்களில் ஏதேனும் ஒன்றில்; தொகுதிப் பிரதிநிதித்துவத்திற்காகக் காற்றில் பறக்கவிடவும் நேரலாம். இதனை எதிர்காலம்தான் தோலுரித்துக் காட்டும்.

மதுக்கடைகளின் வருமானம் தற்பொழுது முப்பதாயிரம் கோடிகள் எனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  அரசின் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட முப்பது சதவீதத்தை வருமானமாகத் தரும் மதுக்கடைகளை அறவே மூடுவதென்பது இயலாத காரணமெனப் படித்தவர்களே உரத்த குரலில் ஒலிக்கின்றனர்.

தமிழகத்தில் ஏழு கோடி மக்களைக் கொண்ட சுமார் 1.5 கோடி குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது மது அரக்கனின் பிடியில் ஆட்பட்ட காரணத்தால் நிம்மதியிழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.

படித்தவர்கள் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளைக் கொண்ட நிர்வாகமோ பாமரர்களை வளைக்க மதுவினை ஒரு தூண்டில் புழுவாகவே பாவித்து ஓட்டு வங்கியை வாரிக் குவிக்கின்றனர். 

எது எப்படியோ தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கினைக் கொண்டுவந்தால் ஒரு நயா பைசாகூட அரசிற்கு இழப்பேதும் ஏற்படப் போவதில்லை என்பதை என் அறிவிற்கு எட்டியவரை இங்கு பகிர்ந்துள்ளேன்.

தமிழகத்திலுள்ள அனைத்து மது ஆலைகளையும் அரவே மூடத் தேவையில்லை! அவை வழக்கம் போல இயங்கலாம்! ஆனால் அவை  இனி மது வகைகளுக்குப் பதிலாக எரி சாராயம் மட்டும் வாகனங்களை இயக்குவதற்குத் தகுந்தவாறு மாற்றம் செய்யப்பட்ட எரிபொருளாகத் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைகளாக மாற்றம் செய்ய வேண்டும். 

இங்கு தயாரிக்கப்படும் எரி சாராயம் எரிபொருள் விற்பனை நிலையங்களைச் சென்றடைந்து வாகனங்களை இயக்குவதற்கு விற்பனை செய்யலாம். 

இதனால் மத்திய அரசிற்கு ஏராளமான அளவிற்கு அன்னியச் செலாவணி பெட்ரோலியம் பொருட்களை தமிழக அளவில் இறக்குமதி செய்யப்படுவது குறைவதன் வாயிலாக மிச்சப்படுத்த முடியும்.

அதே போன்று தமிழத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடத் தேவையில்லை! அவையும் வழக்கம் போலத் தொடரலாம்! 

இனி இங்கு மது விற்பனைக்குப் பதிலாக உயர்தர பழரச பானங்கள் விற்பனை நிலையமாகத்தான் இவை செயல்பட வேண்டும். 

இதனால் இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணி இழப்பு ஏற்படும் நிலையும் உருவாகாது.

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு மாற்றாக கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் எனச் சில விவசாயச் சங்க அமைப்புகளும் ஒரு மத்திய அரசியல் இயக்கமும் வலுவாகப் போராடி வருகின்றன. 

மேல்தட்டு மக்கள் அங்கம் வகிக்கும் இது போன்ற இயக்கங்கள் அடித்தட்டு மக்கள் பெற்ற படிப்பறிவு காரணமாக அவர்தம் குடும்ப இளைஞர்கள் தரமான வேலை வாய்ப்புகளை நாடிச் செல்வதால் தங்களின் ஆண்டாண்டு கால அடிமை முறை வேலையாட்களை இழந்ததின் விளைவாக எழுப்பும் கூக்குரல் இதுவென்றே எம்மால் உணர முடிகிறது.

சுமை தூக்கும் தொழிலாளியின் மக்கள்கூட இன்று படித்துப் பட்டதாரியாக பல்வேறு தரப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இந்த நிலை இன்னும் வேகமாகத் தொடர வேண்டும். வேலைக்கு ஆட்கள் குறைந்தால் இன்றுள்ள காலகட்டத்தில் இயந்திரங்களின் துணை கொண்டு ஈடு செய்ய முடியும். 

இதற்கு மாறாக கள்ளுக்கடைகளைத் திறந்தால் மீண்டும் ஒரு படிப்பறிவற்ற சமுதாயம் உருவாகும். அதன் பின்னர் அவர்தம் சந்ததியினர் காலம் முழுக்க விவசாயக்கூலி அடிமைகளாகத்தான் இந்த நாட்டில் தொடர முடியும். இதன் காரணமாக பண்ணையார் அடிமை முறை காலம் காலமாகத் தொடரும் நிலை ஏற்பட்டு நாடு ஒரு மோசமான சுயநலக்கூட்டங்களின் அடிமையாகவே மாறிட நேரிடும்.

தமிழ்ச்சமுதாயம் ஒரு உயர் நாகரீகச் சமுதாயமாகத் திகழ்ந்த சங்க கால முறைதான் இன்றைய தேவையே தவிர ஆண்டான் அடிமைச் சமுதாயம் நிறைந்த மோசமான நாகரீகமற்ற பின்னோக்கிய சமுதாயம் இந்ந விஞ்ஞான காலத்திற்கு மட்டுமல்ல என்றைக்குமே அவசியமில்லை.

எனவே கள் எனும் மது உடலுக்குத் தீங்கற்றதென அறியப்பட்டாலும் அது அடித்தட்டு மக்களை வாக்கு வங்கிக்கென வளைக்கும் மற்றுமொரு தூண்டில் புழுவாகவே நாம் கருதுகிறோம்.

எனினும் நாட்டிலுள்ள பயன்பாடின்றி வீணாகும் ஏராளமான பனை மரங்களிலிருந்தும், தென்னை மரங்களிலிருந்தும் நவீன மரம் ஏறும் கருவிகள் துணை கொண்டு மரம் ஏறி கள்ளிற்குப் பதிலாக உடல் நலத்திற்கு உகந்த பதநீர் தயாரிக்கலாம். 

குறிப்பாக சரியான இடைவெளி விட்டுச் சுழற்சி முறையில் பதநீர் இறக்குவதால் தென்னை மரங்களின் தற்போதைய தேங்காய் மற்றும் இளநீரின் மகசூலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

இப்பொழுது நடைமுறையில் உள்ள பால் கொள்முதல் நிலையங்கள் போன்று பதநீர் கொள்முதல் நிலையங்களை அமைத்து அங்கிருந்து பெறப்படும் பதநீரைச் சர்க்கரை தயாரிப்பு ஆலைகளுக்குச் கொண்டு சென்று இரசாயனம் கலவாது உடலுக்குத் தீங்கற்ற சர்க்கரை, கருப்பட்டி, கற்கண்டு, மற்றும் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்படும் பதநீர் தயாரிக்கலாம்!

அதன் பின்னர் வெளியாகும் கழிவுப் பாகினை எரிசாராய ஆலைகளுக்குக் கொண்டு சென்று எத்தனாலாக மாற்றம் செய்து அதையும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் கொண்டு சென்று விற்பனைப் பொருளாக்கலாம்!

இதோ இந்த இரண்டு வழியில் பெறப்படும் எரிசாராயம் எரிபொருளாக மாற்றம் பெற்றாலே அரசுக்கு எரிபொருள் விற்பனை வாயிலாகக் கிடைக்கும் கிட்டத்தட்ட 35 சதவிகித விற்பனை வரி முழுவதுமாகக் கிடைத்துவிடும். 

அரசின் தேவையான 30 ஆயிரம் கோடிகளில் இது எத்தனை சதவிகிதம் ஈடு செய்யும் என்பதை பாமரனான எம்மால் இப்போது கணிக்க இயலாது.

மேலும் இதனை நடைமுறைச் சாத்தியமாக்கினால் ஏராளமானவர்களுக்குப் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதையும் எம்மால் உறுதியாக உரைக்க முடியும்.

ஒரு தனி நபர் தனது வருமானத்தில் குறைந்த அளவு வைத்துக் கொண்டால்கூட தினசரி 100 ரூபாய்களை மதுவிற்கெனச் செலவிடுகிறார். 

இனி இந்த வருமானம் முழுவதும் அவரது இல்லத்தைச் சென்றடைவதாக வைத்துக் கொள்வோம். இதன் மதிப்பு ஒரு மாதத்தில் சுமார் மூவாயிரமாகும்.

இதனைக் கொண்டு அந்தக் குடும்பம் தங்களின் குடும்பத் தேவைகளுக்கென பொருட்கள் வாங்கினால் அதன் வாயிலாக மத்திய மாநில அரசுகள் இரண்டுமே கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்களை வரியாகப் பெற இயலும். 

இந்த வகையில் குடியிலிருந்து விடுபடும் பல்லாயிரம் குடும்பங்கள் தரப்போகும் வரி வருமானத்தை படித்த மேதைகள்தாம் இனிக் கணக்கிட்டு எம் போன்ற பாமரர்களுக்குத் தெளிவு படுதத வேண்டும்.

மது குடித்துவிட்டு எற்படும் விபத்துகளை விசாரிக்கவாவது அரசு இயந்திரம் செயல்பட்டே ஆக வேண்டும். அதற்கெனச் செய்யப்படும் செலவினங்கள் முழுமையாக இனி குறைய வாய்ப்பு உருவாகும். அதன் மதிப்பும் எம்மால் கணிக்க இயலாது. 

இதோ மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் மக்களை அடக்குவதற்காக ஏவப்படும் காவல்துறைக்கென ஏற்படும் செலவினங்கள் கூட அறவே தொலைந்துவிடும்.

தமிழகத்தில் ஏராளமாக நடக்கும் விபத்துகளுக்குக் காரணமே குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதும், குடித்துவிட்டுத் தெருவில் அலங்கோலமாக விழுந்து வாகனங்களில் அடிபடுவதும்தாம். 

இதனால் அவரவர் குடும்ப நபர்களுக்கு ஏற்படும் ஏராளமான செலவினங்கள், மன நிம்மதியற்ற அலைச்சல்கள் அடியோடு தொலையும் நிலை உருவாகும்.

குடித்துவிட்டு வரும் ஆண்களால் பெண்கள் படும் கடுமையான அடி உதைகள், சித்திரவதைகள், பொருள் இழப்புகள், பாலியல் கொடுமைகள், குடித்துவிட்டு நிதானமிழந்து ஏற்படுத்தும் படுகொலைகள் போன்ற எண்ணற்ற சமூகச் சீரழிவுகள் அடியோடு தொலையும் நிலை நாட்டில் உருவாகும்.

மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராய விற்பனை பெருகும் என்பதையும் எம்மால் ஏற்கவே இயலவில்லை

உதாரணத்திற்கு நம் நாட்டு இராணுவம் எல்லையிலிருந்து புற்றீசல் போல் புறப்பட்டுவரும் எதிரி நாட்டு இராணுவ வீரர்களையும், தீவிரவாதிகளையும் சர்வ சாதாரணமாக அவர்கள் ஊடுருவ அனுமதித்தால் நம் நாட்டில் எத்தகைய கொடிய விளைவுகள் ஏற்படும் என யோசியுங்கள்.

ஆக எதிரி வெளியிலிருந்து ஊடுருவ இயலாதவண்ணம் நாட்டிற்கு எந்தளவிற்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அதே அளவு பாதுகாப்பு போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படச் சாத்தியமுள்ள வாய்ப்புகளை முற்றிலுமாக அடைக்கும் வழிகள் தேடுவதுதாம் ஒரு அரசின் முதற் கடமையாகும். 

அதைச் செய்யத் தவறும் ஒரு அரசு எதிரிகளை ஊடுருவவிட்டுத் தவிக்கும் கையாலாகாத ஒரு அரசாகத்தாம் எம் போன்ற பாமரர்களால் கணிக்க இயலும்.

எனவே முதற்கண் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வர வாய்ப்புள்ள கள்ள மது வரவினைத் தடுக்கும் ஆற்றல் பெற்றதாக அரசு விளங்க வேண்டும. 

அடுத்து உள் நாட்டிலேயே உருவாகும் கள்ளச் சாராயப் பேர்வழிகளை அவர்கள் உருவாகாமலே தடுக்க பின்வருமாறு கடுமையான ஒரு ஏற்பாட்டினைச் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

முதற்கண் மதுவின் பிடியில் இருந்து விடுபடுபவர்களை தக்க வழி காட்டுதல்கள் வாயிலாகத் திருந்துவதற்காக வட்டத்திற்கு ஒன்றும் மாவட்டத்திற்கு ஒன்றுமென ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு பாராமல் செயல்படக்கூடிய மருத்துவ மையங்களை மதுவால் சீரழிந்தவர்களுக்காகவே சிறப்பு மையங்களாகத் துவக்கி 

மனநல மருத்துவர்கள், மற்றும் உரிய மருத்துவர்கள் துணையோடு அவர்களை நல்வழிப்படுத்தும் வாய்ப்புகiளை ஏராளமாக உருவாக்க வேண்டும்.

அடுத்து வெளி மாநிலங்களில் இருந்து மதுவினைக் கடத்துபவர்கள், மாநிலத்திற்கு உள்ளேயே கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், இவர்களுக்கு உடந்தையாகச் செயல்படும் சாதாரண மற்றும் அரசியல் செல்வாக்குடையவர்கள், சாதாரண மற்றும் உயர் அரசு அலுவலர்களைக்கூட எவ்விதச் சலுகையும் காட்டாமல் உடனடியாகக் கைது செயய வேண்டும்.

இவர்கள் வெள்ளையர்கள் காலத்தில் அடக்குமுறைக்கென ஏற்படுத்தப்பட்ட அந்தமான் சிறை போலச் செயல்படப் போகும் தமிழகத்தின் ஏதேனும் ஒரு மைய மாவட்டத்தில் புதிதாக அமையப்போகும் ஒரு சிறைச்சாலைக்கு வாய்மை மன்ற உத்தரவின்படி அனுப்பி வைக்க வேண்டும்.

அந்தச் சிறை வளாகம் முழுக்க முழுக்க நேர்மையான அரசு அலுவலர்களால் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் வாய்மை மன்ற நடுவர்கள் சார்பில் இந்தச் சிறையில் வாய்மை குணம் மிக்க ஐம்பது கண்காணிப்பாளர்களைக்கூட நியமிக்கலாம்.

காவல் துறை அலுவலர்கள் என்றால் கடுமையானவர்களாக அதே சமயம் சமுதாய நோக்கம் கொண்ட மென்மை குணம் கொண்டவர்களாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு அமர்த்தப்பட வேண்டும்.

அடுத்து எந்த நேரமும் சிகிச்சை அளிப்பதற்கெனவே ஒரு அதி நவீன மருததுவமனையும் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டு கைதிகளுக்கு எந்த நேரமும் அவர்களின் உடல் நிலையைச் சீராக்கத் தயார் நிலையில் இருக்கும்படி செய்ய வேண்டும்.

அடுத்து இங்கு தேவையான எண்ணிக்கையில் மனநல ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டு திருந்தத் தயாராகும் கைதிகளுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு செய்ய வேண்டும்.

மனித உரிமை மீறல் என்றே சட்டம் சொன்னாலும் அதைக் காற்றில் பறக்க விட்டு இந்த ஒரு சிறையில் மட்டும் கீழ்க்கண்ட நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

இங்கு எவரையும் அடித்து உதைத்துத் துன்புறுத்தப்போவதில்லை. ஆனால் அதே சமயம் இந்தச் சிறைக்கு எவர் செல்ல நேரிட்டாலும் அது கொடுமையான தண்டனைக்கூடமாகக் காட்சியளிப்பதாகத்தான் நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகள் அறியுமாறு செய்யப்பட வேண்டும்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவரா? அவருக்கு இங்குள்ள சிறையில் தினசரி உணவு அவர் காய்ச்சிய சாராயம்தாம். அதைத் தவிர எந்த உணவும், ஏன் தண்ணீர்கூட இங்கு தரப்படக்கூடாது. 

உணவாக எதுவும் கிடைக்க வழியின்றி எப்படிப்பட்ட வைராக்கியமுள்ள நபராயினும் தாங்கள் காய்ச்சிய மதுவை மட்டுமே எத்தனை நாள்தான் உணவாகக் கொள்ள முடியும்? 

வேறு வழியின்றித் தான் இனி இந்தத் தவறைச் செய்யப் போவதில்லை என அவர்கள் மாற்று உணவு கேட்டுக் கதறும்வரை இதே தண்டனை நீடிக்க வேண்டும்.

ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அல்லது எத்தனை நாளானாலும் ஒன்று அவர்கள் தங்களின் தயாரிப்பை உணவாகக் கொள்ள வேண்டும். அல்லது உண்ணாவிரதம் இருந்தாக வேண்டும்.

இது போன்ற தண்டனையால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்தால் தயாராக இருக்கும் மருத்துவக்குழு அவர்களின் உயிருக்கு ஊறு நேரா வண்ணம் சிகிச்சையளித்துக் காப்பாற்றி அவர்களின் உடல்நிலை தேறியபின்னர் மீண்டும் ஒருமுறை இதே உணவுமுறை அதிர்ச்சி வைத்தியம் தொடர வேண்டும்.

மது மட்டுமல்ல, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான்பராக் போன்றவற்றைக் கடத்தி விற்பவர்களுக்கும், அதை வாங்கி விற்பவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அவர்கள் எந்த உயர் பதவி வகித்தாலும் இதேவித தண்டனை முறைதாம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இந்தச் சிறைச்சாலையின் பெயரை உச்சரிக்கவே தீங்கு செய்பவர்கள் அஞ்சுகின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இது சித்திரவதைக்கூடமாகத் திகழ்ந்தாலும் குற்றவாளிகளைத் திருத்தும் இடமாகத்தான் திகழ வேண்டும். இங்கு வந்து மனமாற்றம் பெற்றதாக ஏமாற்றிவிட்டு மீண்டும் இதே குற்றத்தை ஒரு நபர் செய்ய முற்பட்டால் அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட தண்டனை நாள் கணக்கை முன்பை விட அதிகரித்துவிட வேண்டும்.

இதனினும் மேலாக இந்தச் சிறைச்சாலை வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு அருகிலுள்ள வாய்மை மன்றங்களின் நடுவர்கள் கானொளிக் காட்சி வாயிலாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏதுவாக்க வேண்டும்.

பணத்திற்கு ஆசைப்பட்டுத்தாம் குறுக்கு வழியில் சம்பாதிக்க இதுபோன்ற குற்றவாளிகள் உருவாகின்றனர். அவர்களை வளர்த்துவிடுவதும் பணத்திற்கு ஆசைப்படும் அரசியல்வாதிகளும், சில அரசு அலுவலர்களும்தான்.

இவர்கள் திருந்தாதவரை இந்த நாடு திருந்தப் போவதில்லை. ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் இது போன்ற கடுமையான நிலைப்பாடுகள் எடுத்தாக வேண்டியது காலத்தின் கடடாயம்.

இந்தச் சிறைச்சாலை ஒரு சித்திரவதைக்கூடமல்ல! சமூகத்தைச் செயல்படவிடாமல் தடுக்கும் ஒருவரைக் கடும் தண்டனைகள் வாயிலாகத் திருத்தி நல்வழிப்படுத்தி அவரையும் ஒரு நல்ல மனிதராக உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சிறைச்சாலையின் பிரதான நோக்கமாகத் திகழ வேண்டும்.

இதுதாம் மதுவிலக்கை அமல்படுத்த இயலாமல் தடுமாறும் அரசுகளுக்கு நாம் தெரிவிக்கும் ஒரு உண்மையான வழிமுறை. 

எனவே இந்த முறையில் செயல்பட்டால் நாட்டில் மதுக்கடைகள் ஒழிந்த கையோடு புறப்படும் கள்ளச்சாராயச் சாவுகளும், கடத்தல்களும் அடியோடு தடுக்கப்பட்டு நாடு ஒரு உன்னதமான பாதையில் நடைபோட வழியேற்படும்.

எனவே முதல் நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள சாராய ஆலைகள் தங்களின் தயாரிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவிடவேண்டும். அதற்கு உடன்படாத ஆலைகளை அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எரிபொருள் உற்பத்தி ஆலைகளாக மாற்றம் செய்ய வேண்டும். 

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் செயல்படுத்த கால அவகாசம சிறிதுகூடத் தேவையில்லை. ஒரு நல்ல அரசாங்கமென்றால் இன்றிலிருந்துகூட இதைச் செயல்படுத்த முடியும்.

அரசியல் களத்தில் நீயா நானா எனப் பணம் படைத்த மாபெரும் அரசியல் இயக்கங்களும் இவர்களை அண்டிப் பிழைக்கும் சில்லறை இயக்கங்களும் இன்று நடத்துகின்ற தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடுமாறு மாணவச் செல்வங்கள் தூண்டி விடப்படுகின்றனர்.

மாணவச் செல்வங்கள் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட கார்களில் வலம் வந்து, குளிரூட்டப்பட்ட இயக்க அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு, குளிரூட்டப்பட்ட இல்லங்களில் குடியிருந்து கொண்டு உங்களைத் தூண்டி விடுபவர்கள்தான் இன்றைய சுயநல அரசியல்வாதிகள்.

இவர்களில் எவரும் உங்களுடன் தோளோடு தோள் நின்று சரிக்குச் சமமாகத் தெருவில் இறங்கிப் போராடப் போவதில்லை. 

கார்களில் வந்து உங்களைத் தூண்டிவிட்டு காவல்துறையிடம் சிக்கி நீங்கள் அடிபடும்போது காணாமல் மறைந்து, பின்னர் உங்களைச் சிறைச்சாலைகளில் வந்து அனுதாபம் காட்டுவதாக முதலைக்கண்ணீர் வடிக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். 

இவர்களின் ஒரே குறிக்கோள் வரும் தேர்தலில் யார் வெல்லப் போவது என்பதுதாம். இவர்களின் ஆடு புலி ஆட்டத்தில் பலியாகப்போகும் ஆடுகள் நீங்கள்தான் என்பதை உணர்நது 

அவர்களையும் இன்றைய இளைய சமுதாயம்தாம் தம்முடைய வலிமையான வாக்கு வங்கியின் துணை கொண்டு நல்வழிப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கம் உடைய ஐந்தாம் தமிழ்ச்சங்கம் 

போதைக் கலாச்சாரத்திலிருந்து மீண்டு ஒரு மகத்தான தமிழ்ச்சமுதாயம் உருவாக மேற்கண்ட வழிமுறைகளைப் பணிவுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறது.

எமது கருத்துக்கள் பிடித்தவர்கள் இந்த வழிமுறைகள் தமிழகமெங்கும் பரவி அகிம்சை வழியில் அவரவர் கல்விக்கூடங்கள் முன்பு அமைதியாக முழக்கமிட்டு அரசை நிர்பந்தித்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கினை உடனடியாக நடைமுறைப்படுத்த 

இணையத்தில் இதனைப் படிப்பவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து உங்களின் உதவிக்கரங்களை நீட்டுங்கள். 

இதனைப் புரிந்து கொள்ளாமல் வழக்கம்போல அரசியல்வாதிகள் ஒருவேளை மதுக்கடைகளை மூடி அதன் வாயிலாக வரும் ரூபாய் முப்பதாயிரம் கோடி வருமானத்தை இழக்க மாட்டோம் என ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தால் 

இந்த நாட்டிலுள்ள வசதியற்ற இருபது இலட்சம் குடும்பங்கள் ஒவ்வொரு குடும்பமும் சுமார் இரண்டாயிரத்து நானூறு ரூபாய்கள் வீதம் வருடத்திற்கு ஒரு முறை (மாதத்திற்கு இரு நூறு ரூபாய்கள்தான்) 

நடுத்தர வசதியுள்ள எண்பது இலட்சம் குடும்பங்கள் வருடத்திற்கு பனிரெண்டாயிரம் வீதமும் ,

உயர் வசதி படைத்த ஐம்பது இலட்சம் குடும்பங்கள் வருடத்திற்கு இருபத்து நான்காயிரம் வீதம் பிச்சையாகக் கொடுத்தாலே ஒன்றரை கோடி குடும்பங்களின் தியாகம் காரணமாக அரசிற்கு இருபத்திரண்டாயிரம் கோடிகள் முழுமையாகக் கிடைத்து விடும். இதுவும் இந்தப் பாமரன் கணக்கிட்ட எளிமையான கணக்குதான்.

குடிக்கு அடிமையான ஒரு சராசரி மனிதரை குடும்ப நபராகக் கொண்ட ஒரு வசதியற்ற குடும்பம் அவரது வருமானத்தில் ஒரு நாளைக்கு நூறு ரூபாய்கள் வீதம் மாதத்திற்கு மூவாயிரம் இழப்பதால் அந்தக் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பினைக் காட்டிலும் 

அந்தச் சாதாரண குடும்பம் மதுவின் பிடியிலிருந்து விடுபட கையாலாகாத ஒரு அரசிற்கு மாதம் இரு நூறு ரூபாய்களைப் பிச்சையளிப்பதில் தவறேதுமில்லைதானே.

இதை வாங்கிக் கொண்டு இன்றுள்ள அரசு இல்லையேனும் ஒரு வேளை இளைய சமுதாயத்தின் எழுச்சியால் ஒரு உண்மையான வாய்மையான ஒரு நல்லாட்சி எதிர்காலத்தில் உருவாகி அவர்களாவது மதுக்கடைகளை ஒரேயடியாக நாட்டில் ஒழித்துக் கட்டும் நிலை உருவாக வேண்டும்.

நாளைய பொழுது நமக்கு நல்லதாகவே விடியும்! அது நிச்சயம் மது போதையற்ற ஒரு உயர் நாகரீகத் தமிழகமாகத் திகழப்போவதாக எம்மைத் தூங்கவிடாமல் துரத்தும் இலட்சியக் கனவாகத்தாம் இப்போது எம்முள் விரிகிறது.


Read More...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

எந்தையே! எம் தந்தையே! கலாமே!

Leave a Comment
எந்தையே! எம் தந்தையே! கலாமே!

கண்டம் விட்டுக் கண்டம் பறக்குமாம் வேடந்தாங்கல் பறவைகள்! 
இராணுவ வரிசையென முன்பின் அணி அணியாய்ப் பறக்கும் பயணம்!

முன்வரிசைப் பறவைகளின் சிறகசைவில் 
ஓய்வெடுத்துப் பறந்து செல்லும் பின் வரிசை அணியும்

தம் களைப்பு நீங்கி முன் வரிசை வந்து பறக்க 
முன் வரிசை அணி பின் வந்துதம் களைப்பு நீங்கும் சுழற்சிமுறை! 

எங்கும் தங்கவியலா இடைநில்லா நெடுங்கடல் பயணம்தனை 
முடிப்பதன் இரகசியம்தாம் மாந்தர்க்கு வியப்புமிகு செய்தி போன்றே

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இடைநில்லாப் பயணம் செய்யும் 
நெருப்பு ஏவுகணை தந்த எம் தந்தையே! கலாமே!

எம்மை முன்வரிசைக்கனுப்பிவிட்டுச் சற்று ஓய்வெடுக்க நினையாது 
உடல் மூப்பும் கருதாமல்  ஓயாதுழைத்திட்ட காரணத்தால் 

அந்தோ மரணப் பெருங்கடலில் வீழ்ந்த உம்மைக் காணாது தவித்து
எம் இமைநீர் கடல்போல் பெருக எங்கும் தேடிக் களைத்திட்டோம்!

வெந்தழலில் வீழ்ந்தாலும் உயிர்த்தெழும் ஃபீனிக்சு பறவைபோல் 
இராமேசுவரப் பேய்க்கரும்பிலிருந்து மீண்டும் புது உடலெடுத்து வாருங்கள்!

எம்மைத் தூங்காது துரத்தும் இலட்சியக் கனவுகள் சுமந்து நாங்கள்
உங்கள் அக்கினிச் சிறகசைவில் சற்று ஓய்வெடுத்துப் பறக்க வேண்டும்!

தாயன்போடு பறக்கும் தங்கள் அக்கினிச் சிறகசைவில் 
நாங்கள் அக்கினிக் குஞ்சுகள் போல என்றும் பறந்து தொடர வேண்டும்

ஓயாது உழைத்துத்தந்த தாங்கள் எண்ணங்கள் துணை கொண்டே
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் புதுயுக உலகம் காண்போம் நாங்கள்!

என்றென்றும் உங்கள் எண்ணங்கள் தாங்கி நீண்டாலும் 
அடைந்தே தீரும்   நம் இலட்சியப் பயணம் 

ஒரு போதும் முடிவதில்லை! அதுவரை நாம் ஓய்வதில்லை!
என்ற நம்பிக்கைகளுடன் ஈரோட்டிலிருந்து தெ.குமாரராஜா.

Read More...