இப்பொழுதிருந்தே விழித்திடுங்கள்!

சென்னையை உலுக்கிய புயல் மழையால் சென்னை மற்றும் புற நகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையை ஊடகங்கள் வாயிலாக அறிவதில் வேதனை கொள்கிறோம்.

இயற்கையை மனிதன் நம்பாததும், சுயநலமிக்கவர்கள் கால்வாய்கள் ஏரிகள், என மழை நீர் செல்லும் வழிகள், சேகரமாகும் இடங்களை ஆக்கிரமித்து மனைகள் விற்க, அந்த இடங்கள் ஏரிகளாக இருந்தததையும் அறியாமல் வீடுகளைக் கட்டியதால் இயற்கை தன் போக்கில் ஏராளமான மழைப் பொழிவினை வாரி வழங்க அவை சேகரமாகும் இடங்கள் பரிதாபமாக வீடுகளாக இருந்த காரணத்தால் வெள்ளக் காட்டில் அங்கு வாழும் மக்கள் இன்று தத்தளிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

மழை வரவா போகிறது என்ற அலட்சியம் மக்களுக்கும் அரசுகளுக்கும் ஏற்பட்டுத் தொலைய இயற்கையை நம்பாது ஆற்றின் கரையோரம் துவங்கி ஆற்றுக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டதும், வெள்ள காலங்களின் அபாயம் அறிந்தும் அரசுகள் அந்த வீடுகளை அங்கீகரித்து மின் இணைப்பும் இலவசமாக வாக்கு வங்கிக்கென வழங்கித் தொலைய, இன்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மூழ்கித் தங்களின் உயிரைக் காத்துக் கொண்டு உடமைகளை இழந்து தவிக்கும் மக்களை நினைந்து வேதனையுற மட்டுமே முடிகிறது.

சென்னையை மட:டுமல்ல இயற்கையை ஆக்கிரமித்துள்ள தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே நிலைதாம். 

இனியாவது இது போன்ற அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி அவர்கள் ஒரு குருவிக்கூடு அளவிலானதாக இருந்தாலும் வசதியாக வாழும் வண்ணம் ஊழலில்லாக் குடியிருப்புகளை அடுத்த மழைக் காலம் துவங்குவதற்குள் கட்டிக் கொடுத:து குடியேற்றி தற்போதுள்ள அபாயகர வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ ஏரிகள் இருந்த இடங்களில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பை நோக்கி வரும் வெள்ள நீர் வழித்தடங்களை உடனடியாகக் கண்டறிந்து அவை வேற்றிடம் சென்று ஆக்கிரமிக்கப்படாத ஏரிகளைச் சென்றடைந்து குடிநீராதாரமாக மாற்றும் வாய்க்கால்களை உருவாக்கி சேகரிகக வேண்டும்.

இது மட்டுமன்றி தங்கள் வீடுகளிலிருந்து புறப்படும் சாக்கடைகளில் இனி எந்தப் பொருட்களையும் கொட்டி மழை நீர் வடிவதைத் தடுக்கத் தாங்களும் ஒரு காரணமாக மாட்டோம் என்ற உறுதிமொழியினை ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து ஆளும் எதிரணி இயக்கங்கள் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல தத்தம் பங்கிற்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்து வந்தாலும் அவை தற்காலிக நிவாரணம்தான் என உணர்ந்து வரும் ஆண்டில் கடுமையான சூறாவழிகள் எத்தனை வந்தாலும் அத்தனையையும் சமாளிக்கும் ஆற்றலை மக்கள் பெற என்னென்ன வசதிகள் மேற்கண்டவாறு தேவையோ அவை அத்தனையையும் கேட்டோ அல்லது போராடியோ அரசிடம் பெற வேண்டியதுதாம் இனி மக்களுக்குள்ள ஒரே வருமுன் காக்கும் வழியாகும்.

எனவே இப்போதே விழித்திடுங்கள். நாளைய பொழுது நல்லதாக விடியும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!