புகை உயிருக்குப் பகை!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் எனது தந்தைக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு.
எனக்கு ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டில் எனது தமக்கைகள் இருவரும் ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரத்தாலான பீரோவின் முன்னும் பின்னும் ஓடியபடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

எனது தந்தை அந்தப் பீரோவின் மேல் தனது பீடிக் கட்டினை வைத்திருப்பது வழக்கம். மேலும் சிறுவனாகிய என்னையும், நான் வளர்ந்து வாலிபனான பிறகும்கூட அவர் இதை கடைகளில் வாங்கி வரச் சொல்வதும் வழக்கம்.

அன்று எனது தமக்கைகளின் சண்டை அமளிக்கிடையே நான் எனது தந்தை வைத்திருந்த ஒரு பீடிக் கட்டிலிருந்த பீடி ஒன்றை எடுத்து விளையாட்டாக எனது வாயில் வைக்கப் போனேன்.

அப்பொழுது திடீரென அந்த மர பீரோ எனது தமக்கை எவரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டதால் குப்புற விழுந்தது. பயந்து நான் ஒதுங்கிய போது என் கையிலிருந்த அந்த பீடியும் நழுவியது.

என்னுள் ஏதோ நிகழ்ந்தது. இது தவறான பழக்கம் என்பதாக. என்னை இன்றுவரை காத்துவரும் நல்ல சக்தி செய்த எச்சரிக்கைதான் அது. தனது புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி தேசத்தந்தை அண்ணல் அவர்கள் எழுதிய கட்டுரையைப் பின்னாலில் படித்தபோது என்னைக் காத்த சக்திக்ளுக்கு நான் நன்றியுள்ளவனானேன்.

அந்த மர பீரோ இன்றுவரை என்னை ஒரு தீய விளைவிலிருந்து காத்ததற்கு சாட்சியமாக எங்கள் வீட்டில் இன்றும் உள்ளது.

எனக்குத் தெரிந்து எனது முப்பத்தைந்த வயது வரை எனது தகப்பனாருக்கு புகைக்கும் பழக்கம் உண்டு.. எனது வாலிபப் பருவத்தில் அவரிடம் இந்தப் பழக்கத்தை விட்டுவிடும்படி நான் பலமுறை கேட்டும் அவர் அதைப் பொருட்படுத்தியதில்லை.

ஒரு முறை நான் பேருந்தில் சென்றபோது (அப்போது பேருந்தில் புகைப்பது தடை செய்யப்படாத காலம்) பின்புறமிருந்து எவரோ வீசிய சிகரெட் துண்டு காற்றில் பறந்து வந்து எனது விலை உயர்ந்த கால் சட்டையில் விழுந்து அது ஓட்டையானதுடன் எனது காலில் காயமும் ஏற்பட்டது.

அதை வீசியவர் எவர் எனத் தெரியாமல் ஏற்பட்ட கோபத்துடன் வீடு திரும்பியபோது எனது தந்தை வழக்கமாக எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தார்.

இந்தக் கோபம் அப்படியே எனது தந்தை மீது திரும்ப நான் அவரிடம் நேரடியாகச் சண்டையிடாமல் எனது தாயிடம் எனது கோபத்தைக் கொட்ட எனது தாயாரும் யார் மீதோ உள்ள கோபத்தை இங்கு வந்து ஏன் காண்பிக்கிறாய் என என்னிடம்தான் கோபப்பட்டார்.

அதன் பிறகும் எனது தந்தையின் இந்தப் பழக்கம் விட்டபாடில்லை. ஒரு முறை அவருக்கு இருந்த வாய்வுத் தொல்லை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவினை அடுத்து அவர் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட உயர்தரச் சிகிச்சையின்போது செயல்பட்ட நவீன மருத்துவக் கருவிகளைக் கண்டு தனக்கு மாரடைப்பு வந்துவிட்டதாக அவர் கற்பனை செய்துகொண்டு பயந்துவிட்டார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் தனது புகைபிடிக்கும் பழக்கத்தை அன்று விட்டவர்தான் அதன் பிறகு தனது இறுதிக் காலம் வரை அவர் அந்தப் பழக்கத்தை மேற்கொள்ளவே இல்லை. அதன் பிறகு அவர் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சர்க்கரை நோயுடன் இருந்தபோதும் உரிய மருத்துவப் பரிசோதனைகளுடன் ஆரோக்கியமாகவே இருந்தார்.

எனினும் அவரது உள் உறுப்புகள் பல ஆண்டுகள் புகைத்த காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை கடுமையான காய்ச்சல் என மருத்துவமனை சென்று மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.

மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அவருக்குக் கடுமையான மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது. நோய் முற்றிய நிலையில் இருந்ததால் அவரை எங்களால் மருத்துவமனை சேர்த்து ஏராளம் செலவிட்டும் காப்பாற்ற இயலவில்லை.

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதிருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பேரன் பேத்திகளின் திருமணக் காட்சிகளைக் கண்டிருக்க முடியும்.

அவருடன் முப்பத்தைந்து வயது வரை வசித்த எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதிருந்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்க்கு ஆட்பட்டேன். சித்த மருத்துவத்தின் துணையால் கடுமையான மூச்சிறைப்பு நோயிலிருந்து எனது 43வது வயதில் விடுபட்டு இன்று 53 வயதில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.


எனக்குத் தெரிந்து புகை பிடிப்பவர்களை இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு எனது தந்தை பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்ததை சுட்டிக்காட்டி நான் திருத்த முயன்றுள்ளேன். இதைப் படிக்கும் வாசகர்களில் எவரேனும் ஒருவர் திருந்தினால்கூட அது எனது அனுபவத்திற்கும் இந்தக் கட்டுரைக்கும் கிடைத்த பயனாகத்தான் என்னால் மகிழ முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!