திங்கள், 29 பிப்ரவரி, 2016

தேவை ஒரு சர்வாதிகாரமற்ற மக்களுக்கான அரசியல் இயக்கம்.

Leave a Comment
சர்வாதிகார தலைமையற்ற சுழற்சி முறை கொண்ட அரசியல் நிர்வாகிகள் நிறைந்த அரசியல் மாண்பு.

வாரிசுகளோ, உறவினர்களோ ஆதிக்கமற்ற அரசியல் கொள்கை,

ஐந்தாண்டுக்கொருமுறை சுழற்சி முறையில் நிர்வாகிகள் சனநாயக முறையில் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப் பணியாற்றும் வாய்ப்பு.

ஒவ்வொரு கிளை, ஒன்றியம், வட்டம், மாவட்டம், என எங்கும் சாதி, மத பேதமற்ற வேற்று இன நிர்வாகிகள் கொண்ட சமத்துவ அரசியல் பண்பு,

ஆட்சி நிர்வாகத்தில் அணு அளவும் தலையிடாத ஒழுக்கம்,

இயக்கச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை,

தேர்தல் நிதி என மக்களிடமோ, மற்றவர்களிடமோ கையேந்தாமல் உறுப்பினர்களின் சொந்த நிதியில் செயல்படல்,

இன்னும் தேவைப்படும் ஏராளமான மாற்றங்களுடன் ஒரு மகத்தான அரசியல் இயக்கம் உருவாக்குவோம்.

பாரத தேசம் மட்டுமல்ல உலகிற்கே இந்த அரசியல் இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாகத் திகழ வேண்டும்.

இந்த இயக்கத்தின் அப்பழுக்கற்ற மக்கள் தொண்டெனும் உயரிய தன்மையால்

இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுகூட வரும் காலங்களில் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுவதற்குத் துளியும் வாய்ப்பின்றி மறைந்தோடச் செய்வோம்.

பதவிவெறி, ஆட்சியில் குறுக்கீடு, அதிகார தர்பார், வாரிசு அரசியல், ஆதிக்க மனப்பான்மை என தற்பொழுதுள்ள அரசியல் இயக்கங்களின் ஏராள தீய குணங்கள் ஏதுமற்று

தமிழ்நாட்டில் இனி மக்களுக்கான அரசியல் இயக்கம் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும்.

இனியொரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

Read More...

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

இங்கு யாரும் தோற்கவில்லை!

Leave a Comment
இளைஞன் ஒருவன் ஒரு ஸென் மதகுருவிடம் வந்து நான் எல்லாவித தீமைகளையும் செய்து விட்டேன். அதனால் தனக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. ஞானம் பெற இனி நான் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.

அந்த குரு உனக்கு வாழ்க்கையில் இன்னும் விடவே முடியாதது எதுவென்று கேட்டார். 
அதற்கு அவன் எனக்கு சதுரங்க விளையாட்டில்தான் தீவிர ஆர்வம் அதை மட்டுமே என்னால் இப்பொழுதும் விடமுடியாது என்றான்.

அப்படியானால் ஒரு உன்னுடன் சதுரங்கம் விளையாட இங்குள்ள எனது சீடர் ஒருவரை அழைக்கிறேன். நீ அவருடன் விளையாட வேண்டும். இந்த விளையாட்டில் நீ வென்றுவிட்டால் அவரது தலையை நான் வெட்டிவிடுவேன்.

அதே சமயம் அவர் வென்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். இதுதான் விதி சம்மதமா என்றார். அந்த இளைஞனோ ஒரு போர்க்குணம் மிக்க சமுராயின் மகன். எனவே தனக்குள் இயல்பாக உள்ள போர்க்குணத்துடன் இந்த விளையாட்டிற்கு ஒப்புக் கொண்டான்.

அவனை எதிர்த்து விளையாட வந்த சீடரோ இந்தக் குருவிடம் சீடராகிப் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் பழகியவர். ஒளி பொருந்திய முகத்துடன் குருவின் நிபந்தனைக்கு மறுப்பேதும் சொல்லாமல் விளையாட ஒப்புக்கொண்டார்.

விளையாட்டு துவங்கியது. இளைஞன் ஆரம்பத்தில் தான் தோற்றுவிட்டால் தனக்குக் கிடைக்கப் போகும் மரண தண்டனை குறித்து நடுக்கமும், அச்சமும் கொண்டு விளையாடத் துவங்கினான். சீடரோ எப்போதோ தனக்கிருந்து மறந்துபோன சதுரங்க விளையாட்டென்பதால் தவறாகவும், எனினும் மனதில் மரணபயம் ஏதுமின்றி அமைதியான மனதுடனும் விளையாடிக் கொண்டிருந்தார்.

நேரமாக ஆக இளைஞனுக்குள் இருந்த பயம் அகன்று ஒரு தெளிவான ஞானத்துடன் விளையாடத் துவங்கினான். எனவே அவன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. தான் வெற்றி பெறுவது நிச்சயம் என அவன் உணர்ந்தவுடன் எதிரே எந்தவித சலனமும் இன்றி விளையாடிக் கொண்டிருந்த துறவியைப் பற்றி எண்ணத் துவங்கினான்.

நானோ வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழவே தகுதியற்றவன். இதோ என் எதிரில் உள்ள இந்தச் சீடரோ எவ்வளவு சாந்தமானவராக, தோல்வியின் விளிம்பில் இருந்தும் தனது மரணம் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கிறார். 

எனவே நான் இறந்தாலும் பரவாயில்லை. இவர் வாழ வேண்டும். இவரால்தான் மனித குலத்திற்கு மேலும் நன்மைகள் கிடைக்கும் என்று நினைந்து தான் தோற்க வேண்டும் என்று அதற்கேற்ப தவறாக விளையாடத் துவங்கினான்.

இளைஞனின் மனமாற்றத்தை தனது ஞானத்தால் கண்டறிந்த ஸென் குரு உடனடியாக சதுரங்கப் பலகையையும் அதில் இருந்த காய்களையும் தட்டிவிட்டு போட்டி முடிந்தது. இங்கு யாரும் தோற்கவில்லை. இருவருமே வென்றுவிட்டீர்கள் என உரக்கச் சொல்லி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். 

புரிந்தும் புரியாமலும் அந்த இளைஞன் குருவிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த குரு சொன்னார். நான் உனது ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்து கவனித்தேன். முதலில் பயத்துடன் ஆடிய நீ அதன் பிறகு ஒரு புத்தருக்குள்ள தன்மையை அடைந்தாய். உன்னிடம் கருணை குடி புகுந்தது. நீ இறந்தாலும் பரவாயில்லை எதிரிலிருக்கும் இந்தத் துறவி இறக்கக்கூடாது என முடிவு செய்தாய். எனவே நீ தோல்வியுறவில்லை. 

பக்குவமான தியானம், மற்றும் கருணை இரண்டையும் நான் உனக்குக் கற்றுத் தந்துவிட்டேன். இனி; நீ எனது சீடனாக இங்கேயே இருக்கலாம் என அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இதோ இந்த இளைஞனைப் போன்றவர்கள்தாம் இன்றைய அரசியல்வாதிகள். 

எளிமையான அப்பாவியான அந்தச் சீடரைப் போன்றவர்கள்தாம் நம் தமிழக மக்கள். 

தேர்தல் எனும் சதுரங்க விளையாட்டு துவங்கிவிட்டது. எல்லாவித தீமைகளையும் செய்தும் இன்னும் தங்களது தவறுகளைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் அரசியல்வாதிகள் தங்களின் விளையாட்டைத் துவங்கியுள்ளனர்.

எதிரே தங்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற எவ்வித அச்சமும் இன்றி இந்த அரசியல்வாதிகள் வழங்கப்போகும், பணம், உடை, இலவசங்கள், தேர்தலுக்கும் பின் கிடைக்கப்போகும் இலவசங்களை நம்பி கத்தி தலைக்கு மேல் காத்திருந்தாலும், அரசியல் சதுரங்க விளையாட்டில் அனுபவமின்றியும்கூட மக்கள் விளையாடத் தயாராகிவிட்டனர்.

முடிவு கதையில் உள்ளது போன்று நல்லதாக நடக்க வேண்டும். 

இங்கு எவரும் தோற்கக்கூடாது. 

போட்டியிட்ட இருவருமே வெற்றி பெற வேண்டும். 

இளைஞனுக்குள் ஏற்பட்ட மனமாற்றம் நம் ஊழல் அரசியல்வாதிகளிடமும் வர வேண்டும் . அப்படி ஒரு மனமாற்றம் வந்து இந்த அரசியல்வாதிகள் தங்களுக்குள் கருணையையும் அன்பையும் மட்டுமே மக்களிடம் வெளிப்படுத்தினால் நாங்கள் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.

ஏனெனில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து எங்களை அடக்கி ஆண்டவர்களல்ல. எங்களுடனே பிறந்து வளர்ந்து எங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறாகப் பயன்படுத்தி கதையிலுள்ள இளைஞனைப் போல வாழ்ந்திருந்தவர்கள். 

இவர்கள் திருந்துவார்கள். இவர்கள் இதுவரை செய்த தவறுகளை மறப்போம். மன்னிப்போம்.

இனியொரு விதி செய்வோம்.

தமிழகம் இனி நல்ல அரசியல்வாதிகளால் புகழ் பெற வேண்டுமென.

Read More...

புதன், 24 பிப்ரவரி, 2016

இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும்

Leave a Comment
வணிக உபயோகத்திற்கென முதன் முதலாக நான் 2003 ஆம் ஆண்டில் கணினி வாங்கியபோது எனக்கு அதனை எப்படி இயக்குவது என்பதுகூடத் தெரியாது. எனக்கு அப்பொழுது வயது 41.

எனது 43 வயதில் வணிக வாழ்வில் நான் நட்டமுற்றதன் விளைவாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வயதில் ஒரு கணக்காளராக வேலை செய்யக்கூடிய அளவில்தான் நான் இருந்தேன். பல ஆண்டுகள் வணிகத்தில் இருந்ததால் வரவு செலவு கணக்குகளை எழுதுவதில் ஓரளவிற்கு எனக்குப் பயிற்சி இருந்தது.

கணினியில் டேலி பற்றிய அறிவும் ஓரளவு இருந்தது. எனவே நான் டேலியில் எனது கவனத்தை செழுத்தி அதில் ஓரளவு பயிற்சி பெற்றேன். அதை விட முக்கியமாக நான் கணினியின் கீ போர்டில் தட்டச்சு செய்வதை முறைப்படி கற்றுச் செய்ய வேண்டும் என விரும்பினேன்.

தட்டச்சு நிலையம் சென்று பயிலும் அளவிற்கு அப்பொழுது எனது நிதிநிலை கை கொடுக்காததால் நான் ஒரு தட்டச்சு பயிற்சி புத்தகத்தை எனக்கு மகள் முறையுடைய ஒருவரிடமிருந்து பெற்று அதில் வழி காட்டியபடி நானாகவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பழகத் துவங்கினேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். அதனால் ஆங்கிலத்தில் நான் ஓரளவு விரைவாகத் தட்டச்சு செய்யும் அளவிற்குத் தேர்ந்தேன்.

அடுத்து வணிகத்தில் நட்டமுற்று வேலைக்குச் செல்லவேண்டிய அந்த நிலையில்கூட எனக்குள் ஏற்பட்ட சமூகச் சிந்தனைகளை தமிழில் எழுதத் துவங்கினேன்.

இதை நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை விட தமிழ் தட்டச்சு பயின்று கணினியில் அதைச் சேமிக்கலாமே என்ற எண்ணம் என்னுள் உந்தித் தள்ள அதற்கும் ஒரு கணினித் தட்டச்சு நிலையச் சகோதரி கொடுத்த பாமினி தமிழ் எழுத்துருவை இரவல் வாங்கி எனது கணினியில் பதிவிட்டேன்.

பிறகு எனது கணினி மேசைக்கெதிரில் ஒரு கீ போர்டு மாதிரியை ஆங்கிலத்திலும், பாமினி எழுத்துருவிற்கேற்ப தமிழிலும் வரைந்து கொண்டு அதனைப் பார்த்து தட்டச்சு செய்யத் துவங்கினேன். கற்றுக் கொள்ள வயது ஒரு தடையே இல்லை என்பதற்கேற்ப இதனையும் கடுமையான பயிற்சியாக ஒரு மாதத்திற்கு மேல் செயல்படுத்தினேன்.

இதோ இன்று 55 வயதிலும் ஆங்கிலத்திலும், தமிழிலிலும் விரைவாகத் தட்டச்சு செய்யும் நிலைக்கு உயர்ந்து என்னுடைய மனதில் பட்ட சிந்தனைகளைப் படைப்பாக்கி இணையத்தில் வலைதளம் வாயிலாகவும், வாசகர்களின் நல்ல சிந்தனைகளை வரவேற்று வாய்ப்பளிக்கும் ஆனந்த விகடனுக்கும் அனுப்பி எனது இரண்டு கட்டுரைகளும் வெளியாகி இருப்பதில் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி.

நான் வேலை செய்த சில நிறுவனங்களில் பணியாற்றிய சக இளைஞர்கள், மற்றும் இளைஞிகள் கணினியில் பணியாற்றும்போது தட்டுத் தடுமாறித் தடவித் தடவி கீ போர்டில் வேலை செய்வதைக் கண்ணுற்றால் நான் அடுத்தநாளே என்னிடம் இப்பொழுதும் பத்திரமாக உள்ள முதன்முதலாக நான் தட்டச்சு செய்ய உதவிய புத்தகத்தின் நகல்களை எடுத்து கொடுத்து அவர்களையும் தட்டச்சு செய்து பழக அறிவுறுத்துவேன்.

இன்று ஒவ்வொரு இல்லத்திலும் கணினி இல்லாத நிலை உருவாகிவிட்டது. அரசுகளின் இலவச மடிக்கணினிகளும் ஏராளம் வழங்கப்பட்டுவிட்டது. இளைய தலைமுறை தங்களின் பணிகளை தங்கு தடையின்றி விரைவாகக் கணினியில் செய்யத் தட்டச்சு இயந்திரத்தில் பழக வேண்டியது மிகமிக அவசியம். கணினி அறிவு ஏராளம் இருந்தாலும் நம்மிடம் உள்ள தட்டச்சு செய்ய இயலாத குறை நாம் பணியாற்ற வேண்டிய நிறுவன வேலைகளைத் தாமதப்படுத்தவே செய்யும்.இதனைத் தவிர்க்கவாவது இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும் என்பதே எனது 55 வயதிலும் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதான வேண்டுகோள். இன்றைய இளைய சமுதாயம் நிச்சயம் எனது வேண்டுகோளைப் புறக்கணிக்காது.
Read More...

அன்னைத் தமிழால் என்னைச் செதுக்கியவர்கள்

Leave a Comment
உயர்நிலைப்பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கத் துவங்கியபோது எனது உறவினரும் தமிழாசிரியருமான சித்தையா அவர்கள் எனது வகுப்பாசிரியராக இருந்தார். பத்து வயதில் முதன் முதலாக விபரம் புரிந்து அவரிடம் தமிழ் கற்க நேர்ந்தது.

அதன் பின்னர் ஏழாம் வகுப்பு துவங்கி பள்ளி இறுதி வரை அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழாசிரியர்களாகச் சிலர் இருந்தாலும் பெரும்பாலும் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ஆபெ என பள்ளி வளாகம் முழுவதும் ஆசிரியப் பெருமக்களால் அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய திரு ஆ.பெரியசாமி அவர்கள்.

தமிழில் நான் இன்று இலக்கண சுத்தமாக எழுதுகிறேனா என்பது எனக்கே தெரியாது. மேலும் எல்லோரைப் போலவும் இப்பொழுதும் எனது எழுத்துக்களில் அவ்வப்போது எழுத்துப் பிழை என்னை அறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது. இதற்கு நான் எனது படைப்பை மீண்டும் படித்துத் திருத்தாமல் அவசரமாக வெளியிட்டுவிடுவதுதாம்.

எனினும் என்னை தமிழில் எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திரு ஆபெ என்பதில் இன்றளவும் எனக்குள் சந்தேகம் இல்லை.

திரு ஆபெ அவர்கள் மிகுந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் நிறைந்தவர் தந்தை பெரியாரின் வழியில் நடந்தவர். சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடர் ஏந்தி பவனி வந்தவர்.

அவர் எங்களின் வகுப்பறையில் நுழைந்த கணம் முதல் வகுப்பு முடியும் வரை வகுப்பறையே எங்களின் சிரிப்பலைகளால் அதிரும். இதற்குக் காரணம் அவர் தமிழின் இலக்கண இலக்கியங்களை மிகுந்த நயத்துடன் பாடம் எடுக்கும் கையோடு நம் பக்தி மார்க்கம் பரப்பிய கட்டுக் கதைகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் நையாண்டி செய்வதுதாம். 

குறிப்பாக முப்பத்து முக்கோடி தேவர்கள், கிங்கிரர்கள் எனத் துவங்கும் (வயது காரணமாக மேலே தொடரும் வரிகள் மறந்துவிட்டன) பக்தி மார்க்க வரிகளை வரிசையாகச் சொல்லி நம் பாமர மக்களை ஏமாற்றும் பக்தி மார்க்கக் கும்பல்களை அவர் நையாண்டி செய்யும் போதெல்லாம் வகுப்பறையே அதிரும். 

மிகத் தீவிரமாகத் தம் பகுத்தறிவுக் கொள்கைகளை எங்களுக்குள் விதைக்க முயன்றாலும் தம்முடைய கடமையிலிருந்து அவர் தவறவே இல்லை. நான் எழுதும் எழுத்து அவர் வழங்கியது. அவரது மாணவனாகப் பல வகுப்புகளில் நான் இருந்ததால் அவர் நடத்திய இலக்கண இலக்கிய விதிகள் அவரது பகுத்தறிவுச் செய்திகளோடு எனது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்ததெனலாம்.

அவரால்தான் இன்றுவரை நான் தமிழ் வளர்த்த சித்தர்களின் வழியில் ஓரளவு நடக்க முயன்றாலும் எனது ஒவ்வொரு செய்கையிலும் பகுத்தறிந்து வாழ முற்பட்டிருக்கிறேன். தந்தை பெரியாரைப் பற்றி ஏராளமான மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் அவரால் நம் தமிழகத்தில் ஏற்பட்ட மகத்தான வரலாற்றுப் புரட்சிகளுக்கு மதிப்பு கொடுத்து தந்தை அவர்களை மதித்து வருகிறேன்.

அடுத்து எனக்குள் உள் உணர்வாகத் தமிழார்வத்தைப் புகுத்தியவர் தமிழினத்தின் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டவர்.

நான் புகுமுக வடிப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க விருப்பமின்றி எனது சொந்த ஊரில் கிடைத்த வேலை ஏதேனுமொன்றைச் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நாமக்கல்லில் இருந்த எனது சிறிய தகப்பனாரிடமிருந்து உடனே அங்கு புறப்பட்டு வரவேண்டுமென்று ஒரு தந்தி வந்தது.

நான் அடுத்த நாளே நாமக்கல் சென்றடைந்தேன். என்னிடம் எனது சிறிய தகப்பனார் தனது நண்பர்கள் சிலர் துவக்கியுள்ள ஒரு இருசக்கர வாகன தானியங்கி உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தைக் கவனித்துக் கொள்ள ஒருவர் தேவை. நான் உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன் சம்மதமா என்றார். ஊரில் சரியான வேலையேதுமின்றி இருந்ததால் நான் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டேன்.

உடனே அவர் என்னை தனது இல்லத்திலிருந்து நாமக்கல் நகரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அமைந்திருந்த அவரது நண்பர்களின் உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

நாமக்கல்லில் அதற்கு முன்னர் நான் ஓராண்டுவரை புகுமுக வகுப்பில் படிப்பதற்காகத் தங்கியிருந்தபோது நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் சுற்றியிருந்தபோதும் ஏனோ இந்த இடத்தை மட்டும் நான் தவற விட்டிருந்தேன்.

எனது பாதங்கள் முதன் முதலாக அந்த நிறுவனம் அமைந்திருந்த என்பதை விட அந்த இல்லத்து மண்ணை மிதித்தது அன்றுதாம். அடுத்தநாள்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்த இடம் தமிழகத்தின் சரித்திரப் புகழ் பெற்ற இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு மாமனிதர் வசித்த இடமென்பது எனக்குத் தெரிய வந்தது.

நான் பணியாற்றிய நிறுவனத்திற்குப் பின்புறம் அமைந்திருந்த அந்த மாமனிதர் வசித்த இல்லத்தில் அந்த மாமனிதரின் தங்கை வசித்து வந்தார். என்னைப் பற்றி விசாரித்த அவர் தன் மகன் போலிருந்த என்னிடம் அந்த மாமனிதருடன் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும், அந்த மாமனிதர் வாழ்ந்த முறை பற்றியும் ஏராளம் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நான் அந்த மாமனிதரின் இல்லத்தில் அவரின் சுவாசக் காற்றினை இரண்டாண்டுகள்வரை சுவாசித்திருந்தேன். பல்வேறு வணிகக் காரணங்களால் நான் பின்னர் பத்தாண்டுகள் நாமக்கல்லில் இருந்து விலகி வாழ நேர்ந்தது. 

பத்தாண்டுகள் கழிந்து நான் அந்த இல்லத்துச் சுவாசக் காற்றை மீண்டும் இரண்டாண்டுகள் சுவாசிக்க நேர்ந்தது. அதன் பின்னர் அந்த மாமனிதர் என்ன நினைந்தாரோ தெரியவில்லை. நான் நாமக்கல்லை விட்டு நிரந்தரமாக பல்வேறு இடங்களில் வசித்து இன்று ஈரோட்டு மண்ணில் வசிக்க நேர்ந்துள்ளது.

ஏனோ தெரியவில்லை. எனக்கு பணம் சார்ந்த நோக்கம் என் வாழ்நாளெல்லாம் இருந்ததில்லை. ஆனால் நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்பதில் எனக்குள் ஏராளமான கனவுகள் உண்டு. 

இதன் காரணமாகவே நான் அடிக்கடி இன்றைய ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி எனது அதிருப்தியை வெளிப்படையாக எனது இல்லத்திலும், நட்பு வட்டத்திலும், இணையத்தில் எனக்கென ஏற்படுத்திய வலை தளத்திலும் விமரிசிக்கிறேன். இதனால் இன்றைய அரசியல்வாதிகளின் மேல் உள்ள அச்சத்தின் காரணமாக எனக்கு ஏராளமான அறிவுரைகள்தான் கிடைத்து வருகிறது. 

எனினும் எனது பேச்சையோ எழுத்தையோ என்னால் மாற்றிக் கொள்ளவே இயலவில்லை. 55 வயதில் உள்ள எனக்குத் தமிழில் உள்ள ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற ஒரு அசாத்திய துணிச்சலும் உண்டு. 

வாய்மை உணர்வுடன் வாழ முற்பட்டு, நம் தமிழகமும் அதே உணர்வுடன் வாய்மையே வெல்லும் என்ற தனது தாரக மந்திரத்திற்கேற்ப செயல்படும் அரசியல்வாதிகள் நிறைந்து திகழ வேண்டும் என்ற என் கனவு நியாயமானதில்லையா?

இதனைப் படிப்பவர்கள்தான் எனக்குச் சரியான துணிச்சல் தரவேண்டும். 

எனினும் நாமக்கல்லில் நான்காண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் நான் போற்றும் அந்த மாமனிதர் யாரென்பதை நான் இன்னும் எழுதவில்லைதானே.

அவர்தான் 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை யுத்தத்தைத் தம் வைர வரிக் கவிதைகளில் விதைத்து நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட மக்களை விரைவுபடுத்தியவர்.

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிர்ந்து பீடு நடை போட வைத்தவர்.

பாரத தேசம் மட்டுமல்ல உலகமெங்கும் தம் விடுதலை உணர்வாலும், கவிதை, கட்டுரை, தமிழ் இலக்கியம் என ஏராளப் படைப்புகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமேதை, மாமனிதர்

நாமக்கல் கவிஞர் திருமிகு இராமலிங்கம் அவர்கள். 

அவரது இல்லச் சுவாசக் காற்றைச் சுவாசித்த எனக்குள் வணிகத்திற்காக ஆங்கிலத்தில் எழுதி வந்திருந்தாலும் தமிழ்மொழி மேலும், நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் வளர்ந்து உலக அரங்கில் உயர்ந்து உலகிற்கே வழிகாட்டித் திகழ வேண்டும் என்ற ஏராளமான கனவுகள் இருந்தே தீர வேண்டுமென்பது 

இயற்கையாகவும், தமிழனாய்ப் பிறந்து, தமிழ் என்னும் அமுதமொழி பேசி, தமிழ் மண்ணில் வாழ்ந்து மடியவேண்டும் என்ற பிறப்பெடுத்த எனக்குள் இயல்பானதுதானே. 

கோழைகளையும் வீரனாக்கும் அந்த மாமனிதரின் தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் வீர வரிகள் என்றும் எனக்குள்  நிறைந்து உத்வேகம் கொடுக்கும்.

Read More...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கண்ணாடிச் சட்டம் போட்டுக் கதறித் துடிக்கவா படித்துப் பட்டம் வாங்க கல்விக்கூடம் அனுப்பினோம்?

Leave a Comment
சமீபகாலமாக ஊடகங்களில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற இளம் பெண்களின் தற்கொலைச் செய்திகள் வரத்துவங்கி இருப்பது தமிழகம் எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்பத் துவங்கியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட பெண்களின் செய்தியைக் காணும்போதெல்லாம் தங்கள் உறவில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனை அலைகள் ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும் எழாதிருக்காது. 

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தரமிக்க கல்வி கிடைக்கும் இடங்கள் எங்கிருந்தாலும் கடன்பட்டாவது தங்களின் பிள்ளைகளை விடுதியில் தங்கிப் படிக்க வைத்துவிட்டுக் குறிப்பாகப் பெண் குழந்தைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களின் தூக்கமில்லா இரவுகளை ஒரு கட்டத்தில் எங்கள் ஒரே மகளை சென்னையில் கிடைத்த வேலைக்காக விடுதியில் தங்கி வேலை செய்ய சில மாதங்கள் அனுப்பி  நாங்களே அனுபவித்துள்ளோம்.

படிக்காத மேதையின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கூடங்களில் ஆரம்பக் கல்வியும், உயர் கல்வியும்  பெற தமிழகமெங்கும் பட்டிதொட்டியெங்கும் ஏராளமாகக் கல்விக்கூடங்கள் திறந்திருந்தார். 

அந்த மேதைக்கு நீண்ட ஆயுளை இயற்கை வழங்கியிருந்தால் ஒவ்வொரு வட்டத்திலும் இன்று தரமான பல்கலைக் கல்விக்கூடங்களை ஏராளம் நிறுவியிருப்பார்.

காலையில் கல்விக்கூடம் சென்றுவிட்டு மாலைக்குள் வீடு திரும்பும் நிலையில் நமது பிள்ளைகள் நம்முடனே வாழும் நிலைக்கு ஆளாகியிருப்பர். தங்கள் குழந்தைகள் தங்களுடனே தங்கிக் கொண்டு தரமான கல்வியைப் பெற்று மகத்தான வாழ்வு பெரும் நிலையை நம் தமிழக மக்கள் அடைந்திருப்பர்.

திராவிட இயக்கங்கள் வளர்த்துவிட்ட பினாமிக் கோடீசுவரக் கல்வித்தந்தைகள் துவக்கியுள்ள நிறுவனங்கள் தாங்கள்தாம் தரமான கல்வியை வழங்குவதாக ஒரு மாயையை எழுப்புவதால் 

தொலைதூரமென்றாலும் தங்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தால் போதும் என கடன்பட்டாவது இலட்சங்களில் செலவிட்டு விடுதியில் தங்கிப் படிக்க அனுப்பிவிட்டு 

இன்று மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தவிக்கும் பெற்றோர்களின் கண்ணீர் இரக்கமற்ற அரசியல்வாதிகளுக்கு எங்கே தெரியப்போகிறது?

இருக்கும் இரண்டு ஊழல் திராவிட இயக்கங்களும் தொலைந்து இவர்களை அண்டிப் பிழைத்த பச்சோந்தி சாதிய, மதவாத, தேசியவாத, இயக்கங்கள் அனைத்தும் வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது மக்களின் மகத்தான எழுச்சியால் படுதோல்வியடையச் செய்து 

ஒவ்வொரு தொகுதியிலும் இலட்சத்தில் ஒரு நல்லவரை மக்கள் அடையாளம் கண்டு இவர்தாம் நமது தொகுதி வேட்பாளர் என ஒருமனதாக இலட்சக்கணக்கான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டால்

இனி வரும் காலங்களில் பினாமிக் கல்விக்கூடங்கள் தொலைந்து அரசின் தரமான கல்வி நியைங்களில் நமது பிள்ளைகள் அவரவர் இல்லத்தில் இருந்தே படிக்கும் நிலையை உருவாக்க முடியும்.

பெற்றோரின் பாதுகாப்பின்றி படிக்கச் சென்று தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் குடும்பங்களுக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்கிறோம். 

மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் உருவாகாதிருக்க தமிழ் பேசும் ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம். 

Read More...