இங்கு யாரும் தோற்கவில்லை!

இளைஞன் ஒருவன் ஒரு ஸென் மதகுருவிடம் வந்து நான் எல்லாவித தீமைகளையும் செய்து விட்டேன். அதனால் தனக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. ஞானம் பெற இனி நான் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.

அந்த குரு உனக்கு வாழ்க்கையில் இன்னும் விடவே முடியாதது எதுவென்று கேட்டார். 
அதற்கு அவன் எனக்கு சதுரங்க விளையாட்டில்தான் தீவிர ஆர்வம் அதை மட்டுமே என்னால் இப்பொழுதும் விடமுடியாது என்றான்.

அப்படியானால் ஒரு உன்னுடன் சதுரங்கம் விளையாட இங்குள்ள எனது சீடர் ஒருவரை அழைக்கிறேன். நீ அவருடன் விளையாட வேண்டும். இந்த விளையாட்டில் நீ வென்றுவிட்டால் அவரது தலையை நான் வெட்டிவிடுவேன்.

அதே சமயம் அவர் வென்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். இதுதான் விதி சம்மதமா என்றார். அந்த இளைஞனோ ஒரு போர்க்குணம் மிக்க சமுராயின் மகன். எனவே தனக்குள் இயல்பாக உள்ள போர்க்குணத்துடன் இந்த விளையாட்டிற்கு ஒப்புக் கொண்டான்.

அவனை எதிர்த்து விளையாட வந்த சீடரோ இந்தக் குருவிடம் சீடராகிப் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் பழகியவர். ஒளி பொருந்திய முகத்துடன் குருவின் நிபந்தனைக்கு மறுப்பேதும் சொல்லாமல் விளையாட ஒப்புக்கொண்டார்.

விளையாட்டு துவங்கியது. இளைஞன் ஆரம்பத்தில் தான் தோற்றுவிட்டால் தனக்குக் கிடைக்கப் போகும் மரண தண்டனை குறித்து நடுக்கமும், அச்சமும் கொண்டு விளையாடத் துவங்கினான். சீடரோ எப்போதோ தனக்கிருந்து மறந்துபோன சதுரங்க விளையாட்டென்பதால் தவறாகவும், எனினும் மனதில் மரணபயம் ஏதுமின்றி அமைதியான மனதுடனும் விளையாடிக் கொண்டிருந்தார்.

நேரமாக ஆக இளைஞனுக்குள் இருந்த பயம் அகன்று ஒரு தெளிவான ஞானத்துடன் விளையாடத் துவங்கினான். எனவே அவன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. தான் வெற்றி பெறுவது நிச்சயம் என அவன் உணர்ந்தவுடன் எதிரே எந்தவித சலனமும் இன்றி விளையாடிக் கொண்டிருந்த துறவியைப் பற்றி எண்ணத் துவங்கினான்.

நானோ வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழவே தகுதியற்றவன். இதோ என் எதிரில் உள்ள இந்தச் சீடரோ எவ்வளவு சாந்தமானவராக, தோல்வியின் விளிம்பில் இருந்தும் தனது மரணம் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கிறார். 

எனவே நான் இறந்தாலும் பரவாயில்லை. இவர் வாழ வேண்டும். இவரால்தான் மனித குலத்திற்கு மேலும் நன்மைகள் கிடைக்கும் என்று நினைந்து தான் தோற்க வேண்டும் என்று அதற்கேற்ப தவறாக விளையாடத் துவங்கினான்.

இளைஞனின் மனமாற்றத்தை தனது ஞானத்தால் கண்டறிந்த ஸென் குரு உடனடியாக சதுரங்கப் பலகையையும் அதில் இருந்த காய்களையும் தட்டிவிட்டு போட்டி முடிந்தது. இங்கு யாரும் தோற்கவில்லை. இருவருமே வென்றுவிட்டீர்கள் என உரக்கச் சொல்லி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். 

புரிந்தும் புரியாமலும் அந்த இளைஞன் குருவிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்கு அந்த குரு சொன்னார். நான் உனது ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்து கவனித்தேன். முதலில் பயத்துடன் ஆடிய நீ அதன் பிறகு ஒரு புத்தருக்குள்ள தன்மையை அடைந்தாய். உன்னிடம் கருணை குடி புகுந்தது. நீ இறந்தாலும் பரவாயில்லை எதிரிலிருக்கும் இந்தத் துறவி இறக்கக்கூடாது என முடிவு செய்தாய். எனவே நீ தோல்வியுறவில்லை. 

பக்குவமான தியானம், மற்றும் கருணை இரண்டையும் நான் உனக்குக் கற்றுத் தந்துவிட்டேன். இனி; நீ எனது சீடனாக இங்கேயே இருக்கலாம் என அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இதோ இந்த இளைஞனைப் போன்றவர்கள்தாம் இன்றைய அரசியல்வாதிகள். 

எளிமையான அப்பாவியான அந்தச் சீடரைப் போன்றவர்கள்தாம் நம் தமிழக மக்கள். 

தேர்தல் எனும் சதுரங்க விளையாட்டு துவங்கிவிட்டது. எல்லாவித தீமைகளையும் செய்தும் இன்னும் தங்களது தவறுகளைப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் அரசியல்வாதிகள் தங்களின் விளையாட்டைத் துவங்கியுள்ளனர்.

எதிரே தங்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற எவ்வித அச்சமும் இன்றி இந்த அரசியல்வாதிகள் வழங்கப்போகும், பணம், உடை, இலவசங்கள், தேர்தலுக்கும் பின் கிடைக்கப்போகும் இலவசங்களை நம்பி கத்தி தலைக்கு மேல் காத்திருந்தாலும், அரசியல் சதுரங்க விளையாட்டில் அனுபவமின்றியும்கூட மக்கள் விளையாடத் தயாராகிவிட்டனர்.

முடிவு கதையில் உள்ளது போன்று நல்லதாக நடக்க வேண்டும். 

இங்கு எவரும் தோற்கக்கூடாது. 

போட்டியிட்ட இருவருமே வெற்றி பெற வேண்டும். 

இளைஞனுக்குள் ஏற்பட்ட மனமாற்றம் நம் ஊழல் அரசியல்வாதிகளிடமும் வர வேண்டும் . அப்படி ஒரு மனமாற்றம் வந்து இந்த அரசியல்வாதிகள் தங்களுக்குள் கருணையையும் அன்பையும் மட்டுமே மக்களிடம் வெளிப்படுத்தினால் நாங்கள் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வோம்.

ஏனெனில் அவர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து எங்களை அடக்கி ஆண்டவர்களல்ல. எங்களுடனே பிறந்து வளர்ந்து எங்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறாகப் பயன்படுத்தி கதையிலுள்ள இளைஞனைப் போல வாழ்ந்திருந்தவர்கள். 

இவர்கள் திருந்துவார்கள். இவர்கள் இதுவரை செய்த தவறுகளை மறப்போம். மன்னிப்போம்.

இனியொரு விதி செய்வோம்.

தமிழகம் இனி நல்ல அரசியல்வாதிகளால் புகழ் பெற வேண்டுமென.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!