சனி, 23 ஜனவரி, 2016

உன்னை நான் சந்தித்தேன்! நீ ஆயிரத்தில் ஒருவன்!

Leave a Comment
ஐந்து வயதில் முதன் முதலாக நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்து எழுது பலகையை எனது வலது கையில்  பிடித்துக்கொண்டு இடது கையில் எழுதுகுச்சியால் எழுதத் துவங்கினேன்.

இதைக்கண்ணுற்ற எனது வகுப்பாசிரியை திருமதி புஸ்பா அவர்கள் எனது இடது கையில் தனது கரத்தில் இருந்த பிரம்பால் சில அடிகள் வைத்து என்னை வலது கையால் எழுதும்படி பயிற்றுவித்தார்.

அன்றைக்கிருந்த ஆசிரியர்களின் மனநிலையயும் மக்களிடம் நிலவிய மூடத்தனமான தவறான எண்ணங்களும் இடது கையால் எழுதுவது தவறெனப் பட்டதின் விளைவு நான் எனது எழுதும் பழக்கத்துடன் எனது தலையெழுத்தையும் அவர்கள் மாற்றி எழுதத் துவங்கிவிட்டதாகத்தான் இன்று கருதுகிறேன். 

பொதுவாக இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உலகத்தில் சுமார் ஆயிரத்தில் ஒருவராகத்தான் பிறக்கின்றனர். வலது கைப்பழக்கம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பு எங்களைப்போன்ற இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடம்மாறி இருப்பதால் எங்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரெதிராகத்தான் இருக்கும்.

எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களையும் நாங்கள் இடதுபுறத்தில்தான் எடுப்போம். இளம் வயதில் நான் எனது தந்தையுடன் மிதிவண்டியின் பின்புறத்தில் அமரும்போது இடதுபக்கமாக அமர்ந்தே பயணிப்பேன். இந்தப்பழக்கத்தையும் மற்றவர்கள் திருத்த முயன்று வெற்றி பெற்றனர்.

மகாபாரத வில்லாளி அருச்சுனனும், இன்றைய சாதனை வீரர் சச்சினும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தாம். சச்சின் தனது கிரிக்கெட் விளையாட்டின் தொடக்கத்திலேயே இடதுகைப்பழக்கத்திற்கு மாறி பல்வேறு உலக சாதனைகளைப் புரிந்தாலும் முப்பது வயதுக்குமேல் அவரது விளையாட்டுத்திறன் குறைவு பட்டதற்கு காரணமே மாற்றப்பட்ட பழக்கம்தான். 

முப்பது வயதுக்குப்பின் ஒருவேளை சச்சின் தனது ஆட்டத்தை இடது  கைக்கு மாற்றி ஆடத்துவங்கி இருந்தால் இந்தக் கட்டுரையை நான் எழுதும் தருணத்தில்கூட ஓய்வு பெறாமல் இன்னும் ஏராளமான எவரும் தொட இயலாத உலக சாதனைகளைப் படைத்துக் கொண்டிருந்திருப்பார்.

இன்றைய தலைமுறை எங்களைப்போன்ற வலதுகைப் பழக்கம் உடையவர்களைச் சரியாகப் புரிந்துகொண்டு சிறுவர் சிறுமியராக இருக்கும்போதே அவர்கள் பழக்கத்தை மாற்றாமல் ஊக்கப்படுத்தத் துவங்கியுள்ளதை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். 

என் போன்ற இடது கைப்பழக்கம் உடைய சிறுவர் சிறுமியர்களைக் கண்டால் அவர்களைப் பாராட்டி அவர்தம் பெற்றோர்களையும் நான் வாழ்த்துவதை வழக்கப்படுத்தியுள்ளேன். 

எனது 55 வயதில் வலகு கரத்தில் நான் எழுத முற்படும்போது எனது எழுத்துக்கள் சற்றுக் கிறுக்கலாகத்தான் வெளிப்படுகிறது. அதுவே இடது கையில் நான் எழுதத்துவங்கியிருந்தால் எனது எழுத்துக்களும் அழகாக இருந்திருக்கும். இயல்பாகவே எனக்குள் இருக்கும் ஓவியம் வரையும் ஆர்வமும் பிரகாசமாக இருந்திருக்கக்கூடும்.

இரு கை விரல்களையும் பயன்படுத்திக் கணினியின் விசைப்பலகையில் தட்டச்சு செய்வதால் எனது படைப்பாற்றலை விரைவாக என்னால் செய்ய முடிகிறது. 

என் போன்ற ஆயிரத்தில் ஒருவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்கும் புரிந்து கொள்ளப் போகிறவர்களுக்கும்  எம்முடைய இதயம் நிறைந்த நன்றிகளைத்தாம் இப்பொழுது எம்மால் வழங்க இயலும்.

Read More...