ஆலய சமத்துவம்

எனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக திருச்சியில் உள்ள அமைப்பு நடத்தும் மங்கள விழா என்ற பெண் மற்றும் ஆண் வீட்டார்களின் நேரடிச் சந்திப்புக்கு இந்த மாதத் துவக்கத்தில் சென்றிருந்தோம்.

இந்த முறை நாங்கள் முறையாகப் பதிவு செய்யச் சற்று கால தாமதம் ஏற்பட்டதால் அந் நிகழ்வில் எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை.

எனது துணைவியார் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தத்துடன் உறவினர் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது  வயலூர் சென்று வரலாமா என என்னிடம் வினவினார்.

நான் சித்தர்களின் தலைவன் முருகனின் பகுத்தறிவு வழி நடப்பவன். எனவே நல்லதாகப் போனது முருகன் தன்னிடம் வரச் சொல்லவே இந்த நிகழ்விலிருந்து அழைக்கிறார். இல்லையென்றால் இன்று மதியம்வரை நிகழ்வில் கலந்து கொண்டு ஊர் திரும்பவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று கூறி நாங்கள் சென்ற சாலையிலிருந்து அருகிலேயே இருந்த வயலூருக்கு வாகனத்தைச் செழுத்தினேன்.

அங்கு சென்றபோது முருகன் சந்நிதியில் ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண்கள் தமிழில் இனிமையாக முருகனை வரச் சொல்லியும் வரம் தரச் சொல்லியும் பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களில் ஒரு சகோதரி அர்ச்சகருக்குக் கொடுப்பதற்காக நூறு ரூபாயினைத் தனது பணப்பையிலிருந்து எடுப்பதையும் நான் கவனித்தேன். அவரோடிருந்த மற்றவர்கள் எவ்வளவு காணிக்கையை அர்ச்சகரின் தட்டில் போடக் காத்திருந்தனர் என்பது தீப ஆராதனை முடிந்தவுடன் அவர்களுக்குப் பின்னிருந்த நான் மற்றும் எனது துணைவி உட்பட சுமார் பத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை அர்ச்சகர் ஒட்டு மொத்தமாக வெளியே அழைத்து பூ மற்றும் விபூதி தீபாராதனை முதலியவற்றை வேறு ஒருவரைக் கொண்டு விநியோகித்ததால் காண இயலவில்லை.

எங்களை ஒதுக்கும்போது முன் வரிசையில் முடி இறக்கிக் கொண்டு அர்ச்சனைக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தை நோக்கி இவாளை அனுப்பிவிட்டு திவ்வியமாக உங்களுக்கு அர்ச்சனை செய்கிறேன் என்றும்,

பாடியவர்கள் கொடுத்த கணிசமான தொகைக்காக முருகனை அலங்கரித்த இரு மாலைகளை (150 ரூபாய் செலவழித்து எவரோ சுவாமிக்கு அணிவிக்கத் தந்தது) எடுத்து அவர்களிடம் வழங்கி சாவகாசமாக உரையாடியதையும் கவனித்த நான்

என்னிடம் சில்லரையாக இருந்த 20 ரூபாய் நோட்டினை எனது துணைவியாரின் வேண்டுதலையும் புறக்கணித்து அந்த அர்ச்சகரின் தட்டில் இட மறுத்து என்னிடமிருந்த 5 ரூபாய் நாணயத்தினை மட்டுமே தட்டில் இட்டுவிட்டு வெளியேறினேன்.

ஆரோக்கியமானவர்கள் உழைப்பதற்கு அஞ்சிப் பிச்சையெடுப்பதை ஆதரிக்க விரும்பாததால் நான் பொதுவாகப் பிச்சையிடுவதில்லை

எனினும் முருகனுக்கு அருகிலிருந்து கொண்டு தினமும் ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் ஆரோக்கியமான கொழுத்த அர்ச்சகருக்கு தர மறுத்த அந்தத் தொகையை வெளியே நின்ற வயதான உழைக்க இயலாத உடல் வாகு கொண்ட இரு முதியவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.

முருகன் தன்னைக் காண என்னை அங்கு வரவழைத்தாலும் கல்லாக நின்று காட்சியளிக்கும் தன் முன்பு தன்னை நாடி வரும் மக்களிடம் தட்டில் இடப்படும் பணத்தின் அளவினைக் கொண்டு காட்டப்படும் பாரபட்சத்தை பார் என என்னுள் உரைப்பது போன்று அவர் முன்பு நிற்கும்போது நான் மனதார உணர்ந்தேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தகுதியுள்ளவர்கள் என சட்டமியற்றினாலும் இன்றும் அதிக வருமானம் தரும் ஆலயங்களில் ஆதிக்கம் செழுத்தும் அர்ச்சகர்கள் தட்டில் விழும் வருமானத்தால் கொழிப்பதால்தான் மதவாதிகளின் கைகள் தமிழகத்தில் ஓங்கத் துவங்கியுள்ளன.

காணிக்கைகளை உண்டியலில் போடுங்கள் என ஆங்காங்கே எழுதி வைத்திருந்தாலும் தட்டேந்தும் அர்ச்சகர்ககள் மற்றும் அந்த பரிகாரம் இந்த பரிகாரம் செய்விக்கிறேன் என அப்பாவி மக்களை வளைத்து ஏராளமாகக் காசு பார்க்கும் அர்ச்சகர் கூட்டங்களை அரசு நிர்வாகம் தடுப்பதில்லை.

மேலும் பணம் படைத்தவர்கள் அள்ளி வழங்கும் பணத்திற்காகவே ஆடம்பரமாக நடைபெறும் அர்ச்சனைகள் காரணமாக எளியவர்கள் ஆலயங்களில் அலட்சியப்படுத்தப்படுகின்றனர்.

தன் மக்களிடம் பேதம் பாராட்டும் அர்ச்சகர்களின் செயலை அந்த முருகன் கல்லாக நின்றுதான் எம் போன்றவர்கள் வாயிலாகக் கவலைப்படுகிறான்.

அனைத்து ஆலயங்களிலும் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு அந்தந்த கோயிலின் வருமானத்திற்கும் அவர்கள் அங்கு செய்யும் வேலைக்கும் ஏற்ற ஊதியம் மட்டுமே இனி வழங்கப்படும் காலம் உருவாக வேண்டும்.

ஆரத்தித் தட்டு ஏந்தி பணம் வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆலயத்தில் அனைவரும் சரிசமமே என்ற நிலை உருவாக வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுகள் முற்றிலும் ஆள்பவன் (ஆண்டவா என அழைத்தால் அது இறந்த காலத்தைக் குறிக்கும்) சந்திதியில் அகற்றப்பட வேண்டும்.  

இறைவன் சந்நிதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பணவரிசைத் தடுப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். தரிசிக்க வரும் மக்களை சந்நிதிக்கு முன் இருக்கும் இட வசதிக்கேற்ப பத்து அல்லது இருபது நபர்களாக இருபுறமும் நிற்கவோ அல்லது அமரவோ வைத்து ஆராதனை முடிந்தவுடன் அடுத்த வரிசை மக்களை அனுமதிக்குமாறு ஒரு ஒழுக்கமான அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்.

எங்களின் வட மாநிலப் பயணத்தின்போது ஜெய்ப்பூர் என நினைக்கிறேன். அங்குள்ள பிர்லா மந்திரில் நிலவிய சமத்துவமும் சுத்தமும் ஆண்டுகள் இருபது கடந்தும் இன்றும் நினைவிலாடுவதற்குக் காரணம் நம் கோயில்களில் காணப்படும் அசுத்தங்களாலா என்பதை அந்த முருகன்தான் விளக்கவேண்டும்.

ஒருமுறை ஊர் திரும்ப நேரமின்மையைக் கருதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் எனது நண்பரின் ஏற்பாட்டின்பேரில் காசு கொடுத்து ஒரு புரோகிதரின் துணை கொண்டு குறுக்கு வழியில் சென்று முருகனைத் தரிசித்த குறுகுறுப்பு இன்றுவரை எனது மனதில் தவறாகப் படுவதை நினையும்  வேதனை மனதுடன்

பாரபட்சமற்ற ஆலயத் தரிசன முறை இனியாவது   உருவாக வேண்டுமென்பதை மட்டுமே அந்த பகுத்தறிவுத் தமிழர் தலைவன் முருகனிடம் ஒரே வேண்டுதலாக வைத்துவிட்டுத்தான் அன்றைய தினம் அவரது ஆலயத்திலிருந்து நான் இல்லம் திரும்பினேன்.

இனி சமத்துவம் தருவது அந்த வேலாயுதனின் கரங்களில்தான் உள்ளது.          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!