இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும்

வணிக உபயோகத்திற்கென முதன் முதலாக நான் 2003 ஆம் ஆண்டில் கணினி வாங்கியபோது எனக்கு அதனை எப்படி இயக்குவது என்பதுகூடத் தெரியாது. எனக்கு அப்பொழுது வயது 41.

எனது 43 வயதில் வணிக வாழ்வில் நான் நட்டமுற்றதன் விளைவாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வயதில் ஒரு கணக்காளராக வேலை செய்யக்கூடிய அளவில்தான் நான் இருந்தேன். பல ஆண்டுகள் வணிகத்தில் இருந்ததால் வரவு செலவு கணக்குகளை எழுதுவதில் ஓரளவிற்கு எனக்குப் பயிற்சி இருந்தது.

கணினியில் டேலி பற்றிய அறிவும் ஓரளவு இருந்தது. எனவே நான் டேலியில் எனது கவனத்தை செழுத்தி அதில் ஓரளவு பயிற்சி பெற்றேன். அதை விட முக்கியமாக நான் கணினியின் கீ போர்டில் தட்டச்சு செய்வதை முறைப்படி கற்றுச் செய்ய வேண்டும் என விரும்பினேன்.

தட்டச்சு நிலையம் சென்று பயிலும் அளவிற்கு அப்பொழுது எனது நிதிநிலை கை கொடுக்காததால் நான் ஒரு தட்டச்சு பயிற்சி புத்தகத்தை எனக்கு மகள் முறையுடைய ஒருவரிடமிருந்து பெற்று அதில் வழி காட்டியபடி நானாகவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பழகத் துவங்கினேன்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். அதனால் ஆங்கிலத்தில் நான் ஓரளவு விரைவாகத் தட்டச்சு செய்யும் அளவிற்குத் தேர்ந்தேன்.

அடுத்து வணிகத்தில் நட்டமுற்று வேலைக்குச் செல்லவேண்டிய அந்த நிலையில்கூட எனக்குள் ஏற்பட்ட சமூகச் சிந்தனைகளை தமிழில் எழுதத் துவங்கினேன்.

இதை நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை விட தமிழ் தட்டச்சு பயின்று கணினியில் அதைச் சேமிக்கலாமே என்ற எண்ணம் என்னுள் உந்தித் தள்ள அதற்கும் ஒரு கணினித் தட்டச்சு நிலையச் சகோதரி கொடுத்த பாமினி தமிழ் எழுத்துருவை இரவல் வாங்கி எனது கணினியில் பதிவிட்டேன்.

பிறகு எனது கணினி மேசைக்கெதிரில் ஒரு கீ போர்டு மாதிரியை ஆங்கிலத்திலும், பாமினி எழுத்துருவிற்கேற்ப தமிழிலும் வரைந்து கொண்டு அதனைப் பார்த்து தட்டச்சு செய்யத் துவங்கினேன். கற்றுக் கொள்ள வயது ஒரு தடையே இல்லை என்பதற்கேற்ப இதனையும் கடுமையான பயிற்சியாக ஒரு மாதத்திற்கு மேல் செயல்படுத்தினேன்.

இதோ இன்று 55 வயதிலும் ஆங்கிலத்திலும், தமிழிலிலும் விரைவாகத் தட்டச்சு செய்யும் நிலைக்கு உயர்ந்து என்னுடைய மனதில் பட்ட சிந்தனைகளைப் படைப்பாக்கி இணையத்தில் வலைதளம் வாயிலாகவும், வாசகர்களின் நல்ல சிந்தனைகளை வரவேற்று வாய்ப்பளிக்கும் ஆனந்த விகடனுக்கும் அனுப்பி எனது இரண்டு கட்டுரைகளும் வெளியாகி இருப்பதில் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி.

நான் வேலை செய்த சில நிறுவனங்களில் பணியாற்றிய சக இளைஞர்கள், மற்றும் இளைஞிகள் கணினியில் பணியாற்றும்போது தட்டுத் தடுமாறித் தடவித் தடவி கீ போர்டில் வேலை செய்வதைக் கண்ணுற்றால் நான் அடுத்தநாளே என்னிடம் இப்பொழுதும் பத்திரமாக உள்ள முதன்முதலாக நான் தட்டச்சு செய்ய உதவிய புத்தகத்தின் நகல்களை எடுத்து கொடுத்து அவர்களையும் தட்டச்சு செய்து பழக அறிவுறுத்துவேன்.

இன்று ஒவ்வொரு இல்லத்திலும் கணினி இல்லாத நிலை உருவாகிவிட்டது. அரசுகளின் இலவச மடிக்கணினிகளும் ஏராளம் வழங்கப்பட்டுவிட்டது. இளைய தலைமுறை தங்களின் பணிகளை தங்கு தடையின்றி விரைவாகக் கணினியில் செய்யத் தட்டச்சு இயந்திரத்தில் பழக வேண்டியது மிகமிக அவசியம். கணினி அறிவு ஏராளம் இருந்தாலும் நம்மிடம் உள்ள தட்டச்சு செய்ய இயலாத குறை நாம் பணியாற்ற வேண்டிய நிறுவன வேலைகளைத் தாமதப்படுத்தவே செய்யும்.



இதனைத் தவிர்க்கவாவது இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும் என்பதே எனது 55 வயதிலும் கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதான வேண்டுகோள். இன்றைய இளைய சமுதாயம் நிச்சயம் எனது வேண்டுகோளைப் புறக்கணிக்காது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!