சனி, 25 மார்ச், 2017

எது சிறந்த நிர்வாகம்?

Leave a Comment
பொதுவாக புதிதாக ஒரு இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றால் அவர்கள் பொறுப்பேற்கும் முன்னரே பழைய ஆட்சியாளர்களை மறந்துவிட்டு இவர்களை வரவேற்க மலர்க்கொத்துக்களுடன் உயர் அரசு அலுவலர்கள் படையெடுக்கத் துவங்கிவிடுவர்.

இந்தப் படையெடுப்புகள் அநேகமாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தவும் தங்களின் தவறுகளை புதியவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகத்தான்.

இதில் பழைய ஆட்சியாளர்களின்; விசுவாசிகள்தான் எங்கே தங்களை இடமாற்றம் செய்து அலைக்கழிப்பார்களோ என்ற பயத்தில் அதிகப்படியான பணிவை புதியவர்களிடம் காட்டுவர். 

புதிய ஆட்சியாளர்களின் விசுவாசிகள் காட்டும் பணிவோ பழைய நிர்வாகத்தினரால் தங்களுக்குப் புறக்கணிக்கப்பட்ட சலுகைகள் இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் போன்றவற்றை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமேதாம்.

இலஞ்சம் பெறாது நெஞ்சம் நிமிர்ந்தவர்கள் மட்டுமே இங்கு விதிவிலக்கானவர்கள்.

இவையெல்லாம் உயர் அலுவலர்களுக்கு மட்டும்தாம் பொருந்தும். சாதாரண அரசுப்பணியாளர்கள் ஆட்சியாளர்களை எங்கே இன்றுள்ள சூழலில் அருகே சென்று சந்திக்க இயலும்?

எனினும் மக்கள் எதிர்பார்க்கும் ஒரு புதிய நிர்வாகம் இனி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் அவை இனி இவ்வாறு நடந்து கொண்டால்தான் இலஞ்சத்தையும், ஊழலையும், கொள்ளைகளையும்; ஆட்சிஅ ராஜகங்களையும் நாட்டில் முற்றிலும் ஒழிக்க முடியும்.

பொதுவாக, புதிதாகப் பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் உயர் அலுவலர்களுடன்தான் அவர்கள் துறை சார்ந்த விவாதங்களை நடத்துவர். அவர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேட்டு அதன்படிதான் அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி நிர்வாகத்தைத் தொடருவர். இதுதாம் காலம் காலமாக தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலை.

இனி வரும் காலமோ இளைய சமுதாயத்தின் கரங்களில். 

அவர்கள் ஒருவேளை ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் சூழல் உருவானால் முதற்கண் யாரும் எங்களை வரவேற்க தங்களின் பணிகளை விட்டுவிட்டு வரவேண்டாம் என ஒரு அறிவிப்பு செய்து தங்களை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கப் படையெடுக்கும் உயர் அரசு அலுவலர்களின் வருகையைத் தடை செய்ய வேண்டும். இதனால் அன்றைய தின எரிபொருள் செலவு அரசுக்கு ஏராளம் மீதமாகும்.

அதற்குப் பதிலாக துறை வாரியாக உள்ள கடை நிலை ஊழியர்களை அந்தந்த துறை சார்ந்த இடத்திற்கே புதிதாகப் பொறுப்பேற்கும் இளைய சமுதாயப் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று துறை சார்ந்த விவாதங்களை நடத்தத் துவங்க வேண்டும். 

அப்பொழுதுதான் அவர்களின் உயர் அலுவலர்கள் இதுவரை செய்து வந்துள்ள தவறுகள் தெரிய வரும். அடிமட்ட ஊழியர்கள் விரும்பும் துறை வாரியான மாற்றங்கள் என்னென்ன என்ற விபரங்கள் வெளிப்படும். அந்த துறை சார்ந்த நிர்வாகம் ஊழலின்றிச் செயல்பட உடனடியாகச் செய்ய வேண்டிய அதிரடியான மாற்றங்கள் எவையெவை என்பதும் முழுமையாக அறிந்து கொண்டு ஆட்சி நிர்வாகம் செம்மையாகச் செயல்படத் தேவையான நடவடிக்கைகளைத் துவங்க முடியும்.

அது மட்டுமன்றி இதைவிட முக்கியமாக அந்தந்த துறை சார்ந்த சேவைகளைப் பெரும் பொது மக்களிடமிருந்து கேட்கப்படும் கருத்துகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்தும் பின்னரே அடி மட்ட ஊழியர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து செயல்பட்டு ஒவ்வொரு துறையையும் மேம்படுத்தத் துவங்க வேண்டும்.

இத்தகைய ஒரு புதிய நடைமுறை உடனடியாகத் துவங்கினால் தமிழகம் உலக அளவில் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாகத் திகழும்.

இளைய சமுதாயம் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.

Read More...

புதன், 22 மார்ச், 2017

பதவிக்கு எது அழகு?

Leave a Comment
நேரு மறைந்தவுடன் நாடு ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்த நேரம். அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எழுந்தபோது அதற்குச் சரியான தீர்வான பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் ஒருவர்.

அவரது மறைவிற்குப் பின்னரும் இதே நிலை. நாடே இவர்தாம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதிய நேரத்தில் தனக்கு வந்த வாய்ப்பினை நிராகரித்து இந்திரா அம்மையாரைத் தேர்ந்தெடுத்தவரும் அவரே.

அவர்தான் ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்கள்.

பிரதமராகும் தகுதியையும் மறுத்தும், தான் முதல்வராக வகித்த பதவியையே வேண்டாமென மறுத்து  அதற்கும் வேறு தகுதியான ஒருவரை பரிந்துரை செய்தவர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பதவி ஒருவரைத் தேடி வர வேண்டும். அதனைத் தேடி அலைபவர்கள் சுயநலவாதிகள்.

தன்னைத் தேடி வந்த பதவியை மறுத்து தன்னைவிட மேலானவர் இவர் என மற்றவரை தேர்வு செய்பவர்கள்தாம் சுயநலமற்ற அப்பழுக்கற்ற பொதுநலவாதிகள்.

இவர்களைப் போன்றவர்களால்தான் பதவிகள் அழகு பெறுகின்றன.

பதவிகள் ஆடம்பரமானவை! அழகானவை! மேன்மையானவை!

ஆனால் அவை அசிங்கப்படுவதும் அழகாக்கப்படுவதும் அதை வகிப்பவர்களின் தராதரத்தைப் பொருத்தது.

இனியாவது பதவிக்கு அலைபவர்கள் வெட்கப்பட வேண்டும். திருந்த வேண்டும்.

தகுதியுள்ள மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்.

Read More...