கண்ணாடிச் சட்டம் போட்டுக் கதறித் துடிக்கவா படித்துப் பட்டம் வாங்க கல்விக்கூடம் அனுப்பினோம்?

சமீபகாலமாக ஊடகங்களில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற இளம் பெண்களின் தற்கொலைச் செய்திகள் வரத்துவங்கி இருப்பது தமிழகம் எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்பத் துவங்கியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட பெண்களின் செய்தியைக் காணும்போதெல்லாம் தங்கள் உறவில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனை அலைகள் ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும் எழாதிருக்காது. 

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தரமிக்க கல்வி கிடைக்கும் இடங்கள் எங்கிருந்தாலும் கடன்பட்டாவது தங்களின் பிள்ளைகளை விடுதியில் தங்கிப் படிக்க வைத்துவிட்டுக் குறிப்பாகப் பெண் குழந்தைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களின் தூக்கமில்லா இரவுகளை ஒரு கட்டத்தில் எங்கள் ஒரே மகளை சென்னையில் கிடைத்த வேலைக்காக விடுதியில் தங்கி வேலை செய்ய சில மாதங்கள் அனுப்பி  நாங்களே அனுபவித்துள்ளோம்.

படிக்காத மேதையின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கூடங்களில் ஆரம்பக் கல்வியும், உயர் கல்வியும்  பெற தமிழகமெங்கும் பட்டிதொட்டியெங்கும் ஏராளமாகக் கல்விக்கூடங்கள் திறந்திருந்தார். 

அந்த மேதைக்கு நீண்ட ஆயுளை இயற்கை வழங்கியிருந்தால் ஒவ்வொரு வட்டத்திலும் இன்று தரமான பல்கலைக் கல்விக்கூடங்களை ஏராளம் நிறுவியிருப்பார்.

காலையில் கல்விக்கூடம் சென்றுவிட்டு மாலைக்குள் வீடு திரும்பும் நிலையில் நமது பிள்ளைகள் நம்முடனே வாழும் நிலைக்கு ஆளாகியிருப்பர். தங்கள் குழந்தைகள் தங்களுடனே தங்கிக் கொண்டு தரமான கல்வியைப் பெற்று மகத்தான வாழ்வு பெரும் நிலையை நம் தமிழக மக்கள் அடைந்திருப்பர்.

திராவிட இயக்கங்கள் வளர்த்துவிட்ட பினாமிக் கோடீசுவரக் கல்வித்தந்தைகள் துவக்கியுள்ள நிறுவனங்கள் தாங்கள்தாம் தரமான கல்வியை வழங்குவதாக ஒரு மாயையை எழுப்புவதால் 

தொலைதூரமென்றாலும் தங்களின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைத்தால் போதும் என கடன்பட்டாவது இலட்சங்களில் செலவிட்டு விடுதியில் தங்கிப் படிக்க அனுப்பிவிட்டு 

இன்று மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தவிக்கும் பெற்றோர்களின் கண்ணீர் இரக்கமற்ற அரசியல்வாதிகளுக்கு எங்கே தெரியப்போகிறது?

இருக்கும் இரண்டு ஊழல் திராவிட இயக்கங்களும் தொலைந்து இவர்களை அண்டிப் பிழைத்த பச்சோந்தி சாதிய, மதவாத, தேசியவாத, இயக்கங்கள் அனைத்தும் வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது மக்களின் மகத்தான எழுச்சியால் படுதோல்வியடையச் செய்து 

ஒவ்வொரு தொகுதியிலும் இலட்சத்தில் ஒரு நல்லவரை மக்கள் அடையாளம் கண்டு இவர்தாம் நமது தொகுதி வேட்பாளர் என ஒருமனதாக இலட்சக்கணக்கான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டால்

இனி வரும் காலங்களில் பினாமிக் கல்விக்கூடங்கள் தொலைந்து அரசின் தரமான கல்வி நியைங்களில் நமது பிள்ளைகள் அவரவர் இல்லத்தில் இருந்தே படிக்கும் நிலையை உருவாக்க முடியும்.

பெற்றோரின் பாதுகாப்பின்றி படிக்கச் சென்று தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்களின் குடும்பங்களுக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்கிறோம். 

மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் உருவாகாதிருக்க தமிழ் பேசும் ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!