திங்கள், 7 மார்ச், 2016

மார்ச் 8 உலக பெண்கள் தினம்.

Leave a Comment
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்று பெண்மையைப் போற்றிய பாரதி நாடும் தாயும் போற்றுதலுக்கு உரியவர்கள் எனத் தம் கவிகளால் முழங்கியவர்.

பாரதி கண்ட புதுமைப் பெண்களென நம் பாரத தேசத்திலும் தமிழகத்திலும் ஏராளமான புதுமைப் பெண்கள் வலம் வந்தாலும், 

நம் நாட்டில் இன்னும் பெண்ணடிமை, பெண்களைக் கேலிப் பொருளாக்குதல், வன்கொடுமைக்கு ஆளாக்குதல், பெண்களை மூடத்தன்மையில் புகுத்திவைத்து சாமியார்கள் கூட்டம் காசு பார்ப்பது, என ஏராளமான பழமையான பிற்போக்குத் தனங்கள் இன்னும் குறையவே இல்லை என்பதுதாம் வேதனைக்குரியது. 

வரதட்சணைக் கொடுமைகள், பெண்களைத் துயரத்தில் ஆழ்த்தி வைக்கும் மதுபோதைக் கலாச்சாரம், நகையும், பணமுமே வாழ்க்கை என்று தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் வழி நடத்தப்படுதல், பெண் சிசுக் கொலைகள், பெண்களுக்கு இன்றுவரை சரிக்குச் சமமான இட ஒதுக்கீடு இன்மை, என ஏராளமான அடக்குமுறைகளைப் பெண் சமுதாயம் இன்றுவரை சந்தித்து வந்துள்ளது என்பதை விடச் சகித்து வந்துள்ளது எனவே கருதலாம்.

எந்தப் பெண்ணைக் கண்டாலும் தன் பாட்டியாக, தாயாக, சகோதரியாக, தங்கையாக, மகளாக அந்தந்த வயதிற்குரிய மரியாதையினை ஆண்கள் மதித்து வழங்கிடவும், பெண் இல்லாத உலகம் ஒரு உலகமே இல்லை என்பதை நினைந்தும்

தன்னைத் திருமணம் செய்து கொண்டு தங்களைப் போன்று எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் என வேண்டிய ஒரு பெண்ணிடம் அதற்கு எத்தனை ஆண்டுகள் நீங்கள் ஏன் காத்திருக்க வேண்டும் இதோ இன்று இந்த நிமிடம் முதல் என்னை உங்கள் மகனாக நினைத்துக்கொள்ளுங்கள் தாயே என்று தாய்மையின் சிறப்பை உலகிற்கு இயம்பிய விவேகானந்தரும், 

அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும், மகாகவி பாரதியும், இன்னும் பெண்களுக்கெனப் போராடிய இன்னும் போராடி வரும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை வழங்கி,

உலகெங்குமுள்ள பெண்கள் அனைவரும், துயரின்றி, ஆணுக்குப் பெண் சரிநிகர்ச் சமானமெனும் பாரதியின் அமுதமொழிக்கேற்ப வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழப் பிரபஞ்சப் பேராற்றல் துணை நிற்க வேண்டுமென ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இதயம் நிறைந்து வேண்டுகிறேன். 
Read More...

புதிய துறைகள்!

Leave a Comment
ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், கண்மாய்கள், ஊருணிகள், அனைத்தையும் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், 

கனிம வளங்கள், மணல், தாது மணல், என தமிழகத்திலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதைத் தடுக்கவும்,

விளை நிலங்கள், அரசின் புறம் போக்கு நிலங்கள், வனப் பகுதிகள், போன்றவை அரசியல் இயக்கங்களால் வளைக்கப்படுவதை தடுக்கவும்,

அரசு நிலங்களும், மக்களிடமிருந்து அரசின் திட்டங்களுக்கெனக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இனி தனியாருக்கு விற்கப்படுவதைத் தவிர்க்கவும், தனியாரிடமுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படவும்,

சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட தனிமனிதப் பங்கினை மேம்படுத்தவும்,

இது போன்ற ஏராளமான நல்வழித் திட்டங்களுக்கென
புதிதாகத் துறைகள் ஏற்படுத்தப்படும். 

இந்தத் துறைகளில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் என எவருமே அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் , வெளிப்படையான நிர்வாகத்துடன், மக்களுக்கெனப் பாடுபடும் உண்மையான சாதிமத பேதமற்ற மக்கள்நலத் தொண்டர்கள் மட்டுமே நிறைந்த ஒரு மகத்தான துறைகளாக இவை இனி திகழும்.

ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் முதலில் ஊழல் நிர்வாகங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

எனவே இனி ஒரு விதி செய்வோம். அதனை எந்த நாளும் காப்போம்.

Read More...

சனி, 5 மார்ச், 2016

இனி ஒரு விதி செய்வோம். இது சுயேட்சைகளின் வெற்றிக் கொண்டாட்ட காலம்.

Leave a Comment
இந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஊழல் இயக்கங்களுக்கு எதிராக, இதுவரை அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்பொழுது நல்லவர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் பச்சோந்தி குண அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க உள்ளவரா? 

தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் இயக்கங்களின் பசப்புரைகள் நம்பி உங்கள் வாக்கை இவர்களுக்கும் அளித்து வீணாக்கிவிடாதீர்கள். மக்களின் பலவீன மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மடை திருப்பி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் புதிய அரசியல் வணிகக்கூட்டங்கள் இவை. ஏனெனில் இவர்கள் தேர்தல் நேரத்தில் இப்பொழுது முளைத்த காளான்கள், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் காணாமலும் போகக்கூடும். 

தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நோடோவிலும் வாக்களிக்காதீர்கள். நான்கூட முன்பு நோடோவில் வாக்களிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் நோடோவுக்கு குறைவான வாக்குகளே முந்தைய தேர்தலில் விழுந்திருந்தன. எனவே நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வோம்.

உங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சைகள் உட்பட அனைத்து இயக்கங்களின் பிரதிநிதிகளின் பணபலம், அவர்களிடம் உள்ள குணநலன்கள், மக்களுக்கு இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள தொண்டுகள், அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவரா, சாதி மத அரசியல்வாதியா, வாக்களித்தபிறகு மக்களை மதிப்பவரா, அல்லது மிதிப்பவரா, என ஆயிரக்கணக்கான சந்தேகங்களை முன்வைத்து அவர்களை அலசி ஆராயுங்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு நல்லவரேனும் உங்கள் மனதில் பட்டால் அவர் சுயேட்சையாக இருந்தாலும் அவருக்கே உங்கள் வாக்குகளைச் செழுத்துங்கள்.

வரும் தேர்தல் ஊழலுக்கும், மக்களுக்கும் நடக்கும் நேரடி யுத்தம். 
இந்த யுத்தத்தில் ஊழல் இயக்கங்கள் மட்டுமல்ல இதுவரை ஊழல் இயக்கங்களுடன் கைகோர்த்திருந்த அனைத்து இயக்கங்களும் மண் கவ்வ வேண்டும்.

ஊழல் அரசியல் இயக்கங்கள் தோற்றால் மக்கள் வென்றதாக அர்த்தம். 

ஊழல் அரசியல் இயக்கங்கள் வென்றால் மக்கள் தோற்றதாக அர்த்தம்.

சுயேச்சைகளை இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதன் வாயிலாகத் தமிழகம் தேர்தல் வரலாற்றில் புதிய உலக சாதனையை நிகழ்த்த வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் துவங்கியதிலிருந்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களை அலசித் தேர்வு செய்வோம். 

ஊழலுக்கும் ஊழல் இயக்கங்களுக்கும் இந்தத் தேர்தலுடன் முடிவு கட்டுவோம்.

ஊழலில் போட்டு குண்டும் குழியுமான சாலைகளிலும், ஊழல் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காகப் படு கேவலமாகிப்போன சாலைகளிலும், மந்தமாக நடக்கும் பாலங்களுக்காக குண்டும் குழியுமான மாற்று வழிகளில் ஐந்தாண்டுகள் நம் வாகனங்களோடு சேர்ந்து நம் முதுகொடிந்ததை கடைசிநேர ஊழல் சாலையில் பயணித்து மறந்துவிடக்கூடாது. இந்தச் சாலை அடுத்த மழைக்குக்கூடத் தாங்காது என்பதை மனதில் வைப்போம்.

நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இலவசங்களுக்கு மயங்கி வல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் யுத்த களமல்ல. 

நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்மைக் களம்.

தமிழக அரசின் முத்திரை வாக்கியம்தாம் வாய்மையே வெல்லும் என்பது.

இந்தத் தேர்தலில் வாய்மைதான் வெல்ல வேண்டும். 

பொய்மை வென்றால் தோற்கடிக்கப்பட்ட வாய்மையை மீண்டும் ஐந்தாண்டுகள் கழித்துத்தான் மீட்டெடுக்க முடியும். 

அதற்குள் நாமெல்லாம் அகதிகளாகத்தான் வேறு நாடுகளில் தஞ்சம் புக வேண்டியிருக்கும்.

நாம் இனி எப்படி வாழ வேண்டும்.  அகதிகளாகவா? அடிமைகளாகவா?

வாக்களிக்கும் முன் முடிவு செய்வோம். வாக்களித்துவிட்டு புலம்புதல் தவிர்ப்போம்.

Read More...

வெள்ளி, 4 மார்ச், 2016

குடிமைப் பொருட்கள் விநியோகம்!

Leave a Comment
நான் எனது 55ஆவது வயதில் தற்பொழுது செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக வணிகம் செய்யலாம் என முடிவெடுத்து வேலையிலிருந்து விலகிவிட்டேன். வணிகம் துவக்குவதற்குத் தாமதமாவதால் தற்பொழுது வேலையின்றி இருக்கிறேன்.

இதுவரை எனது துணைவியார் குடிமைப் பொருட்கள் (அதாங்க ரேசன் பொருட்கள்) வாங்குவதற்காக விற்பனை அங்காடிக்குச்  சென்று வந்திருந்தார். வேலையின்றி இருப்பதால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்காக அங்காடிக்கு நான் செல்லத் துவங்கினேன்.

மாதத்தின் முதல் நாள் துவங்கி அந்த வாரம் முழுவதும் அங்கு ஏராளமாக மக்கள் கூடியிருப்பர். குறிப்பாக அறுபது வயதைத் தாண்டிய முதிய  பெண்கள் அதிக எண்ணிக்கையிலும், வயதான ஆண்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வரிசையில் நிற்பர்.

வயதானவர்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் வயது மூப்பின் காரணமாக கடும் வெயிலில் வரிசையில் நிற்க இயலாமல் கடுமையான மன உலைச்சலுடன்தான் காணப்படுவர். 

இடையே காலை ஆறு மணிக்கே வந்ததாகவும், கடை திறக்காததால்  ஒன்பது மணிக்கு வீடு சென்று திரும்பி வந்தால் தன் இடத்தில் வேறு யாரோ நிற்கிறார்கள் என ஒரு 65 வயது பாட்டி அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு கடை அலுவலரின் முன் சென்று தனக்கு முதலில் பில் போடு என்கிறார்.

இதைச்  சகித்துக் கொள்ளாத மற்ற முதிய பெண்கள் ஏக காலத்தில் கூச்சலிட கடை அலுவலர் கடுப்படைந்து அந்தப் பாட்டியின் குடிமைப் பொருள் அட்டையை ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு பில் போடத் துவங்கினார்.

பாட்டி விடாமல் பலவாறு திட்டிக் கொண்டே இருக்க பதிலுக்கு வரிசையில் நின்றவர்களும் கூச்சலிட்டவாறு இருந்தனர். ஒருவரை விட்டால் அடுத்தவரும் இதே போலத்தான் முண்டியடித்து முன்னே செல்ல முயற்சிப்பர். நாங்களும் காலையிலிருந்து கால் கடுக்க நிற்பவர்கள்தானே மேலும் இந்த பாட்டியிடம் மாதந்தோறும் இதே பிரச்சினைதான் என்ற அவர்களின் ஆதங்கமும் நியாயமானதாகவே பட்டது. நான் உட்பட அங்கிருந்த அனைவரும் மணிக்கணக்கில் வரிசையில் நின்றுதாம் பொருட்களை வாங்கவே முடிகிறது.

குடிமைப் பொருட்களை விநியோகிக்கும் மாதத் துவக்கத்தின் முதல் வாரத்தில் அடிக்கடி நிகழும் நிகழ்வு இது. இதைவிடக் கொடுமை இது போன்ற கடைகளில் மண் எண்ணை விநியோகமென்றால் காலை 9.30 மணிக்கு மேல் திறக்கப்படும் கடைக்காக அதிகாலை நான்கு மணிக்கே முதியவர்கள், குறிப்பாக பெண்கள் கடும் பனியிலும் முக்காடிட்டவாறு மண் எண்ணெய் கலன்களுடன் வரிசையில் அமர்ந்திருப்பதை பல முறை இந்த நேரத்தில் வீட்டுக்குத் தேவைப்படும் பால் வாங்கச் செல்லும்போது கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன்.

கணவன் மனைவி வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் வேலையற்றிருக்கும் வயதானவர்களே பெரும்பாலும் குடிமைப் பொருட்கள் வாங்கி வர வேண்டியதென்ற கட்டாயம் நம் நாட்டில் சர்வ சாதாரணம். மேலும் சிறுவர்களைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கச் சொல்லிவிட்டு இந்தக் கடைகளில் வரிசையில் நின்று குடிமைப் பொருட்கள் வாங்கி வரச் சொல்லும் பெற்றோரும் இதில் அடக்கம்.

நாட்டு மக்கள் தங்களின் ஆட்சியில் வளமுற்றிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்களில் ஒருவரேனும் இது போன்று குடிமைப் பொருட்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்று பார்த்தால்தான் அவர்களின் சிரமம் என்னவென்று புரியும்.

மேலும் மக்கள் வளமுற்றிருந்தால் குடிமைப் பொருட்கள் வாங்குவதற்கு ஏன் இவ்வாறு முண்டியடித்துக் கொண்டு பரிதாபமாகக் கடும் வெயிலில் மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் இயல்பாக எவர் மனதிலும் தோன்றாதிருக்காது.

வெளிச்சந்தையைவிட இங்கு மலிவு விலையில் சில பொருட்கள் கிடைப்பதால் அவற்றை இழக்கக்கூடாது என்பது ஒரு காரணம். நமக்குத் தேவையற்ற மண்எண்ணை போன்றவற்றை அதிக விலைக்கு விற்பதால் அவற்றினால் கிடைக்கும் இலாபமும் மறு காரணம். 

வணிக உபயோகத்திற்கென நான் வாங்கிய ஒரு டிஜிட்டல் தராசில் கடந்த இரு மாதங்களாக அங்கு வாங்கிய பொருட்களின் அளவீட்டைச் சரி பார்த்தேன். ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவு குறைவாக 900 கிராம்கள்தான் அவை எடை காட்டியது. அந்தக் கடையில் உள்ள டிஜிட்டல் தராசில் எடை போடுபவருக்கு மட்டுமே எடை தெரியுமாறும், மறுமுனையில் என்ன எடை என்பது தெரியாதவாறும் இருந்ததை நான் கடந்த மூன்று மாதங்களாகவே கவனித்துள்ளேன்.

கடை அலுவலர்கள் தவறு செய்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. இதில் ஒரு மகத்தான நெட்ஒர்க் முறையே உள்ளது. இந்த அலுவலர்கள் இவ்வாறு தவறு செய்யத் தூண்டப்பட்டு அவர்களின் மேல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் இவ்வளவு கப்பம் கட்டவேண்டும் என்ற நிர்பந்தம். இது சங்கிலித் தொடர்போல மேலிடம் வரை செல்கிறது. மலிவு விலை விற்பனையிலும் மலிவான புத்தியுடன் நடந்து கொள்ளும் இவர்களின் நோக்கம் தவறான வழியில் வரும் செல்வத்தின் மீதுதானே.

ஒரு கடையில் சாதாரணமாக இருநூறு மக்கள் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஆறுவிதமான பொருட்கள் விநியோகம் நடக்கிறது. ஓவ்வொன்றிலும் 100 கிராம் எனக் கொண்டால் 120 கிலோ அளவில் அந்தக் கடையில் மக்களுக்குக் குறைவாக விநியோகம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள கடைகளின் எண்ணிக்கையையும், குறைவு படும் எடை அளவையும் கணக்கிட்டால் தலை சுற்றி மயக்கம்தான் வரும்.

மிகுதியாகும் பொருட்களை இவர்கள் வெளிமார்க்கெட்டில் விற்பதைவிடச் சற்றுக் குறைவாக விற்று மேலுள்ளவர்களுக்குத் தேனெடுத்துப் புறங்கை சுவைத்துக் கப்பம் கட்டுவதாகப் பரவலாக மக்கள் பேசிக்கொள்வதை இந்தக் கடையிலேயே கண்டேன்.

மாதக் கடைசியில் ஓய்வாக வேலை பார்க்கும் ஒரே பணியாளர் வார முதல் நாட்களில் குடிமைப் பொருட்களை பில் செய்து பணம் வசூலித்தபின் எடை போட்டு விநியோகம் செய்வதில் உள்ள சிரமங்களை எழுதுவதற்கும் ஏராளமுண்டு. 

எனினும் குடிமைப் பொருட்களை வாங்கும் முதியோர்களின் சிரமங்களைக் குறைக்கவும் இங்கு நடைபெறும் ஊழல்களைத் தடுக்கவும் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றினால் பொதுமக்களின் வயிற்றெரிச்சல் குறைவதுடன் பணியாளரின் வேலைச்சுமை குறைந்து இருதரப்பிலும் நிம்மதி பெற இயலும்.

முதலாவதாக எடை போட்டு விற்கப்படும் பொருட்களை இனி பொட்டலமிட்டுத்தான் விற்கும்படி செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குப் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலும் பரவாயில்லை. மேலும் பொட்டலமிடுவதால் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பொட்டல முறையை மட்டும் கட்டாயம் தவிர்த்து மாற்று ஏற்பாடு காணவேண்டும். இதனால் எடை அளவுகளில் பணியாளர்கள் தவறு செய்வது அறவே தவிர்க்கப்பட்டு தாங்கள் எதுவும் ஆதாயம் அடைய இயலாததால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் கப்பம் ஏதும் கட்ட முடியாது என அவர்கள் இனி நெஞ்சம் நிமிர்ந்து சொல்லலாம்.

இரண்டாவதாக ஒரு கடையில் இருநூறு மக்கள் பொருட்கள் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இந்த இருநூறு மக்களையும் முதல் வாரத்தில் இந்த எண்கள் உள்ளவர்கள், இரண்டாவது வாரத்தில் இந்த எண்கள் உடைவர்கள், மூன்றாவது வாரத்தில் இந்த எண்கள் உடையவர்கள்தாம் என்பதாகவோ அல்லது மக்களுக்கென வழங்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்கள்  அட்டைகளின் தரத்திற்கேற்றவாறு இந்த நாளில் இந்த அட்டைக்குரிய மக்கள் என இனி தங்களின் பொருட்களை காலை முதல் மாலை வரை பெற்றுக் கொள்ளலாம் என நெறிப்படுத்த வேண்டும். 

அதே சமயம் மண்எண்ணை தவிர்த்து அனைத்து பொருட்களும் ஒரே தடவையில் அந்தந்த வாரத்தில் அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும் வகையில் பொருட்களை தருவித்து விநியோகம் செய்யத் தயாரான நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கடை ஊழியருடன் சம்பந்தப்பட்ட குடிமைப் பொருட்கள் வழங்குதுறையின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு அடுத்த மாதத்திற்குத் தேவையான பொருட்களை சேகரிக்கத் தேவைப்படும் கால அவகாசத்தை பணியாளருக்கு மாத இறுதியான நான்காவது வாரத்தில் வழங்கலாம். பெரும்பாலும் விற்பனைக்கே போகும் மண்எண்ணை விநியோகத்தை அரசு மாற்று ஏற்பாடுகள் வாயிலாக விற்பனை செய்யும் வழிகளைக் கண்டறிய வேண்டும். மக்களிடம் எதிர்ப்பிருப்பின் அதனை மாதத்தின் முதல் நாளிலோ அல்லது கடைசி நாளிலோ விநியோகம் செய்வது பற்றி முடிவெடுக்கலாம்.  

தங்களின் உழைப்பிற்கேற்ப அதிகளவு வருமானம் கிடைக்கும் வகையில் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் தன்னிறைவு பெற்ற ஒரு நாடாகத்தான் கருத முடியும். 

தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டில் இதுபோன்ற குடிமைப் பொருட்களை மலிவு விலையில் அரசிடம் எதிர்பார்க்காமல் தங்களின் மிகு வருமானத்தினால் மக்கள் அனைத்துத் தரப்பினரும் பொது வர்த்தகத்தின் வாயிலாகவே வாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள் என்றுதான் கருதவேண்டும். 

அப்படி ஒரு நிலை உருவானால் வள்ளுவம் சுட்டியது போன்று இயற்கையே ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இயல்பான முறையில் இயங்குகின்றது என்று அர்த்தம். 

ஆட்சியாளர்கள் மோசமாக இருந்தால்தான் வழக்கத்திற்கு மாறான வெள்ளம். புயல், வறட்சி, நோய், வறுமை, எனப் பல்வேறு மோசமான நிகழ்வுகள் அந்த நாட்டில் நடைபெறும். 

எந்தவகையான ஆட்சியாளர்கள் தேவை என்பதை மக்கள்தாம் இனிச் சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் குடிமைப் பொருட்களை இலவசமாகவும், விலை மலிவாகவும் இங்கு வாங்க வேண்டிய அவசியமே இன்றி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்குப் பாடுபடுபவர்களாகத்தாம் அவர்கள் திகழ்வார்கள் என்பது கனவானாலும் நனவாகப் போகும் உண்மை.

Read More...

செவ்வாய், 1 மார்ச், 2016

கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

Leave a Comment
கட்டுமான ஒப்பந்தங்கள் இனி நூறாண்டுகால உத்தரவாதத்துடன் மட்டுமே.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகின் முதல் கிரானைட் கோயில் என்ற பெருமை பெரும் தஞ்சை பெரிய அரண்மனை ( இன்றைய பிரகதீசுவரர் கோயில் )

நூறாண்டுகள் கடந்த நிலையிலும் கம்பீரமாக நிற்கும் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் போன்று தமிழகமெங்கும் இன்றும் காலத்தை வென்ற நிலையில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஏராளமான வட்டாட்சியர் அலுவலக, வாய்மை மன்ற அலுவலக, அணைகள், பாலங்கள், இதர வெள்ளையர் காலக் கட்டுமானங்கள்.

இவையெல்லாம் ஊழலில்லாக் கட்டுமானத்திற்கு இன்றும் வலுவான சாட்சியங்கள்.

தமிழக்தில் இனி எந்தக் கட்டுமானமாயினும், அதன் ஒப்பந்ததாரர் அந்தக் கட்டுமானத்திற்கு எத்தனை ஆண்டுகள் உத்தரவாதம் தருவார் என்ற உறுதிமொழியுடன், 

தற்பொழுதுள்ள விலைகுறைவு ஒப்பந்தப் புள்ளிகளுக்குப் பதில் நீடித்த ஆண்டுகள் உத்தரவாதமுள்ள, அதிகவிலை ஒப்பந்தப் பணிகள் மட்டுமே விலைப்பட்டியல் கோரப்படும்.

கொடுத்த உத்தரவாதத்திலும் தரத்திலும் தவறு இழைக்கும் ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் இனி எவ்விதக் கட்டுமானத் தொழிலும் செய்ய இயலாத வண்ணம் சட்டமும், அவர்தம் கட்டுமான ஒப்பந்தத் தொகையைச் சொத்துக்களை கையகப்படுத்துதல் வாயிலாக மீட்கும் உரிமை அரசுக்கு உண்டென சட்டம் இயற்றுவோம்.

ஊழல் கட்டுமானங்களுக்கும் ஊழல் அரசியலுக்கும் நிரந்தர விடை கொடுப்போம்.
இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம்.

Read More...