மக்கள் சேவைகளையும் காசாக்கலாமே!

என் போன்று வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்தர்ப்ப சூழல், மற்றும் வீட்டு வாடவை உயர்வு காரணங்களுக்காக குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் இடம் மாறும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக குடிமைப் பொருள்கள் வழங்கு அட்டை, மற்றும் தேர்தல் அடையாள அட்டையில் அடிக்கடி நாங்கள் இட மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகிறது. 

இதில் குடிமைப் பொருள் அட்டை மாறுதலுக்கு கையூட்டு இன்றி இடம் மாறுதலைப் பதிவு செய்தல் இயலாததென்பது நாடே அறிந்த ஒன்று.

தேர்தல் கமிசன் வாக்காளர் பெயர்களில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், இட மாறுதல்களைப் பதிவு செய்தல் போன்ற வேலைகளை அவ்வப்போது செய்து வந்தாலும், இவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதாம் கண்கூடான உண்மை. 

ஏனென்றால் இது போன்ற முகாம்களில் அரசியல் இயங்கங்களின் பிரதிநிதிகள்தாம் ஆதிக்கம் செழுத்துகின்றனர்.அதிலும் குறிப்பாக ஆளும் இயக்கம் சார்ந்தவர்களின் ஆதிக்கம்தாம் அதிக அளவில் உள்ளது.

என் போன்று வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் இது போன்ற முகாமிற்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க இயலும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த முகாம்களுக்கு எம் போன்றவர்கள் அதிக அளவு வருவதால் அதிக வரிசையுடன் காட்சியளிக்கும். எனினும் ஒரு முறை காத்திருந்து அங்கு விநியோகிக்கப்பட்ட படிவத்தில் எனது அப்போதய இடம் மாறுதல் விபரங்களைப் பதிவு செய்துவிட்டுத்தான் வந்தேன்.

ஆயினும் கடந்த நாடளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற நான் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் பழைய இடத்திலிருந்து நீக்கப்பட்டும் புதிய இடத்தில் சேர்க்கப்படாமலும் இருப்பது கண்டு அதிர்ந்தேன்.

எனது பதிவிற்குப் பிறகு போதிய கால அவகாசமிருந்தும் பழைய இடத்திலிருந்து எனது பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆயின் புதிய இடத்தில் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. 

என்னை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டனர் என்று வேடிக்கையாக அங்கு வாக்களிக்க காத்திருந்தவர்களிடம் கூறிவிட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க இயலாமல் வேதனையுடன் வெளியேறினேன்.

இது ஒன்றும் கதையல்ல உண்மை நிகழ்வுதான். சாட்சியத்திற்கு எனது விலாச மாறுதல் விண்ணப்பத்தினை பதிவு முகாமிலிருந்தவர்க்ள பெற்றுக கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதம் இன்றும் என்னிடம் பயனற்றுப்போன நிலையிலும் பத்திரமாகத்தான் உள்ளது.

தேர்தல் கமிசனின் இத்தகைய அலட்சியப் போக்கை உண்மையாக அனுபவித்த காரணத்தால் இந்த ஆண்டு நடை பெற்ற முகாமில் மீண்டும் வேறு இடம் மாறியுள்ள நிலையில் நான் எனது விலாச மாற்றத்தை பதிவு செய்யச் செல்ல விரும்பவில்லை. 

இன்றுள்ள அரசியல் இயக்கங்களின் மீது எனக்கு நம்பிக்கை போய்விட்டதால் என்னுடைய ஒரு வாக்கும் நிச்சயமாக நேட்டோவில்தான் பதிவாகும். அந்த வாய்ப்பும் எனக்கு வரும் தேர்தலில் நிச்சயம் கிடைக்கப்போவதிலலை.

வாக்களிக்க விரும்பும் மக்கள் தங்களின் இடமாற்றம், புதிதாகச் சேர்த்தல் போன்றவற்றிற்காக இது போன்ற முகாம்களுக்குச் செல்ல தங்கள் நேரத்துடன் அங்கு செல்வதற்காக வாகனங்கள் முதலானவற்றைச் பயன்படுத்திப் பணத்தையும் செலவிடுகின்றனர்.

எனினும் அவர்களில் அனைவருடைய விண்ணப்பங்களும் நிச்சயம் பரிசீலிக்கப்படுகிறதா என்பதை எவரும் கண்காணிப்பதில்லை. தேர்தல் ஆணையம் இணையம் வாயிலாகக் கண்காணிக்க இயலும் என அறிவித்தாலும் பாமர மக்கள் தங்களின் படிப்பின்மை காரணமாக இணையத்தை நாட இயலாது. 

எனவே தேர்தல் நாளன்றுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை எம் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணைய நடைமுறைகளைச் சாடும் நிலையினை அடிக்கடி காண முடிகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக எம் போன்று ஒரு முறை பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் ஒரு சாதாரண கடிதம் வாயிலாகவோ அல்லது இணையத்தில் அந்தந்த மொழியில் எளிமையாகப் பூர்த்தி செய்து விலாச மாறுதலை தேர்தல் ஆணைத்திற்குத் தெரிவித்துப் பதிவு செய்யும் வழி ஏற்படுத்தலாம்.

இத்தகைய விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் தேர்தல் கமிசனின் அதிகாரம் பெற்ற நபர் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு அதற்குரிய கட்டணத்தை கேட்டால்கூட உபயோகமற்ற முகாம்களுக்குச் சென்று அலைவதை விட இதுவே மேல் என எம் போன்றவர்கள் கட்டிவிடுவோம்.

தேர்தல் கமிசனும் தான் செய்த சேவைக்கு உரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டது போலாகிவிடும். 

இது நடைமுறைச் சாத்தியமா என்பது ஒரு புறமிருக்க இப்படிச் செய்வதிலும் ஒரு நேர்மையை நாம் இன்றைய அரசியல் அமைப்பு ஆணையங்களிடம் எதிர் பார்ப்பது ஏதேனும் ஒரு வழியிலாவது மத்திய மாநில அரசுகளுக்கு விற்பனை வரி சேவை வரி எனப் பல்வேறு வரிகளைக் கட்டும் எம் போன்ற பாமரர்களின் உரிமை என்பதை இங்கு நிச்சயம் பதிவு செய்துதான் ஆக வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!