காது கேளாதவரிடம் ஊதிய சங்கு!

நல்லவர்களுக்கு வாக்களிக்க மறுக்கும் மக்கள்!

குடவோலை எனப்படும் வாய்மைத் தத்துவ முறையில் தங்களின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற நல்லவர்களை சங்ககாலத்தில் தேர்ந்தெடுத்துப் பயனுற்ற நம் தமிழக மக்கள் இன்று படிப்பறிவு பெற்ற நாட்களிலும் ஏனோ தங்களின் சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தவறுகின்றனர்.

மக்கள் தாங்கள் சார்ந்துள்ள இயக்கம் அறிவிக்கும் வேட்பாளர்களைத்தான் கவனிக்கிறார்களே தவிர அவர்கள் எளிமையானவர்களா அல்லது வசதி படைத்தவர்களா என்பதை கவனிப்பதே இல்லை. 

இன்றுள்ள இயக்கங்கள் தேர்தலில் ஏராளமாகச் செலவிடக்கூடிய தகுதியுள்ள பெரும் செல்வந்த அரசியல்வாதிகளைத்தாம் தங்களின் தேர்தல் வேட்பாளர்களாகக் களமிறக்குகின்றன.

இந்தச் செல்வந்தர்கள் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது அவர்களின் சொந்த உழைப்பிலா அல்லது மக்கள் தொண்டு செய்ய வந்து அதைத் தவறாகப் பயன்படுத்தி செல்வந்தர்களானார்களா என்பதையெல்லாம் மக்கள ஆராய்வதே இல்லை.

எந்தவித நிறுவனமும் நடத்தாத ஒருவர் சாதி வாக்கினை மட்டுமே பெற்று வளர்ந்து ஒரு தேர்தலில் தனது சொத்து மதிப்பினை ஐம்பது இலட்சங்கள் என்கிறார். அதே வேட்பாளர் ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில் ஒரு வளர்ந்த தலைவராகக் காட்சியளித்து அடுத்த தேர்தலில் தனது சொத்து மதிப்பினை ஐந்து கோடிகள் என அறிவிக்கிறார். 

ஐந்தாண்டுகளில் பெரிய வணிகம் செய்யும் வணிகர்கூட இவ்வளவு தொகையினை வருமானமாக ஈட்ட முடியுமா என்பது எமது அறிவிற்கு விளங்கவில்லை. 

சாமானியர்களின்  ஒரு இலட்சத்திற்குரிய பரிவர்த்தனைகளையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் உள்ளோம் என ஊடகங்களில் தொடர்ந்து அறிவிக்கும் வருமான வரித்துறைக்குமா இது விளங்காமல் போனது என்பதுதாம் எம் போன்ற பாமரர்களின் கேள்வியே.

ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் தற்போதுள்ள ஆடம்பர அரசியல்வாதிகளைப் புறக்கணித்து எளிமையானவர்களாக, மக்களுக்கு உழைப்பதற்கென்றே தங்களை அர்ப்பணிக்கும் மனமுள்ளவர்களாகத் திகழும் நல்லவர்களை அடையாளம் கண்டு 

அவரிடம் காணப்படும் பொதுத் தொண்டு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாக்கி வெற்றி பெறச் செய்தால் சுயேச்சைகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல அரசாங்க அமைப்பாக உருவாகலாமே என  எவரிடம் உரையாடினாலும் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூறும் பதில் இதோ இதுதான்.

அட போங்கள் அய்யா! நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்களைக்கூட இன்றுள்ள அரசியல் சூழல் கெட்டவர்களாக மாற்றிவிடும்!

இதுவா பொறுப்புள்ள ஒரு நல்ல வாக்காளர் தருகின்ற ஆரோக்கியமான பதில்?

ஆக மக்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க மனதளவில்கூடத் தயாராவதில்லை எனும்போது 

மோசமான அரசியல்வாதிகளைத்தான் தொடர்ந்து நாங்கள் ஆதரிப்போம். 

அவர்கள் செய்யும் ஊழலையும், அராஜகத்தையும் கண்டு கொள்ளாமல் வாக்களிப்போம். 

தேர்தல் நாளன்றும், தேர்தலுக்குப் பின்னரும் அவர்கள் தரும் பணத்தினையும் இலவசங்களையும் இது நம்முடையதுதானே என்று வெட்கமில்லாமல் கூறி வாங்கிக கொள்வோம்.

பின்னர் வரும் ஐந்தாண்டுகளும் இந்த அரசியல்வாதிகள் எதிரும் புதிருமாக கீரியும் பாம்பும் போலச் சண்டையிட்டுக் கொண்டு உள்ளுக்குள் கூட்டு சேர்ந்து மக்கள் வரிப்பணத்தை ஏப்பமிடுவதைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடுகிறோம் என்ற மனப்பான்மை உள்ள மக்களிடம்

நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல அரசியல் அமைப்பு உருவாகத் துணை செய்யுங்கள் என்பது

காது கேளாதவரிடம் ஊதிய சங்குக்கு இணைதானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!