அன்னைத் தமிழால் என்னைச் செதுக்கியவர்கள்

உயர்நிலைப்பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கத் துவங்கியபோது எனது உறவினரும் தமிழாசிரியருமான சித்தையா அவர்கள் எனது வகுப்பாசிரியராக இருந்தார். பத்து வயதில் முதன் முதலாக விபரம் புரிந்து அவரிடம் தமிழ் கற்க நேர்ந்தது.

அதன் பின்னர் ஏழாம் வகுப்பு துவங்கி பள்ளி இறுதி வரை அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழாசிரியர்களாகச் சிலர் இருந்தாலும் பெரும்பாலும் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ஆபெ என பள்ளி வளாகம் முழுவதும் ஆசிரியப் பெருமக்களால் அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய திரு ஆ.பெரியசாமி அவர்கள்.

தமிழில் நான் இன்று இலக்கண சுத்தமாக எழுதுகிறேனா என்பது எனக்கே தெரியாது. மேலும் எல்லோரைப் போலவும் இப்பொழுதும் எனது எழுத்துக்களில் அவ்வப்போது எழுத்துப் பிழை என்னை அறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது. இதற்கு நான் எனது படைப்பை மீண்டும் படித்துத் திருத்தாமல் அவசரமாக வெளியிட்டுவிடுவதுதாம்.

எனினும் என்னை தமிழில் எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திரு ஆபெ என்பதில் இன்றளவும் எனக்குள் சந்தேகம் இல்லை.

திரு ஆபெ அவர்கள் மிகுந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் நிறைந்தவர் தந்தை பெரியாரின் வழியில் நடந்தவர். சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடர் ஏந்தி பவனி வந்தவர்.

அவர் எங்களின் வகுப்பறையில் நுழைந்த கணம் முதல் வகுப்பு முடியும் வரை வகுப்பறையே எங்களின் சிரிப்பலைகளால் அதிரும். இதற்குக் காரணம் அவர் தமிழின் இலக்கண இலக்கியங்களை மிகுந்த நயத்துடன் பாடம் எடுக்கும் கையோடு நம் பக்தி மார்க்கம் பரப்பிய கட்டுக் கதைகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் நையாண்டி செய்வதுதாம். 

குறிப்பாக முப்பத்து முக்கோடி தேவர்கள், கிங்கிரர்கள் எனத் துவங்கும் (வயது காரணமாக மேலே தொடரும் வரிகள் மறந்துவிட்டன) பக்தி மார்க்க வரிகளை வரிசையாகச் சொல்லி நம் பாமர மக்களை ஏமாற்றும் பக்தி மார்க்கக் கும்பல்களை அவர் நையாண்டி செய்யும் போதெல்லாம் வகுப்பறையே அதிரும். 

மிகத் தீவிரமாகத் தம் பகுத்தறிவுக் கொள்கைகளை எங்களுக்குள் விதைக்க முயன்றாலும் தம்முடைய கடமையிலிருந்து அவர் தவறவே இல்லை. நான் எழுதும் எழுத்து அவர் வழங்கியது. அவரது மாணவனாகப் பல வகுப்புகளில் நான் இருந்ததால் அவர் நடத்திய இலக்கண இலக்கிய விதிகள் அவரது பகுத்தறிவுச் செய்திகளோடு எனது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்ததெனலாம்.

அவரால்தான் இன்றுவரை நான் தமிழ் வளர்த்த சித்தர்களின் வழியில் ஓரளவு நடக்க முயன்றாலும் எனது ஒவ்வொரு செய்கையிலும் பகுத்தறிந்து வாழ முற்பட்டிருக்கிறேன். தந்தை பெரியாரைப் பற்றி ஏராளமான மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் அவரால் நம் தமிழகத்தில் ஏற்பட்ட மகத்தான வரலாற்றுப் புரட்சிகளுக்கு மதிப்பு கொடுத்து தந்தை அவர்களை மதித்து வருகிறேன்.

அடுத்து எனக்குள் உள் உணர்வாகத் தமிழார்வத்தைப் புகுத்தியவர் தமிழினத்தின் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டவர்.

நான் புகுமுக வடிப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க விருப்பமின்றி எனது சொந்த ஊரில் கிடைத்த வேலை ஏதேனுமொன்றைச் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நாமக்கல்லில் இருந்த எனது சிறிய தகப்பனாரிடமிருந்து உடனே அங்கு புறப்பட்டு வரவேண்டுமென்று ஒரு தந்தி வந்தது.

நான் அடுத்த நாளே நாமக்கல் சென்றடைந்தேன். என்னிடம் எனது சிறிய தகப்பனார் தனது நண்பர்கள் சிலர் துவக்கியுள்ள ஒரு இருசக்கர வாகன தானியங்கி உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தைக் கவனித்துக் கொள்ள ஒருவர் தேவை. நான் உன்னை அங்கு சேர்த்து விடுகிறேன் சம்மதமா என்றார். ஊரில் சரியான வேலையேதுமின்றி இருந்ததால் நான் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டேன்.

உடனே அவர் என்னை தனது இல்லத்திலிருந்து நாமக்கல் நகரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் அமைந்திருந்த அவரது நண்பர்களின் உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

நாமக்கல்லில் அதற்கு முன்னர் நான் ஓராண்டுவரை புகுமுக வகுப்பில் படிப்பதற்காகத் தங்கியிருந்தபோது நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் சுற்றியிருந்தபோதும் ஏனோ இந்த இடத்தை மட்டும் நான் தவற விட்டிருந்தேன்.

எனது பாதங்கள் முதன் முதலாக அந்த நிறுவனம் அமைந்திருந்த என்பதை விட அந்த இல்லத்து மண்ணை மிதித்தது அன்றுதாம். அடுத்தநாள்தான் அந்த நிறுவனம் அமைந்திருந்த இடம் தமிழகத்தின் சரித்திரப் புகழ் பெற்ற இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய ஒரு மாமனிதர் வசித்த இடமென்பது எனக்குத் தெரிய வந்தது.

நான் பணியாற்றிய நிறுவனத்திற்குப் பின்புறம் அமைந்திருந்த அந்த மாமனிதர் வசித்த இல்லத்தில் அந்த மாமனிதரின் தங்கை வசித்து வந்தார். என்னைப் பற்றி விசாரித்த அவர் தன் மகன் போலிருந்த என்னிடம் அந்த மாமனிதருடன் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும், அந்த மாமனிதர் வாழ்ந்த முறை பற்றியும் ஏராளம் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நான் அந்த மாமனிதரின் இல்லத்தில் அவரின் சுவாசக் காற்றினை இரண்டாண்டுகள்வரை சுவாசித்திருந்தேன். பல்வேறு வணிகக் காரணங்களால் நான் பின்னர் பத்தாண்டுகள் நாமக்கல்லில் இருந்து விலகி வாழ நேர்ந்தது. 

பத்தாண்டுகள் கழிந்து நான் அந்த இல்லத்துச் சுவாசக் காற்றை மீண்டும் இரண்டாண்டுகள் சுவாசிக்க நேர்ந்தது. அதன் பின்னர் அந்த மாமனிதர் என்ன நினைந்தாரோ தெரியவில்லை. நான் நாமக்கல்லை விட்டு நிரந்தரமாக பல்வேறு இடங்களில் வசித்து இன்று ஈரோட்டு மண்ணில் வசிக்க நேர்ந்துள்ளது.

ஏனோ தெரியவில்லை. எனக்கு பணம் சார்ந்த நோக்கம் என் வாழ்நாளெல்லாம் இருந்ததில்லை. ஆனால் நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்பதில் எனக்குள் ஏராளமான கனவுகள் உண்டு. 

இதன் காரணமாகவே நான் அடிக்கடி இன்றைய ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி எனது அதிருப்தியை வெளிப்படையாக எனது இல்லத்திலும், நட்பு வட்டத்திலும், இணையத்தில் எனக்கென ஏற்படுத்திய வலை தளத்திலும் விமரிசிக்கிறேன். இதனால் இன்றைய அரசியல்வாதிகளின் மேல் உள்ள அச்சத்தின் காரணமாக எனக்கு ஏராளமான அறிவுரைகள்தான் கிடைத்து வருகிறது. 

எனினும் எனது பேச்சையோ எழுத்தையோ என்னால் மாற்றிக் கொள்ளவே இயலவில்லை. 55 வயதில் உள்ள எனக்குத் தமிழில் உள்ள ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற ஒரு அசாத்திய துணிச்சலும் உண்டு. 

வாய்மை உணர்வுடன் வாழ முற்பட்டு, நம் தமிழகமும் அதே உணர்வுடன் வாய்மையே வெல்லும் என்ற தனது தாரக மந்திரத்திற்கேற்ப செயல்படும் அரசியல்வாதிகள் நிறைந்து திகழ வேண்டும் என்ற என் கனவு நியாயமானதில்லையா?

இதனைப் படிப்பவர்கள்தான் எனக்குச் சரியான துணிச்சல் தரவேண்டும். 

எனினும் நாமக்கல்லில் நான்காண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் நான் போற்றும் அந்த மாமனிதர் யாரென்பதை நான் இன்னும் எழுதவில்லைதானே.

அவர்தான் 

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை யுத்தத்தைத் தம் வைர வரிக் கவிதைகளில் விதைத்து நமது தேச விடுதலைக்காகப் பாடுபட்ட மக்களை விரைவுபடுத்தியவர்.

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனத் தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிர்ந்து பீடு நடை போட வைத்தவர்.

பாரத தேசம் மட்டுமல்ல உலகமெங்கும் தம் விடுதலை உணர்வாலும், கவிதை, கட்டுரை, தமிழ் இலக்கியம் என ஏராளப் படைப்புகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமேதை, மாமனிதர்

நாமக்கல் கவிஞர் திருமிகு இராமலிங்கம் அவர்கள். 

அவரது இல்லச் சுவாசக் காற்றைச் சுவாசித்த எனக்குள் வணிகத்திற்காக ஆங்கிலத்தில் எழுதி வந்திருந்தாலும் தமிழ்மொழி மேலும், நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் வளர்ந்து உலக அரங்கில் உயர்ந்து உலகிற்கே வழிகாட்டித் திகழ வேண்டும் என்ற ஏராளமான கனவுகள் இருந்தே தீர வேண்டுமென்பது 

இயற்கையாகவும், தமிழனாய்ப் பிறந்து, தமிழ் என்னும் அமுதமொழி பேசி, தமிழ் மண்ணில் வாழ்ந்து மடியவேண்டும் என்ற பிறப்பெடுத்த எனக்குள் இயல்பானதுதானே. 

கோழைகளையும் வீரனாக்கும் அந்த மாமனிதரின் தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் வீர வரிகள் என்றும் எனக்குள்  நிறைந்து உத்வேகம் கொடுக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!