திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கப்போவது யார்?

Leave a Comment
தமிழகத்தில் வரும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் உத்திகளை அனைத்து அரசியல் இயக்கங்களும் துவக்கி விட்டன. 

தமிழகத்தில் 1 முதல் பத்து வரை வாக்கு சதவிகிதம் உள்ளதாகக் கருதக்கூடிய (இந்த சதவிகிதம்கூட அவை தமிழகத்தின் ஏதேனும் பிரதானமான திராவிட இயக்கத்தின் தோள் மீது அமர்ந்து அவர்களுடைய வாக்கு வங்கியையும் சேர்த்துத்தான் என்பது பாமரனுக்குக்கூட மிக நன்றாகத் தெரிந்த கதை)

உதிரி இயக்கங்கள் இப்பொழுதே தாங்கள்தான் அடுத்து தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்போம் என அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆளும் இயக்கம் சரமாரியான இலவசத் திட்டங்களையும் இறுதி நேரத்து அறிவிப்புகள் வாயிலாக புதிய திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் திட்டங்களுக்கான தொகை உண்மையிலேயே அரசின் கருவூலத்தில் உள்ளதா என்பதை யாமறியோம்.

பிரதான எதிரி  திராவிட இயக்கமோ தங்களின் பழைய தவறுகளை மக்கள் மறந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை உட்கட்சிப் பூசல்களுக்கிடையே வகுத்து வருகிறது. 

நிதிக் குடும்பமாகத் திகழும் இந்த இயக்கத்தின்  தேர்தல் நிதி வசூல் பல கோடிகளில் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனித்துக் களம் இறங்குவதாக அறிவித்துள்ள சில்லறை இயக்கங்கள் தேர்தல் நெருங்கும் வேளையில் நிச்சயம் ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தின் தோள் மீது ஏறுவது திண்ணம். 

தேர்தல் அறிக்கைகளில் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் இயக்கங்களின் போக்கினை தேர்தல் ஆணையம் கட்.டுப்படுத்தாத காரணத்தால் இருக்கின்ற அனைத்து இயக்கங்களும் ஏராளமான இலவசத் திட்டங்களை அறிவித்து ஓட்டு வங்கியை வளைக்க வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் திருவிழா துவங்கியதும் ஏராளமான ஆடம்பரச் சொகுசு வாகனங்களின் அணி வரிசைகள் சூழ  அரசியல் தலைவர்கள் பவனி வந்து வாக்குச் சேகரிக்கத் துவங்குவர். தங்களின் பயணத்திற்கு இவர்கள் செய்யும் இடையூறுகளை மக்கள் சகித்துக் கொள்ளப்போவது கண்கூடாக இப்பொழுதே தெரிகிறது.

சமீபத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் பேருந்தில் அருகில் பயணித்த ஒரு முதியவர் உரையாடியது இன்றும் காதுகளில் ஒலிக்கிறது. 

உரையாடலின் சாரம் இதுதாம். 

பெருந்தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் திராவிட இயக்கம் தலையெடுத்தது. முதல் நாள் சேலத்தில் அமைக்கப்பட்ட எளிமையான மேடையில் அண்ணா அவர்கள் காங்கிரசு ஆட்சியை நாகரீகமாகக் குறை கூறிப் பேசினார்.

அடுத்த நாள் அதே மேடையில் பெருந்தலைவர் அவருக்கே உரிய பாணியில் அண்ணா அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலை நாகரீகமான வார்த்தைகளில் பதிலுரைத்தார். 

முதல் நாள் போட்டு அடுத்த நாளும் அதே எளிமையான மேடையைக்கூட அந்நாளில் பங்கிட்டுக் கொண்ட இயக்கங்களை நான் கண்டிருக்கிறேன். 

அதே போல பெருந்தலைவர் ஒரு முறை காரில் சேலம் வந்தார். அவருடைய வாகனத்திற்கு முன்பு ஒரே ஒரு காவல் வாகனம் மட்டுமே வந்தது. 

தேநீர்க்கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதோ காமராசர் செல்கிறார் என்றபோதுதாம் ஒரு முதல்வரின் வாகனம் அந்த வழியாகச் செல்வதையே என்னால் காண முடிந்தது. 

அவ்வளவு எளிமை. எந்தக் காலத்திலும் அத்தகைய எளிமையை இனி வரும் தலைமுறை இப்போதுள்ள அரசியல்வாதிகளிடம் காணவே இயலாது என்று அந்த முதியவர் வேதனையுற்றார்.

தந்தை பெரியார் அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவர்கள் தாங்கள் இந்த சமுதாயத்திற்காகக் கடுமையாகப் பாடுபட்டேன் எனச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஆணித்தரமாக பேசியும் எழுதியும் பதிவு செய்துள்ளார்.

இன்று அவரால் வளர்ந்தவர்கள் ஆடம்பரமான மேடைகள் அமைத்து பிரம்மாண்டமான கார் அணிவரிசைகள் பின்தொடரப் பயணித்து தேர்தல் வாக்கு கேட்கப் போகின்றனர்.

அதற்கு முன்னோட்டமாக மக்களைச் சந்திக்கிறேன் என்று ஒவ்வொரு இயக்கத் தலைவரும் தொகுதி வலம் வரத் துவங்கிவிட்டனர்.

இதற்கு இவர்கள் மக்களை எளிமையாகச் சந்திப்பதாக கையாளும் உத்திதான் இப்பொழுது பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழு, மாணவர் அணி, விவசாய அணி என இரகம் வாரியாக இவர்கள் பட்டியலிட்டுச் சந்திப்பது அவரவர் இயக்கம் சார்ந்த அணிகள்தாம் என்பது பாவம் பாமர மக்களுக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம். 
படித்தவர்கள் மத்தியில் இது எடுபடாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி! 

இந்தத் தேர்தல் முன்னோட்ட உலாவிலும் ஏராளமான ஆடம்பர சொகுசு வாகனங்களின் அணிவகுப்பு நிச்சயம் தென்படுகிறது.

மக்கள் இவர்களின் ஆடம்பர அணிவகுப்பிற்கும் இந்த உலாக்களுக்கும் செலவிடும் தொகை இவர்கள் உண்மையாக வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் செலவிடப்படுவதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மோசமான சாலைகள், அதிகக் கட்டணத்தில் பயணிக்கும் புளி மூட்டைப் பேருந்துப்பயணம், ஊழல் நிறைந்த மக்கள் நலத் திட்டங்கள், கட்டுப்படுத்த இயலாத விலைவாசி உயர்வு, அரசியல் மற்றும் களவுக்கென நடத்தப்படும் கொலைகள் என நாள்தோறும் நாட்டில் நடக்கும் ஏராளமான சமூகச் சீரழிவுகளை மறந்துவிட்டு 

இலவசங்களுக்கும், தேர்தல் நாளுக்கு முதல் நாள் அரசியல் இயக்கங்கள் வழங்கும் பணத்திற்காக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஆசைப்பட்டு மக்கள் வாக்களித்தால் 

தமிழகத்தில் ஏதேனும் ஒரு வலிமையான ஊழல் இயக்கம் நிச்சயம் ஆட்சி பீடம் ஏறும், மற்ற இயக்கங்கள் தோல்வியைத் தழுவியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும்

தோற்கப்போவதும் தோற்றுவிட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊழல் அரசியல்வாதிகளின் போக்கினைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளப்போவது 

நிச்சயமாக நம் தமிழக ஏமாளி வாக்காளர்கள்தாம் என்பதை இப்போதைக்கு எம்மால் வேதனையாகத்தாம் இங்கு பதிவு செய்ய இயலும்.

Read More...

திங்கள், 5 அக்டோபர், 2015

வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

Leave a Comment
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என மனம் கசிந்துருகி கொல்லாமையை வலியுறுத்தி உயிர்களையும் பயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தந்து சாதி பேதம் மறுத்து சமரச சன்மார்க்க சங்கம் அமைத்து பிரபஞ்சத்தில் நிலை பெற்று வாழும் தவச்சித்தர் வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

பக்தி மார்க்கத்தில் இருந்தபோது வள்ளலாரைப் புரிந்து கொள்ள இயலாது போனாலும் 

சித்த மார்க்கத்தில் அறிவு தெளிந்து அசைவ உணவு தவிர்த்து ஓரளவேனும் அவர் வழியில் வாழ முற்பட்டாலும் 

நம் தமிழக மக்கள் அனைவரும் வள்ளலார் அவர்களின் கருணை குணம் நினைந்து வாழ வேண்டும் என விரும்பி 

வள்ளலார் வகுத்த சமரச சன்மார்க்க தத்துவம் உலகெங்கும் தழைக்க வேண்டும் என்ற விருப்பங்களுடன் அவர்தம்  நினைவினை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாகப் போற்றுகிறோம்.

Read More...

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வாய்மையே வெல்லும்!

Leave a Comment
வாய்மையே வெல்லும்! இது தேசத் தந்தை நம் மக்களுக்கு விட்டுச் சென்ற முழக்கம்!

இதுவே நம் பாரத இலட்சினையில் சத்யமேவ ஜெயதே எனவும் தமிழகத்தின் இலட்சினையில் வாய்மையே வெல்லும் எனவும் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இவை வெறும் வாசகங்கள் மட்டுமல்ல. இந்த வாசகங்கள் எழுதப்பட்டுள்ள வாகனங்கள் சுமந்து செல்லும் அரசு அலுவலர்கள்

தங்களின் நெஞ்சில் இந்த வாசகங்களைச் சுமந்தால்

இந்த நாட்டில் வாய்மை தழைக்கும்! ஊழல் ஒழியும்!

தீமைகளின் இருள் தொலைந்து நன்மைகளின் விடியல் தோன்றும்!

விடியலைக் காண இருளில் தவிக்கும் மக்களில் ஒருவனாக

அகிம்சை ஆயுதம் கொண்டு கத்தியின்றி இரத்தமின்றிச் சுதந்திரம் வாங்கித் தந்த

அண்ணல் மகாத்மாவிற்கு  எமது கோடி கோடி வணக்கங்கள்!

Read More...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

Leave a Comment
நாங்கள் தற்பொழுது புதிதாகக் குடியிருக்கும் இல்லம் வீட்டு உரிமையாளர் இல்லத்துடன் முதல் தளத்தில் உள்ளது. இங்கு நாங்கள் குடியேறிய முதல் நாள் துவங்கியே வீட்டு உரிமையாளரின் ஒன்றரை வயதுச் சிறுமி எங்களைச் சொந்தம் கொண்டாடத் துவங்கிவிட்டாள். 

குறிப்பாக அவள் (ப்ரனிதா அவளது பெயர்) அப்புச்சி என முகம் நிறைந்த மகிழ்வுடன்தான் என்னைக் காணும்போதெல்லாம் அழைப்பாள். 

காலை எழுந்தது முதல் இரவு பத்து மணி வரை அவளின் பொழுது போக்கிடம் எங்கள் இல்லம்தாம். 

மழலைகளுக்கே உரிய குறும்புகள் ஏராளம் அவளுக்கும் உண்டு. அதன் பொருட்டு அவள் செய்யும் குறும்புகள் எல்லை மீறும் போது எனது மகள் கோபப்படுவது போல சற்று மிரட்டுவார். 

உடனே அவள் முகம் வாட்டமடைந்து எங்கள் இல்லத்திலிருந்து அவளது வீட்டிற்குச் சென்று அவளது தாய் தந்தையர் மற்றும் பாட்டியிடம் மழலையில் முறையிடுவாள். 

அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் அவளை அவர்கள் சமாதானப்படுத்துவர். கோபித்துச் சென்ற ஒரு நிமிடத்தில் மீண்டும் அவள் எங்கள் இல்லத்துக் கதவோரம் அத்தா என (என் மகளை அவள் அவ்வாறுதான் அழைப்பாள்) முகம் நிறைந்த சிரிப்புடன் எட்டிப் பார்த்து பின்னர் என் மகளிடம் வந்து ஒட்டிக் கொள்வாள். 

இந்த நிகழ்வுகள் தினசரி எங்கள் இல்லத்தில் நடைபெறும். என் மகள் போலியாகக் கோபப்படுவதை அறியாமல் அச்சிறுமி கோபித்துக் கொண்டு சென்றாலும் அடுத்த நிமிடமே அதனை மறந்துவிடுவதை அடிக்கடி காணும்போதெல்லாம் என் மனதில் ஓடுவது கீழ்க்கண்ட பாடல் வரிகள்தாம். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததையே நினைப்பதுதான் துயரம் என்று 
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

உச்சி வேளைச் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளமெனும் சூரியனைக் கோபம் மூடுது

காற்று வந்தால் மேகம் அங்கு விலகி ஓடுது
பேசிக் கலந்துவிட்டால் கோபம் மாறி நேசமாகுது

பிள்ளைகளாய் இருந்தவர்தாம் பெரியவரானோம்
அந்தப் பெரியவர்தாம் கோபத்தினால் சிறியவரானோம்

எவ்வளவு உன்னதமான வைர வரிகளைக் கவிஞர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்.   

குழந்தைகளுக்கு ஏற்படும் கோபத்தினை அவர்கள் அந்த நிமிடமே தங்களின் மனதிலிருந்து அழித்துவிட்டு எதுவும் நிகழாதது போல மீண்டும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். 

ஆனால் வளர்ந்து ஆண்டுகள் கடந்த நாம்தாம் எதையும் மறந்து தொலையாமல் நினைந்து வதைகிறோம்.

இந்தப் பாடலில் தொடரும் வரிகளை ஒருவர் அது ஆணோ அல்லது பெண்ணோ எவராக இருந்தாலும் பின்பற்றி வாழத் துவங்கி விட்டால் இந்தப் பூவுலகில் அன்பும் சமாதானமும் மட்டுமே தழைத்தோங்கும் என்பதில் எவருக்கும் எவ்விதச் சந்தேகமும் கிடையாது.  

எனினும் போக்குவரத்தில் நாம் செல்லும்போது ஒருவர் தவறாக நம் வாகனத்தில் இடித்துவிட்டால் நீயா நானாவெனச் சண்டையிடுதல். 

இந்தச் சண்டையினை அப்பொழுதே மறந்து தொலையாமல் வீட்டுக்கும் கொண்டு சென்று அகப்படுபவரிடம் வெளிப்படுத்துவது. 

பேருந்தில் சில்லறைக்காகவே நிகழ்ந்த ஒரு சாலை மறியல் போராட்டம், வாக்கு வாதங்கள் அடிதடிகள்,  

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நிகழும் சின்னச் சின்ன பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பகைத்துப் பணியாற்றுவது. 

இல்லத்தில் ஒரு சிறிய நிகழ்விற்காகச் சண்டையிட்டுக் கொண்டு நாள் கணக்கில் வாரக் கணக்கில், வருடக்கணக்கில் சிலர் வாழ்நாள் முழுவதும் உறவினை வெறுத்து வாழ்வது. 

கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, அண்ணன் தங்கை, தந்தை மகன், தந்தை மகள்  எனப் பல்வேறு உறவுகளிடமும் நண்பர்களுக்குக்குள்ளும் சிறிய நிகழ்வுகள் பெரிதாகி உறவு விட்டுப் போவது 

எழுத ஏராளம் இருந்தாலும் சின்னச் சின்ன உதாரணங்கள்தாம் இவை!

இவையெல்லாம் விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை!
கெட்டுப் போபவர் விட்டுக் கொடுப்பதில்லை  

என்ற பழமொழிக்கேற்ற உண்மைகள்!

நம்முள் பெரும்பாலானவர்கள் நமது வாழ்வு துவங்கும் காலை முதல் இரவு வரை சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் விட்டுக் கொடுக்கவும் சகித்து வாழவும் பழகிவிட்டால் வாழ்க்கையே இன்பமயம்தாம்.  

இந்தப் பாடல் வரிகளில் வருவதைப் போலவே நானும் வாழ்ந்து வந்துள்ளேன் என்பதை நினையும்போது வெட்கமும் வேதனையும்தாம் மனம் முழுக்க வந்து தொலைகிறது.

வாழ்க்கை நமக்கு வைக்கும் சத்திய சோதனைகள்தாம் இவை என்று தெளிந்து பாடல் வரிகளுக்கேற்ப குற்றங்களை மறந்து பிள்ளைகளாக நாம் வாழத் துவங்கிவிட்டால் நாம் ஒன்றும் தெய்வங்கள் அளவிற்கு உயரப் போவதில்லை! குறைந்தது நல்ல மனிதர்களாகவாவது வாழ முயற்சிப்போமே.   

Read More...