வெள்ளி, 2 அக்டோபர், 2015

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

Leave a Comment
நாங்கள் தற்பொழுது புதிதாகக் குடியிருக்கும் இல்லம் வீட்டு உரிமையாளர் இல்லத்துடன் முதல் தளத்தில் உள்ளது. இங்கு நாங்கள் குடியேறிய முதல் நாள் துவங்கியே வீட்டு உரிமையாளரின் ஒன்றரை வயதுச் சிறுமி எங்களைச் சொந்தம் கொண்டாடத் துவங்கிவிட்டாள். 

குறிப்பாக அவள் (ப்ரனிதா அவளது பெயர்) அப்புச்சி என முகம் நிறைந்த மகிழ்வுடன்தான் என்னைக் காணும்போதெல்லாம் அழைப்பாள். 

காலை எழுந்தது முதல் இரவு பத்து மணி வரை அவளின் பொழுது போக்கிடம் எங்கள் இல்லம்தாம். 

மழலைகளுக்கே உரிய குறும்புகள் ஏராளம் அவளுக்கும் உண்டு. அதன் பொருட்டு அவள் செய்யும் குறும்புகள் எல்லை மீறும் போது எனது மகள் கோபப்படுவது போல சற்று மிரட்டுவார். 

உடனே அவள் முகம் வாட்டமடைந்து எங்கள் இல்லத்திலிருந்து அவளது வீட்டிற்குச் சென்று அவளது தாய் தந்தையர் மற்றும் பாட்டியிடம் மழலையில் முறையிடுவாள். 

அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாவிட்டாலும் அவளை அவர்கள் சமாதானப்படுத்துவர். கோபித்துச் சென்ற ஒரு நிமிடத்தில் மீண்டும் அவள் எங்கள் இல்லத்துக் கதவோரம் அத்தா என (என் மகளை அவள் அவ்வாறுதான் அழைப்பாள்) முகம் நிறைந்த சிரிப்புடன் எட்டிப் பார்த்து பின்னர் என் மகளிடம் வந்து ஒட்டிக் கொள்வாள். 

இந்த நிகழ்வுகள் தினசரி எங்கள் இல்லத்தில் நடைபெறும். என் மகள் போலியாகக் கோபப்படுவதை அறியாமல் அச்சிறுமி கோபித்துக் கொண்டு சென்றாலும் அடுத்த நிமிடமே அதனை மறந்துவிடுவதை அடிக்கடி காணும்போதெல்லாம் என் மனதில் ஓடுவது கீழ்க்கண்ட பாடல் வரிகள்தாம். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததையே நினைப்பதுதான் துயரம் என்று 
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

உச்சி வேளைச் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளமெனும் சூரியனைக் கோபம் மூடுது

காற்று வந்தால் மேகம் அங்கு விலகி ஓடுது
பேசிக் கலந்துவிட்டால் கோபம் மாறி நேசமாகுது

பிள்ளைகளாய் இருந்தவர்தாம் பெரியவரானோம்
அந்தப் பெரியவர்தாம் கோபத்தினால் சிறியவரானோம்

எவ்வளவு உன்னதமான வைர வரிகளைக் கவிஞர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்.   

குழந்தைகளுக்கு ஏற்படும் கோபத்தினை அவர்கள் அந்த நிமிடமே தங்களின் மனதிலிருந்து அழித்துவிட்டு எதுவும் நிகழாதது போல மீண்டும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றனர். 

ஆனால் வளர்ந்து ஆண்டுகள் கடந்த நாம்தாம் எதையும் மறந்து தொலையாமல் நினைந்து வதைகிறோம்.

இந்தப் பாடலில் தொடரும் வரிகளை ஒருவர் அது ஆணோ அல்லது பெண்ணோ எவராக இருந்தாலும் பின்பற்றி வாழத் துவங்கி விட்டால் இந்தப் பூவுலகில் அன்பும் சமாதானமும் மட்டுமே தழைத்தோங்கும் என்பதில் எவருக்கும் எவ்விதச் சந்தேகமும் கிடையாது.  

எனினும் போக்குவரத்தில் நாம் செல்லும்போது ஒருவர் தவறாக நம் வாகனத்தில் இடித்துவிட்டால் நீயா நானாவெனச் சண்டையிடுதல். 

இந்தச் சண்டையினை அப்பொழுதே மறந்து தொலையாமல் வீட்டுக்கும் கொண்டு சென்று அகப்படுபவரிடம் வெளிப்படுத்துவது. 

பேருந்தில் சில்லறைக்காகவே நிகழ்ந்த ஒரு சாலை மறியல் போராட்டம், வாக்கு வாதங்கள் அடிதடிகள்,  

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நிகழும் சின்னச் சின்ன பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பகைத்துப் பணியாற்றுவது. 

இல்லத்தில் ஒரு சிறிய நிகழ்விற்காகச் சண்டையிட்டுக் கொண்டு நாள் கணக்கில் வாரக் கணக்கில், வருடக்கணக்கில் சிலர் வாழ்நாள் முழுவதும் உறவினை வெறுத்து வாழ்வது. 

கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, அண்ணன் தங்கை, தந்தை மகன், தந்தை மகள்  எனப் பல்வேறு உறவுகளிடமும் நண்பர்களுக்குக்குள்ளும் சிறிய நிகழ்வுகள் பெரிதாகி உறவு விட்டுப் போவது 

எழுத ஏராளம் இருந்தாலும் சின்னச் சின்ன உதாரணங்கள்தாம் இவை!

இவையெல்லாம் விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை!
கெட்டுப் போபவர் விட்டுக் கொடுப்பதில்லை  

என்ற பழமொழிக்கேற்ற உண்மைகள்!

நம்முள் பெரும்பாலானவர்கள் நமது வாழ்வு துவங்கும் காலை முதல் இரவு வரை சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் விட்டுக் கொடுக்கவும் சகித்து வாழவும் பழகிவிட்டால் வாழ்க்கையே இன்பமயம்தாம்.  

இந்தப் பாடல் வரிகளில் வருவதைப் போலவே நானும் வாழ்ந்து வந்துள்ளேன் என்பதை நினையும்போது வெட்கமும் வேதனையும்தாம் மனம் முழுக்க வந்து தொலைகிறது.

வாழ்க்கை நமக்கு வைக்கும் சத்திய சோதனைகள்தாம் இவை என்று தெளிந்து பாடல் வரிகளுக்கேற்ப குற்றங்களை மறந்து பிள்ளைகளாக நாம் வாழத் துவங்கிவிட்டால் நாம் ஒன்றும் தெய்வங்கள் அளவிற்கு உயரப் போவதில்லை! குறைந்தது நல்ல மனிதர்களாகவாவது வாழ முயற்சிப்போமே.